வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 6

bl-e1513402911361அசலையும் தாரையும் அவைக்குள் நுழைந்தபோது மீண்டும் அவை கூடத்தொடங்கியிருந்தது. பெண்டிரவையில் அவர்கள் இருவர் மட்டுமே சென்றனர். அனைத்துப் பீடங்களும் ஒழிந்து கிடந்தன. அசலை அவற்றை நோக்கிவிட்டு “இந்த அவைக்கு சொல்லப்பட்ட மிக ஆழ்ந்த மறுதலிப்பு இது என எண்ணுகிறேன், இளையவளே. எவராவது இதை கேட்பாராயின் நன்று” என்றாள். தாரை எதுவும் சொல்லாமலிருக்கவே திரும்பி நோக்கி “என்ன செய்கிறாய்?” என்றாள். அவள் கையை ஆடைக்குள் ஒளிக்க “என்ன அது?” என்றாள். “அக்கார அப்பம்” என்றாள் தாரை.

சீற்றத்துடன் “அறிவிலியா நீ? அதை எடுத்துக்கொண்டு வந்தாயா? அப்பால் வீசு” என்றாள் அசலை. அதை தாரை அடுத்திருந்த படிக்கத்திற்குள் போட்டாள். “அதை கையில் எடுத்துக்கொண்டா அரசரவைக்குள் நுழைந்தாய்?” தாரை தலையாட்டினாள். அசலை மேலும் நினைவுகூர்ந்து “அங்கே பூசல் நிகழ்ந்தபோது எதையோ வாயருகே கொண்டுசென்றாயே, அது இதுதானா?” என்றாள். தாரை “ஆம்” என்றாள். அசலை நம்பமுடியாமல் சில கணங்கள் நோக்கிவிட்டு தலையை மெல்ல தட்டினாள்.

“என்னை எவரும் பார்க்கவில்லை” என மெல்லிய குரலில் தாரை சொன்னாள். “சரி” என்றாள் அசலை திரும்பாமல். “நான் ஆடைக்குள்ளும் கைக்குள்ளும்தான் வைத்திருந்தேன்…” அசலை சீற்றத்துடன் “சரியடி” என்றாள். தாரை “நான் திரும்பச்செல்கிறேன்” என்றாள். “ஏன்?” என்றாள் அசலை. “நீங்கள் என்னை வசைபாடுகிறீர்கள்.” அசலை புன்னகைத்து “சரி இல்லை, இங்கேயே இரு” என்றாள்.

தாரை சிரித்து அசலையின் தோளில் கைவைத்து “நான் அந்தப் பூசலை விரும்பினேன். உங்கள் துணைவர் அப்படியொரு சொல்லை அவரிடம் சொல்ல முடிந்ததே” என்றாள். அசலை “அது வீண்மொழி, வெறும் அச்சம்” என்றாள். “ஆனால் அவர் அரசரின் ஆடிப்பாவை. அவர் உரைத்தது அரசரின் அகத்தையே” என்றாள் தாரை. “ஆகவேதான் அவர் சினந்தோடிச் சென்றார்.” அசலை திரும்பி நோக்கி “மெய்” என்றாள். “அவையில் அவ்வச்சத்துக்கே அவர் எதிர்வினையாற்றுவார்…” என்றாள் தாரை. “எவ்வகையில்?” என்று அசலை கேட்டாள். “அதை சொல்லமுடியவில்லை” என்றாள் தாரை. “ஆம், மானுட இயல்பை அது வெளிப்பாடு கொள்ளும்வரை எவராலும் உணரமுடியாது” என்றாள் அசலை.

அவைக்குள் முக்கால்பங்கு குடிகள் வந்து அமர்வதற்குள்ளாகவே அரசர் அவைபுகுவதை நிமித்திகன் வந்து அறிவித்தான். சகுனி தன் ஏவலனுடன் புண்பட்ட காலை மெல்ல தூக்கி வைத்து அசைந்து நடந்துவந்தார். பீஷ்மர் தன் மாணவர் விஸ்வசேனரின் தோள்பற்றி நடந்து வந்து அவ்வறிவிப்பைக் கேட்டு புருவம் சுளித்து நோக்கினார். அவருக்குப் பின்னால் விரைந்து வந்த துரோணரும் கிருபரும் அவரைப் பணிந்து ஏதோ சொல்ல அவர் தலையசைத்தபடி தன் பீடத்தில் சென்றமர்ந்தார். விஸ்வசேனர் பீஷ்மரிடம் ஓரிரு சொற்கள் உரைத்தபின் பின்னால் சென்றமைந்தார்.

