பகுதி ஆறு : பொற்பன்றி – 3
இடைநாழியில் நடந்துகொண்டிருக்கையில் துச்சளை முற்றிலும் தனிமைகொண்டிருந்தாள். அருகே வந்துகொண்டிருந்த தாரை அந்தத் தனிமையை உணர்ந்தவள்போல ஒரு சொல்லும் எடுக்கவில்லை. நின்று நின்று இளைப்பாறி நடுவே ஓர் இடத்தில் சிறுதிண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்து அவள் தன் அறையை வந்தடைந்தாள். பீடத்திலமர்ந்து விழிமூடிக்கொண்டாள். அவள் நெற்றிநரம்புகள் புடைத்திருப்பதை தாரை கண்டாள். கிளம்பிவிடலாம் என எண்ணி அவள் உடலில் மெல்லசைவு எழுந்ததுமே துச்சளை விழிதிறந்து “தந்தையின் கைகள்” என்று சொல்லி புன்னகைத்தாள்.
அவள் விழிகள் சிவந்திருந்தன. “தந்தையின் கைகளுக்கு தயக்கமே இல்லை. விழியுடையோர் எவருக்கும் அத்தகைய தயக்கமின்மை கைகூடுவதில்லை” என்றாள். “இளமையில் நான் விரும்பியது அவருடைய கைகளைத்தான். என்னை அவர் தொட்டுத் தொட்டு வரைந்துகொள்கிறார் என்று எண்ணினேன். அவரால் வரையப்பட்டவள்தான் நான் என பின்னர் தெளிந்தேன்.” தாரை “ஆம், அவர் என்னை ஒருமுறை தொடமாட்டாரா என ஏங்கினேன்” என்றாள். “என் தந்தை அகவைமுதிர்வுக்கு முன்புதான் என்னை தொட்டிருக்கிறார். அதன்பின் அவர் என் நெற்றியை மட்டுமே வாழ்த்தும்பொருட்டு தொட்டார்.”
“ஆம், பெரும்பாலும் தந்தையர் மகளிரை தொடுவதில்லை” என்றாள் துச்சளை. “அவ்வகையில் நான் நல்லூழ் கொண்டவள்.” ஆனால் அவள் முகத்தில் இருந்த தவிப்பு மாறவில்லை. “அவர் இன்றிருக்கும் கெடுநரகு… நரகம் முடிவிலா இருளாலானது என ஏன் சொல்கிறார்கள் என்று இன்று உணர்ந்தேன்.” தாரை “அவர் இருக்கும் நிலையை நீங்கள் அரசரிடம் சொல்ல இயலும், அரசி” என்றாள். “நான் எப்படி சொல்வது? அவர் இருக்கும் நிலை…” என்றாள் துச்சளை. “அவரிடம் இன்று நீங்களோ பேரரசியோ மட்டுமே பேசமுடியும். அவரிடம் இப்போது அணுக்கமாக பெண்டிர் எவருமில்லை” என்றாள் தாரை.
அவள் சொல்வதை புரிந்துகொண்ட துச்சளை “நான் அரசியைப் பார்த்ததுமே அதை எண்ணினேன்” என்றாள். “அறுபடல்” என்றாள் தாரை. “ஆம், குருதி வடிவது இன்னமும் நிற்கவில்லை. அவள் அவர் மீது பெருங்காதல் கொண்டவள். அக்காதல் துளி குன்றாது அவ்வண்ணமே நீடிக்கிறது இப்போதும். அவள் மறையும் கணம்வரை அவ்வாறே நீடிக்கும். ஏனென்றால் அவர் அப்படிப்பட்டவர். சில ஆண்களை அவர்களின் பெண்கள் ஒருகணமும் அகல இயலாது” என்றாள். “ஆம்” என்றாள் தாரை விழிகளைத் தாழ்த்தி.
அவளை ஒருகணம் நோக்கிய பின் துச்சளை “முன்பொருமுறை சந்திரர் என்னும் நிமித்திகர் மூத்தவரின் பிறவிநூலை நோக்கும்பொருட்டு இங்கே வந்தார். அரசி ஆர்வத்துடன் அமர்ந்து அதை கேட்டாள். இப்புவி உயிரின் பெருங்கடல் என்று அவர் சொன்னார். துகள்கள், குமிழிகள், அலைகள். சில உயிர்கள் அவற்றில் பெருஞ்சுழிகள். சில பேரலைகள். சில ஆலமரங்களைக் காண்கையில் பிரம்மத்தைக் காண்பதுபோல் உள்ளம் எழுகிறது. ஆழியில் பேருருவத் திமிங்கலத்தைக் கண்டு மீண்ட சிலர் மெய்மையை சென்றடைந்தவர்களானதுண்டு என்றார்” என்றாள்.
