பத்மாவதியும் வரலாறும்

padmavati

நேற்று பத்மாவதி திரைப்படம் பார்த்தேன். நான் எப்போதுமே மிகப்பெரிய காட்சியமைப்புகளின் ரசிகன். அத்தகைய படங்களைத் தவறவிடுவதில்லை. சினிமா எனக்கு முதன்மையாகக் கேளிக்கைதான். என்னை கவர்ந்த ஐநூறு நூல்களில் ஐநூறாவது நூலளவுக்குக்கூட எந்த அறிவார்ந்த சினிமாவும் பாதிப்பைச் செலுத்தியதில்லை. இது என் உள்ளம் அமைந்துள்ள விதம்- என் அறிதல் மொழியினூடாகவே நிகழ்கிறது. ஆகவே பத்மாவதியை வெறும் காட்சியின்பத்தின் பொருட்டே காண்பதற்காகச் சென்றேன்.

வழக்கமான சஞ்சய்லீலா பன்சாலி படம். பிரம்மாண்டமான அரண்மனை காட்சியமைப்புகளும், அலங்காரமான ஆடைவடிவமைப்புகளும் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் முப்பரிமாணக்காட்சியில் ஒளி சற்று குறைந்தே தெரிந்தமையால் அவற்றின் முழு அழகும் கண்ணுக்குள் விரியவில்லை. நடிகர்கள் அழகிய உடலமைப்பு கொண்டிருந்தார்கள். நடிகைகள் அழகாக இருந்தனர். ஆகவே முழுக்க அமர்ந்து பார்க்கமுடிந்தது.

ஆயினும் பாஜிராவ் மஸ்தானி போல ஆழமில்லாத சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் கொண்ட திரைக்கதை. வணிகப்படத்திற்குரிய திருப்பங்கள் கூட இல்லாத மேடைநாடகத் தன்மைகொண்ட காட்சிகள். ஒரு குடும்பக்கொண்டாட்டமாகச் சென்றமையால் முழுக்கப் பார்க்க முடிந்தது. இல்லையேல் சலித்து எழுந்திருப்பேன்.

பாகுபலியுடன் இப்படத்தை ஒப்பிட்டால் வேறுபாடு தெரியும். பாகுபலி ஒரு குழந்தைக்கதை.  ‘ஓரே ஒரு நாட்டிலே’ என அது ஆரம்பிக்கிறது. அந்த எளிமை அத்தனை போலிப்பிரம்மாண்டத்தையும் நியாயப்படுத்தி விடுகிறது. சாகசநாயகன், விந்தையான நிலக்காட்சிகள், வஞ்சினம், போர், கனவுகள் என அனைத்தும் ஒழுங்காக அமைந்துவிடுகின்றன. செயற்கையானவை என்றாலும் தொடர் திருப்பங்கள் கொண்ட திரைக்கதை பார்க்கவைக்கிறது. எவையும் இல்லாமல் வரலாறு என பாவனைசெய்வதனால் இந்த சினிமா சலிப்பூட்டுகிறது.

இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு என்பதுதான் என்னைத் திகைக்கச்செய்தது. இந்தப்படத்தை இந்த்துவர்கள் எதிர்ப்பது முற்றிலும் பொருளற்றது. நெடுங்காலமாக இந்துத்துவக் கொள்கையாளர்கள் முன்வைக்கும் அதே ஒற்றைப்படையான வரலாற்றுச் சித்தரிப்பை மூர்க்கமாக முன்வைக்கும் படம் இது. எதிர்ப்பவர்கள் படத்தைப் பார்க்கவில்லை. கதாநாயகனாகிய ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாக நடிக்கிறார் என்பதே அவர்களின் கற்பனையில் ஒருகதையை உருவாக்கிவிட்டிருக்கிறது.

கதாநாயகி நடனம் ஆடுகிறாள், ராஜபுத்திர அரசிகள் பொது இடங்களில் ஆடுவதில்லை என்று இன்னொரு குற்றச்சாட்டு. இப்படத்தில் அவர் ஆடுவது பெண்கள் மட்டுமே பார்க்கும் அகத்தளத்தில் பெண்களுடன். பெரும்பாலும் முட்டாக்குடன் ஆடுகிறார். அது அன்று இருந்த வழக்கம்தான்.

வேறென்ன? இதற்கு எத்தனை கலவரம்! எவ்வளவு பொருளிழப்பு!   நல்லவேளையாக இன்னும் உயிரிழப்பு இல்லை. முட்டாள்தனமாகத் தெருவிலிறங்கிவிட்டு அரசியல் நோக்குடன் அதையே முன்னால் கொண்டு செல்கிறார்கள் என நினைக்கிறேன் இந்தியா சென்றுகொண்டிருக்கும் இருண்ட பாதையைக் காட்டும் சமீபத்திய நிகழ்வு இது.