இளைய யாதவர் விகர்ணனுடன் இன்சொல்லாடியபடி அவைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தார். விகர்ணன் அவரிடம் ஓரிரு சொற்கள் பேசியபின் யுயுத்ஸுவை அணுகி ஏதோ சொல்லிவிட்டு கௌரவர் நிரைக்கு சென்றான். அங்கு சிலரே இருந்தனர். அவர்கள் அவனை நோக்காமல் இறுகிய கழுத்துடன் அமர்ந்திருந்தார்கள். கணிகர் தன் இருக்கையில் கண்களை மூடி சீரான மூச்சுடன் துயின்றுகொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து காலடிகளும் உலோக ஓசைகளும் எழுந்துகொண்டிருந்ததை அவர் அறியவேயில்லை.

கௌரவர்கள் சிறிய குழுக்களாக வந்து அமர்ந்துகொண்டிருக்கையிலேயே நிமித்திகன் சங்கூதியபடி அவைக்குள் நுழைந்து “அஸ்தினபுரியின் அரசர், குருகுலத்தோன்றல் துரியோதனர் அவைபுகுகிறார்!” என்று அறிவித்தான். அதைத் தொடர்ந்து துரியோதனன் கைகூப்பியபடி அவைக்குள் நுழைந்து அரியணை நோக்கி சென்றான். அனைத்து வாயில்களினூடாகவும் குடித்தலைவர்கள் முண்டியடித்து உள்ளே நுழைந்தார்கள். வாள்களும் பித்தளைக் குறடுகளும் முட்டிக்கொள்ளும் ஒலிகள் கேட்டன. ஒருவரை ஒருவர் அருகழைப்பதும் அமர்ந்து பெருமூச்சுவிடுவதுமாக அவர்களின் ஒலியால் அவை முழக்கம்கொண்டது.

மேலிருந்து துளி சொட்டிப் பரவி நிறைவதுபோல அவைப்பீடங்கள் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தன. விதுரர் கைகாட்ட நிமித்திகர் அவைமேடையில் எழுந்து “அவையீரே, இந்தப் பேரவை சிற்றிடைநேரத்திற்குப் பின் இதோ மீண்டும் கூடியிருக்கிறது. இங்கு உசாவப்பட்டவற்றை அனைவரும் எண்ணித்தேர்ந்திருப்பீர்கள் என எண்ணுகிறோம். மீண்டும் சொல்சூழட்டுமென கோருகிறோம். நன்று சூழ்க!” என வாழ்த்தி தலைவணங்கி பின்னகர்ந்தார்.

அவை மெல்ல மெல்ல அமைதியடைந்தது. சற்று ஓசையுடன் பேசிய பின்நிரையினரை மூத்தவர்கள் அடக்கினர். அனைவரும் துரியோதனன் ஏதோ சொல்லப்போகிறான் என எதிர்பார்த்தனர் என்று தோன்றியது. அசலை கூறியதை தாரை எண்ணிக்கொண்டாள், அவர்கள் பொறுப்பை பிறர்மேல் சுமத்த விழைந்தவர்களாகவே தென்பட்டனர். சென்றபோதிருந்த கிளர்ச்சிக்கு மாறாக அவர்களின் முகங்களில் குழப்பமும் சூழ்ச்சியும் தெரிவனவாக இருந்தன. எதையோ கரந்து வைத்திருக்கும் கண்கள். விலகிச்சென்றுவிட்டது போன்ற உடலசைவுகள்.

