பகுதி ஆறு : பொற்பன்றி – 5
கரிய புரவியின் உடலில் செங்குருதியுமிழும் சிறு புண் என தொலைவில் காட்டின் நிழல்அலைகளுக்குள் சிவந்த சிறிய வெளிச்சம் தெரிந்தது. தாரை “அடிகளை அளந்து வைக்கவும். நாம் நடந்துவருவதை பறவைகளும் குரங்குகளும் நோக்கிவிட்டன. அவை நாம் சீராக சென்றுகொண்டிருப்பதுவரை மெல்லிய ஒலியே எழுப்பும். நம்மில் எவரேனும் அடிசறுக்கி மிகையசைவு அளித்தால் அஞ்சி ஓலமிடத் தொடங்கிவிடும்” என்றாள். “உலர்ந்த சுள்ளிகள், சருகுக் குழிகள், பெரிய கூழாங்கற்கள் ஆகியவற்றின்மேல் கால் ஊன்றவேண்டாம்… நான் கால்வைக்கும் இடத்தில் மட்டும் உங்கள் அடிகள் பதிக!”
துச்சளை “இந்தக் கானறிதல்களை எப்படி நினைவுகூர்கிறாய்?” என்றாள். “நான் நினைவுகூரவில்லை அரசி, என் கால்களில் உள்ளன அவை. கால்களிலிருந்து உள்ளத்திற்கு செல்கின்றன” என்றபடி முன்னால் சென்றாள். காற்றில் நீராவிமணம் இருந்தது. துயிலும் குழந்தையின் போர்வையை விலக்கும்போது எழும் வெம்மைமணம் என துச்சளை எண்ணினாள். பகலில் மரங்களென்றும் செடிகளென்றும் பெருகிக்கிடக்கும் காடு இருளில் ஒன்றென்றாகி ஒரு மாபெரும் விலங்கென ஆகிவிட்டிருந்தது. சீரான துயில்மூச்சு கொண்டிருந்தது. குறட்டை ஒலி என பல்வேறு விலங்கோசைகள்.
துச்சளை மூச்சுவாங்க நின்று “ஒளி மிக அருகில் எனத் தெரிந்தது… ஆனால் காட்டில் நாம் தொலைவை கணிக்கமுடிவதில்லை” என்றாள். “எங்குமே உள்ளத்தால்தான் அனைத்தையும் கணிக்கிறோம். உள்ளத்தை கணிக்கமுடியாதபோது எல்லாமே அகன்றுவிடுகின்றன” என்றான் விகர்ணன். துச்சளை புன்னகைத்து “ஆழ்ந்த நுண்நோக்கு” என்றாள். அவள் தன்னை பாராட்டுகிறாள் என எண்ணி விகர்ணன் திரும்பி தலைவணங்கினான். தாரை இருளிலேயே புன்னகைக்கும் பல்மின்னொளி தெரிந்தது. விகர்ணன் “காடு நமக்குத் தெரியாதது, ஆகவே நாம் தொலைவுகளை தவறாக கணிக்கிறோம்” என்றான். தாரை மீண்டும் புன்னகைத்து “ஆம்” என்றாள். அவள் விழிகளில் இருளிலேயே புன்னகை தெரிவதை கண்டு துச்சளை வியந்தாள்.
உடுக்கோசை கேட்கத்தொடங்கியது. இருளின் பரப்பிலேயே அவ்வோசை எதிரொலித்து மரவுரியால் போர்த்தப்பட்ட ஒலி என கேட்டது. விகர்ணன் “தொடங்கிவிட்டார்கள்” என்றான். துச்சளையின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. தாரை நின்று “அங்கே நிறையபேர் இருக்கிறார்கள்…” என்றாள். “வீரர்களால் அப்பகுதி சூழப்பட்டிருக்கும். அவர்களை மீறி நாம் அணுகமுடியும் என தோன்றவில்லை.” துச்சளை “நான் முதலில் செல்கிறேன். என்னை அவர்கள் தடுக்கமுடியாது. அவரிடம் என்னை அழைத்துச்சென்றே ஆகவேண்டும்” என்றாள். விகர்ணன் “நாம் நுழைய முயன்றாலே இச்சிறிய பகுதிக்குள் அவர் செவிவரை ஓசை சென்றுவிடும்” என்றான்.
