சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பிரபுவின் கதையைக் குறித்து,
சமகாலக் கலை வடிவத்திலிருந்தும் குடும்ப சூழலிலிருந்தும் என்றென்றைக்குமான ஒரு விஷயத்தை தொன்மத்தின் வழி சென்று சேர வாய்ப்பு கொண்ட கதை. படிக்கவே ஆனந்தமாக இருந்தது.
பிரகலாதன் எந்த உறுதிக்காக தந்தையை பலி கொடுத்தானோ அதற்கு நேர் எதிராக தன் விருப்பத்தினை [இந்தக் கதையில் அழகர்சாமிக்கு ஒரு காதலாக இருந்திருக்கலாம்] ஏற்க மறுத்த அப்பாவிற்கு எதிராக தன்னை பலி கொடுத்தவனாக எழுதி இருக்கலாம். அப்பொழுது இந்த நாடகம் இன்னமும் உக்கிரமாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் இரண்டு கதைகளிலும் (நேர் எதிர் திசைகளில்), நடுவே சிக்கி இருக்கும் “லீலாவதியின்” நிலையைப் பற்றிய நல்ல கதையாக இருந்திருக்கும்.
தஞ்சாவூரின் வளவளப்பே சிக்கல். எத்தனை அவசர செய்தியாக இருந்தாலும், வெத்தலையை தயார் செய்து போட்டு, ஊறி, பிறகுதான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். தந்தை-கணவன்-மகன் நடுவே உள்ள சிக்கல்தான் கதை என்றால் அதை நேராக நாடகத்தில் துவங்கி குடும்பத்தை நினைவு கூறுவதில் முடித்திருக்கலாம். ராமனாதன் குடும்ப விவரங்கள் அனைத்தும் வெளியே இருக்கின்றன. அது இழுத்து வரும் சாப்பாடு, காபி சமாச்சாரங்களும். உண்மையில் நாடகத்தின் தருணங்களை உணர்வாக ஆக்குவதில் சென்றிருக்க வேண்டும் கவனம். அதன் உச்சத்துக்கு இணையாக அழகர்சாமிக்கும் அவர் அப்பாவிற்குமான உறவின் சிக்கல்களும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அது எல்லா அப்பா மகன் உறவாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு எதற்கு ஹிரண்யகசிபு வரை போக வேண்டும்.
முக்கியமாக லீலாவதி என்ற பெயரை கதாசிரியரே போட்டுக் கொடுத்திருக்க வேண்டாம். பதினைந்து பக்கம் சுண்னாம்பு தடவி, காம்பு கிள்ளி, வெற்றிலை மடித்து தாம்பூலம் செய்வதைக் கண்ணில் காட்டி, கடைசியில் அவரே வாயில் போட்டுக் கொண்டு போய்விட்டார்.
மாத்யூ ஆர்னால்ட்
அன்புள்ள ஜெ
பிரபு மயிலாடுதுறை ஒரு தொடக்க எழுத்தாளர் என்று நினைக்கிறேன். புதிய கருவை எடுத்துக்கொண்டதிலும் அதை நம்பகமானச் சூழலில் எழுதியதிலும் கவர்கிறார். இந்தக்கதைக்கரு பலர் பலவகையிலும் எழுதியதுதான். ஆனால் முதல்பகுதிக்கும் இரண்டாம்பகுதிக்கும் இடையே ஓர்மை அமையவில்லை என்று நினைக்கிறேன். முதல்பகுதியில் எங்கே கதை நிகழும் என நினைக்கிறோமோ அதற்குச் சம்பந்தமில்லாமல் கதை போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு சலிப்பு உருவாகிறது. அதைக்கடந்து கதைக்குள் செல்வது கடினம்.
நாவல்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட விரிவான கதைக்கள அறிமுகமும் கதாபாத்திர அறிமுகமும் இருக்கலாம். சிறுகதைக்கெல்லாம் அதீதம். சிறுகதை நேரடியாகச் சிறுகதையிலெயே தொடங்கவேண்டும். மற்றதெல்லாம் கதையின் ஓட்டத்துக்குள் அதுவாகவே வந்து அமையவேண்டும். அது இந்தக்கதையின் குறை. மற்றபடி மித்துக்கும் யதார்த்ததுக்குமான ஊடாட்டம் கதையில் நன்றாக வந்துள்ளது. மித் என்பது சப்கான்சியஸ். யதார்த்தம் கான்சியஸ், இரண்டும் உறவாடுவது இக்கதையின் சிறப்பு எனநினைக்கிறேன். நான் நாடகம் போன்ற கலைகளை காணும்போதே இதைத்தான் நினைப்பேன்
சிவராமன்