சிறுகதை விவாதம்- இரு கோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்

kar

 

சிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்புள்ள ஜெ,

இருகோப்பைகள் காதலின் வலிமையை நேரடியாகச் சொல்லும் கதை. மனைவி இறந்தபின் அந்த ஒருவாரம் மார்க்கின் கொந்தளிப்புகள் எதுவும் சொல்லப்படவில்லை. அந்த இறப்பில் இருந்து மீண்டு மிக துரிதமாக அவர் அமைதிகொள்வது மார்க் சோஃபியா இருவரிடையே இருந்த காதலின் ஆழத்தை காட்டுகிறது. காபியைப் போலவே நல்ல மணம் பரவும் காதல்.

எக்காலத்திலும் தனித்துவிட்டுப் பிரிய மாட்டேன் என்ற வாக்கின் செயல்வடிவமாக அந்த காலி இருக்கையின் முன் வைக்கப்பட்டுள்ள தேநீர் கோப்பை உள்ளது. அந்த இருகோப்பைகள் பிரிய இயலாது. மேலும் சுவரில் தொங்கும் மழைக்காதலன் குதிரையின் புகைப்படம் அந்தக் காதலர்களின் நினைவுச் சின்னமாக காட்டப்படுகிறது.

மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட கருதான். கூறல்முறை, நிகழ்வெளி, பாத்திரங்கள், சம்பவங்கள் என கதையின் கூறுகள் அனைத்தும் நாம் ஏற்கனவே நன்கு அறிந்தது. அது இந்தக் கதையின் பலவீனம் என்று நினைக்கிறேன். ஆதலால் இந்தக்கதையின் சிறப்பு அம்சம் இது என்று என் வாசிப்பில் எதையும் சுட்டிக்காட்டமுடியவில்லை.

கார்த்திக் சுப்ரமணியத்திற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா.

அன்புள்ள ஜெ

கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதையை சுவாரசியமாக வாசிக்க முடிந்தது. நீங்கள் எழுதும்போது ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள். சிறுகதையின் வடிவத்தைப்பற்றி மட்டும்தான் விவாதிக்கமுடியும். அதில்தான் முடிவில்லாது மேம்படுத்துவதை நீட்டிக்கொண்டுசெல்லமுடியும் என்று. ஆனால் இந்தக்கதை almost perfect ஆக உள்ளது. நல்ல கூர்மையான நடை. காட்சியையும் சித்திரங்களையும் துல்லியமாகச் சொல்வது. அந்த வீட்டையும் கதாபாத்திரங்களையும் ஜாஸ்தியாக சொல்லாமல் முழுசாகவே காட்டிவிட்டார். முந்தையகதைகளில் நான் சொன்ன உலகியல் செய்திகளை ஜாஸ்தியாகச் சொல்வது என்ற குறை எதுவும் இந்தக்கதையில் இல்லை. சொல்லப்போனால் வடிவரீதியாக முழுமையான கதை

 

ஆனால் கதை முடிந்தபின்னர் மேலும் ஒரு நிறைவில்லாமை இருந்தது. என்ன என்று யோசித்துப்பார்த்தேன். அந்தக் கணவனின் காதல் சிறப்பக சொல்லப்பட்டிருந்தது. அந்த இன்னொரு கோப்பை தேநீர் அங்கே இருக்கையில் அதைப்பார்க்கும்போது ஒரு சின்ன நெகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் உலகச்சிறுகதையின் வரிசையிலே இதேபோன்ற கதைகளெல்லாம் ஐம்பதுகளில் நிறையவே எழுதப்பட்டுவிட்டன என்ற எண்ணமும் வந்தது. ஒரு சின்ன emotion இருந்தால் போதும் கதைக்கு என்ற நிலை இன்றைக்குக் கிடையாது.கதையில் இன்னும் கூடுதலாக ஏதாவது தேவைப்படுகிறது. Spiritual  ஆக அல்லது poetical ஆ  அல்லதுphilosophical ஆக. அதுதான் இந்தக்கதையிலே குறைவுபடுகிறது. இன்னும்கூட என்று ஒரு கதை நினைக்கவைக்கக்கூடாது.

 

அதேபோல அந்த emotions கூட கொஞ்சம் சல்லிசானதுதான். மனைவி இறந்தால் கொஞ்சநாள் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். Say ஒரு இருபது ஆண்டுக்குப்பின்னாடியும் அவர் அப்படியே இருந்தார் என்றால்தான் அது மெய்யான காதல் இல்லையா?

 

ராமச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,
வணக்கம். கார்த்திக்கின் இரு கோப்பைகள் கதை வாசித்தேன்.
அகால வேளையில் மரணம் அடையும் பக்கத்துவீட்டு முதியவர். கதை சொல்லி அவரின் அழைப்பின் பேரில் போய் பார்த்து அதன் பின் அத்தம்பதியைப் பற்றி அறிந்துகொள்கிறார். கதையின் முக்கியமான நிகழ்வுகள் இவ்விரண்டும். ஒரு முதியவரின் மரணமும் அதன் பிண்ணனியாக நமக்குச் சொல்லப்படும் செய்திகளும். ஆஸ்திரேலியாவில் தங்க வேட்டைக்காக சீனர்கள் வந்தார்கள் என்பதும், இத்தாலியர்களால் விட்டோரியா காப்பி வகை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும். இதைப் போன்ற செய்திகள் ஒரு புனைவில் சுவாரசியம் சேர்ப்பவை. ஆனால் அதே சமயம் சம்வங்களும், செய்திகளும் மட்டுமே போதுமானவை இல்லை. கதையாக்கிவிடுவதில்லை. தனித்துவாழும் முதியவர்கள் சந்திக்கும் பிரச்சனையயோ, அயல் தேசத்திலிருந்து வந்து ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையோ இக்கதை எதையும் பேசவில்லை (ஒரு உதாரணத்திற்கு) அதற்கான விரிவையும் கொண்டிருக்கவில்லை. முடிவில் ஒரு சின்ன உணர்ச்சியை வாசிப்பவரிடம் கோரி முடிகிறது. சம்பவங்களைக் கோர்த்து கதையாக்கும் வித்தை இக்கதையில் கைகூடவில்லை.
ஒரு தகவலுக்காக: நானும் கார்த்திக்கும் தினமும் வாட்ஸப்பில் உரையாடும் நண்பர்கள். நேரில் சந்தித்துக்கொண்டு எங்கள் வாசிப்பை முன்னிறுத்தி உரையாடுபவர்கள். எதற்காக இதைச் சொல்கிறேனென்றால் போயாக் கதைக்கு நான் எழுதிய கடிதத்திற்கு வந்த எதிர்வினைகளுள் ஒன்றில் புதிய எழுத்தாளர்கள் என்றால் உடனே அறிவுரை சொல்லக் கிளம்பிவிடுகிறார்கள் என்று ஒருவர் எழுதியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில் எழுதியவர் யார் என்பது வாசகனுக்கு தேவையேயில்லாத விசயம். சரியோ, தவறோ மனதில் பட்டதைச் சொல்லவேண்டும். அவ்வளவே. ஆக நான் கார்த்திக்கிற்கு அறிவுரை எல்லாம் சொல்லவில்லை என்பதைச் சொல்லி முடிக்கிறேன்.
நன்றி :)
அன்புடன்,
சங்கர்
முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2