அவர்கள் இருவருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை என்று துச்சளை எண்ணிக்கொண்டாள். எண்ணம் திகைக்கும்போதுதான் பொருளற்ற சொற்கள் எழுகின்றன. பல தருணங்களில் அச்சொற்களிலிருந்து புதிய எண்ணத்திறப்புகள் எழக்கூடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். நா நெஞ்சறியாத சிலவற்றை அறிந்தது. அதையாளும் தெய்வங்கள் வேறு. அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எந்த நம்பிக்கையில் கிளம்பிவந்தோம் என வியந்தாள். மெய்யாகவே துரியோதனனை வெல்லும் எண்ணம் அவளுக்கு உள்ளதா? அல்லது அங்கு விந்தையாக ஏதோ நிகழவிருக்கிறது, ஆகவே அப்போது உடனிருந்தாகவேண்டும் என்னும் முதிரா உள்ளத்து ஆர்வமா? அவளால் கணிக்கமுடியவில்லை.
பெருமூச்சுடன் நின்று “என் நெஞ்சு உடைந்துவிடும்போலிருக்கிறது… நெடுந்தொலைவு” என்றாள். அவர்களும் மூச்சுவாங்க நின்றார்கள். “ஆம், காட்டுக்குள் இரவில் கானகத்தேவர்களுக்குரிய காற்று நிறைகிறது. அது மானுடரை மூச்சுத்திணறச் செய்யும் என்பார்கள்” என்றாள் தாரை. மீண்டும் நடக்கையில் துச்சளை தெளிவுகொண்டுவிட்டிருந்தாள். எப்போதுமே உள்ளத்தில் தயக்கமும் வினாவுமாக அலைக்கழிந்து எந்த அடிப்படையுமில்லாமல் எங்கிருந்தோ எழும் ஒரு விடையை சென்றடைவது அவளுடைய வழக்கம். அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். அதைப்பற்றி ஒருமுறை நிமித்திகப்பெண்டு ஒருவரிடம் கேட்டபோது மூதன்னையரின் ஆணை அது என்றாள். அதன் பின் அதில் ஐயம்கொள்வதை அவள் விட்டுவிட்டாள்.
“நீங்கள் நின்றுகொள்ளுங்கள். நான் நேராகச் சென்று வீரர்களிடம் என்னை மூத்தவர் அங்கே வரச்சொன்னார் என்கிறேன். நான் தனியாகச் சென்றாலே அவர்கள் குழப்பம் அடைந்துவிடுவார்கள்” என்றாள் துச்சளை. விகர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க “ஆம், அதுவே உகந்த வழி” என்று தாரை சொன்னாள். விகர்ணன் “ஆனால்…” என்றான். “அங்கே செல்வதற்கு ஐயமின்றி ஆணையிடும் குரல் எழவேண்டும். அரசி தமையனுடன் பேசும்போது அயலவரான நாம் உடனிருக்கலாகாது” என்றாள் தாரை. விகர்ணன் “மெய்தான்” என்றான்.
அவர்கள் நின்றுவிட அவள் மட்டும் ஒளிதெரிந்த இடத்தை நோக்கி சென்றாள். குருதித்துளி சொட்டி நின்றிருக்கும் வேல்முனைகள், வாள்விளிம்புகள் என இலைகள் செவ்வொளி சூடியிருந்தன. மரங்களின் வளைவுகள் பொன்னிறம் பூசிக்கொண்டிருந்தன. நிழல்கள் எழுந்து வானில் விரிய நின்றன மரங்கள். இலைத்தழைப்புகளுக்குள் இருந்து புலரிக்கதிர் கருமுகில்களுக்கு நடுவே எழுவதுபோல நெய்ப்பந்தங்களின் ஒளி எழுந்து பரவியிருந்தது. அங்கிருந்த பறவைகள் ஒளியை உணர்ந்து எழுப்பிய ஒலி காட்டின் ஒலிப்பொதுமையிலிருந்து வேறென கேட்டது.
