அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்

 

வழக்கம் போல இந்தக் கடிதத்தை அனுப்பும் முன் யோசித்துக் கொள்கிறேன், இதை ஏன் அனுப்புகிறேன் என்று.  நீங்கள் ஸ்ரீனிவாசன் நடராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு கலை வடிவத்திற்கே பிரகடனத்தை உருவாக்கி அளித்திருக்கிறீர்கள். அந்த உரை, இருபத்திரண்டு வயதில், விஷ்ணுபுரம் படித்துவிட்டு அலைந்து கொண்டிருந்த, என் தேடலின் ஆரம்பக் காலத்தில் கிடைத்திருந்தால் பதினைந்து வருடங்கள் மிச்சமாகியிருந்திருக்கும். இங்கு அனைத்து அறிவுத்துறைகளுக்கும் நடுவே உரையாடல்களே இல்லை, உங்கள் தளம் அதற்கான இடமாக உருவாகி வந்திருக்கிறது. ஆகவே, உங்களை சந்தித்த இந்த ஆறு வருடங்களில் நான் வந்து சேர்ந்த இடத்தை, நான் தேடிய வழியை பகிர்ந்து கொண்டால் யாருக்காவது மேலும் ஒரிரு வருடங்கள் மிச்சமாகக் கூடும். இதை பிரசுரிக்கும் பட்சத்தில் இதில் வரும் உங்கள் பெயரையோ, புகைப்படத்தையோ நீங்கள் நீக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஜெ,

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பரவசமான அழைக்கழிப்பின் மன நிலையிலேயே இருந்தேன். வாசித்து தன்னைக் கண்டடைய வேண்டிய பருவம் என்று போகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள், அதன் பொருள் உணர்ந்தேன். தொடர் வாசிப்பின் வழியாக என்னுடைய கேள்விகளை அடையாளம் கண்டு தெளிவாக்கிக் கொண்டேன். அவற்றுக்கான விடைகளைக் கண்டடைந்தேன். கேள்விகளை உருவாக்கிக் கொள்வதும், பதில்களைக் கண்டடைவதும் கூட படைப்புக்கு இணையான உச்சத்தைத் தரும் என உணர்ந்தேன். சென்ற ஆண்டின் இறுதியில் ஒரு சிறிய நிலையின்மை வந்தது. அதுவும் இடையிடையே வருவதுதான், பெரும்பாலும் ஒரே காரணத்திற்காக. அவ்வப்போது என்ன வாசித்தேன், இனி என்ன வாசிக்க வேண்டும் என பட்டியல் போட்டு, அதை செய்திருக்கிறேனா அல்லது அதிலிருந்து விலகியிருக்கிறேனா என்று பார்ப்பது வழக்கம். பெரும்பாலும் பட்டியல் ஒரு பக்கமிருக்க வாசிப்பு வேறு நூல்கள் வழியாக சென்றிருக்கும். எத்தனை வாசித்தாலும் ஒரு பட்டியல் அப்படியே இருப்பது மலைப்பை, மன அழுத்தத்தை உருவாக்கும். அப்படி உருவான நிலையின்மை.

வருடத்தின் துவக்கத்தில் இருபதாம் நூற்றாண்டின் தத்துவத்தை வாசித்தேன். பிறகு அரவிந்தரை. மத்தியில், பதினான்கு பாகங்கள் கொண்ட ஒரு கட்டுரைத் தொடரை எழுதினேன், ஐரோப்பிய கலை மரபை, இந்திய பார்வையில் ஓப்பிட்டு. [செம்மை செய்த பின்பு உங்களுக்கு அனுப்பலாம் என எண்ணியிருந்தேன்]. அதன் பிறகு, இருபதாம் நூற்றாண்டின் கலை வரலாறையும், அதன் சமூக சூழல்களையும் வாசித்தேன். இப்போது இருபதாம் நூற்றாண்டு சமூகவியலையும், அறிவியலையும் வாசிக்கத் துவங்கியிருக்கிறேன். விளைவாக மீண்டும் ஒரு கட்டுரையை  எழுதத் துவங்கினேன், இன்று இந்திய மரபில் இருந்து உருவாகும் ஒரு கலை என்னவாக இருக்க வேண்டும், உலகிற்கு அதன் பங்களிப்பு என்ன என்பனவற்றை ஒட்டி. என் கலை குறித்த பிரகடனம் போல. அதன் போக்கில் கண்டடைந்த ஒன்று என்னை பரவசமாக்கியது.

தானாக வந்து சேர்ந்த நூல்களின் வழியாக நான் என் கேள்விகளை, பதில்களை ஒட்டியே வாசித்திருக்கிறேனே தவிர, வழி தவறி அல்ல. வாசித்த அனைத்து நூல்களும் அந்தக் கேள்விகளுக்கான பதிகளையே தந்திருக்கின்றன. நானே தேர்ந்தெடுத்து வைத்திருந்த நூல்களில் கூட அவை கிடைத்திருக்காது என இப்போது உணர்கிறேன். அப்படியான ஒரு பரவசத்தில் இன்று காலையில், நான் யோசித்தவற்றை எல்லாம் உங்களுக்கு எழுதுவதாக எண்ணிக் கொண்டேன், எப்பொழுதும் போல அனுப்பப்படாத கடிதங்களில் ஒன்றாக.

