கடிதங்கள்

வி.எல்.எதிராஜ்
வி.எல்.எதிராஜ்

விடுபட்ட ஆளுமைகள்

 

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு

 

வணக்கம்

 

சென்னையில் சீனிவாச நடராஜனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு நானும் வந்திருந்தேன். அதற்கு முன்பு  தமிழ் இந்து நாளிதழ் இலக்கிய விழாவில் கிட்டத்தட்ட பத்து மணிநேரங்கள் இருந்துவிட்டு நேரிடையாக இக்ஸா அரங்கு வந்தேன். அதன்பின்பு தங்களின் உரைமுடிந்து பிற வாசகர்களால் சூழப்பட்டிருந்தீர்கள். கடைசியாக எஞ்சியிருந்த எட்டு, பத்து பேர்கள் நகரவேயில்லை. சரி போகட்டுமென்று வெறுமனே தங்களை அருகில் இருந்து பார்த்துவிட்டு ஒன்றுமே பேசாமல் திரும்பிவிட்டேன். அதில்லை விஷயம். இந்து விழாவில் தனிப்பட்ட உரையாடலிலும், இதற்கு முந்தைய வழக்கமான முகநூல் வம்புகளிலும் தங்களை ஏகத்துக்கும் விமர்சித்து வந்த பலரையும் இந்த நிகழ்ச்சியில் கண்டேன். இந்த முரண் எனக்கு விளங்கவில்லை. காலச்சுவடு, உயிர்மை, இடதுசாரி என எல்லா முகாம்களிலிருந்தும் அவர்கள் அங்கு வந்திருந்தனர்.

 

 

மேலும் “விடுபட்ட ஆளுமைகள்” குறித்த தங்களின் பதிவை உறுதிசெய்யும் செய்தி எங்கள் ஊரிலும் உண்டு. ராஜகோபால் எனும் தலித் வகுப்பு வழக்கறிஞர். நாகநாதசாமி ஆலய வளாகத்தில் (அது கிட்டத்தட்ட அக்ரஹாரம்) இறந்துபோகும் வரை அங்கு குடித்தனம் இருந்தார். ஆம்பூர் போன்ற பகுதிகள் ஓரளவு தலித் விடுதலை அரசியலின் நூறாண்டு வரலாறு கொண்ட இடம். அழகிய பெரியவனின் “வல்லிசை” நாவலின் மைய நாயகர்கள் அனைவருமே எங்கள் வட மாவட்ட தலைவர்களே. சிற்பம், கலை குறித்த தங்களின் அவதானம் எங்கேனும் youtube-ல் பதிவிட்டால் மீண்டும் கேட்க வசதியாக இருக்கும். நன்றி

 

 

அன்புள்ள கொள்ளு நதீம் அவர்களுக்கு,

 

நேரில்பார்க்க ஆவல் கொண்டிருந்தேன். சந்தித்திருக்கலாம்

 

எப்படி இருக்கிறீர்கள். ஒவ்வொரு துறையிலும் முக்கியமான ஆளுமைகள் ‘விடுபட்டுப்போய்’த்தான் நாம் நம் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறோம். சட்டம் மருத்துவம் அறிவியல் பொதுப்பணி என பெரும்பாலான தளங்களில் ஆளுமைகள் ஒரு தலைமுறைக்குள் மறக்கப்பட்டுவிடுகிறார்கள். அவர்களைப்பற்றி எழுதப்படுவது மிகக்குறைவு. எழுதினாலும் ஆர்வமான வாசிப்பு இங்கில்லை. அரசியல் சினிமா முகங்களே சூழலை ஆக்ரமித்துள்ளன

 

உதராணமாக 2000 முதல் தினத்தந்தி வரலாற்றுச்சுவடுகள் என்னும் நூலை தொடராக வெளியிட்டுத் தொகுத்தது. எடுத்துப்பாருங்கள், தமிழகவரலாறு என்பது 90 சதவீதம் சினிமா மற்றும் ஓரளவு அரசியல் மட்டுமே என்று தெரியும்.

