இலக்கிய விமர்சனம் சார்ந்த விவாதங்களில் தமிழில் எப்போதுமே ஒருவகைக் கருத்துக் குழப்பம் வெளிப்படுகிறது. ஒரு படைப்பின் உறுதியான தன்மை அல்லது ஒருமையை ஆசிரியரின் கருத்துநிலை சார்ந்த உறுதிப்பாடாக எடுத்துக்கொள்கிறார்கள். இலக்கியப்படைப்பின் நெகிழ்தன்மை, வாசகன் மனதில் அது வளரும் தன்மை ஆகியவற்றுக்கு எதிரானதாக இது விளக்கப்படுகிறது.
குறிப்பாக நவீனத்துவத்துக்கு எதிரான விமர்சனங்களில் மிக ஓர் ஆசிரியனின் உறுதிப்பாடு ஓர் எதிர்மறைக்கூறாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. அதற்கு ஆதாரமாக அந்த ஆக்கத்தில் உள்ள வடிவ உறுதி அல்லது உள்ளொழுங்கின் உறுதி சிலரால் [தவறாக] முன்வைக்கப்படுகிறது. இலக்கிய ஆக்கத்தின் ஒருமை என்பது அந்த ஆக்கத்தின் உணர்ச்சிநிலையாலும் அழகியல் எழுச்சியாலும் மட்டுமே உருவாவது. பன்முகத்தன்மையும் உட்சிக்கலும் நெகிழ்தன்மையும் உடைய கருத்துநிலை கொண்ட ஆக்கங்களில் கூட நாம் அந்த ஒருமையை காண முடியும்.
கருத்தியல் தளத்தில் உறுதிப்பாடுக்கும் அழகியல் தளத்தின் ஒருமைக்கும் இடையே மானசீகமான ஒரு எல்லைக்கோட்டை வகுத்துக்கொண்டால் மட்டுமே இவற்றை ஆக்கபூர்வமாக விவாதிக்க இயலும். மரபான இலக்கிய விமர்சனத்தில் இவற்றுக்கான கலைச்சொற்களே வேறு வேறு. அவற்றை வரையறைசெய்துகொள்வது விவாதங்களில் உதவிகரமானது.
உறுதிப்பாடு Certainity
ஒரு ஆளுமை அல்லது கருத்தின் நிலையான தன்மை. ஒரு மனிதனில் செயல்படும்போது குணாதிசயமாகவும் ஒரு கருத்தில் அல்லது பொருளில் செயல்படுகையில் அறிவியங்கியல் சார்ந்த ஒரு இயல்பாகவும் இது அறியப்படுகிறது. ஒரு கருத்து விரிவான பொதுத்தளத்தின் எல்லைக்குள் அனைத்து கோணங்களுக்கும் ஏற்ப தன்னை நிறுவிக்கொள்ளும் தன்மை இது. ஐயவாதிகள் இப்படி ஒரு இயல்பே எதற்கும் இல்லை என்று வாதிடுகிறார்கள்.
உறுதிப்பாட்டுவாதம் Stoicism
புறச்சூழல்கள் அளிக்கும் பாதிப்பே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மையப் பெரும் சக்தி என்றும் ஆகவே புறச்சூழல்களை தனித்துவத்துடனும் கொள்கையுறுதியுடனும் எதிர்கொள்வதே மேலான வாழ்வுக்கு வழி என்றும் வாதிட்ட கிரேக்க தத்துவக்கொள்கை. கி.மு.300ல் உருவான இந்தக் கொள்கையின் முக்கியமான தத்துவஞானிகள் ஜீனோ கிளீந்தஸ், கிரிசிப்பஸ் ஆகியோர். இத்தத்துவ நோக்கு ரோமில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியது. ரோமாபுரியின் சக்ரவர்த்தியும் தத்துவஞானியுமான மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) இதன் புகழ்பெற்ற பிரச்சாரகர். புறச்சூழல் நம்மை அடித்துச் சென்றுவிடாதபடி விலகி நமது தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக தைரியம் நடைமுறை விவேகம், நீதியுணர்வு போன்றவற்றைக் கடைபிடிப்பது, துயரங்களைத் திடமாக எதிர்கொள்வது ஆகியவையே வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் என்பது மார்கஸ் அரேலியஸின் கூற்று.
நவீன ஐரோப்பிய சிந்தனையில் உறுதிப்பாட்டுவாதத்தின் பாதிப்பு மிகமிக அதிகம். பெரும்பாலான சாகஸ நாவல்களில் இந்த தத்துவக்கொள்கை சார்ந்த மனநிலை வெளிப்படுவது உண்டு. வாழ்வின் பிற அம்சங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வாழ்வின் புறவய சக்திகளில் சவால்களைத் திடமாக எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் இம்மனநிலையை பிரதிநிதித்துவம் செய்பவை. எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
ஒருமை Unity
ஒரு படைப்பில் உத்தி, நடை, கூறுபொருள் அனைத்தும் பொருத்தமாக இணைந்திருத்தல். இக்கொள்கை அரிஸ்டாடிலில் இருந்து பிறந்தது. தன் ‘கவிதையியல்’ நூலில் அவர் மூன்றுவித ஒருமைகள் நாடகத்திற்குத் தேவை என்கிறார்.
1) கால ஒருமை,
2) இட ஒருமை
3)வெளிப்பாட்டு ஒருமை அல்லது நடிப்பு ஒருமை.