அதை இப்படி சொல்லலாம். என் கேள்வி, நான் இந்திய மரபு அடைந்த உயரங்களின் தொடர்ச்சியாக எப்படி என் கலையை உருவாக்ககிக் கொள்வது என்பது, அதை விஷ்ணுபுரம் வாசித்த போது உணர்ந்து கொண்டேன். ஆனால் அதை என் மொழியில் சொல்லவோ, உள்வாங்கி எனதாக்கிக் கொள்ளவோ முடியவில்லை. இந்த மரபின் மீதான பிடிப்புக்கு தேசியவாதமோ, சித்தாந்தமோ காரணம் அல்ல. தஞ்சையில் பிறந்து, கும்பகோணத்தில் படித்ததன் வழியாக நானே இந்த மரபின் உச்சங்களைக் கண்டு வளர்ந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவற்றை ஆன்மீகமான தருணங்களில் உணர்ந்துமிருக்கிறேன். அதைச் சொல்லும் ஒரு மொழியை நான் கண்டடைய வேண்டியிருந்தது. அதை விட என் கேள்விகளை, விடைகளை புற வயமாக ஆக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. இரண்டு, இன்று அதை செய்ய வேண்டிய தேவையும் இடமும் உலகக் கலை மரபில் என்ன என்பது குறித்த புரிதல். ஏனெனில் நான் எதிர்கொள்ளப் போவது அந்த மரபையே, அதனுடனான என் உரையாடல் என்பது அதன் மொழியில் இருக்க வேண்டும் என்பதால். இரண்டு கேள்விகளுக்கும் நான் பதில்களை நெருங்கி விட்டேன். இங்கிருந்து நான் என் பயணத்த்தை துவங்கலாம். இதை உணர்ந்த உடன் பட்டியல் கவலைகள் அனைத்தும் கரைந்து விட்டன.

0

முரகாமி  Photograph: Kentaro Hirao.

இந்தக் கண்டடைதலுக்கு வந்து சேர்ந்த வழிகள் ஆச்சர்யமானவை. அரவிந்தரின் நூல் அதில் முக்கியமானது. இந்திய மறுமலர்ச்சி இத்தாலியில் நிகழ்ந்தது போல
இருக்க முடியாது என்பதை கூறுகிறார். அதற்கான மாற்றை முன் வைக்கையில் ஜப்பானோடு ஒப்பிடுகிகிறார். இதை நான் வேறு வகையில் அறிந்திருந்தேன். சம கால கலையில் ஜப்பானியக் கலைஞர்களே எனக்கு அணுக்கமனவர்களாக இருந்திருக்கிறார்கள். ரிங்கோ கவாகுச்சி, தக்காஷி முரகாமி, ஹிரோஷி சுகிமோட்டோ போல ஒரு பட்டியல். கவாகுச்சியின் உலகம் ஜென் பௌத்த மரபின் தொடர்ச்சி. சுகிமோட்டோ பௌத்தத்திற்கும் அத்வைதத்திற்கும் நெருக்கமாக வருகிறார். சென்ற வருடம் நார்வே பயணத்தில் முரகாமியின் பெரும் கண்காட்சி ஒன்றைக் காண நேர்ந்தது. அர்ஹத்துகளும் போதி சத்துவர்களும் உலவும் ஜப்பனிய மரபு சமகால மொழியில். பிற அனைத்து நிகழ்வுகளையும் விடுத்து அன்றைய நாள் முழுவதும் முரகாமிக்கே கொடுத்தோம். அதை ஒட்டிய சாத்தியத்தில் நான் என் விடையைக் கண்டுகொண்டிருந்தேன். அதை என் வாசிப்புகளின் வழியாக உறுதி செய்து கொண்டேன்.

1

24 அர்ஹத்துகள் – முரகாமி

2

நற்றிணை பதிப்பில் இருக்கும் அட்டைப் பட ஒவியம்

சில மாதங்களுக்கு முன்பு, நற்றிணை வெளியீடான உங்கள் சிறுகதைத் தொகுதியை எடுத்த போது பார்த்த போதுதான் உணர்ந்தேன், அதன் அட்டைப்படம் நார்வேயில் கண்ட முரகாமியின் 24 அர்ஹத்துகள். இதை யார் வடிவமைத்தாரோ அவர் அதை அறிந்திருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அது ஒரு தருணம், இரண்டு வெவ்வேறு உலகத்தில் வாழும் ஆசிரியர்கள் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பார்த்ததைப் போல. இன்று காலை மீண்டு அதை எண்ணிக் கொண்டேன் நான் குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது.

சிறிய இடைவெளியில் நீங்கள் நேற்று பேசியதன் காணொளி வந்துவிட்டதா என்று பார்த்தேன். அதில் நீங்கள் இவற்றை ஒட்டியே பேசியிருந்தீர்கள். இதில் ஆச்சர்யமில்லை. நான் வர முடியாமல் போனதற்கான வருத்தம் இருந்தது நேற்று வரை. வந்திருந்தால் உங்கள் அருகில் இருந்திருக்கலாம். இப்பொழுது தோன்றுகிறது, மாணவர்கள் ஆசிரியர்களை விட்டு விலகுவதுமில்லை, ஆசிரியர்களும் அவர்களைக் கைவிடுவதில்லை. அருகமர்ந்திருக்கும் போது அருகிருத்தல் பொருட்டில்லை.

ஐரோப்பியக் கலை குறித்த கட்டுரைத் தொடருக்கு நான் எழுதிய முன்னுரை.

