சொல்லப்படாத அத்தைகள்

ath

புனைவெழுத்தாளனுக்கு தமிழில் உள்ள மிகப்பெரிய இடர் என்பது அவன் எழுதவேண்டிய மூலப்பொருள் இங்கே கிடைப்பதில்லை என்பதுதான். பலர் சொல்வதுபோல எழுத்தாளனின் சொந்த வாழ்வனுபவங்களில் இருந்து மட்டும் நேரடியாக இலக்கியம் பிறக்க முடியாது. ஏனென்றால் ஆழமான, கொந்தளிப்பான வாழ்வனுபவங்கள் எவருக்கானாலும் மிகக்குறைவே, என்னைப்போல அனுபவங்களுக்காக அலைந்துதிரிந்துகொண்டே இருக்கும் எழுத்தாளனுக்குக் கூட.

எல்லைக்குட்பட்ட தனிமனித அனுபவங்களில் இருந்து மிகக்குறைவாகவே இலக்கியத்தை உருவாக்கமுடியும். அவ்வனுபவங்களை விரித்து பிற அனுபவங்களுடன் இணைத்துப் பின்னி விரித்து வரலாறுக்கு நிகரான மாற்றுப்பரப்பாக ஆக்குவது இயலாது. ஆகவேதான் தமிழ்ப் படைப்பாளிகளில் கணிசமானவர்கள் சுயசரிதையின் நீட்சியாக சிலவற்றை எழுதுகிறார்கள். அவை சுய்சரிதைத்தன்மையால் மட்டுமே சற்றேனும் முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன.வரலாறோ அதன் மையமெனத் திரளும் தரிசனமோ அவற்றில் இருப்பதில்லை ஓரிரு படைப்புகளுடன் நின்றும்விடுகிறார்கள்.

புனைவெழுத்தாளனின் ‘கச்சாப்பொருள்’ என்ன? பிற எழுத்துக்கள்தான். பலதரப்பட்ட வரலாற்றுநூல்கள், வெவ்வேறு கோணங்களிலான சமூக ஆய்வுகள், நாட்டார் கதைத்தொகுதிகள்,  மானுடவியல் பதிவுகள், வாழ்க்கைவரலாறுகள், தொன்மங்கள், பயணக்குறிப்புகள்.இவற்றிலிருந்து நேராக கதை உருவாவதில்லை. இவை அவனுக்குள் ஓரு ரகசியக்கிடங்கில் சென்று சேர்ந்துகொண்டே உள்ளன. நிலத்தடி நீர் போல. அதுவே எழுத்தாளனின் கருவூலம்.

எழுத்தாளன் குழந்தைப்பருவத்திலேயே பிறர் வாழ்க்கையை தானும் நடிப்பவனாக உருவானவன். ஆகவே அவன் அந்தக் களங்களில் வாழ்ந்து அவற்றைப் பெருக்கித் தொகுத்துக்கொண்டே இருக்கிறான். அவை அவனால் செரிக்கப்பட்டபின் ஏதேனும் மையம்சார்ந்து தன்னிச்சையாக எழுந்து புனைவாக உருக்கொள்கின்றன. பதினேழாம்நூற்றாண்டில் பிரிட்டனில் எழுதப்பட்ட அற்புதமான பயணசாகசக் கதைகள் பலவும் கடற்பயணம் செய்யாதவர்களால் எழுதப்பட்டவை என்பதை பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தமிழில் அத்தகைய அடிப்படை எழுத்துக்கள் மிகக்குறைவு. ஒப்புநோக்க குமரிமாவட்டத்தில் குமரிமாவட்ட வரலாறு, பண்பாடு குறித்து ஓரளவு எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளைப்பற்றி மொழியில் ஏதேனும் பதிவு இருக்குமென்றால் அது புனைவெழுத்தாளன் எழுதியதாகவே இருக்கும். பலசமயம் ஒரு நிலத்திற்கு ஒரு எழுத்தாளன் மட்டுமே. கரிசலுக்கு கி.ரா, செம்புலத்திற்கு கண்மணி குணசேகரன்  என்பதே ஒரு குறைபாடுதான். தான் எழுதும் களத்தின் தொல்மரபு குறித்தோ,ஆலயங்கள் குறித்தோ, நம் சாதியினரின் வரலாறு குறித்தோ, அவர்களின் இல்லப் பழக்கவழக்கங்கள் குறித்தோ எதுவுமே பதிவுசெய்யப்பட்டு எழுத்தாளனுக்குக் கிடைப்பதில்லை.

