கடிதங்கள்

kar

அன்பின் ஜெ,

 

வணக்கம்.

 

புதியவர்களின் சிறுகதைகள் பற்றிய விவாதம் தொடங்கியதும் இலக்கியம் தொடர்பாக உரையாடும் நண்பர்களை உள்ளடக்கிய எங்கள் வாட்சப் குழுவில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தினமும் காலையில் ஒரு சிறுகதையை வாசிப்பது. நாள் முழுவதும் அதை அசைபோட்டு, நண்பர்களுக்கிடையே விவாதித்து, முடிந்தவரையில் அவற்றைப் பற்றி எழுதியும் விட வேண்டும் என்றெண்ணியே செயல்பட்டோம். சங்கர் உங்களுக்கு எழுதிய கடிதத்தைவிட இன்னும் காத்திரமாகவே எங்களுடன் உரையாடினார். அதன் தொடர்ச்சியாகவே கதைகளைப் பற்றிய எங்களுடைய கடிதங்களும் உங்களை வந்தடைந்தன.

 

ஒரு பக்கம் புத்தகக் கண்காட்சி. புதிய புதிய புத்தகங்களின் வருகை. ஓர்மையுணர்வு கொண்ட நண்பர்களுடனான சந்திப்புகள், உரையாடல்கள். மறுபக்கம் இப்படியான சிறுகதைகள் தொடர்பான விவாதங்கள். அதில் என் கதையும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று ( இது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று) எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த போது விவாதம் சட்டென்று நிறுத்தப்பட்டதும், அதைவிட இது போன்ற விவாதங்கள் இனி இங்கே நடைபெறாது என்று நீங்கள் அறிவித்ததும் கொஞ்சம் மனச்சோர்வை அளித்தது.

 

இன்றைய இணையவெளியில் கதைகளைப் பிரசுரிப்பது எவ்வளவோ எளிதாகிவிட்டது. ஆனால் அவை பற்றிய விவாதங்கள்/உரையாடல்கள் மிகவும் அரிதாகவே நடைபெறுகின்றன. போன வருடம் நடைபெற்ற விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த போது நண்பர் தூயனும் இதே கருத்தை முன் வைத்தார்.  “கதை நல்லாருக்கு” போன்ற வார்த்தைகளைவிட அவற்றின் மீது வைக்கப்படும் கறாரான விமர்சனங்களே ஒரு படைப்பாளியை முன்னகர்த்திச் செல்ல உதவும் என்பதை புதிதாக எழுத வந்தவர்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம்.

 

ஆனால் அதெற்கென்று இருந்த ஒரே கதவும் அடைபட்டது குறித்தான வருத்தத்தைப் பதிவு செய்யவே இக்கடிதம்.

 

மிக்க அன்பும் நன்றியும்,

கார்த்திக் பாலசுப்ரமணியன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

நவீனின் “போயாக்” கதை குறித்த என்னுடைய விமர்சனத்தை கீழே
இணைத்திருக்கிறேன். சிறுகதை குறித்த விமர்சனம் முற்றுப்பெற்று விட்ட
போதிலும் தங்கள் பார்வைக்காக இதை அனுப்புகிறேன். மிக்க நன்றி.

அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்

விமர்சனம்

சிறுகதையின் போக்கு வாசகனின் பார்வையில் மலையோடையைப் போன்றதாக இருக்க
வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மலையில் பாய்ந்திறங்கும் ஓடையைப் போலவோ
நதியைப் போலவோ சிறுகதையின் பாதையும் எளிதில் உய்த்தறியமுடியாததாக
இருக்கையிலேதான் அதன் வீச்சு பன்மடங்கு அதிகமாகிறது. கதையை வாசிக்கையிலே
அது எங்கு சென்று முடியும் என்று வாசகனுக்குத் தெரிந்துவிட்டால்
அக்கதையால் அவனுக்கு எதையும் அளிக்கவியலாது. அதே சமயம் கதையின் முடிவு
நுட்பமாகவும் பூடகமானதாகவும் இருக்கையில் கதை வாசகனின் மனதில் நிரந்தரமாக
அமர்ந்து விடுகிறது. “பூடகம்” என்பதற்கும் “குழப்பம்” என்பதற்கும்
மெல்லிய கோடுதான் இடைநிற்கிறது. ‘பூடகம்’ என்ற பெயரில் குழப்பமான
முடிவுகளைக் கொண்ட பல கதைகளையும் வாசகன் கடந்துவர நேரிடுகிறது.
சிறுகதையின் முடிவென்பது பெரியதொரு கோபுரத்தின் உச்சிக்கு
இட்டுச்செல்லும் முதல் படி. அந்த முதல் படி வாசகன் கண்களுக்குப்
புலப்பட்டால் போதும் மற்ற படிகளை அவன் எளிதாகவோ சற்று சிரமப்பட்டோ கூட
கண்டுகொள்வான். கதை காட்டும் உலகம் புதுமையாகவும் அல்லது பழகிய
உலகத்திலேயே புதுமையைக் காட்டுவதாக இருந்தாலும், கதையில் மொழிபு வாசகனைக்
கதைக்குள் தக்கவைக்கும்படியாக இருந்தாலும் கதை பாதி
வெற்றுயடைந்துவிடுகிறது. மேலே சொன்னவை யாவும் நவீனின் “போயாக்” கதைக்கு
மிகச் சரியாகப் பொருந்துகிறது.

கதையின் துவக்கம், உச்சம், முடிவு யாவும் ஒரு ஆழமான முரணின்
பின்புலத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல தளங்களிலாக கதை
சுட்டும் முரண் விரிகிறது. முதல் தளத்தில் இரு வேறுபட்ட கலாச்சார
மோதல்கள். அதன் அடுத்த தளத்தில் அவ்வகை வேறுபட்ட கலாசாரம் விளைவித்த
மனிதர்களின் பண்பாட்டு மோதல்கள், அதன் அடுத்த தளத்தில் ஆண் பெண் உறவில்
நேரும் அகமோதல்கள், இவை யாவும் கதையின் போக்கில் கூர்மையடைந்து ஒரு
புள்ளியில் உச்சம் கொள்கிறது. உச்சம் கொள்ளும் அப்புள்ளியில் மேலே சொன்ன
கோபுர வாயிலின் முதல் படி கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது.

வகுப்பறையில் முதலைகளைக் காட்டும் கதையின் துவக்கம் வாசகர்கள்
முன்னறியாதது. முதலை என்பது அருவருப்பின் குறியீடாக முதலில்
தென்பட்டாலும் கதை வளர்கையில் அது பல்வேறு அர்த்தங்களைச் சுட்டும்
படிமமாக விரிகிறது. முதலையை வெறுத்தபடியே ஊருக்குள் நுழைபவன், முதலைக்
கறியை அருவருத்துத் துப்புபவன் மெல்ல மெல்ல தானே ஒரு முதலையாய் மாறும்
ஒரு Transition கதைக்குள் நிகழ்கிறது. கதையின் இறுதியில்
காட்டுப்பன்றிகளின் கண்களில் தெரியும் பதற்றம் அவை அவனுள் இருந்த
முதலையைக் கண்டறிவதால்தானே. தன் எல்லைக்குள் வந்த முதலையைக் கொன்று
தின்றும் ஊரிலும், ஒரு ஆசிரியனுக்கு உரிய மரியாதையை அவர்கள்
அளிக்கிறார்கள். பண்பாடற்றவர்கள் என்று இவன் நினைக்கும் ஒரு கூட்டத்தினர்
இவனது கல்வியைக் கண்டு இவனுக்குப் பணிகிறார்கள். ஆனால், பதிலுக்கு இவன்
அவர்களுக்கு அளிப்பது இவன் முதலையாய் மாறி பிள்ளைக் கறியை உண்பதுதான்.
ஆக, பண்பாடென்னும் தராசில் எவருடைய தட்டு தாழ்கிறது, எவருடையது உயர்கிறது
என்ற கேள்வியையும் கதை முன்வைக்கிறது.