 

ஜெ

 

 

ஜெமோ,

 

மீண்டுமொரு படபடப்பு தொற்றிக் கொண்டது.  இரண்டாவது முறையாக உங்களை நேரில் சந்திக்கப்போவதை நினைத்து. முதல் தடவை குமரகுருபனின் நினைவு விருது விழாவில். இப்போது உங்கள் ஓவிய (ஓவியமான அல்ல) நண்பர் சீனிவாச நடராஐனின் ‘அச்சப்பட தேவையில்லை’ நூல் வெளியீட்டு விழாவில். ஆனால் முதல்தடவை போல் எனது சொற்களை என் உலர்ந்து ஒட்டிய உதடுகளும் நாவுகளும் சிறை பிடிக்காது என்ற நம்பிக்கை இருந்தது.

 

அன்று அப்பாவின் திதி என்பதால், வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியிருந்தது. ஞாயிற்று கிழமைகளில் காலை 6.30 மணி என்பது எனக்கு நடுஜாமமே. ஒரு பெரிய கட்டைப் பையில் அரிசி, வாழைக்காய், எள், பூசணி, வாழையிலை மற்றும் இதர பொருட்களுடன், ‘நிலைப்பதும் கலைப்பதும்’ (விகடன் தடத்தில் வரும் நத்தையின் பாதை தொடர்) பற்றி என்ன எழுதுவதென்று யோசித்தவாறே வீட்டின் அருகிலுள்ள கோயிலுக்குள் நுழைந்தேன். வீர நாராயண பெருமாளுக்கு பூஜை செய்யும் ரவி குருக்கள் கொஞ்சம் இணக்கமானவர் என்பதால் நேரில் அவரிடம் சென்றேன். மார்கழி மாதமென்பதால் 8 மணிக்கெல்லாம் களைத்திருந்தார். 15 நிமிடத்தில் எனக்கும் சேர்த்து அவரே மந்திரங்கள் சொல்லி கொண்டு சென்ற பொருட்களை தானமாகப் பெற்றுக் கொண்டார்.

 

திரும்பி வந்து வீடு சேரும்போது, கைப்பேசி சிமிட்டிக் கொண்டிருந்தது. தொடு திரையை விலக்கி வாட்ஸ் அப்பில் நுழைந்த போது, “ஜெவை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் இன்று காலை 11 மணிக்கு சந்திக்கலாம்” என்றிருந்தார் காளிபிரசாத். உங்களோடு தனியாக சந்திக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு.கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் வாய் உலர்ந்து ஒட்ட ஆரம்பித்தது. மணி ஏற்கனவே 10.30. பேருந்து ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தால் மெட்ரோ ரயில்கள் நிறைந்து வழிவதாக செய்தி வேறு.  சூழலியலுக்கு இணக்கமான முறையில் பயணித்தால் கண்டிப்பாக 11 மணிக்குள் சின்னமலையிலிருந்து வடபழனியைச் சென்றடைய முடியாது. வழக்கமான ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு, மனைவியிடம்  2மணிக்குள் காகத்திற்கு சோறளிக்க வந்து விடுவேன் என்ற உறுதி அளித்து விட்டு சௌந்தர் குருஜியின் வீட்டை அடைந்தபோது மணி சற்றே பதினொன்றை தாண்டியிருந்தது. நல்லவேளையாக நீங்கள் இன்னும் வந்திருக்கவில்லை.

 

ராகவும், விலங்கியல் மருத்துவர் தங்கபாண்டியனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். தங்கபாண்டியனின் முகத்தில் இருந்த தீவிரத்தை நான் அப்போது உணரவில்லை. கலந்துரையாடலின் போது, வெண்முரசுக்கு விலங்கியல் முரசு என்று அவர் பெயர் வைக்க முனைந்தபோது தான் அதை உணர்ந்தேன்.