“எங்கள் முகங்களை நோக்கியபின் நல்லோர் என்றோ தீயோர் என்றோ பகுப்பது நம் நலன் எனும் அளவுகோலைக்கொண்டே என்றார் அவர். பிரம்மம் ஆடும் நாற்களத்தில் சில காய்கள் கருமை, சில வெண்மை. இது ஒரு பேருயிர். பெருநதி சிறுநதிகளை தன்னுடன் இழுத்து இணைத்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. தன் விசையாலேயே தன் வழிகளை அமைத்துக்கொள்வது. அதை உங்கள் கைகளால் முழம்போட்டு அளக்கவேண்டாம், அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று சொல்லி சுருட்டி குழாயிலிட்டு திருப்பியளித்துவிட்டார்” என்றாள் துச்சளை.
“அரசி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தாள். ஒரு சொல்லும் எழவில்லை. நான் அவள் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தேன். மூத்தவரைப் பற்றிய அச்சொற்கள் எனக்கு அச்சமூட்டின. ஆனால் அவள் முகம் பெருங்காதலால் மலர்ந்து விழிகள் நீர்மைகொண்டு ஒளிவிட்டதை கண்டேன். அப்போது உணர்ந்தேன், அப்பெருஞ்சிலந்தியிடமிருந்து அவளுக்கு மீட்பே இல்லை என. அதன் நஞ்சை ஏற்று உடலளித்து ஓடாவதற்காக வலையை நாடி பறந்துவந்து சிறகுகளை அளித்தவள் அவள்” என்றாள் துச்சளை. தாரை “ஆம், நானும் அதை உணர்ந்திருக்கிறேன்” என்றாள்.
“ஆனால் அவருக்கு ஒரு பெண்தான்” என்றாள் துச்சளை. “தன்னுள் ஆழ்ந்த குறையுடையவன் மட்டுமே பெண்களை அள்ளி அள்ளி நிறைத்துக்கொள்கிறான். அவனுக்கு எப்போதுமே நிறைவதில்லை. அவருடைய உடலுக்கு மட்டுமே பெண் தேவை. அதற்கு ஒருத்தியே போதும்.” தாரை “ஆம், அக்கையே” என்றாள். “சென்று ஓய்வெடுத்து வா. நான் சற்றேனும் துயின்றாகவேண்டும். இன்றே தமையனை பார்க்கவேண்டும். அதற்கு முன்னர் அன்னையை பார்ப்பேன். இங்கே என்னால் ஏதேனும் நிகழ வாய்ப்பிருப்பின் நிகழ்க. அதன்பொருட்டு முழுமையாக முயலவேண்டியது என் கடன்” என்றாள் துச்சளை. “ஆம், நான் அந்தியில் உங்களை பார்க்கிறேன்” என்றாள் தாரை.
அவள் சோர்ந்து நடப்பதைக் கண்ட துச்சளை “என்னடி?” என்றாள். “ஒன்றுமில்லை, அரசி” என்றாள் தாரை. “நன்று… விகர்ணனையும் நான் பார்க்கவேண்டும். இளமையில் அவன் மீது எனக்கு இளக்காரம் கலந்த அன்பு இருந்தது. அவனும் குண்டாசியும் என்னுடைய களிப்பாவைகள் என்பார்கள்” என்றாள் துச்சளை. “அவரை அழைத்துவருகிறேன், அக்கையே” என்றாள் தாரை. “குண்டாசியையும் பார்க்கவேண்டும்” என்றாள் துச்சளை. தாரை “அமைச்சரிடம் சொல்கிறேன்” என்றபின் வெளியே சென்றாள்.