வரலாற்றின் நீண்ட பக்கங்களில் நாம் மீண்டும் மீண்டும் காண்பது இதைத்தான்.
நாகரிகத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் பழங்குடிகளின் ஊருக்குள் செல்வதென்னவோ
அவர்களை நாகரிகமடையச் செய்யும் நோக்கத்தில்தான். ஆனால், முடிவில்
பண்பாடற்றவர்களும் செய்யக் கூசும் கீழ்மையைத்தான் இவர்கள் அங்கு சென்று
நிகழ்த்துவார்கள்.

கதையின் முடிவில் நிகழும் சில காட்சிகள் மேற்சொன்னவற்றை உறுதி செய்வது
போலத் தென்படுகிறது. இவன் அந்த ஊருக்கு வரும்போது மிதந்து கொண்டிருந்த
படகு, ஊரை விட்டு வெளியே வரும்போது கவிழ்ந்து கிடக்கிறது. படகோட்டி
இம்முறை அவனைப் பார்த்து கைகளை மூடி மூடித் திறக்கும்போது இவனைத் தான்
முதலை என்கிறானோ என்ற துணுக்குறலும் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.

நெற்றியில் குறி என்பதையும் இதனோடு தொடர்பு படுத்திப் பார்க்கையில் அது
கல்வியறிவுள்ளவனின் முறைதவறிய காமத்தைத்தான் சுட்டுவதாகப் படுகிறது.
யோசித்துப் பார்த்தால்.. தன்னிடம் கற்கும் சிறுமியரைப் பாலியல்
தொல்லைக்குட்படுத்தும் ஆசிரியர்களைப் பற்றிய எத்தனையோ செய்திகளை
வாசிக்கையில் கிடைப்பது கூட இந்த சித்திரம்தான். அவர்கள் யாவரும்
நெற்றியில் குறி முளைத்தவர்கள்தாமே. கதையின் நாயகன் உண்மையில் நெற்றியில்
குறி முளைத்துவிடுமே என்பதற்காக ஊரை விட்டு ஓடவில்லை. மாறாக, நெற்றியில்
குறி முளைத்து விட்டதை உணர்ந்துதான் ஓடுகிறானோ என்றும் தோன்றியது.

பொதுவாக கதைக்குள் ஆசிரியர் ஒரு நூலையோ அல்லது அதன் ஆசிரியரையோ
சுட்டினால் அதற்கு இன்னும் ஆழமான அர்த்தங்கள் இருக்கலாம். அதுபோல
இக்கதையில் ஷேக்ஸ்பியரின் “டார்க் லேடி” எதைச் சுட்டுகிறது என்ற
கேள்வியையும் எழுப்பிக் கொள்ளலாம். ஷேக்ஸ்பியரின் டார்க் லேடி யார் என்ற
கேள்வி தனி விவாதமாகவே இன்றுமிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் டார்க் லேடியை
இக்கதையில் நீட்டித்திருப்பதற்கு காரணமாக நான் நினைப்பது, கதை நாயகனின்
இருண்ட அந்தரங்கத்திற்குள் பிரவேசிக்கும் சீமா அவனில் எழுப்பும் காமத்தை
அடையாளப்படுத்துவதற்காக இருக்கலாம். வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால்
அதை நவீன் தெளிவுபடுத்தலாம்.

மற்றபடி கதையின் பிற அம்சங்களைக் குறித்து வாசகர்கள் முன்னரே நிறைய
எழுதிவிட்டார்கள். கதையின் குறையாக நான் கருதுவது, நெற்றியில் குறி
முளைக்கும் அந்த அச்சத்தை மீண்டும் மீண்டும் பல இடங்களில்
சொல்லவேண்டியதில்லை என்பதை மட்டுமே. ஓரிருமுறை சொல்லியிருந்தாலே
போதுமானது.
நவீனுக்கு என் மனங்கனிந்த வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைஅஞ்சலி- தர்மசேன பத்திராஜ
அடுத்த கட்டுரைஇயற்கையை அறிபவனின் அறம்