அவளுடைய காலடியோசைகளை வீரர்கள் கேட்டுவிட்டதை உணர்ந்தாள். முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதைப்போல இருளில் அம்புகள் தன்னை நோக்கி திரும்புவதை உடல்கொண்ட நுண்புலன் கூறியது. “என்ன அது?” என்றான் ஒரு வீரன். அவன் குரல் துயிலில் பேசும் குழந்தையுடையது போலிருந்தது. “அது விலங்கல்ல… நான்குகால் ஓசை அல்ல” என்றான் இன்னொருவன். மரத்திற்கு அப்பால் நின்றபடி “யார்?” என்று மற்றொருவன் கேட்டான். “நச்சு அம்பு நோக்குகிறது. நில்!”
“நான் துச்சளை, அஸ்தினபுரியின் இளவரசி” என்றாள் துச்சளை. வெளிச்சம் தன் முகத்தில் விழும்படி சென்று நின்றாள். “அரசி, தாங்களா?” என்றான் மரத்திற்குப் பின்னால் நின்றிருந்த தலைமை வீரன். இன்னொருவன் அவனுக்குப் பின்னால் வந்து நின்றான். “தாங்கள் இங்கு வருவதாக ஆணையில்லை.” துச்சளை “நான் அன்னையின் ஆணையுடன் வந்தேன்… என்னை அரசரிடம் அழைத்துச்செல்க!” என்று சொன்னாள். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். தலைவன் முடிவெடுத்து விழிகாட்ட இன்னொருவன் “ஆணை, அரசி… வருக!” என அழைத்துச்சென்றான்.
“என் காலடிகள் விழும் இடங்களில் மட்டும் காலை வைத்து வருக, அரசி… இங்கே நாகங்கள் மிகுதி.” துச்சளை “ஆம், அறிவேன்” என்றாள். அவன் வில்போன்ற காலடிகளுடன் நடந்தபடி “ஆணை என்ன என்று அறியேன். பூசெய்கை தொடங்கியபின் என்றால் எவருக்கும் ஒப்புதல் இல்லை” என்றான். அவர்கள் மேலும் ஒரு காவலர் வளையத்தைக் கடந்து சென்றனர். அங்கிருந்த முதிய வீரனிடம் சொல்லி ஒப்புதல் பெற்று அவன் அழைத்துச்சென்றான். துச்சளை நின்று மூச்சுவாங்கினாள். அவர்கள் பெரும்பாலும் கையசைவுகளாலும் முகக்குறிகளாலும் பேசிக்கொண்டார்கள். கேளா ஆணைகளினூடாக ஒவ்வொருவரும் ஒன்றென கட்டப்பட்டிருந்தார்கள். ஒரே வலையில் அமர்ந்த சிலந்திகள்போல அசைந்தன அவர்களின் கைகள்.
அப்பால் ஒரு மரத்தடியில் போடப்பட்ட மூங்கில்கூடைப் பீடம் மீது துரியோதனன் அமர்ந்திருந்தான். அவனருகே துச்சாதனன் கைகட்டி இருளை நோக்கிக்கொண்டு நின்றிருக்க அவர்களுக்குப் பின்னால் சூதர்கள் சிலர் பூசெய்கைக்கான பொருட்களை ஒருங்குசெய்துகொண்டிருந்தார்கள். இசைச்சூதர் முழவுகளும் கொம்புகளும் சிறுபறைகளுமாக அமர்ந்திருந்த காட்சி பந்தங்களின் ஒளியில் அலையடித்துக்கொண்டிருந்தது. தொலைவில் கலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் பூசகர்கள் பதற்றத்துடன் ஓடிய நிழலாட்டம் பாவைக்கூத்து என இருளின் பெருந்திரையிலாடியது.
முன்னால் சென்ற வீரன் துரியோதனன் அருகே சென்று பணிந்து துச்சளையின் வருகையை சொன்னதும் துச்சாதனன் திகைப்பும் சீற்றமுமாக திரும்பி அவளை நோக்கினான். துரியோதனன் முகத்திலோ உடலிலோ அச்சொற்கள் சென்று தொட்டதாகவே தெரியவில்லை. துச்சாதனன் “யார்?” என்றான். பின்னர் காலடியில் சுள்ளிகள் முறியும் ஓசையுடன் அவளை நோக்கி வந்தான். மீன்நெய் எரிந்து தழல் தெறித்துக்கொண்டிருந்த பந்தத்தின் ஒளி அவனுக்குப் பின்புலமாக விரிய பெருநிழல்பூதமென கைகள் கிளைவிரித்து காட்டின்மேல் பரவி அசைய தலை வான் நோக்கி விரிந்தெழ அணுகினான்.