துச்சளை தன் அறையிலிருந்து கிளம்பியபோதுதான் தாரை அப்பாலிருந்து ஓடிவருவதை கண்டாள். “என்னடி ஓடிவருகிறாய்? நில்” என்றாள் துச்சளை. “நான் சற்று துயின்றுவிட்டேன், அக்கை. அதற்குள் அரசப்பணி என்று சுரேசர் செய்தியனுப்பியிருந்தார். மச்சர்நாட்டு அரசர்கள் இருவர் நகர்புகுந்திருக்கிறார்கள். அவர்களை சந்தித்துவிட்டு ஓடிவந்தேன்” என்றாள். “விரைந்து வா… அதற்காக ஓடிவரவேண்டுமா என்ன?” என்றாள் துச்சளை. “இங்கே அரசியர் எவரும் ஓடமாட்டார்களடி.” தாரை “ஆம், என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்னால் ஓடாமலும் இருக்கமுடியாது” என்றபின் “ஓடும்போது மட்டும்தான் அக்கை, நான் மச்சநாட்டவள்” என்றாள்.
துச்சளை முகம்மலர்ந்து அவள் தோளில் கைவைத்து “ஓடு… உன்னை எவர் சொல்வது? எனக்குக்கூடத்தான் ஓடவேண்டுமென்று விருப்பம். கால்கள் அசைந்தால்தானே?” என்றாள். அவளுடன் வந்த சாரிகை “அரசி பேரரசியை சந்திக்கச் செல்கிறார்கள்” என்றாள். “நன்று, நானும் உடன் வரலாமல்லவா?” என்றாள் தாரை. “உன்னை அதற்குத்தானே வரச்சொன்னேன்” என்றாள் துச்சளை. “எனக்கும் அன்னைக்குமான உறவு எப்போதுமே பாறைவெடிப்புக்குள் நீர் புகுந்ததுபோல, எங்கு செல்கிறது எப்படி வெளிப்படுகிறது என எவராலும் சொல்லமுடியாது” என்றாள்.
“நல்ல ஒப்புமை” என்றாள் தாரை. துச்சளை “யாரோ விறலி பாடியது… விறலியர் சொல்லாத எதையேனும் சொல்லும் வழக்கமே அரசகுடியினருக்கு உண்டா என ஐயமாக உள்ளது” என்றாள். “பேரரசி சோர்வுற்றிருக்கிறார். ஆனால் எதையும் எங்களிடம் காட்டிக்கொள்வதில்லை. தங்கையர் அவருக்கு பெரிய அரண்போல. நாம் அவரை அணுகுவதையும் அவர் நம்மை அணுகுவதையும் முற்றாக கட்டுப்படுத்துகிறார்கள்.” துச்சளை “அது நன்று, எந்நிலையிலும் உடனிருக்கும் உறவு என்பது பெரிய கொடை” என்றாள். “நானேகூட சிற்றன்னையரைக் கடந்து அன்னையை சென்றடைய முடிந்ததில்லை.”
தாரை தரையை நோக்கிக்கொண்டே நடந்தாள். அவள் துச்சளையிடம் அணுகிப்பேச அஞ்சினாள். துச்சளையிடம் ஒரு தயக்கமில்லாமை இருந்தது. எங்கும் நுழைபவள். விழியில்லாதவர்களுக்குரிய இங்கிதமின்மையா அது? அவள் பெருமூச்சுவிட்டாள். துச்சளை அவளை நோக்கி “என்ன எண்ணுகிறாய்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றாள் தாரை. “சலிப்புறுகிறாயா?” என்றாள். “இல்லை” என்றாள் தாரை. “அன்றி எதையேனும் அஞ்சுகிறாயா?” என்றாள். “இல்லை” என்றாள் தாரை. துச்சளை “எதையும் அஞ்சாதே” என்றாள். “எதையுமா, அக்கையே?” என்றாள் தாரை. “ஆம், எதையும்…” என்றாள் துச்சளை.
தாரை சில கணங்களுக்குப் பின் “அவ்வாறு எவரேனும் இருக்கமுடியுமா?” என்றாள். “இயலாது. ஆனால் அவ்வாறு முயலாமல் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரம் தடைகளை கடக்கவியலாது” என்றாள் துச்சளை. தாரை மேலும் பெருமூச்சுவிட்டாள். துச்சளை மெல்லிய குரலில் ஏதோ முனகியபடி நடந்தாள். “பாடுவீர்களா?” என்றாள் தாரை. “பாடுவேன், ஆனால் அரசியர் பிறர் கேட்க பாடவும் ஆடவும் கூடாது என்பதனால் என்னுள் மட்டுமே வைத்துக்கொண்டேன்” என்றாள். “ஏன் பாடக்கூடாது?” என்றாள் தாரை. “அது பிறரை மகிழ்விப்பது அல்லவா? அதை செய்யக்கூடாது” என்றாள் துச்சளை.