ஐரோப்பிய வரலாறை எழுதும் நோக்கத்தில் இந்தத் தொடரை எழுத வில்லை. நான் வரலாற்று மாணவன் கூட இல்லை. கலை, எழுத்து [இலக்கியமும்,தத்துவமும்], வரலாறு இந்த மூன்றும் ஒன்றை ஒன்று நிரப்புபவை. ஒன்றை மட்டும் கொண்டு எதையும் புரிந்து கொள்ள இயலாது என்று ஒரு பயணத்தின் கீதா முகூர்த்தத்தில் ஜெயமோகன் கூறினார். அதன் பிறகு என் வாசிப்பின் திசை மாறியது. அதன் ஒரு சிறிய பகுதியாக, கலையில் மீதமிரண்டும் எப்படி பங்காற்றியுள்ளன என்பதற்காகவே இந்த தொடர். பதினேழாம் நூற்றாண்டில் தூர நோக்கி மேம்படுத்தப்பட்டதும், நுண்ணோக்கி கண்டறியப்பட்டதும், சீர்திருத்தக் கிருஸ்துவமும், மறு மலர்ச்சியின் மனித நேய தத்துவ நோக்கும் எப்படி ரெம்ப்ட்ரண்டில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதே இந்த வாசிப்பு.

கலை எனும் போது மேற்கத்தியக் கலையும் [Art], தத்துவம் [Philosophpy] எனும் போது மேற்கத்திய தத்துவத்தையுமே உத்தேசிக்கிறோம். பிறவற்றை இந்தியக் கலை [Indian art] என்றும், சீன தத்துவ மரபு [Chinese philosophy] என்றும் குறிப்பிடும் ஒரு சூழலே எங்கும் இருக்கிறது. Capital A – வும் P – யும் நமக்கு கிடைக்காது. இந்த சூழலில் ஐரோப்பியர்கள், இந்தியக் கலையை குறித்து உருவாக்கி அளிக்கும் அளவுகோள்களை ஐரோப்பியக் கலையிலும், ஐரோப்பியக் கலை குறித்து உருவாக்கி அளிக்கும் அளவுகோள்களை இந்தியக் கலையிலும் பொருத்திப் பார்ப்பதே இந்த வாசிப்பு. இந்திய மரபை புரிந்து கொள்வதன் ஒரு பகுதியாக, நமக்கு கொடுக்கப்பட்ட ரசமட்டத்தை சரிபார்த்துக் கொள்வது.

ஆகவே இந்த கட்டுரைகளில் இரண்டு விஷயங்களைப் பார்க்கலாம். ஒன்று, அறிவுத்துறைகளின் மீதான வாசிப்பை விட, துறைகளுக்கு நடுவே இருப்பவற்றின் மீதான கவனம். இரண்டு, தொடர்ந்து கீழைக் கலையோடுடனான ஒப்பிடலும், மேலை கலாச்சாரத்தின் மீதான விமர்சன அணுகுமுறையும்.

இது ஒரு வகையில் எதிர்மறை நோக்கு போலத் தோன்றக் கூடும். ஆனால் அதன் உண்மை நோக்கம் இவற்றை எல்லாம் நான் ஏற்கனவே வாசித்தவற்றின் பக்கம் நின்று, இந்த வரலாற்று மொழிபுக்கு எதிர்த்தரப்பில் நின்று வாதிட்டுப் பார்த்துக்கொள்வதுதான். சுருக்கமாக வில்லியம் ஆர்ச்சரும், வின்செண்ட் ஸ்மித்தும் முன்பு இந்தியா குறித்து வைத்த குற்றச்சாட்டுகளை ஐரோப்பா மீது போட்டுப் பார்க்கிறேன், இந்தப் பார்வை அதிகமும் பரிச்சயமில்லாதவருக்கு தேசியவாத நோக்கு போலத் தோன்றாலாம். ஆனால் எனக்கு கிழக்கு, மேற்கு இரண்டுமே முக்கியமில்லை, கலையைத் தவிர. இதையே நான் வாசிப்பு என்று கருதுகிறேன். சமன்வய வாசிப்பு. அதன் காரணம் என் தொடர் தேடலில் இருக்கிறது.

நான் வளர்ந்ததே கோவில் சூழத்தான், ஆகவே சிறு வயதிலேயே பக்தி இலக்கியங்கள் அறிமுகமாகின. கூடவே புராணங்களும், சிற்பங்களும். இவற்றால், அந்த வயதிலேயே கலை குறித்த, உள்ளுணர்வு சார்ந்த, ஒரு தோராயமான புரிதல் இருந்திருக்கக் கூடும். ஒவியக் கல்லூரியில் அறிமுகமான கலையோ நேராக கிரேக்கத்தில் துவங்கி ரோம் வழியாக இத்தாலிக்கு சென்று ஃப்ரான்ஸில் போய் முடிந்து விட்டது. அதையாவது முழுமையாக கற்றுக் கொடுத்திருக்கலாம், அந்த ஒவியங்களுக்கான தத்துவ, கலாச்சார சூழல்கள், தேவைகளை முன்வைத்து. அதுவுமின்றி, வெறும் வரலாற்றுத் தகவல்களாகவே அறிமுகப்படுத்தப்பட்டேன்.

