பத்மாவதி -கடிதங்கள் 2

padmavati

 

பத்மாவதியும் வரலாறும்

 

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு

தினமும் காலையில் தினசரிகளுக்கென ஒதுக்கிய நேரத்தில் தங்களின் வலைதளத்துக்குள் செல்வது வழக்கம். “பத்மாவதியும் வரலாறும்” சற்று நீளமான கட்டுரையாக இருந்தபடியாலும், அதற்கு முந்தைய தினங்கள் குடியரசுநாள் பொதுவிடுமுறையை குடும்பச் சுற்றுலாவில் குழந்தைகளுடன் இருந்த களைப்பால் ஞாயிறு மதியம் பொது அரங்கு ஒன்றில் வாசித்தேன்.

முதலில் அந்த இடம் குறித்து சொல்லிவிட வேண்டும். சென்னையில் ஸ்ரீவிஷ்ணு ஃபௌண்டேஷன் “இந்து ஆன்மிக மடங்களில்” ஒன்று என்பதாக அறிந்திருந்தாலும் உள்ளபடியே அதன் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீஹரிபிரசாத் சுவாமிஜி அவர்கள் ஆண்டுதோறும் நடத்திவரும்“Peace and Reconciliation Conference” – அமைதி மற்றும் சமூக நல்லிணக்க உரையாடலாக முன்னெடுப்புகளை கவனப்படுத்த விரும்புகிறேன். மூன்று நாட்களில் சுமார் எழுபது ஆளுமைகள் பதிமூன்று அமர்வுகளில் காத்திரமான, மனக்குவிப்பையும், ஓர்மையையும் கோரும் உரை தொகுப்புகளை ஒழுங்கு செய்திருக்கிறார். இத்தனை விதமான மதம், மொழி, பிராந்திய, சமூக, பொருளாதார படிநிலைகளின் பன்முகத்தன்மையை ஒருசேர, ஓரிரு நாட்களுக்குள் முதன்முறையாக அனுபவித்தேன். உள்ளபடியே இவற்றை உள்வாங்க, அங்கு கேட்டவற்றை உட்செறிக்க என் மனத்தடைகளை சற்று எளக்கியாகவேண்டும். (இன்றோடு சேர்த்து ஒரு முழு நாள் வேறு மீதி உண்டு)

முனைவர் செய்யித் அலி முஹம்மத் நக்வி அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர். இந்த நிகழ்ச்சியில் பேசவந்தவர். தொழுகை செய்ய அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லமுடியுமா எனக் கேட்டார். எனக்குத் தெரிந்து சென்னையில் (1810)-ஆம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் இருநூறு ஆண்டு பழமையான ஆயிரம்விளக்கு ஷியாபள்ளிவாசலுக்கு போகலாம், ஆனால் அண்ணாசாலையின் போக்குவரத்து நெருக்கடி நம்மை உரிய நேரத்தில் இங்கு திரும்ப கொண்டுவரமுடியுமா என்பதில் சந்தேகம் உள்ளது என்றேன். சுவாமி ஹரிபிரசாத்ஜி அவர்களின் அலுவலகமுள்ள தரைத்தளம் இதற்காக உடனடியாக இந்த முஸ்லிம் பேராசிரியர் தொழுகை செய்யும் தற்காலிக இடமாக மாற்றப்பட்டது. நான் நினைக்கிறேன், இது போன்ற அவசரத் தேவைகளின்பொழுதும் அந்த குறிப்பிட்ட அமைப்புடைய தலைமை நிர்வாகியின் முன்அனுமதி பெற வேண்டுமென்றுகூட அங்குள்ள மட அலுவலக பொறுப்பாளர்கள் சொல்லவில்லை. அந்தளவுக்கு நெகிழ்வுதன்மையோடு ஸ்ரீவிஷ்ணு பௌண்டேஷன் தன் பக்தர்களை பயிற்றுவித்திருக்கிறது. மேலும் மேல்தள கூரையின் ஆறுமூலைகளில் இந்து பெண் தெய்வ சிலைகளுக்கு கீழே சித்ராலி கோஸ்சுவாமி அவர்களின் சூஃபி இசைக்கச்சேரி வேறு நெகிழச் செய்துவிட்டது. இதேபோன்ற எதிர்கலாச்சார ஊடாட்டங்களை ஆவணப்பட இயக்குனர் ஒருவர் Ramzan Heritage Walk என்று சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல், அமீர் மஹால் போன்ற இடங்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களை அழைத்துவருகிறார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

சொல்ல வந்த விஷயம்.

