கடிதங்கள்

SASI

 

ஜெ,

 

இரவு குழந்தையை யார் தூங்கவைப்பது என்ற  சலிப்பின்பொருட்டான  இருவரின் தன்அகங்கார பனிச்சண்டையில் வெற்றிபெற்ற நான் கையில் வெண்கடலுடனும்,   மனைவி  மகனுடனும் பிரிந்தமர்ந்தோம். வாசிக்கதொடங்கிய பிழை சிறுகதை சரித்திரத்தின் மேல் ஈயாக என்னை உள்ளிளுத்துக்கொண்டது.  காட்சிவிவரணைகளான  கதையில் நானே  லட்சுமண  ரானேவாக  நின்று குஜராத்திக் கிழட்டு விவசாயியைபோல இருந்த அம்மகாத்மவின் குதுகளித்த அவ்ஈர கண்களின் வழி, இரு கலைகளின் ஊடே நிகழ்ந்த ஒரு வரலாற்று சிருஷ்டியின் தரிசன ம் கிடைத்தது,  கதையை வாசித்து முடித்த உடன்  அப்பாடலை  திரவிடபுகழ்  அலைகற்றை  கொண்ட  என் சிறுதிரை கைபேசியில் காண இயலாமல் நடுஇரவில் என் தம்பியை  எழுப்பி அவனுடைய  சீனஏகாதிபத்ய  உற்பதியில்  உதயமான கைபேசியில்,  அம்பானிமகனின்  அலைகற்றை உதவியுடன், மதிப்பாக  பதினெட்டு தடவை கண்டிருப்பேன்.  பீனா மதுர் மதுர் கச்சுபோல்…’ இக்கணம் வரை  அக்குரல் மனதில் ஈயாக ரீங்கரிக்கிறது.

 

அதில் ஒரு காட்சியில் வீணையாக ஒலிக்கும் தன்  துயரத்தில் மனம் இங்கும் அங்கும் அலைவது போல் சீதை மஞ்சத்தில் கண்ணீருடன் படுத்து மெல்ல ஆடிக்கொண்டிருப்பாள். அந்த காட்சி உண்மையில் ஒரு கனவுநிலையை அளித்தது. அக்குரல் ஏங்குகிறது, துயருகிறது, யாசிக்கிறது, ஆனால் அதன் மறுதயாரிப்பில் லதா மங்கேஷ் குரலில் ஒரு தேர்ந்த பாடகியின் குரலாக மட்டுமே தெரிந்தது .

 

சீதையாகவே துயருற்ற சோபனாவின் சாயல் என் காதலியும், தற்சமயம் மனைவியாக பொருப்பு (துறப்பு அளிக்க என்னும்)  வகிக்கும்,  அவளின் காலத்தில் உறைந்த
சிறு வயது  முகத்தை  கிளரிவிட்டது.  பீனா மதுர் மதுர் கச்சுபோல்…  அக்கணம்   ஊடலின் பொருட்டு தள்ளி உறங்கிய அவளை அக்குரலின் வழி தழுவ ஏங்குகிறேன்,  மறுதலிக்கிறேன்,
துயருகிறேன்,  என் உடலை உந்தி சற்றே தலையை  மேலே உயர்த்துகிறேன் கடைசியில் அவ்வரலாற்று பிழை நிகழ  இருந்த கணத்தில்  மகன் விழித்து அழுகிறான்.

அன்புடன்
சசிகுமார். ரா
சேலம்

prince

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு….
.
சமீபகாலமாக நாள்தோறும் யூடியுபில் உங்களுடைய ஒரு வீடியோ உரையாவது காணாமல் உறங்குவதில்லை..அதில் சிலவற்றை உங்கள் எழுத்தில் வாசித்திருந்தாலும் வாய்மொழியாக கேட்கும் போது எல்லையற்ற ஆனந்தமே.உங்களின் சிந்தனைதிறனும் நினைவுத்திறனுமே என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவை.எவ்வளவு பேச்சு எவ்வளவு எழுத்து…நியூஸ்7 தொலைகாட்சியில் என் கமல் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்ட ஒரு காணொளியை பார்த்தேன். அதில் கமல் மூலமாக உங்கள் எழுத்து இன்னும் பரவலாகியது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.அது உண்மையாக இருக்கலாம். உதாரணமாக வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா கமல்ஹாசன் பேசிய உரையை கேட்டு சிலிர்த்துதான் போனேன். ஆனால் என் கமல் நிகழ்ச்சியில் துவக்கத்தில் கமல் என் வழிகாட்டி முன்னோடி என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது எந்த அடிப்படையில் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நான் யூகித்தது கமலுக்கான நிகழ்ச்சி ஆதலால் அவரை பெருமைப்படுத்தும் விதமாக நீங்கள் அப்படி கூறியிருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.கனடாவில் நடந்த குறும்பட ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நீங்கள் பேசியது மிகவும் கவர்ந்தது.நீங்கள் எப்போதும் வெளிப்படையாகதான் பேசுவீர்கள். ஆனால் கனடாவில் அப்படி பேசியது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.அதேபோல் அராத்து என்பவரின் புத்தக வெளியீட்டில் உங்கள் உரையும் சாருநிவேதிதா அவர்களுடனான கேள்வி பதிலும் மிகவும் ரசித்துப்பார்த்தேன்.

 

வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன்.கொஞ்சம் தாமதமாக .காரணம் சவுதி அரபியாவில் பொருளாதாரம் சரியில்லை போலும்.அதனால் எங்கள் பொருளாதாரமும் அடிப்பட்டுவிட்டது.சாதாரண கூலியான நான் வேலைக்காக பாலைவனதேசத்தில் அலைந்ததால் இந்த தாமதம்.கட்டுரைகளையும் விவாதங்களையும் தவறவிடுவதில்லை. இப்போதுதான் கிராந்தம் முப்பதை கடந்திருக்கிறேன்.அந்தப்பக்கம் மாமலர் முப்பதை கடந்திருக்கிறது.வெண்முரசே ஒரு சொல்வளர் “காடு”தான்.இலவச இணைப்பாக சொல் வளர்காடு தொகுதி வேறு அருமை.என்ன கொஞ்ச வருத்தம் ரொம்ப நாளாகிவிட்டது துரியோதனையும் கர்ணனையும் சந்தித்து.

 

ஜெயமோகனின் சிறகிசைத்த காலம் என்ற சிறு தொகுதியை டெய்லி ஹண்ட் செயலியிருந்து பதிவிறக்கி வாசித்தேன்.ஒரு பெருந்தந்தையை கண்டேன் என்றே சொல்ல முடியும்….உலகில் நான் பரிதாபப்படக்கூடிய ஜீவன்களில் முதன்மையானவர் என்றால் அது என்  தந்தையே .ஏனென்றால் என்னை பெற்றதற்காக…..
.
நன்றி..

 

பிரின்ஸ்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61
அடுத்த கட்டுரைஒரு ‘செரெண்டிபிட்டி’அனுபவம் – மாதவன் இளங்கோ