சிலகணங்களுக்குப் பின் தாரை “அவ்வாறல்ல” என்று சொன்னாள். “பாடினாலோ ஆடினாலோ அரசியரும் அரசரும் இழப்பது பிறர்மேல் கொண்டுள்ள மேலெழுகையை… அவர்கள் அப்போது அரசியரும் அரசரும் அல்ல.” துச்சளை “மெய்தான்” என்றாள். “அரசர்கள் அவர்களின் உடல்களே. ஆடையணிகள், மணிமுடி, செங்கோல். பாடும்போதும் ஆடும்போதும் அவையனைத்தும் மறைந்து அவர்கள் பிறிதொருவராகிவிடுகிறார்கள்” என்ற துச்சளை மெல்லிய மூச்சொலி ஒன்றை எழுப்பினாள். “என்ன?” என்றாள் தாரை.
துச்சளை நின்றுவிட்டதை உணர்ந்து நோக்கியபின்பு விழிவிலக்கியபோதுதான் தாரை அப்பால் நின்றிருந்த பூரிசிரவஸை பார்த்தாள். அவனும் அவளை பார்த்துவிட்டு நின்றிருக்கிறான் என்று உணர்ந்தாள். அவள் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. பின்னர் வலக்கால் ஊன்றமுடியாதபடி துள்ளுவதை உணர்ந்தாள். துச்சளை நீண்டமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு மெல்ல நடந்தாள். அவள் நடக்கத் தொடங்கியதும் பூரிசிரவஸும் நடக்கலானான். இருவரும் அருகருகே வந்தனர். அதுவரைக்கும் துச்சளை நிலத்தை நோக்கியிருக்க பூரிசிரவஸ் தூண்களையும் சாளரங்களையும் பார்த்தான். அருகே வந்ததும் இருவரும் விரைவழிந்தனர். பூரிசிரவஸ் தாழ்ந்த குரலில் “வணங்குகிறேன், அரசி” என்றான்.
துச்சளை “நலம் சூழ்க!” என்றாள். அவள் குரலும் மிகத் தாழ்ந்திருந்தது. “நலமா?” என்றாள். “ஆம், நலமே” என்று அவன் சொன்னான். “இன்றுதான் வந்தீர்களா?” என்றாள். “இல்லை, நான் சென்ற ஒரு வாரமாகவே இங்குதான் இருக்கிறேன். இங்கு வரும் அரசர்களை ஒருங்கிணைத்து ஷத்ரியக் குடியவையை முழுமைப்படுத்தும் பொறுப்பை என்னிடம்தான் அரசர் ஒப்படைத்திருக்கிறார்” என்றான். சொற்களால் உள்ளம் எளிதாக “நான் இப்போதுதான் வந்தேன். இன்று அஸ்வத்தாமர் நகர்புகுகிறார். அவரை வரவேற்று மாளிகைக்கு கொண்டுசென்றேன். பேரரசியை சந்திக்கும்படி ஆணை வந்தது. சந்தித்துவிட்டு மீள்கிறேன்“ என்றான்.
இருவருக்கும் பேசுவதற்கான பொருள் கிடைத்துவிட்டதென அவர்களின் முகங்கள் எழுந்து விழிகள் சந்தித்துக்கொண்டமை காட்டியது. “அன்னை ஏதேனும் மந்தணம் சொன்னாரா?” என்றாள் துச்சளை. “இல்லை அரசி, தாங்கள் அறியக்கூடாததென ஏதுமில்லை” என்றான். அவர்களின் நோக்குகளை அப்பால் நின்று பார்த்தபோது அச்சொற்கள் அங்கே ஒலிப்பது செவிமயக்கு என்று தோன்றியது.
பூரிசிரவஸ் “மூத்தவரைப்பற்றித்தான் பேசினார். நாளைமறுநாள் அவர் கலிபூசனைக்கு நாள் குறித்திருக்கிறார். அது மெய்யா என்று கேட்டார். ஆம், உண்மையே என்று சொன்னேன். நான் கேள்விப்பட்டவை அச்சுறுத்துகின்றன என்றார். ஆம், அவை அச்சமும் கவலையும் அளிப்பவையே என்றேன். அவர் கவலைகொண்டிருக்கிறார்” என்றான். “ஆம், சொன்னார்கள்” என்றாள் துச்சளை. அவள் விழிகள் பூரிசிரவஸின் முகத்தை நோக்கியபடி அலைபாய்ந்தன. வலக்கை ஆடைநுனியைப்பிடித்து முறுக்கிக் கசக்கித் தவித்தது. தாரை மெல்ல அகன்றுசெல்ல காலடி வைக்க அவள் கையைப்பற்றி அதை தடுத்தாள் துச்சளை.