 

சிறிது நேரத்தில் வழக்கம் போல் ஒரு சிறு படை சூழ (மாரிராஜ்,யோகேஸ்வரன் மற்றும் சிலர் உட்பட)வந்தீர்கள். கச்சேரி ஆரம்பம். நான் இலகுவாகியிருந்தேன். ஆதலால் அனைவரும் இலகுவாயிருந்தது போல் தோன்றியது. குதிரையேற்றம் தெரிந்த அல்லது குதிரைகளிடம் பழகிய ஒருவரால் தான் வெண்முரசில் வருவது போல் குதிரைகளின் உடல்மொழியையும் உணர்வுகளையும்  சித்தரிக்க முடியும் என தங்கபாண்டியன் ஆரம்பித்த போது தான் அவர் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன். அதற்கு நீங்கள் அளித்த சுவராஸ்யமான பதில்கள் குதிரை ரேஸ், அவற்றின் உடலமைப்பு என நீண்டது. விஷ்ணுபுரத்தில் வரும் அஸ்வ சாஸ்திர மேதையான வீரநாராயணர் நினைவுக்கு வந்தார்.

 

மனிதர்களுடன் கூடவே இருக்கும் விலங்குகள் அவர்களின் உள்ளுணர்வை மிக துல்லியமாக பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டி, அதைத்தான் வெண்முரசிலும் சித்தரிக்கிறேன் என்றீர்கள். இதற்கு உதாரணமாக உங்கள் டோராவின் செய்கைகளை செய்து காண்பித்தது, அங்கிருந்த அனைவரையும் வெகுநேர சிரிப்பில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக வாயைக்கோணி நாக்கை வெளியே நீட்டியது டோராவே வெட்கப்பட்டிருக்கும். எனது 10 வயது மகளையும் அழைத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

 

அடுத்த அதிரடியாக இங்கு ஆளாத பரம்பரையென்று ஏதுமில்லையென சாதி என்ற சூடான தலைப்பை நோக்கி உரையாடல் நகர்ந்தது. ஒவ்வொரு சாதியிலும் ஒரு கால கட்டத்தில் ஒரு மன்னன் இருந்திருக்கிறான் என்று அனைத்து சாதி தலைவர்களின் வயிற்றிலடித்தீர்கள். அந்த காலத்தில் குலக்கலப்பு ஏற்பட்ட விதங்களை விலக்கிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது. அதிலும் தங்களை சாதுவாக காட்டி கொள்ள விரும்புவர்கள் தங்கள் சாதிக்குப்பின்னால் ‘பிள்ளை’ என சேர்த்துக் கொண்டதை ‘பிள்ளைகள் எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளை’ என்றதும் ஒரு குபீர் சிரிப்பு அறை முழுவதும். தங்களுடைய ‘இந்திய ஞானம்’ புத்தகத்தில்  படித்த  பல விஷயங்கள் நினைவுக்கு வந்து சென்றது. அப்போது மிக சகஜமாக இருந்த குலக்கலப்பை பேரரசுகள் தடுத்தி நிறுத்தி தங்கள் ராஜ்ஜியத்தை நிலை நாட்டிக் கொண்டது. இதையேத்தான் பிரிட்டஷாரும் பின்பற்றி தங்களை நிலைநாட்டிக் கொண்டார்கள். இன்றுவரை இது தொடர்கிறது. நிலைநிறுத்தப்பட்ட சாதி என்பது நாடாள்பவர்களின் சூழ்ச்சி என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது.

 

நேரம் செல்லச் செல்ல சௌந்தரும், காளிபிரசாத்தும் பரபரப்பாக ஆரம்பித்தார்கள். மதிய உணவு அங்கிருந்த அனைவருக்கும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்கள். வந்தாரை சோற்றால் அடிப்பதே அவர்கள் இயல்பு.