மாறாக இதன் வரலாற்றுச் சித்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது வேறு ஒரு கோணத்தில். அலாவுதீன் கில்ஜியும் சரி, அவர் தாய்மாமா ஜலாலுதீன் கில்ஜியும் சரி, முற்றிலும் பண்பாடற்றவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கேம் ஆஃப் த்ரோன் போன்ற தொடர்களில் வரும் தோலாடைகள், மூர்க்கமான முகங்கள், வெறிகொண்டவர்கள் போன்ற நடத்தைகள். அலாவுதீன் கில்ஜி ஜாக் ஸ்பாரோ போல தெரிகிறார். அவர்கள் அமர்ந்து சாப்பிடுவதில்கூட ஒருவகை பண்பாடற்ற தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. பார்த்துக்கொண்டிருக்கையில் எனக்கே சங்கடமாக இருந்தது இது. அதிலும் அலாவுதீன் கில்ஜி ஆடும் ஒரு வெறிநடனம் மிகக்கீழான ரசனை கொண்டது. பாஜிராவ் மஸ்தானியில் இந்திய வரலாற்றின் நாயகர்களில் ஒருவரான பேஷ்வா பாலாஜி பாஜிராவ் ஆடிய குத்தாட்டம் என்னை அருவருப்படையச் செய்தது. அதை இப்போதும் உணர்ந்தேன்.

திரைப்படத்துக்காக பல மாற்றங்கள் வரலாற்றில் செய்யப்பட்டுள்ளன. மாலிக் முகம்மது ஜயஸி என்னும் சூஃபி கவிஞர் 1540ல் எழுதிய பத்மாவத் என்னும் காவியத்தில் தோன்றும் கதாபாத்திரம் பத்மாவதி என்னும் பத்மினி. அவர் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. அவரைப்பற்றிய நாட்டார்ப்பாடல்கள் இருந்துள்ளன எனப்படுகிறது, இப்போது எவையும் கிடைக்கவில்லை. அலாவுதீன் மறைந்து ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்டது இக்காவியம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஜயஸியின் காவியத்தில் அனைத்தும் இருந்தும் அழகு என்னும் ஒன்றுக்காக மயங்கி அதை அடைய அனைத்தையும் துறக்க முயன்று வெறுமையைச் சென்றடையும் துன்பியல் கதாபாத்திரம் அலாவுதீன். பத்மினியின் சாம்பலை நெஞ்சில்பூசிக்கொண்டு விழைவின் வெறுமையைப்பற்றி அவர் புலம்பும் கவிதைவரிகளுடன்  முடிகிறது அக்காவியம். அதன் சூஃபி மரபுசார்ந்த தரிசனமும் அதுவே. அழகு என்பது மாயை, வெறுமைக்குக் கொண்டுசெல்வது என்பது ஆனால் இத்திரைப்படத்தில் அலாவுதீன் காமவெறிகொண்டு அவளைக் கைப்பற்ற விழைவது மட்டுமே உள்ளது

அதோடு படத்தில் பத்மாவதியின் கணவர் ரதன் சிங் கும்பல்கரின் தேவபாலரிடம் போரிட்டு இறந்ததாகவே காவியம் சொல்கிறது. வரலாறும் அதுவே. ஆனால் அலாவுதீன் கில்ஜியிடம் போரிட்டு வஞ்சகமாகக் கொல்லப்பட்டதாகப் படம் குறிப்பிடுகிறது

வழக்கமாக நாகர்கோயிலில் சினிமா பார்க்க இஸ்லாமியக் குடும்பங்கள் வருவதில்லை. இந்தப்படத்திற்கு முதல்நாள் பெருங்கூட்டமாக வந்திருந்தார்கள். புர்க்கா அணிந்த பெண்களே நிறைய இருந்தனர். இந்துத்துவர்களின் எதிர்ப்பால் இது அலாவுதீனை பெருமைப்படுத்தும் படம் என அவர்கள் எண்ணிவிட்டனர். ஆரம்பக்காட்சிகளில் அலாவுதீனுக்குக் கைதட்டல்கள் விழுந்தன. மெல்லமெல்ல அவர்கள் அமைதியானார்கள், கூச்சலிடும்பொருட்டு வந்திருந்த இன்னொரு கும்பல் கைதட்ட ஆரம்பித்தது. திரையரங்குக்குள் அமர்ந்திருப்பதே வெடிகுண்டுமேல் என அச்சமூட்டியது.