பூரிசிரவஸ் “ஏதேனும் செய்யமுடியுமா என்று பேரரசி கேட்டார்கள். எவரேனும் ஏதேனும் செய்யமுடியும் என்றால் அது உங்களால் மட்டுமே என்றேன். நான் இனி ஒன்றும் செய்வதற்கில்லை, நீங்களோ அஸ்வத்தாமரோ செய்யமுடியும் என்றார். அல்ல அரசி, நாங்கள் ஏதும் செய்யமுடியாது என்றேன். அங்கன் என்ன செய்யமுடியும் என்றார். அங்கரால் மட்டுமே இனி ஏதேனும் செய்யமுடியும் என்றேன். ஆனால் அவர் மதுவில் மறந்திருக்கிறார். அவரிடம் சொல்லெடுக்கவே இயலாது என்றேன். நான் முயல்கிறேன், அவனே என் முதல் மைந்தன். இக்குடியின்மேல் பேரரசருக்குப் பின் பொறுப்பு உடையவன் அவனே என்றார். ஆம், அறிவேன் என்றேன். அதன்பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. நான் தலைவணங்கி வெளியேறினேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.
“நான் அன்னையைத்தான் பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள் துச்சளை. “ஆம், அரசி சத்யவிரதை சொன்னார்கள், நீங்கள் வரப்போவதாக. இவ்வழி வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.” அவள் கழுத்தில் நரம்பு ஒன்று அதிர்வதை தாரை கண்டாள். கைகள் ஆடைநுனியை முறுக்க “ஆகவேதான் இவ்வழி வந்தீர்களா?” என்றாள். “இல்லை அரசி, நான் தாங்கள் வருவீர்கள் என்று…” என்றான் பூரிசிரவஸ். “வருவேன் என எண்ணினீர்களா?” என்று அவள் அவன்மேல் விழிநிறுத்தி கேட்டாள்.
அவன் பதறி தாரையை நோக்கிவிட்டு “அல்ல, நான்… வேறுவழியேதும் இங்கில்லை என்பதனால்…” என்று குழறினான். “என்னை சந்திக்க விரும்பினீர்களா இல்லையா?” என்றாள் துச்சளை. “அது முறையல்ல அல்லவா?” என்றான். “எது?” என்றாள். “சந்திக்க விழைவது…” என்றான். “முறையா என கணித்த பின்னரா விழைவு எழுகிறது?” அவன் “ஆம்” என்றான். “சொல்க!” என்றாள். “என்ன?” என்றபோது அவன் விழி வந்து தாரையின் விழியை தொட்டுச்சென்றது. அவள் அப்போதுதான் அவன் முகத்தை தானும் உற்றுநோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து விழிவிலக்கிக்கொண்டாள்.
“என்னை சந்திப்பதை விரும்பினீர்களா? அஞ்சி விலக எண்ணினீர்களா?” என்றாள் துச்சளை. அத்தனை துணிவாக அவளால் எப்படி கேட்கமுடிகிறது என தாரை வியந்தாள். பூரிசிரவஸ் தன்னை திரட்டிக்கொண்டு “சந்திக்க விழைந்தேன். சந்திக்கக்கூடும் என எண்ணியதுமே என் நெஞ்சு அதிரத் தொடங்கியது. ஆனால் அஞ்சவும் செய்தேன். ஆகவே வேறு வழி உள்ளதா என பார்த்தேன். இல்லை என்று தெரிந்தது. அஞ்சியபடின் நடந்துவந்தேன்” என்றான். துச்சளை “எவர்மேல் அச்சம்?” என்றாள். “என் மேல்தான்… நான் ஆற்றல்கொண்டவன் அல்ல” என்றான் பூரிசிரவஸ்.