ஆண்டி வார்ஹோலுக்கும், சோழ நடராஜருக்குமான இடைவெளி என்னைக் குழப்பி, அழைக்கழித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இந்த அழைக்கழிப்பால், ஒவிய உலகின் போக்குகளுக்குள் ஒன்ற முடியாமலும்,  நான் கலை என உணர்ந்ததை, கலைக்கு வெளியே சரியாக முன் வைக்க முடியாமலும் மிகவும் அல்லாடிக் கொண்டிருந்திருக்கின்றேன் என்பதை இத்தனை வருட வாசிப்புக்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறது. வரிசைப்படி எல்லாமும் அடுக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்துக்குள் நான்தான் தவறான நுழைவு வாசல் வழியாக உள் நுழைந்து விட்டேன்.

இந்தியச் சூழலில், கலைக்குள் நுழைபவர்களில் இந்த அழைக்கழிப்பு ஒரு சிலருக்கேனும் இல்லாமலிருந்திருக்காது. நான் பார்த்தவர்களில் இரண்டு வகையினர் இருந்திருக்கின்றனர். ஒன்று, தொடர்ந்து கேள்விகளால் துரத்தப்படாமல், முதல் சில கேள்விகளுக்குப் பிறகு, தான் கண்டடையும் அல்லது தனக்கு தரப்படும் முதல் சில பதில்களில் திருப்தியாகி, தொடர்ந்து செயலாற்றிக் கொண்டு கடந்து செல்பவர்கள்.  இரண்டு, இயல்பிலேயே தன் கேள்விகளும் பதில்களும், பொதுப்போக்கோடு ஒத்துபோகிறவர்கள். இன்றும் படிப்பு முடிந்தவுடன் நேராக, ஃப்ரெஞ்சு, ஜெர்மன் அல்லது பிரித்தானிய அழகியலை ஒட்டியோ, அல்லது இப்போது பொதுப்போக்காக  இருக்கும் ஏதேனும் ஒரு பின் நவீனத்துவ அழகியலுக்குள்ளோ சென்று குதிப்பவர்கள் எளிதில் அமைப்புகளுக்குள் இடம் பெற்று, அங்கீகாரமும் அடைந்து விட முடியும்.

தத்துவமும் வரலாறும் கலைக்கு எதிரானது என்று ஒரு தரப்பும், கலை குறித்த “சொல்லாடல்களே” கலை என்று ஒரு தரப்பும் என பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில் நிலைமை இன்னமும் சிக்கலானது.

துரதிருஷ்டசாலிகள் நடுவிலிருப்பவர்கள்தான். கொஞ்சம் பொறாமையாகவும், சலிப்பாகவும் இருக்கும், அவ்வப்பொழுது. பதின்பருவத்தில் கிடைத்த சூழலே வினையாகவும் ஆகி விட்டது. ஆனால் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்று ஆடு மேய்த்தவர் சொல்லியிருக்கின்றார். ஆரம்பத்தில் கிடைத்த கலாச்சார சூழலின் அதிர்ஷ்டம்தான் இந்தத் துன்பத்திற்கு காரணம் என எண்ணும்போது அவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

3

புகைப்படம்: ஏ.வி.மணிகண்டன்

கவிஞர் இசை ஒரு கட்டுரையில் எழுதி இருந்தார், நாம் இலக்கியத்தில் நுழையும்போது யாருடைய முகத்தில் முழிக்கின்றோம் என்பது முக்கியம் என. தவறான வாசலில் நுழைந்தாலும் எதிர்ப்பட்ட முகம் ஜெயமோகனுடையதாக இருந்ததை வைத்து ஆடு மேய்த்தவர் சொன்னதை புரிந்து கொள்ள முடிகிறது.

என்னுடைய கேள்விகள் ஆன்மீகமானவையாக இருக்கின்றன. சோழர் சிற்பங்களின், அக்கமகாதேவியின் வசனங்களின் சாரத்தை மேற்கத்திய வடிவமான புகைப்படங்களிலும், அவற்றின் நாவல் வடிவிலும் தீண்ட முயல்கிறேன். அதை தத்துவமும், வரலாறும் இல்லாமல் கலைக்குள்ளேயே சமாளிக்க இயலாது. அதை விட இன்றைய சூழலின் கலையின் வடிவமும், கேள்விகளும் இன்றிலிருந்தே முளைக்க முடியும். பண்பாட்டிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அதன் தரிசனத்தை மட்டுமே தவிர அதன் கலாச்சார அடையாளங்களை அல்ல என்ற அறிதல் சமகால அரசியல்களிலிருந்து விலகியிருக்க உதவும்.