ஒரு திரையரங்கில் இப்படி ஒரு பிரிவினையும் கசப்பும் நிகழக்கூடாது. திரைப்படம் பெரிதாக எதையும் கற்பிப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன், ஆனால் தவறான பிம்பங்களை நிறுவிவிடும். வணிகக்கேளிக்கைப் படம் வணிகக்கேளிக்கையாகவே நின்றுவிடுவதே மேல். அதற்கு வரலாறு, சமூகவியல்,ஆன்மிகம் சார்ந்த பூச்சுக்கள் எல்லாமே ஆபத்தானவை. ஏனென்றால் இங்கே இவற்றை பொறுப்பாக உருவாக்கும் எவரும் சினிமாத்துறையில் இல்லை. சஞ்சய் லீலா பன்சாலி அவருடைய வழக்கமான கூட்டுக்குடும்ப இசைமசாலாக்களுடன் நின்றுவிடுவதே நாட்டுக்கு நல்லது.

*

அலாவுதீன் கில்ஜி போன்றவர்களின் சித்தரிப்புக்கு வரலாற்றிலேயே இன்னும் சமநிலையான இடம் இல்லை. இப்போதுகூட கத்திமேல் நடக்கவேண்டிய மிகச்சிக்கலான ஒரு சவால் அது.  இருபக்கமும் வெறிகொண்ட தெருச்சண்டியர்க்கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டிருக்கையில் எவரும் எதுவும் பேசமுடியாத நிலை இன்றுள்ளது

துருக்கிய சுல்தான்கள் இப்படத்தில் காட்டப்படுவதுபோல பண்படாத பாலைவனப் படையெடுப்பாளர்கள் அல்ல. இந்தியப்பண்பாடு அளவுக்கே தொன்மையானவை துருக்கிய, பாரசீகப் பண்பாடுகள். அவற்றின்மேல் இஸ்லாம் உருவாக்கிய தாக்கத்தால் எழுந்த அரசர்கள் அவர்கள். நெடுங்கால உயர்குடிப் பண்பாடு உருவாக்கிய மிகமிக விரிவான முறைமைகள், அவைவழக்கங்கள், ஆடம்பரங்கள், நுண்கலைகள், உயர்தர இலக்கியங்கள் கொண்டது அவர்களின் அரசச்சூழல்.

அத்தகைய பிரம்மாண்டமான அரசவைச்சூழல் அன்று இந்திய அரசுகளில் இருக்கவில்லை. அவை ஒருவகையில் மாபெரும்  குலச்சபைகளாகவே நீடித்தன. சுல்தான்களுக்குப் பின் இந்திய அரசர்கள் அனைவரும் அவர்களின் மரபைத்தான் நகலெடுத்தனர். இந்திய அரசர்களின் ஆடையணிகள், அரண்மனை அமைப்புகள், அவைமுறைமைகள் என பிற்காலத்தில் நாம் அறிவதனைத்துமே சுல்தானிய அவைகளிலிருந்து வந்தவை. சிவாஜியும் கிருஷ்ணதேவராயரும் அணிந்துள்ள உடைகள் கூட இந்திய உடைகள் அல்ல, சுல்தானிய மரபில் இருந்து தாக்கம் பெற்றவைதான்.

சுல்தான்கள் கல்வியற்றவர்களோ தனிப்பட்டமுறையில் பண்பாடற்றவர்களோ அல்ல. அவர்கள் பெரும்பாலும் இசை ரசிகர்கள், கலைகளைப் பேணியவர்கள், பலர் தாங்களே கவிஞர்கள். மிகமிக மென்மையான உயர்குடிப் பாவனைகள் கொண்டவர்கள். அவர்களின் ஓவியங்களில் அவர்கள் மலர்களை முகர்ந்தவர்களாகத் தோற்றமளிப்பது இந்த மென்மையைச் சுட்டுவதற்காகவே.

சுல்தான்களின் அவைகளில் அவர்களுடனான எல்லா உரையாடல்களும் கவித்துவம் நிறைந்த நீண்ட சொற்றொடர்களாகவே அமையவேண்டுமென நெறி இருந்தது. அதற்கென கவிஞர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பலசமயம் இது கேலிக்குரியதாக தெரியுமளவுக்கு உச்சகட்ட கவித்துவம் கொண்டிருந்தது. உருது அவ்வாறு உருவாகி வந்தமையால்தான் இந்தியமொழிகளில் கவித்துவமானது அது எனக் கருதப்படுகிறது. சுல்தான்களின் முதன்மை அவைமொழி பாரசீகம். அவர்களின் காலகட்டத்தில் அது இந்தியமறுமலர்ச்சி ஒன்றை அடைந்தது. இந்தியமொழிகளுடன் பாரசீகத்தின் உறவாடல் இங்கு ஓர் பண்பாட்டு மறுமலர்ச்சியை உருவாக்கியது. குறிப்பாக நம்முடைய பாவியல்பு பெருமளவுக்கு மாறுபட்டது.