துச்சளை புன்னகைத்தபோது அவள் முகம் பேரழகுடன் இருப்பதாக தாரை எண்ணினாள். கனவுகண்டு சிரிக்கும் பால்மகவின் முகம் அது. “எவர்தான் ஆற்றல் கொண்டவர்கள்?” என்றபின் “உங்கள் அரசி எப்படி இருக்கிறார்கள்?” என்றாள். பூரிசிரவஸ் “அவள் எளிய மலைமகள்” என்றான். “உங்கள் இயல்புக்கு ஏற்றவள்” என்றாள் துச்சளை. “ஆம், என் இயல்புகளில் ஒன்றுக்கு மட்டும்…” என்ற பூரிசிரவஸ் புன்னகைத்து “ஒவ்வொரு நீர்த்துளியின் அளவையும் துலாவிலிட்டு முடிவெடுத்த பின்னரே தெய்வங்கள் மண்ணுக்கு அனுப்புகின்றன என்பார்கள்” என்றான். துச்சளை சிரித்து “மெய்தான்…” என்றாள்.
பூரிசிரவஸ் “நன்று அரசி, இடைநாழியில் நின்று பேசுவது முறையல்ல. பிறிதொருமுறை அரசமரபின்படி நான் தங்களை சந்திக்கிறேன்” என்றான். “நான் தங்களை சந்திக்க விழைந்தேன்” என்றாள் துச்சளை. “என்னையா? எதற்கு?” என்றான் பூரிசிரவஸ். “நான் கேட்கவிழைந்த ஒரு வினா நெஞ்சிலேயே நின்றிருக்கிறது, நெடுநாட்களாக.” அவன் தாரையை பார்க்க அவள் விலகிச்செல்ல மீண்டும் அசைந்தாள். துச்சளை அவள் கையைப்பற்றி தடுத்தாள். “சொல்க!” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் என்பொருட்டு அவர்களை கைவிட்டீர்களா?” என்றாள். “என்ன?” என்றான் அதிர்ச்சியுடன். “நான் சொல்வது உங்களுக்கு புரியும்.”
அவன் நோக்கை விலக்கி சாளரத்தை பார்த்தான். அவன் இமைகள் ஈரமாக இருக்கின்றனவா என தாரை ஐயம்கொண்டாள். அவ்வாறு நோக்கலாகாது என விலகிக்கொண்டாள். “சொல்க!” என்றாள் துச்சளை. அவன் நடுங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் இடக்கால் ஆடியது. “சொல்க!” என்று துச்சளை மீண்டும் கேட்டாள். அவன் “ஆம்” என்றான். திடுக்கிட்டவள்போல தாரை துச்சளையின் முகத்தை பார்த்தாள். அதில் நிறைவு தெரியும் புன்னகை எழுவதைக் கண்டு திகைப்புடன் அவனை பார்த்தாள்.
“அவர்களை நான் எவ்வகையிலும் கைவிடவில்லை. என்னைவிட்டு அவர்கள் நீங்கியது முற்றிலும் என்னை மீறிய நிகழ்வுகளால். நான் எளிய மலைமகன். அரசர்களின் கணிப்புகளை என்னால் முன்னரே உய்த்துணர முடியவில்லை. ஆனால் அத்தருணங்களுக்குப் பின் நான் அவர்களை உடனுக்குடன் உள்ளத்தால் கைவிட்டேன், அது உங்கள்பொருட்டே.” துச்சளை பெருமூச்சுடன் “நான் எண்ணினேன்” என்றாள். “ஆனால் நான் மெய்யாகவே சொல்வதை நீங்கள் நம்பியாகவேண்டும். அது உங்கள் அரசின் தகுதிக்காக அல்ல. எந்த அரசியல் கணிப்பும் அப்போது என்னுள் ஓங்கியிருக்கவில்லை. அரசியல் கணிப்புகள் அற்றவன் என நான் என்னை சொல்லமாட்டேன். ஆனால் அன்று அவை இல்லை. அன்று ஓங்கியிருந்தது…” என்றான் பூரிசிரவஸ்.
அவள் அவனை எதிர்பார்ப்புடன் நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். அந்த விழிகளை நோக்கியபோது ஆழ்ந்த பொறாமைப்பொங்குதலை தாரை தன்னுள் உணர்ந்தாள். மறுகணமே துயரம் எழ விழிதழைத்தாள். “ம்?” என்றாள் துச்சளை. “நான் முதன்மையாகக் கருதியது அஸ்தினபுரியின் அரசரை. அவர் தன் பெருங்கரங்களால் என் தோள்களைத் தழுவிய கணம் மீண்டும் பிறந்தெழுந்தவன் நான். அவருக்காக களத்தில் மடியவிருப்பவன். அன்று அவர் தங்கையை நான் கைகொள்ளக்கூடும் என்ற எண்ணமே என்னை கிளரச் செய்தது. விண்ணகநிலைக்கு நிகர் அது. அதுவே மெய்.”