துச்சளை அவனைக் கண்டு நிற்கவில்லை. அவன் அவளை அணுகி செவியருகே குனிந்து தாழ்ந்த குரலில் “ஏன் இங்கு வந்தாய்? எவ்வண்ணம் வந்தாய்?” என்றான். “நான் மூத்தவரை பார்க்க வந்தேன்” என்றாள் துச்சளை. “அவர் எவரையும் பார்க்கும் நிலையில் இல்லை” என்றான் துச்சாதனன். “அவரை அன்றி எவரையும் நான் பார்க்க விழையவில்லை. அவரை பார்க்காது திரும்பிச்செல்லவும் போவதில்லை” என்றாள் துச்சளை. “அவரைப் பார்க்க ஒப்புதல் இல்லை. திரும்பிச்செல்க…” என்றான் துச்சாதனன். அருகே நின்ற வீரனை கைசுட்டி அழைத்து “அரசியை கொண்டுசெல்க!” என்றான்.
அவள் அவ்வீரனை கைச்செய்கையால் விலக்கி “வீரர்களைக் கொண்டு என்னை வெட்டி வீழ்த்துக! அல்லது சிறையிடுக… நான் சென்றே தீர்வேன்” என்றபடி துரியோதனனை நோக்கி நடந்தாள். சீற்றத்துடன் அவளைப் பிடித்து நிறுத்த கைதூக்கிய துச்சாதனன் உள்ளிருந்து எழுந்த தடையால் தயங்கி “வேண்டாம், இளவரசி… நில்” என்றான். “என்னை நிறுத்த முடியும் என்றால் நிறுத்துக!” என்றபடி அவள் சென்றாள். அவன் அவள் பின்னால் “நில்… சொல்வதை கேள்” என உறுமியபடி வந்தான். அவனால் கைநீட்டி அவளை பிடித்து நிறுத்த முடியவில்லை. அவன் கை அதன் பொருட்டு நீண்டு தயங்கி நாகத்தலை என காற்றில் தவித்தது. அவள் மூச்சுவாங்க பெரிய உடல் அசைய முன்னால் சென்றுகொண்டிருந்தாள்.
முழு விசையையும் திரட்டி அவள்முன் வந்துநின்று இரு கைகளையும் விரித்து “நில்… நீ செல்ல விடமாட்டேன்” என்றான் துச்சாதனன். பேரெடையை தூக்கியதுபோல அவன் மூச்சிரைக்க அகன்ற நெஞ்சு ஏறியிறங்கியது. துச்சளை அவன் விழிகளை நேருக்கு நேர் நோக்கி கசப்பால் சுழித்த சிறிய உதடுகளும் நீர்மையில் தழல்செம்மை மின்னிய விழிகளுமாக “விலகு இழிமகனே, உன் கை என் மேல் பட்டால் இங்கு சங்கரிந்து விழுந்து இறப்பேன்” என்றாள். வெறுப்புடன் நிலத்தில் உமிழ்ந்து “ஐவர் இருந்தும் ஆணின்றி நின்றவள் போன்று வலியிலி அல்ல நான். என் குருதிப்பழிக்கு உன் குலத்தை ஏழு தலைமுறை அழிப்பார் என் அரசர்… விலகு!” என்றாள்.
துச்சாதனனின் இடக்கை அசையாமலிருக்க வலக்கை வலிப்பு வந்ததுபோல இருமுறை இழுத்துக்கொண்டது. பின் உயிரிழந்த பெரும்பாம்புபோல விலாவில் அறைந்தபடி விழுந்தது. அவள் அவனைக் கடந்து செல்ல அவன் கால்கள் தளர விழப்போனான். பின்னர் மெல்ல அருகே நின்ற மரத்தை பற்றிக்கொண்டு நிலைகொண்டு கால்மடிந்து வெறுந்தரையில் அமர்ந்தான். உதடுகளை இறுக்கி கண்களை மூடி தலைகுனிந்தான். அவனைமீறி எழுந்த விம்மலில் தோள்கள் ஒருமுறை அதிர்ந்தன. கன்னங்களினூடாக வழிந்த கண்ணீர் நிலத்தில் சொட்டியது. மீண்டுமொரு விம்மலில் அவன் தன்னை முற்றடக்கிக்கொண்டான்.