சுல்தானிய அவைகளில் இருந்துதான் இந்துஸ்தானி இசை இன்றைய வடிவில் உருவானது. அது தொன்மையான இந்திய இசைக்கும் துருக்கிய, பாரசீக இசைகளுக்கும் நடுவே நிகழ்ந்த உரையாடலின் விளைவு. பெருங்கலைஞர்கள் அவர்களின் அவைகளில் அமர்ந்திருந்தனர். அலாவுதீன் கில்ஜியின் அவையில்தான் அமிர் குஸ்ரு இருந்தார். இந்திய இலக்கியத்திலும் இசைமரபிலும் இன்றும் நீடிக்கும் செல்வாக்கு அவருடையது

அவர்களின் காலகட்டத்தை அலங்காரக்கலைகளின் உச்சம் எனலாம். அத்தனை அன்றாட உபயோகப்பொருட்களும் மிகையான அலங்காரம் கொண்டவை. ஆடைகள் பொன்னூல் பின்னல் மிக்கவை. நகைகள் செய்வதில் இந்திய கைத்திறன் உச்சத்தை அடைந்தது அவர்களுக்குப் பின்னால்தான். இன்றுகூட இந்திய ஆலயங்களின் பட்டுநூல்பின்னல், அலங்காரப்பின்னல் பணிகளில்கூட இஸ்லாமியக் கைவினைஞர்கள் இருப்பதற்குக் காரணம் இதுவே.

நறுமணங்களை உருவாக்கும் கலை, சமையற்கலை ஆகியவற்றிலும் அக்காலகட்டம் உச்சம் நோக்கிச் சென்ற ஒன்று. அவர்கள் காலத்தில் இந்தியாவுக்கு வந்து வளர்ந்து இந்தியப் பண்பாட்டிலும் செல்வாக்கு செலுத்தியகலை எழுத்துருக்கலை. குர்ஆனை அலங்காரமாக பட்டிலும் தோலிலும் எழுதும் கலை அக்காலகட்டத்தில்தான் இங்கே தொடங்கியது. முகலாய சிற்றோவிய மரபின் தொடக்கமும் அவர்களின் அவைதான்.  இந்தச்செய்திகளை எல்லாம் இணையம் வழியாகவே எவரும் இன்று எடுத்துக் கொள்ளமுடியும்.

அலாவுதீனின் ஆளுமையை இந்தப்பின்னணியில் எப்படி உருவகித்திருக்க முடியும்? மென்மையாக, மிக அருகே நிற்கும் அறிவிப்பாளனுக்கு மட்டுமே தெரியும்படிப் பேசுபவர். பெண்மை கலந்த நிதானமான உடலசைவுகள் கொண்டவர். பெரும்பாலும் இசைகேட்டபடியோ கவியரங்குகளில் அமர்ந்தபடியோ சதுரங்கம் ஆடியோ தன் கைகளாலேயே குரானை எழுதியோ பொழுதை ஓட்டுபவர். உச்சிப்பொழுதில் தூங்கி விழித்து பின்னிரவு வரை விருந்துகளில் செலவிடுபவர். ’அல்லாவின் அரியமுத்து’ என எப்போதும் அழைக்கப்படுபவர். அப்படி உண்மையிலேயே தன்னை கருதிக்கொள்பவர்.

பெரும்பாலும் அரசாணைகளை அவர் பிறப்பிப்பதில்லை. அதற்கு வெவ்வேறு அமைச்சர்களும் தளபதிகளும் இருந்தனர். கொலைத்தண்டனைகள் அவருடைய ‘விருப்பத்திற்கு’ இணங்க அவர் ‘அறியாமல்’ பிறரால் செய்யப்பட்டன. போரில் நேரடியாகவே ஈடுபட்டவர் என்பதனால் படைக்கலப் பயிற்சி கொண்டவர்.அன்றும் இன்றும் உச்சநிலை ஆட்சியாளர்கள் அவர்களின் ஆட்சியின் அன்றாடவன்முறைகளுக்கு மிக அப்பால், மிக மென்மையான ஓரு சூழலிலெயே வாழ்கிறார்கள். அதுவே சாத்தியம்.

இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் படையெடுப்பாளரும் ஆட்சியாளருமாகிய அலாவுதீன் கில்ஜி. அவருடைய ஆதர்ச நாயகன் சிக்கந்தர் சைனி என ஆப்கானிய வரலாற்றில் இடம்பெற்ற மகா அலக்ஸாண்டர்தான். அவரைப்போல ‘உலகை ஆளவேண்டும்’ என்னும் கனவே அலாவுதீனை இயக்கியது. அன்றைய ஆட்சியாளர்கள் அனைவருமே தங்களை இறைவனின் நேரடி பிரதிநிதிகள் என உண்மையாகவே நம்பினர். அவர்களிடம் பேசுபவர்கள் அதை அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆகவே பிறநாடுகளை வெல்ல, பிற அரசர்களால் பணியப்பட தனக்கு ‘உரிமை’ இருப்பதாகவே அவர்கள் நம்பினர். அரியன, அழகியவை அனைத்துமே இயல்பாகவே தங்களிடம்தான் இருக்கவேண்டுமென அவர்கள் எண்ணினர்.இல்லையேல் அதை பெரிய அவமதிப்பாக எடுத்துக்கொண்டு அதன்பொருட்டு எதையும் செய்யத் தயாராயினர்.