4

புகைப்படம்: ஏ.வி.மணிகண்டன்

இன்று ஆன்மீகம் என்பதையே பலவித முன்னறிவிப்புகளோடுதான் பேச வேண்டியிருக்கிறது. அதை விட, அந்தக் கேள்விகளுக்குள் நுழையும் முன்பு எது கலை என்பதிலேயே எனக்கும் பொதுப்போக்குக்கும் சிக்கலாகிவிட்டது. அதை நோக்கித்தான் நான் இவற்றை எல்லாம் வாசித்து கொண்டிருக்கின்றேன் என இந்தக் கணத்தில் புரிந்து கொள்கின்றேன். இனி மேல்தான் ஆன்மீகம் குறித்த என் உள்ளுணர்வை கலையின் முறைமை சார் அறிவாக்கிக் கொள்ள வேண்டும். என் மரபின் வேரையும் நுனியையும் அறிய வேண்டும். இந்த மரபு என்பது புவியியல், மொழி சார் மரபு மட்டுமல்ல. தஞ்சாவூரிலிருந்து ஒரு சொம்பில் காவேரியைக் கொண்டு சென்று தாந்த்தேவுக்கும், தார்க்கோவ்ஸ்கிக்கும், ஒஸூவுக்கும், ப்ரௌஸ்ட்டுக்கும், ரெம்ப்ட்ரெண்டுக்கும் தரும் புள்ளியும் கூட. பதிலுக்கு செய்னின், வோல்காவின், ரைஹினின், டைபரின் நீரை வாங்கிக் கொண்டு. அதற்கு பிறகுதான் என்னுடைய கலையில் வாழ்க்கைக் குறித்த விஷயங்களை பேச ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கு போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது, ஆனால் அறவாழி அந்தணன் தாள் கண்டார்க்கு பிறவாழி நீந்துவது எளிது என்று இங்கு ஒரு பெரியவர் சொல்லியிருக்கின்றார். கோட்பாடுகளிலேயே இருக்கிறது எல்லாமும் என்றோ, அதையெல்லாம் அப்படி விளக்கிவிட முடியாது என்றோ குருட்டு சித்தாந்தங்களில் முட்டிக் கொள்ளாமல் இருப்பதே முக்கியமானது. இந்த வயதில், இத்தனை அலைகழிப்புக்களுக்கு அப்புறம் எனக்குத் தோன்றுவது, ஒருவன் தன் ஆசிரியனை கண்டடைவதுதான் கடினம், பிற எதுவுமில்லை என இன்று தோன்றுகிறது. என்னைக் கடைதேற்ற ஆடு மேய்த்தவனும், மாடு மேய்த்தவனும், உழைத்துக் கொண்டிருக்கின்ற போது எனக்கு என்ன கவலை. சபரியின் வரிகளில் சொல்வதானால் அவர்கள் இன்னமும் கடுமையாக உழைக்கட்டும்.

என்னுடைய நல்ஊழ் நான் அரவிந்தரின் ‘இந்திய மறுமலர்ச்சி’ நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது க்ளார்க்கின் ‘civilaization’ படைப்பையும் அணுகக் கிடைத்தது. க்ளார்க்கின் ஆவணப்படம் பதிமூன்று பாகங்கள் கொண்டது. கூடவே ஒரு நூலும், க்ளார்க்கே எழுதியது. நியூயார்க் தேசிய அருங்காட்சியகம் வெளியிட்ட ஒரு துணைக் கையேடும் கொண்டது.

வில்லியம் ஆர்ச்சர் என்பவர் எழுதிய ‘இந்தியா ஒரு நாகரீகமடைந்த சமூகமா?’ என்ற நூலுக்கு எதிராக அரவிந்தர் எழுதிய பதில்களே ‘இந்திய மறுமலர்ச்சி’ நூல். அதில் ஆர்ச்சர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், இன்றும் நம்மைப் பற்றி நம்முடைய பொதுப்புத்தியில் வெள்ளைக்காரர்களால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பொதுப்புரிதல்களே.

அதற்கு அரவிந்தர் இரண்டு வகைகளில் பதிலளிக்கின்றார், ஒன்று இந்திய நாகரீகத்தை, கலையை ஐரோப்பியர்கள் புரிந்து கொண்டதிலிருக்கும் பிழைகளும், சரியாக புரிந்து கொள்ளும் முறைமையையும். இரண்டு ஐரோப்பிய சமூகமே கூட அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விலக்கல்ல என்பது. ஐரோப்பிய வரலாற்றை வாசிக்கும் இந்தியருக்கு முன்னதை விட பின்னது இன்னமும் அதிர்ச்சியைத் தரக்கூடியது. [கூடவே, இந்திய சிந்தனை, கலை மரபு உலகுக்களிக்க வேண்டியதைக் குறித்து அவர் தரும் பதில்கள் எந்த இளம் சிந்தனையாளனுக்கும், கலைஞனுக்கும் ஒரு பெரும் திறப்பும், துவக்கப் புள்ளியும் கூட.]

சராசரி இந்தியருக்கு, பள்ளிப்பருவத்திலேயே இந்தியா மற்றும் ஐரோப்பா குறித்து உருவாக்கப்படும் பொதுப் புத்தியில் இருக்கிறது சிக்கல்.  பொதுப் புத்திதான் எனினும், இரண்டும் ஒன்றல்ல. ஒன்று, நம்முடைய வரலாறுகள் முதலில் எழுதப்பட்டது ஐரோப்பியர்களால். ஆகவே அவர்களின் தேவைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் ஏற்ப எழுதப்பட்டது. இரண்டு, அதே அளவுகோள்களை பயன்படுத்தியே அவர்களின் வரலாறும் எழுதப்பட்டிருக்கும் என நம்மை நம்ப வைத்திருக்கிறது ஐரோப்பா குறித்த பொதுப்புத்தி.