அப்பால் வந்து அவனை நோக்கிய துர்மதன் அருகணைந்து குனிந்து அவன் பெருந்தோள்கள்மேல் கைவைத்தான். கொப்பளிக்கும் கொதிகலத்திற்கு வெளியே தொட்டு நோக்கியதுபோல் உணர்ந்தான். சொல் அவன் நாவிலெழுவதற்குள் துச்சாதனன் எழுந்து அவனை நோக்காமல் இருளுக்குள் நடந்து மறைந்தான். அவனுடைய ஆடைவண்ணம் இறுதியாக அமிழ்ந்தது.
துச்சளை திரும்பிநோக்காமல் சென்று துரியோதனன் முன் நின்றாள். அவள் வருகையோசை கேட்டு அவன் விழிகள் மட்டும் அசைந்து அவளை நோக்கின. எந்த முகமனும் இல்லாமல் துச்சளை “தார்த்தராஷ்டிரரே, முற்பிறப்பில் செய்த பெரும்பழியால் இப்பிறப்பில் விழியிலாதவர் ஆனார் எந்தை. மீதுற்ற பிறிதொரு பழியால் விழைந்த எதையும் அணுக முடியாதவரானார். ஏழு பிறவியில் இயற்றிய விடப்பெரும் பழியால் உங்களை மைந்தரெனப் பெற்றார். அதோ, சிறுமையும் துயரும் கொண்டு அங்கே அரண்மனையில் அமர்ந்திருக்கிறார்” என்றாள்.
அவளைக் கண்டு துச்சகனும் அப்பால் சூதர்களுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்த துச்சலனும் சுபாகுவும் ஓசையற்ற காலடிகளுடன் அருகே வந்தனர். துர்மதன் பின்னால் வந்து நின்றான். அவள் மேலும் உரத்த குரலில் “அறமென்ன என்று தெளிந்து அதிலமரமுடியாதவனாக ஆவதே சிறுமையின் உச்சம். ஒருவர் தன்னை எண்ணியே உளம் நாணும் நிலை அது. இத்தனை ஆண்டுகள் அதில் உழலவிட்டீர்கள் எந்தையை. இன்று அவர் அவ்விருளில் தொட்டு அறிந்து நெஞ்சோடணைத்த அனைத்தையும் அவரிடமிருந்து அகற்றுகிறீர்கள். இம்மண்ணில் ஆற்றப்பட்ட பெரும்பழிகளில் ஒன்றை இயற்றவிருக்கிறீர்கள்…” என்றாள்.
அவள் குரல் கூர்மையும் ஓலிச்சீரும் கொண்டு அவளில் வந்தமைந்த பிறிதொரு தெய்வத்திற்குரியதென ஒலித்தது. “அரசே, நீங்கள் இதுவரை இழைத்த அறக்கொலைகள் பல. மூத்தவர் பீமசேனனை கால்கைகளைக் கட்டி கங்கையில் இட்டது முதல்பெரும் பழி. பாண்டவர்களையும் அன்னையையும் வாரணவதத்தில் மாளிகையுடன் எரித்தழிக்க முயன்றது இரண்டாவது பெரும்பழி. பாரதவர்ஷம் இதுவரை கண்ட பழிகளில் முதன்மையானது பொற்பரசியை அவைநடுவே ஆடைபற்றி இழுக்கச்செய்தது.”