“அவையினரின் சொற்களை அரசர் எதிர்நோக்குகிறார்” என்று யுயுத்ஸு கூறினான். அவை மேலும் மேலும் அமைதிகொண்டபடியே சென்று வெறும் விழிநிரை என ஆகியது. துரியோதனன் கைகளைக் கட்டியபடி அவையை உறுத்துநோக்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தான். அவை அவனை நோக்கியபடி இன்மையென்றாகி இருந்தது. தாரை இளைய யாதவரை நோக்கினாள். அவர் புன்னகையுடன் வழக்கம்போல வேறெங்கோ நோக்கிக்கொண்டிருந்தார். அந்தப் புன்னகையும் விலக்கியநோக்கும் அப்போது அவளுக்கு சினமெழுப்பின. நோக்கை விலக்கியபோது தன் உடல் சற்று பதறிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

அவையின் அமைதி மெல்ல மெல்ல இறுகி தாளமுடியாததாக ஆகியது. அசலை “இவர்கள் ஒரு சொல்லும் உரைக்கப்போவதில்லை” என்றாள். யுயுத்ஸு “அவையின் எண்ணத்தை அரசர் அறியட்டும். அவைத்தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லலாம்” என்றான். அதன் பின்னரும் எவரும் எழவில்லை. ஓரிருவர் திரும்பி பிறரை நோக்கினர். நோக்கப்பட்ட சிலர் அசைவில்லாது அமர்ந்திருந்தனர். “இங்கு ஆசிரியர்களும் பிதாமகரும் காட்டிய நெறியை அவை ஏற்கின்றதா?” என்றார் விதுரர். அவையிலிருந்து எக்குரலும் எழவில்லை.

விதுரர் கனகரை நோக்க கனகர் “மாற்றுச்சொல் உள்ளவர்கள் எழுந்து அதை உரைக்கலாம்” என்றார். அவையின் அமைதியைக் கண்டபின் விதுரர் “மாற்றுச்சொல் இன்மை உடம்பாட்டை காட்டுகிறது. அரசருக்கு அவையின் செய்தி அதுவென்றால்…” என்று தொடங்க சகுனி “அமைச்சரே, ஒரு சொல்” என்றார். விதுரர் பெருமூச்சுடன் “ஆம், கூறுக!” என்றார். “இங்கு கணிகர் சொன்னதைப்பற்றியே நான் எண்ணிக்கொண்டிருந்தேன். பாதிநாடும் கருவூலச்செல்வப் பகிர்வும் நம்மையும் அவர்களையும் நிகரென்றாக்கும். இந்திரப்பிரஸ்தம் நம்மைவிட மேலானவர்களாக அவர்களை நிறுத்தும். இதை வணிகமும் அரசியலும் அறிந்தவர் எவரும் உணரமுடியும்” என்றார்.

விதுரர் தலையசைத்தார். “ஆனால் இங்கு நாம் அளிக்கும் வாக்குறுதி அவர்களுடன் ஒருபோதும் படைமுகம் கொள்ளமாட்டோம் என்று. அவர்கள் வளர்வதை நாம் நோக்கியிருப்பதாகவே அதற்கு பொருள். எப்போதும் எந்நிலையிலும் அவர்களை நாம் வெல்ல முயலமாட்டோம் என்பதற்குப் பொருள் அவையமர்ந்துள்ள அரசரோ அவருடைய கொடிவழியினரோ ஒருபோதும் பாரதவர்ஷத்தின் சத்ராஜித் என மும்முடி சூடி அமரமுடியாதென்பதே. அவ்வுரிமையை முற்றாகக் கைவிட அரசருக்கு உரிமை உள்ளது. ஆனால் அதை தன் கொடிவழியினர்மேல் சுமத்த அவருக்கு உரிமை உண்டா?”

சகுனி அவையை நோக்கி மேலும் உரத்த குரலில் “இன்று நாமிருக்கும் நிலை என்னவென்று அறிவோம். நம் அரசரைச் சூழ்ந்துள்ளனர் பாரதவர்ஷத்தின் பெருவீரர்கள். பீஷ்மர், துரோணர், கிருபர், சல்யர், கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், கிருதவர்மன், ருக்மி என ஒரு பெருநிரை. அத்தனை ஷத்ரிய மன்னர்களும் ஒருகுடைக்கீழ் திரண்டுள்ளனர். பாரதவர்ஷத்தின் நீண்ட வரலாற்றில் ஒரு தருணத்திலும் இத்தகைய ஒரு நிலை ஒருங்குகூடியதில்லை. அதை கைவிடும்படி நம்மிடம் சொல்கிறார்கள். இப்போதைக்கல்ல எப்போதைக்குமாக. நூறுநூறு தலைமுறைவரைக்கும்” என்றார்.