ஆகவே மிகப்பெரிய குறை ஒன்று நம் புனைகதைப்பரப்பில் உள்ளது. ஓர் எழுத்தாளனின் புனைவுலகில் பெரும்பாலும் அவன் சார்ந்த சாதிச்சூழல் மட்டுமே இருக்கும். அங்கேயே உள்ள இன்னொரு சாதியின் அகச்சூழல் முற்றாகவே தவிர்க்கப்பட்டிருக்கும், ஏனென்றால் அவன் அதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை இங்கு.

அனைவரும் ஏதேனும் வகையில் தங்கள் வாழ்க்கையை எழுத்திலாக்கும் ஒரு களம் அமையுமென்றால் அதுவே எழுத்தாளனின் வளம் மிக்க நிலம். அத்தனை சாதியினரும் தங்கள் அகவாழ்க்கையை எவ்வாறேனும் பதிவுசெய்வார்களேயானால், அந்நிலத்தின் நுண்வரலாறு எழுதப்பட்டு கிடைக்குமென்றால் அது கொள்ளக்கொள்ள தீராத அறுவடைக் களம். அந்த மரபே இங்கில்லை. நமக்கு நுண்தகவல்கள் கொண்ட வாழ்க்கை வரலாறுகள் அரிதானவை.  தன்வரலாறுகள் மேலும் அரிதானவை. குடும்பக்குறிப்புகள் அனேகமாக கிடையாது.

வெங்கட சுப்புராய நாயகர்
வெங்கட சுப்புராய நாயகர்30

அவ்வகையில் எனக்கு மிக உதவியாக இருந்த பல நூல்கள் உண்டு. உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம், எனது குருநாதர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளையின் என்கதை, தி.செ.சௌ.ராஜனின் நினைவலைகள், கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள், க.சந்தானத்தின் நினைவலைகள் போன்ற புகழ்பெற்ற வரலாற்றுக்குறிப்புகள், சே.ப.நரசிம்மலு நாயிடுவின் தென்னக யாத்திரை, ஏ.கே.செட்டியாரின் பயண இலக்கியங்கள், பிலோ இருதயநாத்தின் நாட்டாரியல் குறிப்புகள், பி.எல்.சாமியின் பண்பாட்டு ஆய்வுகள் போன்றவை அடிப்படைநூல்கள் என்றே சொல்லலாம்.

ஆனால் அன்றாட எளிய வாழ்க்கைக்குறிப்புகள் மேலும் முக்கியமானவை. அவை இங்கே மிக அரிது.  ந.சுப்புரெட்டியாரின் தன்வரலாற்றுக்குறிப்புகள் ஓர் உதாரணம். நினைவுக்குமிழிகள் என்றபேரில் நான்கு பாகங்களாக அவை வெளிவந்துள்ளன.நீங்காத நினைவுகள் என்ற தலைப்பில் மேலும் இரு பாகங்கள். எளிய அன்றாடவாழ்க்கைச் சித்திரங்கள் அவை, ஆனால் இலக்கியவாதிக்குரிய அருஞ்செல்வங்கள்.

அவ்வகையில் குறிப்பிடவேண்டிய நூல் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் எழுதிய ‘அத்தையின் அருள்’. தமிழில் அரியவகை நூல்களில் ஒன்று இது.கி.ராஜநாராயணனின் நண்பரான அவருடைய மறைந்த அத்தையைப் பற்றிய நினைவுகளை சிறிய நூலாக எழுதியிருக்கிறார். இதற்கு கி.ரா முன்னுரைக்குறிப்பும் எழுதியிருக்கிறார். _ரின் அன்னை இளமையிலேயே இறந்துவிட்டார். அவருடைய அத்தை, தந்தையின் சகோதரி, இளமையிலேயே விதவையாகி தமையன் இல்லத்துக்கே வந்துவிட்டார்கள். தமையனின் குழந்தைகளை தன் குழந்தைகளாக அவர்தான் வளர்த்தார். தாயாகி தன்னை வளர்த்த அத்தை அல்லியங்கோதை குறித்து சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் _ நினைவுகளை எழுதியிருக்கிறார்