கரிய படம்எடுத்து நின்றிருக்கும் பெருநாகமென அவள் தோன்றினாள். “அதன்பொருட்டு உங்கள் நெஞ்சு பிளந்து புழுதியில் கிடக்குமென்றால், உங்கள் உடன்பிறந்தார் அனைவரும் தலையுடைந்து களம்படுவார்கள் என்றால் உங்கள் குருதிவழியில் ஒருவர்கூட எஞ்சாமல் பெயர்மட்டுமே எஞ்சுமென்றால் அதுகூட அப்பழியை நிகர் செய்யாது. அதை கழுவ பாரதவர்ஷம் மும்முறை குருதியாடியாகவேண்டும். குண்டலம் கொண்ட தலைகள் மணற்பருக்கள் என விழுந்துருண்டாகவேண்டும். அது அவள் வஞ்சம் அல்ல. எங்கள் வஞ்சம். உங்கள் அகத்தளத்து மாந்தரும் உங்கள் குருதியிலெழுந்த மகளும் உங்கள் குடிகள்தோறும் அமைந்த அத்தனை மகளிரும் கொண்டிருக்கும் பெருவஞ்சம் அது.”
“அவள் அனைத்தையும் கடக்கக்கூடும். இங்குளச் சிறுமாந்தர் தலைக்குமேல் மலைமுடியென சொல்லின்மை சூடி அவள் எழக்கூடும். அங்கிருந்து குனிந்துநோக்கி அன்னையென உங்கள் அனைவரையும் அவள் பொறுத்தருளவும்கூடும். கொற்றவையும் அம்பிகையும் ஒருவரே என்று கற்ற எவருக்கும் அது வியப்பளிக்காது. ஆனால் நான் வெறும் பெண். கருவுற்று மடிநிறைத்து முலையூட்டியவள். என்னால் ஒரு கணமும் ஒரு நிலையிலும் உங்கள்மேல் கனிவு கொள்ளமுடியாது. நீங்கள் களம்பட்டுச் சிதைந்து கிடந்தால் அவள் அள்ளிக் குழல்புரட்டிய வெங்குருதியின் எச்சத்தில் ஒரு துளி தொட்டு என் நெற்றியில் அணியவும் தயங்கமாட்டேன்” என்றாள் துச்சளை.
“இங்கு நான் வந்தது உங்களுக்காக அல்ல. உங்களை இனி என் நா மூத்தவரே என அழைக்காது. அழைக்கவேண்டும் என எண்ணி முடிவெடுத்தே இந்நகர் புகுந்தேன். ஆயிரம்முறை என் நாவுக்கு ஆணையிட்டேன். என்னால் இயலவில்லை.” அவள் குரல் இடறியது. இதழ்களை மடித்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள். நெஞ்சை வலக்கையால் அழுத்தியபடி “நான் வந்தது முதன்மையாக என் தந்தைக்காக. அவர் அங்கிருக்கும் நிலை என்னை பிச்சியாக்குகிறது. அது இறப்புக்கு முந்தைய உயிர்த்துடிப்பு போலிருக்கிறது. அந்தப் பெருவலியை ஒரு மானுட உயிருக்கல்ல, எவ்வுயிருக்கும் எந்நிலையிலும் எவரும் அளிக்கலாகாது” என்றாள்.
“ஆம், இப்புவி அறத்தால் ஆளப்படவில்லை என நான் அறிவேன். இங்கே ஆற்றொணாக் கண்ணீர் சொட்டாத நாளே இல்லை என்றும் அறிவேன். ஆயினும் இதை தெய்வங்கள் சூழ்ந்துள்ளன என்றே நான் எண்ணுகிறேன். எவற்றுக்கும் இறுதிஎல்லை என ஒன்றுண்டு, அரசே. அவ்வெல்லையை கடக்கிறீர்கள். இப்புவியில் மட்டுமல்ல அங்கு மேலுலகிலும் நிகர்செய்யவியலாத பெரும்பழியை அடையவிருக்கிறீர்கள். வேண்டாம்… உங்களிடம் மன்றாட வரவில்லை. உங்களுக்கும் எனக்கும் உறவென ஒன்றுமில்லை. உங்கள் அன்னையின் வடிவாக இங்கு வந்துள்ளேன். இது அவர் குரல் என அறிக!”
