சுசித்ரா எழுதிய சிறகதிர்வு
அன்புள்ள ஜெ
சுசித்ரா எழுதிய சிறகதிர்வு கதை நடையில் சிவசங்கரியை நினைவுபடுத்தியது. அது ஏன் என்று பார்த்தேன். நிகழ்காலத்திலேயே கதையைச் சொல்வது ஒரு காரணம் என தோன்றியது. அந்த நடை ஒரு சுயமான நடைக்கான முயற்சி என ஒருவர் எழுதியிருந்தார். எனக்கு அது ஆயாசமூட்டியது. ஏனென்றால் அது ஒரு நிகழ்காலத்தை உருவாக்கிவிடுகிறது. அது திரில்லர் கதைகளுக்குத்தான் சரியாக வரும் என நினைக்கிறேன்
மேலும் இந்தக்கதையில் அந்தப்பறவையின் இறப்புக்கும் அம்மாவுக்குமான உறவும் மயக்கமாகவே உள்ளது. அது ஒரு நல்ல உருவகமாக அமையவில்லை. பறவைபோல அம்மா இறந்தாள் என்று சொல்லவந்திருந்தால் அம்மாவை பறவையுடன் இன்னும் கொஞ்சம் இணைத்திருக்கலாம். பறவைகளின் இறப்பைப்பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.
அதோடு ஒரு லாஜிக்கலான கேள்வியும் வந்தபடியே இருந்தது. அதாவது மனிதர்கள் சாகாவரம் பெற்றுவிட்டார்கள். ஆனால் பறவை மிருகம் செடி கொடி பூச்சி எல்லாம் செத்துக்கொண்டுதானே இருக்கும். அதை ஒன்றும் செய்யமுடியாதே. அப்படியென்றால் சாவு ஒரு அன்றாடச் சம்பவம்தானே? நாம் சாகாமல் சுற்றிலும் சாவு நிகழ்ந்துகொண்டே இருக்கும்போது சாவு இன்னும் பயங்கரமாக இருக்குமா? அதன் அர்த்தமே மாறிவிடுமா? இதையெல்லாம் யோசிக்கத் தோன்றியது. அந்தப்பறவையின் சாவு ஏன் அவ்வளவு முக்கியமாக அமைந்தது என்பது கதைகுள் சொல்லப்படவில்லையே
சுதாகர்
***
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
சுசித்ராவின் ‘சிறகதிர்வு’ வாசித்தேன். கவிதை, பாடல்கள், படம் வரைதல் என தனக்கே உரித்தான கலை ரசனையும் நுண்ணுணர்வும் உள்ள தாய். அவ்வாறான நுண்ணுணர்வும் ரசனையும் இல்லாத அல்லது அவ்வாறு எதுவும் தன்னில் வளர்ந்து விடக்கூடாது என்று முனைந்து தடுத்துக் கொண்ட மகன். எனினும் அவளது பாதிப்பு அவனில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கவே செய்கிறது.
மரணத்தை வெல்லும் மருந்தொன்றை கண்டுபிடித்து உலகத்தின் விதி சமைத்தவன் ஆகிறான். அவளுக்கும் அதை வழங்க முற்பட அவள்மறுத்து விடுகிறாள். மரணமற்ற வாழ்வை விழைபவள் அல்ல அவள். உலகமே மதித்துப் போற்றும் ஒன்றை உருவாக்கி சாதித்தவன் என்றபோதும் அவள் முன்பு, அவள் உயர்வென தன்னகத்தே கொண்டவற்றின் முன்பு நிற்கும் போது தன்னிடம் ஒரு போதாமையை உணர்கிறான்.
கவிதையும் கலை ரசனையும் பயன் அற்றவை என்று நிறுவ முயல்கிறான். அவளோ அவனுடைய எந்த அத்துமீறலையும் “அப்படியா” என்று கேட்டு அவனை சிறுகுழந்தை என்றாக்கி கடப்பவள். தான் அறிந்தவற்றை, தன் நுண்ணுணர்வை, அதன் மதிப்பீடுகளை, அதன் உயர்வை ஒருபோதும் விலகுபவள் அல்ல. அவளே வெல்கிறாள்.
