லட்சுமி மணிவண்ணனை சமீபத்தில் சந்தித்த காலம் செல்வம் சொன்னார், ‘2000 தமிழ்இனி மாநாட்டிலே சந்திக்கையிலே சாத்தான் மாதிரி இருந்தவர், இப்ப ஏசு மாதிரி இருக்கிறவர்’ . நான் புன்னகைத்துக்கொண்டேன்.
லட்சுமி மணிவண்ணனை எனக்கு இருபத்தைந்தாண்டுகளாகத் தெரியும். அவர் துடிப்பான இளைஞராக பள்ளம் சிற்றூரில் இருந்துகொண்டு சிலேட் என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். அதற்கு நான் ஒரு கடிதம் எழுதினேன், அதன் போதாமைகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மூர்க்கமாக எதிர்வினையாற்றியிருந்தார்.
பின்னர் அவரைச் சுந்தர ராமசாமி இல்லத்தில் சந்தித்தேன். இன்னொரு லட்சுமி மணிவண்ணனை அப்போது அறிந்தேன். அணுக்கமான நட்பு உருவாகியது. அவருடைய பைக்கில் நிறையச் சுற்றியிருக்கிறேன். என்னுடன் அவரை பயணங்களுக்கு அழைத்துச்சென்றிருக்கிறேன்.
பின்னர் மெல்ல மெல்ல அவர் தன்னை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசென்றார். அந்த எதிர்மனநிலையின் விதை அவரிடம் எப்போதும் இருந்தது. அவருடைய தந்தைக்கு எதிரான எதிர்ப்பு அது. அது அவருடைய தந்தையைப் புரிந்துகொள்ளாதபடியால் என்றே நான் அன்றும் இன்றும் நினைக்க்கிறேன். உலகியலை உதறி அலைய முயலும் மகனின் நிலை கண்டு உலகியலில் வாழ்ந்த தந்தையின் பதற்றம் அது. தந்தையென ஆனபின் லட்சுமி மணிவண்ணனும் அதைக் கண்டுகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.
லட்சுமி மணிவண்ணனுடனான என் உறவு பூசலும் நட்பும் கொண்டது. கலைஞனுக்குரிய அலைக்கழிப்புகளும் அவ்வப்போது எழும் மூர்க்கமும் கொண்டவர். கூரிய தர்க்கமும் அதனுடன் இணையும் உணர்ச்சிகரமும் உடையவர். அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, பொதுவாக கவிஞர்களில் எவருக்கும் இல்லாத பண்பு அது. எவருக்கும் எவ்வுதவியும் செய்யும்படி அவரிடம் கோரலாம். அவரால் முடிந்தவரை நின்று உதவுவார். அதில் சலிப்பும் விலக்கமும் தென்பட்டதே இல்லை. சொல்லப்போனால் கவிஞர்களின் இயல்பே அல்ல அது. எங்கிருந்து அது வந்தது என நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. அதில் சிறிதளவேனும் என்னிடமிருக்கலாமோ என ஏங்கியதுமுண்டு.
அவருடைய கவிதைகள் தனிமொழியில் அமைந்தவை. கவிதைக்கான இசைமை கூடாத மொழி அது. குறிப்பு போல. மெய்யான கவித்துவத் தருணத்தை அது தொடும்போது வெட்டிப்போட்ட உயிருள்ள தசைத்துண்டுபோல அச்சமும் பெருங்கவற்சியும் கொண்டிருக்கும். முளைத்த தளிர் போல அழகு கொண்டிருக்கும். அது அமையாதபோது வெறும்வரிக்கோவையாகவே அமைந்துவிடும். சலிக்காமல் அதில் முயன்றுகொண்டே இருப்பது அவர் வழக்கம்.
அவருடைய எதிர்மனநிலை ஊக்கத்துடன் இருந்தபோது அவை வெறும் கசப்புகளாகவே வெளிப்பட்டன. இன்று அவர் அவற்றிலிருந்து வெளியேறி பிறிதொரு ஆழம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் அவற்றில் மிக இயல்பாக மெய்யான கவித்துவம் வந்தமைகிறது. அவருடைய இக்குறிப்பு அவரை அறிந்தவன் என்றமுறையில் எனக்கு மிக அந்தாங்கமானதாகப் படுகிறது
நீங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுகிறீர்களா?
*