சுல்தான்களின் படைவல்லமையின் பின்னணி முந்நூறாண்டுகள் நீண்ட பாலைவனப்போர்கள். நூறாண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த மங்கோலிய ஆக்ரமிப்புகளை எதிர்த்து உருவானது அவர்களின் ராணுவம். இனக்குழுவேறுபாடுகளைக் கடந்து அவர்கள் ஒருங்கிணைய அன்னியப் படையெடுப்பும் இஸ்லாமிய மதமும் உதவியது. ஆகவே மிகப்பெரிய எண்ணிக்கைகொண்டது அது. குதிரைப்பயிற்சியில் அவர்கள் ஓர் உச்சநிலையை அடைந்திருந்தனர். கடுமையான சூழ்நிலைகளில் தொடர்ந்து போரிடப் பயின்றிருந்தனர்.

மாறாக இந்திய அரசுகள் ஒருங்கிணைவற்று பிரிந்து கிடந்தன. இந்தியச் சாதிமுறை ஒரு சில சாதியினரை மட்டுமே போர்வீரர்களாக ஆக்கியது. கணிசமானவர்களுக்கு ஆயுதமேந்த உரிமை அளிக்கவில்லை. இந்தியாவின் பழங்குடிச் சமூகங்களை பேரரசுகளாகத் தொகுத்த கடந்தகால ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அந்த சமூக அமைப்பு.ஆயுதமேந்தும் உரிமைகொண்டவர்களுக்கு அதற்குரிய சமூகப்பொறுப்பையும் அறங்களையும் வலியுறுத்திப் பயிற்றுவித்தது அந்த அமைப்பு. நடைமுறைத் தேவையில் இருந்தே இத்தகைய அமைப்புக்கள் உருவாகி வந்து வளர்ந்து நீடிக்கின்றன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றில் மைய ஆட்சியை நிலைநாட்டி கலகங்கள் நிகழாது செய்து உள்நாட்டு அமைதியை உருவாக்கிய அந்த முறை பெரும் எண்ணிக்கை கொண்ட அயல்ராணுவப் படையெடுப்புகளின் போது பயனற்றதாகியது. அத்துடன் இந்திய ராணுவம் என்பது அப்போதுகூட நிலைப்படை அல்ல, போருக்கென அவ்வப்போது திரட்டப்படுவது. ஆகவே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. அவர்களின் பயிற்சிமுறையும் பின்தங்கியது. தனித்தனியாக சிறிய பயிற்சிக்களங்களில் பயின்றவர்கள் ஒட்டுமொத்த ராணுவமாகத் திரள முடியவில்லை.

சுல்தானிய ஆட்சிக்கு எதிராக இந்தியவரலாற்றில் ஒருபோதும் அரசர்கள் ஒன்றாகத் திரண்டதே இல்லை. இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிவரைக்கும் அதே நிலைதான் இங்கே. காரணம் ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு குலம். ஷத்ரியர் என்பது ஒரு பதவிதானே ஒழிய சாதி அல்ல. இங்கிருந்த அத்தனை அரசர்களும் வெவ்வேறு அடித்தளச் சாதிகளில் இருந்து எழுந்து வந்தவர்கள்தான். யாதவர்கள் அவர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர். அவர்கள் ஒன்றாகத் திரள முடியாமல் ஏற்றத்தாழ்வுகள் தடுத்தன.

ஆகவே சுல்தானியப் படைகள் இந்தியாவின் வல்லமை வாய்ந்த அரசுகளை தாக்கி வென்றன. அவர்களை எதிர்கொள்ள இந்திய அரசர்களால் இயலவில்லை. எவர் சுல்தானிய- முகலாயப் படைகளை வென்றனர் என்று பார்த்தால் இதைப்புரிந்துகொள்ளமுடியும். விஜயநகர சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஹரிஹரர் ,புக்கர் இருவரும் மதம் மாறி இஸ்லாமியர்களாக டெல்லி சுல்தான் அரசில் சிறிதுகாலம் பணியாற்றியவர்கள். சுல்தானியப் படைத்தலைவர்களாக மீண்டும்தங்கள் சொந்த நிலமாகிய ஆனைக்குந்தி வந்தபோதுதான் விஜயநகரப்பேரரசை உருவாக்கினார்கள். சிவாஜியின் தந்தை பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவர். அவர்கள் சுல்தானிய, முகலாயப் படைகளில் இருந்து படையமைக்கும் முறைமைகளைக் கற்றுக்கொண்டு அதேபாணியில் தங்கள் படைகளை அமைத்து அவர்களை எதிர்கொண்டனர்.