 

கொஞ்சம் சீரியஸாக தலைப்பு மலேசியத் தமிழர்கள் பக்கம் திரும்பியது. அங்குள்ள  சிலரின் இக்கட்டான் நிலைமை. அவர்களின் குற்றப்பின்புலம் என. அதிலும் சில கொலைகள் புரிந்து இன்று சமையலைத் தொழிலாளாக ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த இளைஞன் இனிமேல் கொலை எதுவும் செய்வாயா? என்ற கேள்விக்கு அளித்த அந்த பதில், அங்குள்ள அனைவருக்கும் அவர்களின் தாயை நினைவு படுத்தியிருக்கக் கூடும்.

“சமைச்சு போட்டுட்டேன்ல சார். இந்த கைய வச்சு இனிமே கொலை பண்ண முடியாது.” மிக நெகிழ்வான தருணம்.

 

மதிய உணவும் தயாராகி விட்டது. பாக்கெட்டுகளில் இருந்த சாம்பாரை பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்த காளியிடம் காக்கைக்கு நான் சோறளிக்க வேண்டியிருப்பதை சங்கடத்தோடு சொல்லிவிட்டு விடை பெற்றேன், மாலையில் சூறாவளியாய் தாக்கப் போகிறது உங்கள் உரை பற்றி அறியாமல்.

 

தமிழிலுள்ள இசை மற்றும் ஓவிய விமரிசன நூல்களின் போதாமையில் தொடங்கி, ஐரோப்பிய மறுமலர்ச்சியை நம் கலையில் காப்பியடிப்பதின் முட்டாள்த்தனம்; பகுத்தறிவென்றாலே கலைக்கெதிரானதாக இருக்கவேண்டும் என்ற போலி அறிவுஜீவிகளைச் சாடியது என நீண்ட அந்த பிரமாண்ட உரையை இக்கடிதத்திற்குள் நான் அடக்கிவிட விரும்பவில்லை. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவரையும் ஆட்கொண்டிருந்தது அந்த உரை.

 

உரை முடிந்து உங்களிடம் விடை பெற்றுச் செல்லலாம் என்று நெருங்கினேன். ம்ஹூம்…முடியவில்லை. உங்களைச் சுற்றி மொய்த்திருந்தார்கள். ரசிகர்களா…வாசகர்களா என்று தெரியவில்லை. பெரும்பாலும் இளையவர்களே. ஒருவழியாக அங்கிருந்து உங்களால் நகரமுடிந்தது.

 

எந்தவித பாவனையுமில்லாமல் என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள். இதற்கு முன்னால் ஒருதடவை தான் உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன். மிக பிரமிப்பாக இருந்தது. அடுத்தமுறை உங்களை சந்திக்கும் வரை இந்த பிரமிப்பு நீடிக்கும் என்றே எண்ணுகிறேன்.

 

அன்புடன்

முத்து

 

 

அன்புள்ள முத்து

 

மொத்தச் சந்திப்பிலும் கிட்டத்தட்ட ஒன்றுமே பேசாமல் இருந்துகொண்டிருந்தீர்கள். அடுத்த சந்திப்புகளில் பேசுவீர்கள் என நினைக்கிறேன்.

இத்தகைய உரையாடல்களில் பேசப்படுபவை பெரும்பாலும் மூளைத்தூண்டிகள் மட்டுமே. சீராக முழுமையாக எதுவும் முன்வைக்கபப்டுவதில்லை. ஆனால் பல விஷயங்கள் செவியில் விழுந்துகொண்டே இருக்கும். தொடர்ச்சியாக இருப்பதனால் அவை தனித்து எழுவதுமில்லை. ஆனால் எப்போதாவது ஒரு நூலை, ஒரு கருத்தை நாம் கேட்டால் நாம் முன்னர் பேசியவை வந்து உடன் இணைந்துகொண்டு வளரும்.

 

ஜெ

 

விடுபட்டவர்கள் -கடிதங்கள்

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33
அடுத்த கட்டுரைபத்து மலையாளக் கவிதைகள்