“அதன்பின் அஸ்தினபுரியின் பேரரசர். அவர் என்னை தழுவியிருக்கிறார். விண்முட்ட எழுந்து நிற்கும் இமயக் கொடுமுடிகளில் ஒன்று என்னை கைநீட்டி அணைத்துக்கொள்வது போன்றது அது. அவர்களின் குலத்தில் ஒருவனாதல் என்பதே என்னை எக்களிக்கச் செய்தது.” தாரை துச்சளையின் முகத்தை நோக்கினாள். அவள் விழிகள் நனைந்த பீலிகளுடன் உணர்வெழுச்சியால் சுருங்கியிருந்தன. வாயை உள்நோக்கி மடித்து தன்னை அடக்கிக் கொண்டிருந்தாள். “அதன் பின்னரே நீங்கள். உங்கள் கண்களைப்போல அன்றும் இன்றும் என்னை கவர்பவை பிறிதில்லை. அனைத்தையும்விட என் ஆணவம். ஆம், இதற்கெல்லாம் நான் தகுதியுடையவன் என்னும் பெருமிதம். என் தகுதியை நானே அறிந்த தருணம் அது” என்றான் பூரிசிரவஸ்.
“அது அல்லவென்றானபோது என் உள்ளம் சோர்ந்தது. என்னை தூக்கி வீசிவிட்டது ஊழ் என உணர்ந்தேன். ஆனால் இங்கிருந்து பால்ஹிகநாட்டுக்குச் செல்லும்போது ஒரு தருணத்தில் உங்கள் விழிகளை என் உளவிழிகளால் மிக அண்மையிலெனக் கண்டேன். அங்கு நான் கண்டது பேரன்பை. அது எது என நான் பகுத்தாயவில்லை. நான் புறக்கணிக்கப்படவில்லை என அப்போது உறுதிகொண்டேன். என் ஆணவம் கொண்டிருந்த வலி அழிந்தது. நெஞ்சு எளிதாக தென்றலில் என பால்ஹிகநாட்டுக்குச் சென்றேன். எதை இழந்தாலும் நான் முதன்மையான பலவற்றையும் பெற்றிருக்கிறேன், தெய்வங்கள் எனக்கு கனிந்தருளியவை அவை என உணர்ந்தேன். அவ்வுணர்வு இத்தருணத்திலும் நீடிக்கிறது.”
துச்சளை “நன்று, பால்ஹிகரே” என்றபின் திரும்பி நோக்காமல் நடந்தாள். அந்த விரைவு தாரையை வியப்பூட்டியது. அவள் உடன் தொடர்ந்து நடந்தாள். பின்னால் பூரிசிரவஸின் நோக்கை உணரமுடிந்தது. பின்னர் திரும்பி நோக்கியபோது அவன் நெடுந்தொலைவிலென சென்றுகொண்டிருந்தான். துச்சளை திரும்பி நோக்கவில்லை. அவள் உடல் முழுவிசையுடன் உள்ளத்தால் உந்தப்பட்டதுபோல சென்றது. திசைவெளியில் விழுந்துகொண்டிருப்பதுபோல.
துச்சளை நின்று மூச்சிரைத்தாள். மேலாடையால் முகத்தை துடைத்துக்கொண்டாள். மீண்டும் பெருமூச்சுகள்விட்ட பின் “செல்வோம், பிந்திவிட்டது” என்றாள். “நான் உடன் நின்றிருக்கலாகாது, அரசி” என்றாள் தாரை. “நீ நின்றிருக்கவேண்டும்” என்றாள் துச்சளை. “தனியாகப் பேச நான் அஞ்சினேன்.” தாரை “ஏன்?” என்றாள். “நீ நின்றிருக்கையில்தான் இந்த இடைநாழி ஒரு பொது இடம்” என்றாள் துச்சளை. “அது எவ்வாறு?” என்றாள் தாரை. துச்சளை புன்னகைத்தாள். “அதனாலென்ன?” என்றாள் தாரை.