இரண்டு வினாக்களை வரலாற்று மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும். அ. சுல்தானியப் படையெடுப்புகளால் இந்தியப் பண்பாட்டிலும், சமூக அமைப்பிலும் அழிவுகள் உருவாயினவா?ஆ.சுல்தானியப் படையெடுப்பு நிகழாவிட்டால் இந்தியா அந்த அழிவிலிருந்து தப்பியிருக்குமா?

சுல்தானிய ஆட்சி குறித்து நான் மேலே சொன்ன சாதகமான விஷயங்களை விவரிக்கும் இடதுசாரி ஆய்வாளர்கள் அவர்கள் உருவாக்கிய அழிவுகளை வெள்ளைபூசவே முயன்றிருக்கிறார்கள் என்பதை நூல்களில் காணலாம். பலவகை மறைப்புகள், திரிபுகள். மொத்தப்பழியையும் இந்து அரசர்கள் மேலும் இந்துமதம் மேலும் ஏற்றும் சிறுமையையும்கூட காண முடியும்.அந்தத் தரப்பை இஸ்லாமியர்கள் தூக்கிப்பிடிப்பார்கள். மறுபக்கம் ’பத்மாவதி’ முன்வைப்பதுபோல ஒற்றைப்படையான எதிர்மறைச் சித்தரிப்பு. சுல்தான்களை ஒருவகையான காட்டுமிராண்டிகளாகக் காட்டும் வெறுப்புப் போக்கு. இரண்டுக்கும் நடுவே செல்லத்தெரிந்தாலொழிய இந்தியவரலாற்றை அறியவே முடியாது.

சுல்தானியப் படைகளின் இரு அடிப்படை இயல்புகள் அழிவுகளை உருவாக்கின. முதன்மையாக மதம். இஸ்லாம் பிற கலாச்சாரங்களை கடவுளுக்கு எதிரானதாகவே பார்க்கிறது. ஆகவே முற்றாக அழிக்கப்படவேண்டியவை அவை என கருதுகிறது. சுல்தானிய, முகலாயப் படைகளின் ஆற்றலுக்கு இந்த நம்பிக்கையும் அதன் விளைவான பிறர்வெறுப்பும் முக்கியமான காரணங்கள். ஆகவே படையெடுத்துச் சென்ற இடங்களிலுள்ள பண்பாட்டுக்கூறுகளை அவர்கள் சூறையாடினார்கள். உலகமெங்கும் பேரழிவை உருவாக்கினார்கள்.ஆலயங்களையும் சிலைகளையும் அழிப்பதை இறைவனுக்கான பணியாகவே அவர்கள் எண்ணியிருக்கிறார்கள். அதை அவர்களின் வரலாற்றாசிரியர்களே பதிவுசெய்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக, அன்றைய நிலைப்படைகளின் ஊதியம் என்பது போருக்குப்பிந்தைய கொள்ளையாகவே இருந்தது. அது அன்றைய சூழலில் முற்றிலும் நியாயமானதாகக் கருதப்பட்டது. சுல்தானியப் படைஎடுப்புகள் அனைத்துமே மக்கள்மீதான கொள்ளைவெறியாட்டங்களில்தான் முடிந்தன. ஆனால் இது அன்றைய படையெடுப்பாளர்களின் இயல்பான வழக்கம். சமர்கண்டின் இஸ்லாமிய ஆட்சியாளரான தைமூர் டெல்லி மேல் படையெடுத்தபோது சுல்தான் முகமது ஷாவின் நிலப்பகுதியை சூறையாடி பல லட்சம்பேரை கொன்று அழித்தார். ஆப்கானிய அரசரான அகமது ஷா அப்தாலி டெல்லி மேல் படையெடுத்துவந்தபோது தைமூரின் வழிவந்த முகலாய ஆட்சியாளர்களைச் சூறையாடினார்.

ஆகவே அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்புகள் இந்தியப்பண்பாட்டிலும் இந்தியச் சமூகத்திலும் மிகப்பெரிய அழிவுகளை உருவாக்கின என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் மாபெரும் கலைக்கோயில்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டன. நலந்தா போன்ற பல்கலைகள் அழிக்கப்பட்டு பிட்சுக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். நகர்சார்ந்ததும் அமைப்புசார்ந்ததுமான பௌத்தம் முற்றாக அழிந்தது. சமணம் பெரும் அழிவைச் சந்தித்து சற்றே எஞ்சியது. நாட்டார்ச்சூழலில் மறுபிறப்பெடுத்த இந்துமதம் மட்டும் உருமாறி உருமாறி நீடித்தது. இவையனைத்தும் அலாவுதீனின் வரலாற்றாசிரியரான அமிர் குஸ்ரு போன்றவர்களாலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எந்தக் கட்டுரையிலும் இந்த அழிவை, அதன் விளைவுகளை தயங்காமல் சுட்டிக்காட்டுபவன் நான். ஆகவே இந்துத்துவ முத்திரை பெறுபவன். அதனாலேயே மறுபக்கத்தையும் சுட்டிக்காட்டும் பொறுப்பு எனக்கிருப்பதாக உணர்வதனாலேயே இக்குறிப்பு எழுதப்படுகிறது