“எதன்பொருட்டு? போரில் அழிவு வரும் என்னும் ஐயத்திற்காக. களம்காணமுடியாத தந்தை ஒருவரின் கண்ணீரின்பொருட்டு. நாளை நம்மை எண்ணி நம் மைந்தர் கசப்புடன், இழிவுடன் சிரிக்கும் வழியை சொல்கிறார்கள்” என்று சகுனி தொடர்ந்தார். “ஆம், இது அஸ்தினபுரியின் வழி. இதில் நான் சொல்வதற்கேதுமில்லை. ஆனால் நாங்கள் பாலைக் காந்தாரர்கள். பசித்த ஓநாயின் வழிவந்தவர்கள், வைத்த இலக்கைவிட்டு விழிவிலக்குவதில்லை. செத்துக் கிடக்கும் ஓநாயின் விழிகளை நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள். அருகமர்ந்து அதன் இறுதி நோக்கின் கோணத்தில் உங்கள் விழிகளை வைத்து நோக்கினால் அது செல்லவிருந்த திசையும் எண்ணியிருந்த இரையும் உங்களுக்கும் தெரியும்.”

“சென்றுகொண்டிருக்கையிலேயே மடிபவன் என்றோ சென்றடைவான். நின்றுவிட்டவனுக்கு நின்றுவிட்டவைகளினாலான இருளுலகம் காத்திருக்கிறது. இருளென்பது என்ன? அவையமர்ந்த இளையோரே, இன்மையும் நிலைகொள்ளலுமே இருள். ஒளியென்பது அசைவும் விரைவுமென்று அறிக! நாம் எழுந்துவிட்டோம், பாரதவர்ஷத்தின்மேல் நம் வாள் ஓங்கப்பட்டுவிட்டது. அச்சத்தால், ஐயத்தால், மெல்லுணர்வுகளால் நாம் நின்றுவிடவேண்டுமென்று மூத்தோரும் ஆசிரியர்களும் தந்தையரும் சொல்வார்கள் என்றால் அதை கொள்க! பாலைநிலத்து ஓநாய் ஒருபோதும் பின்னடி வைக்காது.” சகுனி தலைவணங்கி அமர்ந்துகொண்டார்.

விதுரர் “உய்த்துச்சொல்லல்களுக்கு இங்கு பொருளில்லை. நாம் கொடிவழியினரை கட்டுப்படுத்தும் சொல் எதையும் இங்கு அளிக்கவில்லை” என்றார். “சரி, அப்படியென்றால் எதுவரை இந்த ஒப்புகை நிலைகொள்ளும் என்று சொல்க! நம் மைந்தர் போரிட்டுக்கொள்ளலாமா? வழிமைந்தர்?” என்றார் சகுனி. “அன்று இந்நகர் மேலும் பெரிதாகிவிட்டிருக்கும். நம் குடி பன்மடங்காகியிருக்கும். இப்பூசலை இன்றே அழிக்காமல் வளர்த்து கொடிவழியினருக்கு அளித்துச்செல்லலாம் என எண்ணுகிறீர்களா?”

விதுரர் தத்தளிப்புடன் இளைய யாதவரை நோக்கினார். அது பயனற்றது என உணர்ந்து விகர்ணனை நோக்கினார். விகர்ணன் எழுந்து “இது எங்கள் குடிப்போர், மாதுலரே. நீங்கள் உங்கள் வஞ்சத்திற்குக் களமென இதை காணவேண்டியதில்லை” என்றான். “நான் எவரையும் போருக்கு அறைகூவவில்லை… நான் இங்கிருப்பது என் அக்கையும் அரசரும் அளிக்கும் சொல்லின்படி. அவர்கள் சொன்னால் நாளையே என் படைகள் காந்தாரத்திற்கு கிளம்பும்” என்றார்.

“கிளம்புக, உங்களிடமிருந்து எழுந்தது இந்நகரை முழுக்காட்டியிருக்கும் நஞ்சு” என்றான் விகர்ணன். துச்சாதனன் எழுந்து “மூடா, அமர்க!” என்றான். “நான் சொல்வது…” என விகர்ணன் சொல்ல “இனி ஒரு சொல் எழுந்தால் உன் தலையை உடைப்பேன்” என்றான் துச்சாதனன். விகர்ணன் அமர்ந்து தலையை மறுப்பென ஆட்டினான். துச்சாதனன் “இந்த அவை அறிக! எங்கள் குலம் மாதுலருக்கு ஆட்பட்டது. அவர் குருதியே நாங்கள்” என்றான். மீண்டும் அவையில் அமைதி உருவானது.