# இந்தியப்பண்பாடு அளவுக்கே தொன்மையானவை துருக்கிய, பாரசீகப் பண்பாடுகள். அவற்றின்மேல் இஸ்லாம் உருவாக்கிய தாக்கத்தால் எழுந்தஅரசர்கள் அவர்கள். நெடுங்கால உயர்குடிப் பண்பாடு உருவாக்கிய மிகமிக விரிவான முறைமைகள், அவைவழக்கங்கள், ஆடம்பரங்கள்,நுண்கலைகள், உயர்தர இலக்கியங்கள் கொண்டது அவர்களின் அரசச்சூழல். #

# சுல்தான்கள் கல்வியற்றவர்களோ தனிப்பட்டமுறையில் பண்பாடற்றவர்களோ அல்ல. அவர்கள் பெரும்பாலும் இசை ரசிகர்கள், கலைகளைப்பேணியவர்கள், பலர் தாங்களே கவிஞர்கள். மிகமிக மென்மையான உயர்குடிப் பாவனைகள் கொண்டவர்கள்.  #

# சுல்தான்களின் முதன்மை அவைமொழி பாரசீகம். அவர்களின் காலகட்டத்தில் அது இந்தியமறுமலர்ச்சி ஒன்றை அடைந்தது.இந்தியமொழிகளுடன் பாரசீகத்தின் உறவாடல் இங்கு ஓர் பண்பாட்டு மறுமலர்ச்சியை உருவாக்கியது. குறிப்பாக நம்முடைய பாவியல்புபெருமளவுக்கு மாறுபட்டது. #

# மென்மையாக, மிக அருகே நிற்கும் அறிவிப்பாளனுக்கு மட்டுமே தெரியும்படிப் பேசுபவர். பெண்மை கலந்த நிதானமான உடலசைவுகள்கொண்டவர். பெரும்பாலும் இசைகேட்டபடியோ கவியரங்குகளில் அமர்ந்தபடியோ சதுரங்கம் ஆடியோ தன் கைகளாலேயே குரானை எழுதியோபொழுதை ஓட்டுபவர் #

# பெரும்பாலும் அரசாணைகளை அவர் பிறப்பிப்பதில்லை. அதற்கு வெவ்வேறு அமைச்சர்களும் தளபதிகளும் இருந்தனர். கொலைத்தண்டனைகள்அவருடைய ‘விருப்பத்திற்கு’ இணங்க அவர் ‘அறியாமல்’ பிறரால் செய்யப்பட்டன. போரில் நேரடியாகவே ஈடுபட்டவர் என்பதனால் படைக்கலப்பயிற்சி கொண்டவர்.அன்றும் இன்றும் உச்சநிலை ஆட்சியாளர்கள் அவர்களின் ஆட்சியின் அன்றாடவன்முறைகளுக்கு மிக அப்பால், மிகமென்மையான ஓரு சூழலிலெயே வாழ்கிறார்கள். அதுவே சாத்தியம். #

மேலே தாங்கள் எழுதியதை அன்று மாலைக்குள்ளேயே நேரடியாக கண்டுகொண்ட மகிழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் ஏழாவது அமர்வில் உ.பி. மாநிலத்தின் பழையசமஸ்தான ராஜா அமீர்கான், திருவாங்கூர் இளவரசி ஆஷ்வத்தி திருநாள், ஆற்காடு இளவரசரின் மகனார் நவாப்ஸாதா ஆசிப் அலி, கேரளாவின் ஆயிரம் ஆண்டு கிறிஸ்துவ பின்புல தொன்மை கொண்ட திருச்சபையிலிருந்து வந்த ஃபாதர் தாமஸ் மீனாம்பரம்பில் ஆகியோரை ஒரு முழுநாள் கவனித்தேன்.

ஆம், தாங்கள் கூறியது கூறியபடி அதிகார அரசியல் இழந்து பலதலைமுறைகள் கடந்தும் இவர்களிடம் அது பாரிய செல்வாக்கை தக்கவைத்திருப்பதில் வெற்றிகண்டுள்ளது. எனக்கு பாப்பச்சன் என்றொரு கேரள நண்பரை அரேபியாவில் வைத்து அறிமுகமானார். அவர் இதற்கு முன்பு ஈரானில் ஐந்தாண்டுகள் பணியாற்றியவர். ஈரானியர்களை சௌதிகளோடு ஒப்பிட்டு பார்த்து சலிப்படைந்து பேசுவார். பண்பாடுகளை மக்களிடம் பேணி வளர்ப்பதே நிலையான மையஅரசு ஒன்றின் சாதனையாக இருக்கமுடியும். தங்களுடன் உடன்படுகிறேன்.