அசாதாரணமான, ஆழமான எதுவும் இந்நூலில் இல்லை. ஆனால் அத்தை குறித்த முழுமையான ஒரு சித்திரம் உருவாகி வருகிறது. தமிழ்ப்புனைவுலகில் இதற்கிணையான பெண் கதாபாத்திரங்கள் சில உள்ளன, உடனடியாக நினைவுக்கு வருவது க.நா.சுவின் சர்மாவின் உயில் நாவலில் வரும் ‘அக்கா’ என்னும் பெரிய பாட்டி. பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றையில் பொன்னா பாட்டி ஐம்பதாண்டுகளுக்குப்பின் எழுதப்பட்ட கதாபாத்திரம். வீட்டுக்கு வீடு இத்தகைய பெண் ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள். இந்திய நாவல்களில் இத்தகைய பெண்கதாபாத்திரங்கள் பல உள்ளன. பிரேமா காரந்தின் ஃபணியம்மா, லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் நார்மடிப்புடவை என நினைவில் நாவல்கள் எழுந்துவந்தபடியே உள்ளன

1911ல் பிறந்து 1994ல் மறைந்த அல்லியங்கோதை கல்வியறிவற்றவர். ஆனால் செவிக்கல்வி நிறையவே இருக்கிறது. குடும்பப்பின்புலத்திலிருந்து புராணங்கள், நாட்டார் பாடல்கள், விடுகதைகள் என ஏராளமாகக் கற்றிருக்கிறார். செல்வச்சூழலில், ஆனால் சிறிய குடும்பவட்டாரத்தில் வாழ்ந்ததனால் நாத்துடுக்கும் நிமிர்வும் கொண்டவராக இருக்கிறார். அவருடைய வாழ்வின் ஆதாரமே குழந்தைகள் என்பதனால் அவர்கள்மேல் பெரும் பற்று கொண்டிருக்கிறார்.

அத்தையின் பெயர் தஞ்சையில் உள்ள திருப்புள்ளமங்கை என்னும் ஊரில் கோயில்கொண்டுள்ள அல்லியங்கோதை அன்னைக்குரியது. சின்னஞ்சிறு தகவல்கள் வழியாக அத்தையைச் சித்தரித்துச்செல்கிறார் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் _ நரியைக்குளிப்பாட்டுதல் போன்ற அவருடைய சொலவடைகள், டிக்‌ஷ்னரியை கிருஷ்ணகிரி என்றும் ரிட்டயர் ஆவதை ரெட்டியார் ஆவது என்றும் சொல்லும் அவருடைய தனி அகராதி, நோய் என்ன என்று கேட்கும் டாக்டரிடம் ‘நீதான் கண்டுபிடியேன்’ என்று சொல்லும் துடுக்கு என மெல்லமெல்ல ஆளுமைச்சித்திரம் விரிந்துகொண்டே செல்கிறது

‘நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்

காலுந்தலையும் கடைச்சாதி- மேலாக

ஒட்டும் முதலெழுத்தும் ஓதும் மூன்றாமெழுத்தும்

விட்டால் பரமனுக்கு வீடு

என்னும் அத்தை சொல்லும்  பழமொழிச்செய்யுளை வியப்புடன் எண்ணிக்கொண்டேன். [புகையிலை – கைலை] அந்தச்செய்யுளை கல்விகற்காத ஒருவர் நினைவில்கொள்ள முடியாது. அபாரமான கல்விவேட்கைதான் அவரை இயக்கிய விசை. ஆனால் அதற்கான எச்சூழலும் அமையவில்லை. மொத்த நூலையும் இந்தக்கோணத்தில் வாசித்தால் தன்னை வளர்த்த அத்தைமேல் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் கொள்ளும் நெகிழ்ச்சிக்கு மேலாக முற்றிலும் புதிய ஒரு கதை கிடைக்கிறது

அத்தையின் அருள். சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் கண்ணம்மா பதிப்பகம்/ 144 மகாலட்சுமி இல்லம், இலாசுப்பேட்டை முதன்மைச்சாலை, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி 8

முந்தைய கட்டுரைகுடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்?
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46