எளிய உதாரணம், இந்திய பக்தி மரபைக் குறித்து பேசும்போது அறிவார்ந்த தன்மை அற்றதும் மூட நம்பிக்கை சார்ந்ததும் என்ற வரையறையை உருவாக்கி வைத்திருக்கிறனர் [ஆர்ச்சர் ஒரு உதாரணம்]. மூட நம்பிக்கை என்றால் இந்தியாவே நினைவுக்கு வருமளவுக்கு. அதே நேரம் ஐரோப்பிய சீர்திருத்த கிருஸ்துவ புரட்சியை, உணர்ச்சிகரத்தால் எதிர் கொண்ட பரோஃக் கலையைப் பற்றி பேசும் போதும், துறவிகளை புனிதராக்க, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் பேசும் போதும், சாமானியர்களுக்கு அந்த மொழியில்தான் ஆன்ம மீட்பை அளிக்க முடியும், ஆகவே கலை குறித்த நம்முடைய இன்றைய அறிதல்களைக் கொண்டு பரோஃக் கலையை மதிப்பிடக் கூடாது என்று வாதிடுகின்றார்கள் [க்ளார்க்]. இந்தியக் கலையின் நீர்த்தன்மையை [liquescence] அழகியல் உணர்வற்ற அலங்காரம் மட்டுமே என்பவர்கள், ரொக்கொகோ-வை இசைத்தன்மை கொண்டது என்கின்றனர்.

கலையைப் பற்றி பேசும் போது மதத்தைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் ஏன் பேச வேண்டும் எனத் தோன்றலாம். ஐரோப்பிய தேவாலயங்களின் ஒவியங்கள்தான் மிகேலாஞ்சலோவும் கரவாஃக்கியோவும் வரைந்தது. அதை மதத்தின் பரப்புக்கலை என்று அவர்கள் சொல்வது கிடையாது. மேற்கில், அதை அறியாமல் கலைஞனாவதும் சாத்தியமில்லை. நார்வே பயணத்தில் நான் பார்த்த படைப்புகள் அனைத்தும் ஐரோப்பிய தத்துவ அரசியல் வரலாறை அறியாதவருக்கு விளங்கிக் கொள்ளக் கூடியவை அல்ல.

புகைப்படம்: ஏ.வி.மணிகண்டன்

ஆனால் இங்கு நடராஜரையோ கிருஷ்ணரையோ நவீன கலைக்குள் கொண்டு வர முடியாது. நாகார்ஜுனரையோ சங்கரரையோ தெரிந்திருக்கத் தேவையில்லை. ஆனால், மிக்கேலாஞ்சலோவையும், டூஷம்பையும் தெரியாவிட்டால் இந்தியாவிலேயே கலைஞனாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களோ, தாந்தேவையும், ஹோமரையும் மறு உருவாக்கம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த மேற்கின் தத்துவமுமே பிளேட்டோவின் அடிக்குறிப்புகள்தான் என சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு பெருமைதான்.

இந்த சூழலில் உருவாகி வரும் ஒருவன் இயல்பாகவே தன் மரபு குறித்த தாழ்வுணர்ச்சியோடுதான் உருவாகி வர வேண்டியிருக்கிறது.  கடந்த சில வருடங்களாக நிகழ்ந்த என்னுடைய வாசிப்பின் வழியாகத்தான் நான் அதிலிருந்து விடுபட்டிருக்கின்றேன். இந்த விடுதலையும், வாசிப்பின் வழியாக அடைந்த தன்னம்பிக்கையும் எதையேனும் படைக்க முயல்பவருக்கு அத்தியாவசியமானது.

கடந்த சில வருடங்களாக என்னுடைய வாசிப்பில் கிடைத்த இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.

ஒன்று வரலாறு என்பது ஒரு வகை மொழிபு மட்டுமே. அதை தீர்மானிப்பது எழுதுபவரின் நோக்கமே என்ற புரிதல். பின் அமைப்பியலும், பின் நவீனத்துவமும் சொன்னதுதான். மொத்தம் எத்தனை வாசல் கொண்ட அருங்காட்சியகம் என்று அறிந்திராவிட்டால் கலையை, வரலாறை தழைகீழாக புரிந்து கொள்ளும் அபாயமிருக்கிறது. ஆகவே தன் உள்ளுணர்வு சார்ந்து மெய்ப்பொருள் காண்பதே சரி.

மேற்பார்வைக்கு எளிய விஷயமாகவும் அனைவருமே அறிந்ததாகவும் தோன்றும் இது சிந்தனையின் பகுதியாக ஆக, கடுமையான, விரிவான வாசிப்பும், ஆசிரியரின் தொடர் வழிகாட்டுதலும் தேவைப்படும் விஷயம் என என் அனுபவத்தில் அறிந்திருக்கின்றேன். அதையும் சொல்லித்தந்தது ஜெயமோகன் தான். தமிழ்ச் சூழலில் இதன் சிக்கலை உணர்ந்தவர்கள் குறைவே.

காரணம் இந்த சிக்கலை எதிர்க் கொள்ளும் சாத்தியம் கொண்டவர்களே குறைவுதான். கீழை மற்றும் மேலை மரபை ஒன்றாக அறிந்தவர்களுக்கே இந்த சிக்கல், அப்படி அறிந்தவர்களிலும் மேலை மரபை தலை மேல் தாங்கிக் கொள்பவராக இருப்பின் எந்த சிக்கலுமில்லை. ஆனால் கீழை மரபின் பார்வையை மேற்கின் வடிவத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு  மட்டுமேயான  இந்த சவாலை அறிந்தவர்கள் மிகவும் குறைவு. [இரண்டையும் அறிந்த ஒரு சிலரும் கோட்பாட்டாளர்களாக மட்டுமே இருக்கின்றனர், படைப்பாளிகளாக இல்லாதது இங்குள்ள சிக்கல்.] அதற்கு செவ்வியல் கலை பரிச்சயமும், ‘நவீனக் கலை’ குறித்த அறிதலும் வேண்டும். நம்முடைய சிற்றோவிய மரபின் தொடர்ச்சியாக ஒரு புகைப்படத்தை எடுக்க கலையும் வரலாறும் தத்துவமும் தேவை, அதற்கு மேல் அவை செயல் படும் விதம் குறித்த அறிவும். இந்தப் பக்கம் வந்த பின்பு, சரியான ஒரு ஆசிரியர் அமைந்தால், எவ்வளவு எளிமையான விஷயம் என்று தோன்றுகிறது.

