குடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்?
அரவிந்தன் கண்ணையன் எழுதிய இந்தக்கட்டுரை உணர்ச்சிகரமான மொழியில் இந்திய அரசியல் சாசனம் உருவாகிய முறையையும் அதன் பின்னுள்ள உணர்வுகளையும் கனவுகளையும் பேசுகிறது. நான் அமெரிக்கா சென்றபோது அரவிந்தன் கண்ணையனுடனும் பிற நண்பர்களுடனும் அமெரிக்கச் சுதந்திரப்போர் நிகழ்ந்த இடங்களையும் குடியரசுக்கான அடிப்படை அறிவிப்புகள் விடுக்கப்பட்ட சில இடங்களையும் பார்க்கச்சென்றிருக்கிறேன். அமெரிக்கா என் நாடு அல்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் உணர்வெழுச்சி அடைந்து கண்ணீர் மல்கியிருக்கிறேன்.
ஏனென்றால் வரலாற்றில் மக்களாட்சி, நிகர்உரிமை போன்ற கருதுகோள்களை உருவாக்கிக் கொள்ள மானுடம் அடைந்த இழப்புகள், சிந்திய குருதி எனக்குத்தெரியும். ஒவ்வொரு அடியிலும் நின்று குழம்பி முட்டி மோதி நாம் இங்கு வந்துசேர்ந்திருக்கிறோம். தங்கள் வாழ்க்கையிலிருந்து அவற்றை திரட்டி எடுத்து நமக்களித்த முன்னோர் எங்கிருந்தாலும் நம்முடையவர்களே. அவர்களுக்கும் காழ்ப்புகளும் வெறுப்புகளும் இருந்திருக்கும். அவர்களும் அன்றாடக்கீழ்மைகளில் உழன்றே வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அவற்றிலிருந்து உள்ளுறைந்த ஆன்மிக வல்லமையால் மேலெழ அவர்களால் இயன்றிருக்கிறது. அவை அவ்வெழுச்சி நிகழ்ந்த களங்கள்.
எதிர்மறை உளநிலையே ஓங்கியிருக்கும் இச்சூழலில், இந்நாட்டின் அறிவுயிரிகள் இந்நாடு அழியவேண்டும் என்று கூச்சலிடுவது சூழ ஒலிக்கும் தருணத்தில் நினைத்துப்பார்க்கவேண்டிய வரிகள்.