“நீ காதலித்திருக்கிறாயா?” என்றாள் துச்சளை. “இல்லை” என்றாள் தாரை. “அப்படியென்றால் நீ நான் சொல்வதை புரிந்துகொள்ளவியலாது” என்றாள் துச்சளை. “ஆம்” என்ற தாரை பெருமூச்சுவிட்டாள். “ஒருகணம் உங்கள்மேல் பெரும்கசப்பு ஒன்று எழுந்தது, அரசி.” “ஏன்?” என்றாள் துச்சளை. “நீங்கள் இப்புவியின் இனிமை அனைத்தையும் துளி எஞ்சாமல் அடைந்துவிட்டீர்கள்.” துச்சளை “ஆம்” என்று புன்னகை புரிந்தாள். தாரை “அது பெருந்துயரும்கூட அல்லவா?” என்றாள். “நம்மை வளர்க்கும் இனிமைகள் சில உள்ளன. ஆழமான இனிமைகள் நம்மை அழிப்பவை. முற்றழிப்பதே இனிமைகளில் தலையாயது” என்றாள் துச்சளை. தாரை பெருமூச்சுவிட்டு பின் புன்னகைத்தாள்.
“நீ என்ன எண்ணுகிறாய்?” என்று துச்சளை கேட்டாள். “என் உடல் அத்தனை அழகற்றா இருந்தது?” தாரை “உடலின் அழகின்மையினூடாக நீங்கள் விடுதலையை அடைந்துவிட்டீர்கள் அல்லவா?” என்றாள். “கேள், நீ கேலிபேசுவதற்கான தருணம் இது. ஆனால் நெஞ்சில் அன்புள்ள பெண்களுக்கு அது இயல்வதே அல்ல என்று இப்போது உணர்ந்தேன்” என்றாள் துச்சளை. தாரை “நீங்கள் எப்படி இருந்தாலென்ன அக்கை, உங்கள் முகத்திலிருந்து அவர் விழி விலகவில்லை. அவர் முகத்திலிருந்தது கந்தர்வர்களுக்குரிய பேருவகை” என்றாள்.
“மெய்யாகவா?” என்றாள் துச்சளை. “மெய்யாகவா சொல்கிறாய்? என்னை மகிழ்விக்க நினைக்கிறாயா?” தாரை “இல்லை அக்கையே, மெய்யாகவேதான்” என்றாள். “அதெல்லாம் உடனே தோன்றுவது, ஆண்களின் விழிகளுக்குச் சிக்குவது உடலே. இன்னொருமுறை என்னை நோக்குகையில் பிறிதொன்றே தோன்றும்” என்றாள் துச்சளை. “அந்த அகவையை அவர் கடந்துவிட்டார்” என்றாள் தாரை. “ஆம்” என்ற துச்சளை “ஆனால் அவரிடம் அகவை தெரியவில்லை. அன்று கண்ட அதே இளமையுடன் இருக்கிறார்” என்றாள். தாரை புன்னகைத்தாள். “அது ஏன் அவர் மட்டும் அப்படியே நீடிக்கவேண்டும்? தெய்வங்கள் காட்டும் ஓரவஞ்சனை” என்று துச்சளை சொன்னாள்.
“அது உங்களுக்கு துயரளிக்கிறதா?” என்றாள் தாரை. “உண்மையை சொல்லப்போனால் ஆம், நான் விரைந்து முதுமைகொண்டுவிட்டேன்” என்று துச்சளை சொன்னாள். “அது எப்போதுமே அப்படித்தான் அரசி, பெண்களுக்கே முதுமை விரைந்து அணுகுகிறது.” துச்சளை “நாம் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம், அதனாலாக இருக்குமோ?” என்றாள். “இருக்கலாம்” என்று தாரை சிரித்தாள். “ஆனால் இதுவும் நன்றே. இதை எண்ணிக்கொள்க, மீண்டும் சந்திக்கையில் இயல்பாக நீங்கள் ஓர் இனிய பொதுநடிப்புக்கு செல்வீர்கள். அவர் மைந்தராகவும் நீங்கள் அன்னைபோலவும் ஆவீர்கள்” என்றாள் தாரை.
துச்சளை “நான் மீண்டும் அவரை சந்திக்கமாட்டேன்” என்றாள். “ஏன்?” என்றாள் தாரை. “அது பிழை” என்றாள் துச்சளை. “அரசி, அதிலென்ன பிழை?” என்றாள் தாரை. “அதிலென்ன பிழை என நமக்குத் தெரியுமே, அதுதான்” என்று துச்சளை சொன்னாள். அவர்கள் மொழியழிந்து நடந்தனர். காந்தாரியின் மாளிகை முகப்பை அடைந்தபோது தாரை “மீண்டும் சந்திக்கவே மாட்டீர்களா?” என்றாள். “அவ்வாறு எண்ணுகிறேன். தெய்வங்கள் விழைவதே நிகழும்” என்றாள் துச்சளை.