அவளது இறுதி நாட்களில் அவனை அறியாமலேயே அவளுக்கு பிடித்தமான ஒன்றை செய்கிறான். அவள் எழுதிய, அவள் ரசித்த கவிதை ஒன்றை மேசைமேல் வைத்திருக்கிறாள் அதை எடுத்து காகித கொக்கு செய்து அவளிடம் தருகிறான். அவள் மிகவும் நேசிக்கும் ஒன்றை நினைவூட்டி மகிழ்வளிப்பதாக அது அமைகிறது. அவள் அதை பரிசாக கொள்கிறாள், அவன் அவளை உணர்ந்து கொண்டான் என்று கொள்கிறாள். அவளுக்கு மிகுந்த மதிப்பளித்த ஒரு தருணமாக அமைந்து விடுகிறது. அவனது அன்பு என்று உருகி அவன் உச்சியில் முத்தமிட்டு நிறைவு கொள்கிறாள். இரண்டு நாட்கள் தன் விரல் இடுக்கில் வைத்திருந்து அவள் தன்னோடு அதை கொண்டு செல்கிறாள். உண்மையில் எதை மட்டுமே அப்பால் கொண்டு செல்ல முடியும் என்று அவள் கருதினாளோ அதையே கொண்டு செல்கிறாள்.
நுண்ணுணர்வை நுண்ணுணர்வால் மட்டுமே அறிதல் கூடும் என்று உணர்த்துகிறது கதை. ஐநூற்றி எழுபத்து எட்டு ஆண்டுகள் என்பது மிகஅதிகம். என்னதான் புகழ், பொருள், வரலாற்றின் வந்தனை என்றாலும் இத்தனை ஆண்டுகள் என்பது அவனை மூடன் என்றே நிறுவுகின்றது. மரணத்தை அஞ்சி நீண்ட ஆயுள், நீண்ட வாழ்வை அஞ்சி மிதமிஞ்சிய கேளிக்கைகள், ஆறுமாத தொடர் உறக்கம்-கனவு என்று அபத்தங்களை கண்டபின்னும் அவள் “உனக்கு இப்பப் புரியாது. போகப்போகப் புரிஞ்சுப்ப. போகப்போக” என்று சொல்வதை உணர்ந்துகொள்ள, வந்தடைய அவன் எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம்.
எனினும் பறவையினை புதைக்கும் போது “கைப்பிடி மண்ணை தங்கத்தூசைப்போல் பொழிகிறேன்” என்று அவன் சொல்வது தன் அபத்தத்தை முற்றும் உணர்ந்து விட்டான் என்றும் மரணம் ஒரு அருளாசி என்று உணர்கிறான் என்றும் காட்டுகிறது, இவ்வுலகமே ஒரு பெரும் பறவையின் சிலிர்க்கும் சிறகதிர்வில், அந்த இறகடி வெப்பத்தின் கருணையில் தான் உயிர்த்தழிவதாக” அவன் அன்னை சொல்லியது உண்மை என்று வழிபாட்டு மனநிலைக்கு வந்துவிடுகிறான்.
அன்புடன்
விக்ரம்
கோவை
***
ஜெ
சுசித்ராவின் சிறகதிர்வு ஒரு நல்ல முயற்சி. ஒரு மாடர்ன் கவித்துவத்துக்கான முயற்சி அதில் உள்ளது. இந்தியாவின் சிறுகதைகளில் அது மிகவும் அரிதானது. இங்கே சிறுகதை என்றாலே சில ஜெனெர்களுக்குள் அடங்கிவிடும். ஒன்று குடும்பச்சிக்கல்கள் மற்றும் உறவுச்சிக்கல்கள். இன்னொன்று, பாலியல் மீறல்கள் வன்முறைகள் ஆகியவற்றை அடித்தளவாழ்க்கை என்ற கோணத்தில் சித்திரிப்பது. அல்லது வறுமையான வாழ்க்கையைச் சொல்லும் முற்போக்குக் கதைகள். மாடர்ன் டேல்ஸ் எனப்படும் நவீனமான கவித்துவம் கொண்ட கதைகளை மிக அரிதாகவே காணமுடிகிறது. இது அந்தவகையான கதை. நிறைய ஸ்டக்சுரல் சிக்கல்கள் உள்ளன. டேல் என்பது ஒரு மேலோட்டமான எளிமையைக்கொண்டிருக்கவேண்டும். ஒரு பாட்டிக்கதைமாதிரியும் இருக்கவேண்டும். உர்சுலா லெ க்வின் எழுதியபலகதைகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும் தமிழுக்கு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
அரவிந்த்