அசலை “மீள மீள இந்த ஒற்றை வினாவிலேயே நிறுத்தியிருப்பார்கள். வேறெந்த வினாவும் எழவிடாது அடிப்பார்கள்” என்றாள். விதுரர் “அவை எடுக்கும் முடிவென்ன?” என்றார். அவையை நோக்கியபின் “ஒன்று செய்யலாம், இப்போது அவையை முறிப்போம். மீண்டும் நாளைமறுநாள் இந்த அவை கூடட்டும். அப்போது இளைய யாதவருக்குரிய மறுமொழியை அவையிலிருந்து எடுத்து அரசர் அளிக்கட்டும்” என்றார். யுயுத்ஸு “ஆம், அதுவே நன்று” என்றான். விதுரர் “அரசருக்கு மறுசொல் இல்லையென்றால் அவ்வாறே அறிவிப்போம்” என்றார். அவையினர் அனைவருமே அச்சொற்களால் ஆறுதல்கொண்டவர்களாக தெரிந்தனர். பறவைகள் எழுந்தபின் கிளை என இயல்பான உடலசைவுகளுடன் அவர்கள் எளிதானமை உள்ளங்கள் கிளம்பிவிட்டன என்று காட்டியது.

துரியோதனன் கைகளைத் தூக்கியபோது தாரை அதைத்தான் அவள் எதிர்பார்த்திருந்ததாக உணர்ந்தாள். அவை ஆழ்ந்த உளக்கிளர்ச்சியால் ஒளிகொண்ட விழிகளுடன் அண்ணாந்து நோக்கியது. அக்கணம் போருக்கு அவர் அறைகூவினால் படைக்கலங்களை உருவி வெற்றிவேல் வீரவேல் என்று கூவி எழுவார்கள் என தாரை எண்ணிக்கொண்டாள். துரியோதனன் “கணிகரே, நான் தங்களிடம் கேட்பது ஒரு வினாவே. நான் திருதராஷ்டிரரின் ஆணையை மீறும் வகை என்ன?” என்றான். கணிகர் திகைத்தவர்போல சகுனியை நோக்கிவிட்டு மெல்ல புன்னகைத்து “பல்லாண்டுகளுக்கு முன்னரே அதை சொன்னேன், சென்று உங்கள் தந்தைக்கு முன் நின்று நெஞ்சிலறைந்து அறைகூவுக. அவரை தனிப்போருக்கு அழைத்து கொன்று குருதி சூடுக! மணிமுடியும் குலமூப்பும் உங்களுக்குரியவையென்றாகும். லஹிமாதேவியின் நெறிநூல் காட்டும் வழி இது. மண்ணிலுள்ள அனைத்து நெறிகளிலும் தொன்மையானது. விலங்குகளையும் ஆள்வது” என்றார்.

துரியோதனன் “அது நடவாது. இன்றும் நான் அவருடன் அரைநாழிகைகூட களம்நிற்க முடியாது” என்றான். “ஆனால் அன்று அன்னை என எனக்கு ஆணையிட்டவர் இன்று வெறும் துணைவி என்று தன்னை வரையறுத்துரைத்து அவைநீங்கிவிட்டிருக்கிறார். இனி என்னை எதுவும் கட்டுப்படுத்தாது.” அவன் கைகள் அரியணையின் கைப்பிடியைப் பற்றி உருட்டியபோது தோள்தசைகள் எழுந்தமைந்தன. “நான் சாவதற்காக கோரவில்லை, வெல்வதற்காக உன்னுகிறேன். அதற்கு ஷத்ரியர் அவையை நிறைவுசெய்தாகவும் வேண்டும். பறைக, வேதம் வகுத்த நெறிப்படி நான் திருதராஷ்டிரரை தந்தையல்ல என்று உதற வழியேதுமுள்ளதா?”