இன்று இக்கொள்கை அனைத்துப் புனைகதைகளுக்கும் பொருந்துவதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பார்வையில் கால ஒருமை என்பது படைப்பில் செயல்படும் காலம் தர்க்கபூர்வமாக அளிக்கப்பட்டிருத்தல் ஆகும். காலத்தை முன்னும் பின்னும் சிதறடித்து கதை கூறும் படைப்புகள் உண்டு. ஆயினும் அவற்றில் அடியில் கால ஓட்டத்திற்கு தர்க்கபூர்வமான ஒருமை இருக்க வேண்டும்.
இடஒருமை என்பது அரிஸ்டாட்டிலின் நூலில் நாடகம் நிகழும் மேடையையும் நாடகம் கற்பிதம் செய்யப்பட்டுள்ள இடங்களையும் முரண்பாடின்றி பொருத்துவதைக் குறிக்கிறது. இன்றைய நோக்கில் ஒரு படைப்பின் சித்தரிப்புச் சூழலில் உள்ள நம்பகத் தன்மையைக் குறிக்கிறது. சூழல் சித்தரிப்புகள் எந்த அளவுக்கு சிக்கலாக பின்னி அளிக்கப்பட்டாலும் வாசகனின் கற்பனைக்குள் அவை ஒருமை கொள்ள வேண்டும்.
வெளிப்பாட்டு ஒருமை என்று அரிஸ்டாட்டில் கூறுவது கதைக்கட்டுமானத்தின் திட்டவட்டமான தன்மையையும் சீரான ஓட்டத்தையும் ஆகும். இன்றைய நோக்கில் இது ஒரு படைப்பு கலைரீதியாக எந்த விளைவை உருவாக்க உத்தேசித்துள்ளதோ அந்த நோக்கத்திற்கு ஏற்ப அதன் வடிவம் அமைந்திருத்தல் என்பதைக் குறிக்கிறது. வாசகனிடம் உரிய வாசிப்பனுபவத்தை உருவாக்கும் அளவுக்கு தேவைக்கு மிகாமலும் குறையாமலும் உள்ள புனைவுமுறை. இதையே புனைவு ஒருமை என்று இன்றைய விமரிசகர் கூறுகிறார்கள்.
உதாரணமாக க.நா.சுப்ரமணியத்தின் ‘ஒரு நாள்’ காலை விடிவதில் தொடங்கி அன்றிரவுக்குள் ஒருநாள் முடிகிறது. இந்த காலப் பரப்புக்குள் கதை பல்வேறு தத்துவ விவாதங்கள், அனுபவப் பகிர்வுகளாக விரிகிறது. இது காலஒருமை கொண்ட படைப்பாகும். கோணங்கியின் ‘பாழி’ காலஒருமை கைக்கூடாத படைப்பு. பிரக்ஞையின் அலைகளாக எழுதப்படும் இந்நூலில் அப்பிரக்ஞை சந்திக்கும் காலம் எவ்வித ஒருமையும் இல்லாதபடி உள்ளது
ஒருகதைக்களனில் நேரடியாக நடந்துமுடியும் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ குறுநாவலும், கதைக்களன் நினைவுகள் மூலம் மாறிமாறி காட்டப்படும் சி.சு.செல்லப்பாவின் ‘ஜீவனாம்சமும்’ இடஒருமை கொண்ட படைப்புகளே. ஆனால் புனைவுரீதியான காரணம் தரப்பட்டாலும் கூட எம்எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருஷங்கள்’ நாவலில் கதாநாயகன் டாக்டர் கேசவராவ் கைதியாகி கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் செல்வதும் அங்கு நிகழும் சாகச வாழ்வும் இடஒருமை கைகூடாதவைதான்.
சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ சீரான ஓட்டமாக கதைக்கரு விரிவடையும் படைப்பு என்றால் ‘ஜெ. ஜெ. சில குறிப்புகள்’ கதைக்கரு முழுமையாகவே புனைவு ஒருமை கைகூடியவை. ஆனால் எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித்தீ’ புனைவுஒருமை சிதறிய ஆக்கம். அதன் முதல் அத்தியாயங்களில் செளராஷ்ட்ர சமூக வரலாறும் நெசவுத் தெழில் பிரச்சினைகளும் மிக விரிவாகப் பேசப்பட்ட பிறகு கதை மீண்டும் தன் மனைவி தன்னை’ ஏன் அழைத்தாள் என்று கண்ணன் யோசிப்பதில் இருந்து தொடங்குகிறது.
நேர்க்கோடற்ற படைப்புகள் புனைவு ஒருமையை திட்டமிட்டு சிதறடித்து வாசகன் ஒற்றைப்படையான மனப்பதிவை அடையவிடாது செய்கின்றன. ஆயினும் அந்த சிதறடிப்புத் திட்டத்தை அப்படைப்புகளின் புனைவுநோக்கம் என்று எடுத்துக்கொண்டால் அவையும் புனைவு ஒருமைகூடிய படைப்புகளே. புனைவு ஒருமையே வாசகன்மனதில் படைப்பை படிப்படியாகக் கட்டி எழுப்புகிறது.
ஒத்துணர்வு Empathy
கலைப்படைப்பில் வெளிப்படும் உணர்வுகளுடன் அதன் ரசிகனுக்கு அல்லது வாசகனுக்கு உருவாகும் மன ஒத்திசைவு. ஒன்றிப்போய் வாசித்தல் என்ற சாதாரணமாக இலக்கியப் பேச்சுகளில் இது கூறப்படுகிறது. கதையிலும் கதாபாத்திரங்களும் சுய அடையாளம் காணுதலின் விளைவு இது.