“நீங்கள் பெறவிருப்பது தந்தையின் தீச்சொல் அல்ல… உங்கள் இருண்ட உள்ளத்தில் இக்குரல் வந்தடையுமென்றால் உணர்க, உங்கள் தந்தை எந்நிலையிலும் உங்கள்மேல் வஞ்சம் கொள்ளமாட்டார். ஒருபோதும் உங்களைப் பழித்தொரு சொல் உரைக்கமாட்டார். ஆனால் அவர் வாழும் உள்ளம் என் அன்னையுடையது. தன் இறுதிப்பொறையையும் திரட்டி கட்டுப்படுத்தி அமர்ந்திருக்கிறார் அவர். அவர் ஒரு சொல் உரைத்தால் அது உங்கள் குலமழிக்கும். கொடிவழிகளின் இறுதித்துளிவரை நின்று கொல்லும் நஞ்சாகும். அதை ஏற்காதொழிக! அதைமட்டுமே சொல்லவந்தேன்.”
ஓங்கிய அவள் குரல் மீண்டும் தளர்ந்தது. இருமுறை செருமி மூச்சிளைத்து பின் சொல்லெடுத்தபோது அது துயர்நனைந்து குழைந்திருந்தது. “ஏனென்றால் நான் இடையில் தூக்கி வளர்த்த மைந்தர்கள் அவர்கள். ஆயிரம் கருமணிகள். என் மூதாதையரின் ஆயிரம் கருவிழிகள். அவர்கள் ஏதுமறியாதவர்கள். நீங்கள் ஆடும் இந்தப் பழியில் ஒருதுளியைக்கூட அவர்கள் இன்னும் தொட்டிருக்கவில்லை. அன்புகாட்ட மட்டுமே அறிந்த வேழக்குழவிகள். அவர்கள் ஒவ்வொருவரிலும் மலரும் சிரிப்பை மட்டுமே இப்போது விழிமுன் காண்கிறேன். ஆயிரம் வெண்பல்நிரைகள். ஆயிரம் வெண்மலர்கள்போல என சூதர்கள் பாடுவதுண்டு அவற்றை…”
“ஆனால் தெய்வங்களுக்கு மானுட நெறிகள் இல்லை. அவர்கள் இடியென மின் என புயல் என இரக்கமற்ற நெறிகளால் ஆளப்படுபவர்கள். உங்கள் பழிக்கு அவர்களையும் சேர்த்து அழிப்பார்கள். சொல்லன்றி ஏதும் எஞ்சாமல் செய்வார்கள்… உங்களை தலைமேற்கொண்டமைக்காக உங்கள் குடிகளும் நகரும் முற்றழிவர்… அரசே, உங்கள் மைந்தருக்காக, குடியினருக்காக இங்கு வந்து நின்றிருக்கிறேன். இது இறுதிக்கணம். உங்கள் தந்தையைத் துறந்தால் நீங்கள் துறப்பது அனைத்தையும்தான்.”
அவள் சொல்லறுந்து நின்று, சொற்கள் அளித்த விசை முற்றழிய விழப்போகிறவள் என மெல்ல ஆடினாள். கண்களை மூடி விரல்களால் இமைகளை அழுத்திக்கொண்டாள். மூச்சில் நெஞ்சு எழுந்தமைந்தது. இளையோர் அனைவர் விழிகளும் துரியோதனனிலேயே ஊன்றியிருந்தன. அவன் விழிகள் அவளை நோக்கிக்கொண்டிருந்தன, ஆனால் செவி ஒலியேற்கிறதா என்று ஐயமெழுந்தது. அப்பால் சூதர்கள் எழுந்து அசைவிலாது நின்றனர். அனைவரும் அவள் சொற்களை கேட்டுவிட்டிருந்தனர்.
துரியோதனன் தொண்டையை இருமுறை கனைத்தான். பின்னர் தாழ்ந்த குரலில் “நன்று. உன் குரல் எனக்கு புதிதல்ல, சைந்தவி” என்றான். “என்னுள் எப்போதுமே அறச்சொற்கள் உன் குரலில்தான் எழுகின்றன என நீ அறியமாட்டாய். ஏனென்றால் அறமென்று இங்குள்ள அனைத்தையும் இளமையில் உன் நாவிலிருந்தே நான் கற்றிருக்கிறேன்” என்றான். அவன் சிறுபுன்னகை செய்தான். விழிகளில் அப்புன்னகை இல்லாமல் அவை இருளை வெறித்திருந்தன. “இதைவிட நூறுமடங்கு தெளிவுடனும் உணர்வுடனும் நீ என்னுள் இருந்து பேசிக்கொண்டே இருந்தாய். உன்னைக் கடந்துசென்றே இம்முடிவை நான் எடுத்தேன்.”