ஐரோப்பிய அறிவுச் சூழல் எப்பொழுதும் ஒரு பெரும் போக்காகவே இருந்திருக்கிறது. என்றென்றைக்கும் இருக்கும் கேள்விகளுக்கு, ஒரு காலகட்டத்தின் கருவிகளைக் கொண்டு, தன் நீண்ட உரையாடலின் தொடர்ச்சியாக புதிய விடைகளைக் காண முயல்கிறது மானுடம். அதன் ஒரு செயல்பாடாகவே அனைத்து அறிவுத் துறைகளும் இயங்குகின்றன. கீழை நாடுகளைப் போல ஒவ்வொரு துறையும் தனக்கேயான அறிதல் முறைகளைக் கொண்டு அதை நிகழ்த்தாமல், மேலை நாட்டு அறிவுச் சூழல், அந்த அந்தக் காலகட்டத்தின் பிரதான அறிதல் முறையை பிற அறிவுத் துறைகளின் அடிப்படையாகக் கொள்கிறது. கடந்த இருபது வருடங்களாக உயர் இயற்பியலையும், உயர் நரம்பியலையும் கொண்டு அனைத்தையும் வகுத்து விட முயல்வதைப் போல.

இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல பேசப்படும் தமிழில், இன்றும் கூட வரலாற்றின் இந்த இடைவெளி குறித்து எழுதப்பட்டவை அனேகமாக இல்லை என்றே நினைக்கின்றேன். கோட்பாடுகள் குறித்து அவ்வளவு எழுதிக் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவற்றை பயன்படுத்தி கலை, இலக்கிய வரலாற்று விமர்சனங்களாக எழுதப்பட்டவற்றை பார்த்ததேயில்லை, ஜெயமோகன் எழுத்தைத் தவிர. இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள். ஆனால், மொழியைத் திருகி திருகி இலக்கியம் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் எழுதிக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் வாசித்த தெரிதாவும், டில்யூஸும் சத்தியமாக இத்தனை சிக்கலாக எழுத வில்லை. அதை விட அவர்களுக்கு எழுத்தாளர்களின் மீது எந்த ஏளனமுமில்லை, பார்த் ப்ரொஸ்ட்டைப் பற்றியும், டில்யூஸ் ப்ரஸ்ஸோனைப் பற்றியும் பேசும் போது பரவசத்தோடுதான் பேசுகிறார்கள்.

90-களின் பிற்பகுதியிலிருந்து சிற்றிதழ்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அரவிந்தரோ, ஆனந்த குமாரசாமியோ, ஈ.பி.ஹேவலோ எங்கும் மேற்கோள் காட்டப்பட்டதில்லை. ஹொக்குஸாயைப் பற்றியோ, உக்கியோ-ஈ பற்றியோ எங்கும் எழுதப்பட்டதில்லை. ஃப்ரைடா காலோவைப் பற்றியும், இம்ப்ரஸனிசம் பற்றியும் அப்பொழுதே கட்டுரைகள் எழுதப்பட்டதை வாசித்திருக்கின்றேன். இருபது வருடங்கள் கழித்து இன்னமும் அவையே எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்க்வெஸ்ஸையும், கால்வினோவையும் தழுவிக் கொண்ட ஆவேசத்தில் பத்தில் ஒரு பங்காவது கீழை மரபைப் பற்றியதாக இருந்திருக்கலாம். இந்திய மொழிகள் அனைத்திலும் இதுவேதான் நிலை என நினைக்கிறேன்.

இரண்டு, அறிவை சந்தேகப்படுவது. க்ளார்க்கோ, ஜான்சனோ, குமாரசாமியோ யாராக இருப்பினும் அறிவின் எல்லையை அறிந்தே வாசிப்பதும், சந்தேகத்திற்கு இடம் வைத்திருப்பதும் முக்கியம். உள்ளுணர்வை விட அறிவல்ல பெரிது. ஆகவே  எந்த தத்துவவாதியை விடவும் ரஃபேலும் தாந்தேவும் கிருஸ்துவை இன்னமும் நெருக்கமாக நமக்கு தரக்கூடும். எந்த வரலாறையும் விட, “சரியான வரலாற்றறிவிருந்தால்” என்பது முக்கியம்.

இந்த வாசிப்புகளின் நடுவே, அவ்வப்போது பயமும் வரும், நான் உண்மையிலேயே வெறும் அறிஞனாகத்தான் சரியோ, கலைக்கும் எனக்குமான உறவென்பது நான் எண்ணுவது போல இல்லையோ என. ஆனால், மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படும் ஒன்றை உணர்ந்து கொண்டுமிருக்கிறேன். அறிவைப் போன்ற பெரிய, வேலைப்பாடுள்ள பீடத்தின் மீதுதான் உள்ளுணர்வு அமர முடியும். பேளூருக்கருகிலிருக்கும் ஒரு ஆலயத்தில் அதைக் கண்டேன். சுற்றிலும் நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட சிற்பங்களின் அணிவகுப்பு. உள்ளே இருப்பது மொட்டை லிங்கம்தான். அந்த மொட்டை லிங்கத்திற்கு அத்தனை நுணுக்கமும் தேவைப்படுகிறது, ஆனால் அந்த நுணுக்கம் மட்டும் அல்ல அது. விரிவையும் நுணுக்கத்தையும் ஒன்றாக அல்லாமல் அதை உள்வாங்க முடியாது என.