கணிகர் மெல்ல எழுந்து அமர்ந்து வாயை இருமுறை சப்புகொட்டி “வேதம் ஊருணி. ஆகவே அணுகுவதும் அகல்வதுமான ஓராயிரம் பாதைகளின் நடுப்புள்ளி அது. ஆனால் அந்நெறிகளை தாங்கள் கடைப்பிடிக்க வேண்டாமென்றே சொல்வேன்” என்றார். “சொல்க, என்ன வழி?” என்றான் துரியோதனன். “அவ்வழியை நான் பரிந்துரைக்கமாட்டேன். துறப்பதை மானுடர் செய்யலாகாது. ஏனென்றால் துறக்கவே வேதநெறி வழியுரைக்கிறது. அந்நெறிப்படி துறந்தபின் உளம் மாறி ஏற்க அது வழிகாட்டவில்லை” என்றார். கணிகர் துயின்று எழுந்தமையால் அவர் கண்களின் விளிம்புகளில் வெண்கோழைத் துளி அமைந்திருந்தது. அவர் அகிபீனா நுகர்ந்திருக்கலாமென்று தாரை எண்ணினாள்.

துரியோதனன் “முடிவை நான் எடுக்கிறேன், வழிகளை மட்டும் கூறுக!” என்றான். அவன் உன்னுவதை உணர்ந்துகொண்ட விதுரர் கைநீட்டி பதறிய குரலில் “அரசே, வேண்டாம். இது தீராப் பழி சேர்ப்பது. தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் ஒவ்வாதது” என்றார். விகர்ணன் “என்ன வினவுகிறீர்கள், மூத்தவரே? எண்ணித்தான் பேசுகிறீர்களா?” என்றான். துச்சாதனன் “அவையில் அரசரை மறித்துப்பேச எவருக்கும் இடமில்லை. அமர்க!” என்றான். விதுரர் “பிதாமகரே…” என்றார். பீஷ்மர் வெறுமனே நோக்கி அமர்ந்திருக்க துரோணர் “அவர் தன் வினாவை முன்னெடுக்கட்டும். அவரை தடுக்கவேண்டியதில்லை” என்றார். விதுரர் “தந்தை மட்டுமல்ல அவர். இந்நகரின் நல்லறத்தெய்வங்களின் மானுட வடிவம். ஆயிரமாண்டுகளுக்கொருமுறையே அத்தகைய பிரஜாபதிகள் மண்ணிலெழுகிறார்கள்” என்றார்.

கிருபர் “அவர் வினாவை நாம் தடுக்கவேண்டியதில்லை, விதுரரே” என்றார். சகுனி “நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள், விதுரரே? அல்லது எவருக்காக பணிபுரிகிறீர்கள்?” என்றார். துரியோதனன் அச்சொற்கள் எதையும் கேட்காதவன்போல “சொல்லுங்கள் கணிகரே, எப்போது ஒருவன் தன் தந்தையை துறக்க வேதம் வழிகாட்டுகிறது?” என்றான். கணிகர் வாயின் மூலைகளை மேலாடையால் துடைத்தபடி “அரசே, ஐம்பெரும்பழிகளுமே மானுடரை குலநீக்கமும் குடிவிலக்கும் செய்ய போதுமானவை. ஆனால் தொல்நெறிகள் ஐம்பெரும்பழிகளுமே அரசருக்குப் பழியல்ல என்று கூறுகின்றன” என்றார்.

“தங்கள் தந்தை அரசகுடியினர், பேரரசர் என இன்றும் அவைமுதன்மை கொண்டவர். அரசனை ஒறுக்கவும் அகற்றவும் வேறு ஐந்து குற்றங்களே கூறப்படுகின்றன. தெய்வப்பழி கொள்ளல், வேதப்பழி கொள்ளல், குலவஞ்சம் இழைத்தல், குடிகளை அழித்தல், மைந்தரை ஒறுத்தல். ஐந்தில் எவற்றை இழைத்திருந்தாலும் அவரை அக்குலம் விலக்கலாம். குடிமூத்தோர் அகற்றலாம். குடியும் குலமும் ஒருவரை விலக்கியதென்றால் துணைவியும் மைந்தரும் அவரை விலக்குவது ஏற்கப்படுவதே.”