இரண்டாவது வினாவுக்கான பதில், சுல்தானிய ஆட்சி இல்லையேல் மேலும் கொடூரமான மங்கோலியத் தாக்குதல்களால் இந்தியா மேலும்பேரழிவைச் சந்தித்திருக்கும் என்பதே. அலாவுதீன் கில்ஜி இந்தியாவுக்கு அளித்த பெருங்கொடை அவர் மங்கோலியப் படையெடுப்பை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார் என்பதுதான். பாரசீகப் பின்புலம் கொண்ட சுல்தான்களுக்கு இந்தியப் பண்பாட்டின் பலகூறுகளை உள்வாங்க முடிந்தது, பேணிவளர்க்க முடிந்தது. மங்கோலியர் எலும்புகளையும் சாம்பலையும் மட்டுமே சென்ற இடங்களெங்கும் விட்டுச்சென்றிருக்கிறார்கள்.

சென்றகால ஆட்சியாளர்களைப் புரிந்துகொள்வது இன்றைய சூழலில் சற்று முயற்சி எடுத்து செய்யவேண்டியது. இன்றைய அரசியல்சார்ந்து செய்யவேண்டிய பணி அல்ல அது. பாதிஉலகைச் சூறையாடி பேரழிவை உருவாக்கிய ஜெங்கிஸ்கான் மங்கோலியாவின் மாபெரும் வரலாற்றுநாயகன். கலைகளையும் இலக்கியத்தையும் வளர்த்து சீனப்பண்பாட்டை மறுமலர்ச்சியடையச் செய்தவர். சீனா உலகமெங்கும் அவருடைய ஆயிரமாண்டு நிறைவை பெரும் விழாவாகக் கொண்டாடியது. மங்கோல் போன்ற திரைப்படங்கள் பெரும்பொருட்செலவில் எடுக்கப்பட்டு ஜெங்கிஸ்கான் குறித்த சித்திரம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவில் இணையற்ற அழிவை உருவாக்கிய தைமூர் ஆப்கானியப் பண்பாட்டின் நாயகர்.

அன்றைய சமூகவியலில் இது இருந்திருக்கிறது. ’சிறப்பாக வேட்டையாடும் புலியே அழகாக இருக்கிறது’ என்பது ஆப்ரிக்கச் சொல்லாட்சி.ஒருபக்கம் படையெடுப்பு, பிறநாகரீகங்கள் மீதான சூறையாடல். மறுபக்கம் அச்செல்வத்தைக்கொண்டு உயரிய நாகரீகத்தை உருவாக்குதல். ஒன்றின் இரு பக்கங்கள் இவை.  இன்றைய ஐரோப்பிய நாகரீகம்கூட அவ்வாறு உருவானதே. நாம் வழிபடும் ஐரோப்பியக் கலைவெற்றிகள், சிந்தனை உச்சங்கள் அனைத்துக்கும் அடியில் காலனியாதிக்கச் செல்வம் உள்ளது.

இந்த அம்சம் எல்லா காலகட்டத்திலும் அரசர்களிடம் இருந்தது. சங்ககாலகட்டத்தில் எரிபரந்தெடுத்தல் போல எதிரிநாடுகளை – அவையும் தமிழ் நிலமே – சூறையாடும் சித்திரங்கள் இலக்கியங்களில் மிகுந்துள்ளன. பலநூறாண்டுக்காலம் சோழர்கள் மதுரையை அழித்து மதுராந்தகன் என்று பட்டம்சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இறுதியில் பாண்டியர்கள் சோழர்களை அழித்தனர். கலிங்கத்தை இரண்டாம் குலோத்துங்கன் படைகொண்டு சென்று அழித்ததையே நாம் கலிங்கத்துப் பரணி என கொண்டாடுகிறோம். சோழர்கள் இலங்கையிலும் கர்நாடகத்திலும் அழிவுகளை உருவாக்கியிருக்கிறார்கள்