கலையால் தன்னை அறிந்தவர்கள் தன் எல்லைகளைத் தாண்டி விரிந்து செல்லவே முனைந்திருக்கின்றனர். கலையையே உணராமல், அறிஞர்களாக மட்டுமே இருப்பவர்கள் தங்களுக்கு இல்லாத அடையாளங்களை அடைய அனைத்தையும் குறுக்குகின்றனர். துரதிருஷ்டவசமாக அவர்களுக்குத்தான் நேரமிருக்கிறது வரலாற்றை எழுத. ஆகவே நாம் அதை வாசித்தே ஆக வேண்டியிருக்கிறது. ரஃபேலை, தாந்தேவை அறியக் கூட. மதத்திடமிருந்தும், அதிகாரத்திடமிருந்தும் உதவி பெற்றாலும், அவற்றின் கண்ணில் படாமல் கிருஸ்துவோடு பாகன் மரபையும் கொண்டு வந்து சேர்ப்பது எப்படி என அறிய. அப்படித்தான் தேவாலயத்தால் அழிக்கப்பட்ட பாகன் மரபையே அவர்களின் உதவியோடு மீட்டுக்கொடுத்தார்கள்.

ஆனால் அறிஞர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். க்ளார்க்கும் அப்படி ஒருவர்தான். கலை வரலாற்றறிவு கொண்ட சராசரி பிரிட்டிஷ் மேட்டுக்குடி ரசிகர். கலைஞரல்ல என்பதால் முன் முடிவுகள் கொண்டவர். ஆனாலும் இத்தகைய வாசிப்பை அவரைப் போன்றவர்கள்தான் நிகழ்த்த முடியும். நெடுங்காலமாக வில் டூரண்டின் நாகரீகத்தின் கதையையும், டபிள்யூ.ஹெச். ஜான்சனின் கலை வரலாற்றையும் வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்கான அவகாசம் இல்லாத சூழலில், வெவ்வேறு சிறிய நூல்கள் வழியாக வாசித்தவற்றை க்ளார்க் உருவாக்கும் கோட்டுச்சித்திரத்தின் வழியே நிரப்பிக் கொள்ளும் முயற்சியே இந்த வாசிப்பு.

ஐரோப்பியப் பெருமைகளை சொல்லும் நூல் என்பதால், அவற்றுக்கு நடுவே இருக்கும் சிறுமைகளின் வரலாற்றைத் தவிர்த்து விட்டு செல்கிறார். உதாரணமாக, மிக்கேலாஞ்சலோ, பீட்டர் தேவாலயக் கூரையை வரைந்ததற்கும் இறுதித்தீர்ப்பை வரைந்ததற்கும் நடுவே நிகழ்ந்த ரோமச் சூறையாடலை ஒற்றை வரியில் தவிர்த்து விட்டே செல்கிறார். காரணம் அதை சொன்னால், போப் அரசை கவிழ்க்க முயற்சி செய்ததையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கும். நான் அதையும் சென்று வாசிக்கின்றேன். அது மிக்கேலாஞ்சலோ அடைந்த மனச்சிதைவையும், மனித மைய வாதத்தின் மீதான நம்பிக்கையிழப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்த வாசிப்பில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உண்டு, உலகின் எந்த மூலையிலும் இருக்கும் கலைஞர்களை புரிந்து கொள்ளவும் அவர்களின் மரபை அறிந்து கொள்வது எவ்வளவு அவசியம் என்பது அறிந்ததே. மார்டின் பாரை புரிந்து கொள்ள வில்லியம் ஹோகார்த் வரையிலும், ரிங்கோ கவாகுச்சியை புரிந்து கொள்ள சட்டோரி வரையிலும் போக வேண்டி இருக்கிறது. ஆச்சர்யம் இல்லை. உலகெங்கும் கலைஞர்கள் தங்கள் மரபின் பகுதியாகவே இயங்குகின்றனர். ஆனால், உலக மரபுகளை தெரிந்து கொள்ளும்போது இன்றைய இந்தியக் கலைஞர்களின் கலையும் அதிலேயே அடங்கி விடுகிறது. அவர்களின் படைப்பை அறிய இந்திய மரபை அறிந்து கொள்ளத் தேவையில்லை என்பது சற்று வருத்தமான நகைச்சுவை.

இத்தனை சிக்கல்களைத் தாண்டியே ஒருவன் “கலை என்பது” என்று துவங்க வேண்டியிருக்கிறது. ஆகவே என்னைப் போல தவறான வாசல் வழி நுழைபவர்களுக்கு என் வாசிப்பை பகிர்வது உதவக் கூடும். அதன் பொருட்டே இந்த தொடர்.

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்
ஜெயக்குமாருக்கு
கலையை கையாளுதல் பற்றி …
இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்
கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்
ஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்
முந்தைய கட்டுரைபத்மாவதி -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50