“ஏனென்றால் என் திசை இது. என் நினைவறிந்த நாள் முதலே கண்முன் கண்ட ஊழ் இது. என்னை அள்ளிச்செல்லும் பேராற்றுப்பெருக்கு. இதைத் தவிர்க்கவும் உன்னருகே வந்தமையவுமே வாழ்நாளெல்லாம் முயன்றேன். இப்போது அறிகிறேன், வேறுவழி இல்லை. தெய்வங்களுக்கு மானுடன் தலைகொடுத்தே ஆகவேண்டும். போரிடுவதனால் அவன் தன் அகத்தை சிதைத்துக்கொள்வதன்றி எப்பயனும் இல்லை. முற்றளிக்கவேண்டும், மிச்சமின்றி ஆகவேண்டும். அதுவே நிறைவு. அது அழிவென்றாலும் பெரும்பழி என்றாலும் மற்றுலகின் மீளா இருளென்றாலும் மாற்றுச்செலவென ஏதுமில்லை. ஆகவே இதை தேர்ந்தேன்.”
“இதை வகுத்த தெய்வங்கள் விழைவனவற்றை இயற்றுக! அவர்கள் இப்புவியை ஆள்பவர்கள். இங்குள்ள அனைத்தையும் இயற்றுபவர்கள். கிளிக்குஞ்சை கிழித்துண்ணும் கூருகிர் கழுகில் குடிகொள்பவர்கள். மலைகளைப் பிளந்து சரிக்கும் பேராற்றல்கள். காட்டெரியில் சுழல்புயலில் குடிகொள்பவர்கள். அவர்கள் வெல்க!” என்றபடி துரியோதனன் எழுந்தான். “கருவுக்குள் புகுந்து என் மூடிய விழிக்குள் நோக்கி ஆட்கொண்டது என் தெய்வம். அன்னையும் தந்தையும் சுற்றமும்கூட அதற்குப் பின்னரே என்னை வந்தடைந்தனர். நான் அவனுக்குரியவன். அதில் மாற்றெண்ணமே இல்லை.”
“நான் உன் சொற்களனைத்தையும் முற்றிலும் உணர்ந்து என் முடிவை மீண்டும் உறுதிசெய்கிறேன், சைந்தவி” என்று அமைதியான குரலில் துரியோதனன் சொன்னான். மீண்டும் புன்னகைத்து “நான் இன்னும் சற்றுநேரத்தில் தலைகொடுக்கவிருக்கிறேன். என் தெய்வத்திடம் இனி உரையாடுக இவ்வுலகம்” என்றான். அவன் புன்னகை எத்தனை பேரழகு கொண்டிருக்கிறது என ஓர் எண்ணம் அவளுள் எழுந்ததும் மெய்ப்பு கொண்டாள்.
துரியோதனன் “இளையோனே…” என்றான். “மூத்தவரே” என்றான் துர்மதன். “ஆவன நிகழ்க!” என்றான் துரியோதனன். “ஆணை” என துர்மதன் தலைவணங்கி கைவீச கைமுழவுகளும் உடுக்குகளும் மீண்டும் ஒலிக்கலாயின. சூதர்களும் பூசகர்களும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். துச்சலன் “தாங்கள் ஒருங்கவேண்டும், மூத்தவரே” என்றான். “ஆம்” என்று துரியோதனன் அவனுடன் சென்றான்.
துச்சளை பெருமூச்சுடன் உடல்தளர்ந்தாள். அதுவரை இருந்த பதற்றம் முற்றாக விலக உடலில் அனைத்து தசைகளும் தளர்ந்தன. எங்காவது அமர்ந்து உடல்நீட்டினால் அப்படியே துயின்றுவிட முடியும் என்று தோன்றியது. அருகே நின்ற காவலனை கைசுட்டி அழைத்தாள். அவன் வந்து பணிந்ததும் “காட்டுக்குள் விகர்ணரும் அவர் அரசியும் நின்றிருக்கிறார்கள், அழைத்து வருக!” என ஆணையிட்டபின் மெல்ல நடந்து அங்கே நின்ற மரத்தை பற்றிக்கொண்டு உடல் தாழ்த்தி கையூன்றி அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள்.