ஆனால் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே இந்த இயல்பு உச்சம் கொண்டு கிட்டத்தட்ட உலகம் முழுக்க குருதிப்பெருக்கை உருவாக்கியது. அதற்கு முந்தைய போர்கள் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் நிகழ்பவை. ஆகவே குடிப்போர்களின் இயல்பு கொண்டவை. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் நெடுந்தொலைவு சென்று அயல்நாடுகளை கைப்பற்றும் மாபெரும் ராணுவங்கள் உருவாயின. அவை அயல்பண்பாடுகளை முற்றாக அழித்தன. ஆனால் அதனூடாக பெரும்செல்வம் திரண்டது. அது முதலீடாக ஆகி பேரரசுகளை உருவாக்கியது. துருக்கிய, மங்கோலியப் பேரரசுகள் அவ்வாறு எழுந்தன.அவை மானுடநாகரீகத்தின் தொட்டில்களாக வளர்ந்தன. கலைக்கும் அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் பெருங்கொடைகளை அளித்தன.இந்த மலர்ச்செடி ரத்தத்தில்தான் முளைக்குமா என்றால் ஆம், துரதிருஷ்டவசமாக வரலாற்றில் அப்படித்தான் என்பதே பதில்

கில்ஜியையோ பிற சுல்தான்களையோ ஒட்டுமொத்தமாக எப்படி மதிப்பிடலாம்? இந்தியப்பெருநிலத்தில் சிற்றரசுகளின் பரவலாக இருந்த அரசியல்சூழலை அழித்து மைய அரசை உருவாக்கியவர்கள். அதனூடாக மூலதனக்குவிப்பை ஏற்படுத்தியவர்கள். அதன்பொருட்டு அவர்கள் உருவாக்கிய நிதிநிர்வாக அமைப்புக்களே இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சிவரை ஒற்றைப் பொருளியல் மண்டலமாக வைத்திருந்தன. பெருநிதிக் குவிப்பின் விளைவாக நகரங்களை உருவாக்கியவர்கள். அங்கே கட்டிடக்கலையை வளர்த்தவர்கள். இலக்கியம், கலைகள் ஆகியவற்றுக்கு பெருங்கொடை அளித்தவர்கள்.

கூடவே இந்திய நிலத்தை சூறையாடியவர்கள். மேலிருந்து கீழே வரை வரிக்கொள்ளையை மட்டுமே கொண்ட அரசமைப்பை உருவாக்கியவர்கள். இந்தியப் பாரம்பரியத்தின் கலைச்செல்வங்களை அழித்தவர்கள். அதன் கல்விநிலைகளை சிதைத்து பண்பாட்டுச்சிதறலை உருவாக்கியவர்கள். இரண்டு முகமும் அவர்களுடையதே. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்ததே.

உண்மையில் கணிசமான சென்றகால ஆட்சியாளர்களுக்கு இவ்விரு முகமும் உண்டு.அசோகர்,அக்பர், ராஜராஜசோழன் போன்றவர்கள் எதிர்க்கூறு ஒப்புநோக்க மிகக் குறைவானவர்கள். அவர்கள் வரலாற்றில் மிகச்சிலரே. இதில் ஏதேனும் ஒரு பக்கத்தை ஏற்றுக்கொண்டு காழ்ப்பையும் சார்பையும் உருவாக்கிக்கொண்டு இங்கே அரசியல் பேசப்படுகிறது. சுல்தான்கள் ஒருபக்கம் வெறும்கொள்ளையர்களாகச் சித்தரிக்கப்படுகையில் அதற்கு எதிர்வினையாக வேண்டுமென்றே அவர்களை மாபெரும் ஆட்சியாளர்கள், சாதனையாளர்கள் என இடதுசாரி வரலாற்றாசிரியர்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும் சொல்வார்கள். இரு அரையுண்மைகளில் ஒன்றை ஏற்காமல் இங்கே அறிவுலகில் செயல்படுவதே கடினம்.

இந்த முரண்பாட்டை கொஞ்சமேனும் சமநிலையுடன் புரிந்துகொண்டாலொழிய வரலாற்றைத் தொட்டால் வெறுப்பு மட்டுமே எழும். சென்றகாலப் படையெடுப்புகளின் வஞ்சங்களை இந்த ஜனநாயக யுகத்தில் நட்டு வளர்க்கும் சமூகம் தன்னைத்தானே நஞ்சூட்டிக்கொள்கிறது. எது உண்மையோ அதை நோக்கிச் செல்லவேண்டும், அதில் மழுப்பல்கள் தேவையில்லை. ஆனால் ஒருபக்க உண்மை என்பதுதான் நம்மை அழிக்கும் நஞ்சு.வரலாறு சார்ந்த ஒற்றைப்படையாக்கத்தை எவர் செய்தாலும் அதை எதிர்க்கும் குரல் இங்கே எழவேண்டும். தமிழ்த்தேசியர்கள், இந்துத்துவர்கள், இஸ்லாமியவாதிகள்,திராவிட இயக்கத்தவர். துரதிர்ஷ்டவசமாக இங்கே இடதுசாரிகளையும் இப்பட்டியலில் சேர்க்கவேண்டியிருக்கிறது.

முந்தைய கட்டுரைகுண்டர் கும்பல் கலாச்சாரம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44