https://en.wikipedia.org/wiki/Balram_Shukla

https://en.wikipedia.org/wiki/Aswathi_Thirunal_Gowri_Lakshmi_Bayi

http://www.uppercrustindia.com/posts/52/The-Riyasat-Of-Raja-Mehmoodabad.html

https://www.princeofarcot.org/princes

https://en.wikipedia.org/wiki/Thomas_Menamparampil

 

கொள்ளு நதீம்

 

அன்புள்ள கொள்ளு நதீம்,

 

இன்றைய சூழலில் நட்பை, சகவாழ்க்கையை மேலும் மேலும் வலியுறுத்தும் எச்செயலும் முக்கியத்துவம் கொண்டது. குறிப்பாக அறிவுச்சூழலில் வெறுப்பே மையக்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கையில்.

 

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

பத்மாவதி குறித்த உங்கள் விமர்சனத்தைக் கண்டேன். நடுநிலையும் ஆய்வுநோக்கும் கொண்ட கட்டுரை. இப்போது தமிழில் எழுதப்படும் பிற கட்டுரைகளை காணும்போது இத்தகைய கட்டுரைகளின் தேவை என்ன என்பது புரிகிறது. ஒருபக்கம் அலாவுதீன் கில்ஜி காட்டுமிராண்டியேதான் என கூச்சலிடும் கூட்டம். மறுபக்கம் அலாவுதீன் கில்ஜி இந்தியாவைக் காப்பாற்றிய மாவீரர் என்றும் பண்பாட்டின் பாதுகாவலன் என்றும் எழுதிக்குவிக்கப்படும் கட்டுரைகள்.

 

உயிர்மையில் அலாவுதீன் இல்லையேல் இந்தியாவே இல்லை என்றவகையில் ஒருகட்டுரையை உடனே எதிர்பார்க்கிறேன். அது ஒரு இஸ்லாமியரல்லாத ‘முற்போக்காளரால்;தான் எழுதப்பட்டிருக்கும்.

 

இருதரப்பையும் சொல்லி எழுதப்பட்டிருக்கும் உங்கள் கறாரான கட்டுரை இங்கே இன்னும் சிறிய வட்டத்திலாவது ஆய்வுநோக்குக்கு இடமுண்டு என்பதைக் காட்டுகிறது. அலாவுதீன் இப்படத்தில் காட்டுமிராண்டியாக காட்டப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறீர்கள். அவர்களின் பண்பாட்டுக்கொடையை வலியுறுத்துகிறீர்கள். கூடவே அவர்கள் உருவாக்கிய பண்பாட்டு அழிவையும் சுட்டிக்காட்டி அவையிரண்டும் ஒருநாணயத்தின் பக்கங்கள் என்கிறீர்கள்.

 

வெறுப்பு கொண்டவர்களால் இரு கோணத்திலிருந்தும் அதைப்புரிந்துகொள்ளமுடியாது. அவர்கள்தான் ஆயிரக்கணக்காக இங்கே இருக்கிறார்கள். ஆனால் ஒரு ஆயிரம்பேர் இதற்கும் இருப்பார்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

 

மகாதேவன்

 

அன்புள்ள மகாதேவன்,

இன்றைய சூழலில் இத்தகைய படங்கள் மட்டுமல்ல அவை உருவாக்கும் விவாதமே மேலும் வெறுப்பைத்தான் உருவாக்கும். இருபக்கமும் நோக்கி செய்யப்படும் ஆய்வுகளே இன்றைய தேவை. அவை ஆய்வுலகுக்குள் மட்டுமே செய்யப்படவும் வேண்டும். இருபக்கமும் எழுதப்படும் சமநிலையற்ற வெறுப்புக் கட்டுரைகள் உண்மையில் கசப்பூட்டுகின்றன. எவருக்கும் வரலாறும் வாழ்க்கையும் முக்கியமல்ல. அரசியலே முக்கியம். அரசியல் கூட செயல்படுவதன் அரசியல் அல்ல, வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு சலிப்பை அகற்றும்பொருட்டு வெறுமே பேசுவதன் அரசியல். வெறும் ஆணவ வெளிப்பாடு. ஆகவேதான் இந்த மூர்க்கம்..

 

 

ஜெ

பத்மாவதி – கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைஈவேரா -உண்மைகள்
அடுத்த கட்டுரைஅருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்