“இவ்வைந்தில் எப்பிழையும் ஆற்றாத தந்தையை மைந்தன் துறக்கலாகுமா?” என்றான் துரியோதனன். “ஆம், அதற்கும் நெறியுள்ளது. ஐந்து நிலைகளில் ஒருவன் தந்தையை துறக்கலாம். துறவுபூண்டு கானேகும்போது, ஒற்றைப்பெருந்தெய்வத்திற்கு தன்னை முழுதளித்து பெருநோன்பு கொள்கையில், பிறிதொரு குடிக்கு தன்னை மைந்தன் என அளிக்கையில், குலத்தின்பொருட்டு தற்பலியளித்து மாள்கையில், அரக்கரிடமோ நிஷாதரிடமோ சிக்கி மாண்பிலா இறப்புக்குச் செல்கையில் என அவை வகுக்கப்பட்டுள்ளன” என்றார் கணிகர்.

“அரசே, தந்தைக்கு நீத்தார்கடன் செய்யும் பொறுப்பைத் துறப்பதற்கும், தந்தையின் ஆணையால் நோன்பு குறைவுபடாமலிருக்கவும், தன்னை ஏற்ற குடியிலிருந்து பிறழ்வு நிகழாதிருக்கும்பொருட்டும், தந்தை தனக்கு நீர்க்கடன் செய்யாதொழியும்பொருட்டும், தந்தைக்கு பழிவந்து சூழாமலிருக்கும்பொருட்டும் அவன் அதை செய்யலாம்” என்று கணிகர் தொடர்ந்தார். “அதர்வவேத நெறிகளின்படி அழியாச் சொல் ஒலிக்க அனலுக்கு அவியிட்டு அதை இயற்றுவது ஒரு வழி. புல்லாழி கையிலணிந்து நீராலோ குருதியாலோ மும்முறை விரலுதறி அகல்க அகல்க அகல்க என்று கூறி முற்றறுத்துச் செல்வது பிறிதொரு வழி. இவை ஒவ்வொன்றையும் இயற்றியவர் இப்புவியில் பலர் உண்டு. எல்லா வழிகளும் வேதம் நோக்கியவையே என்று அறிக!” என்று கணிகர் சொன்னார்.

துரியோதனன் தன் கைகளால் இருக்கையின் பிடியை இறுகப்பற்றியபடி நெற்றிநரம்புகள் புடைத்து எழ பற்கள் கிட்டித்ததுபோன்ற குரலில் “இவற்றில் இரண்டாவது வழியை விளக்குக!” என்றான். கணிகர் வெண்பற்கள் தெரிய சிரித்து “அரசே, தன்னையன்றி பிறிதை தன் அடியான் ஏற்க ஒப்பாத கொடுந்தெய்வங்கள் பல உள்ளன. முற்றொப்புதலன்றி அவற்றை அணுக பிறிதொரு வழியில்லை. சிம்மர், ருத்ரர், பைரவர், பத்ரர், யமன், கங்காளி, மூத்தாள், வராகி, அறுதலையாள், சாமுண்டி, சண்டி, கலி என்னும் பன்னிரு தெய்வங்களும் பிற எண்ணம் எழுவதை விரும்பாதவர்கள் என்பது மரபு. தலையறுத்துத் தரக் கோரும் தெய்வங்கள் உண்டு. தந்தையையும் மைந்தரையும் குருதிப்பலி கொடுக்க ஆணையிடும் தெய்வங்களும் உண்டு” என்றார்.

“அத்தெய்வங்களை அடைய எண்ணுபவன் தன் பிற பற்றுகள், உணர்வுகள், விருப்புகள் அனைத்தையும் முற்றறுக்கவேண்டும். வஞ்சங்கள், எண்ணங்கள், வெறுப்புகள் அனைத்தையும் அகற்றிவிடவேண்டும். இப்புவியில் உறவென்றும் கடன் என்றும் அறமென்றும் நன்மை என்றும் புகழென்றும் ஆகி கவர்ந்திழுக்கும் எதற்கும் அவன் ஆட்படலாகாது. இழிவென்றும் பழியென்றும் துயரென்றும் அழிவென்றும் ஆகி அச்சுறுத்தும் எதற்கும் உளம் கொடுக்கலாகாது” என்றார் கணிகர்.

“ஆகவே அவர்கள் மலத்தை உண்பதுண்டு. பிணத்தைப் புணர்வதுண்டு. எரியில் அமர்வதுண்டு. ஊன்மட்கும்வரை உண்ணாமல் அமைவதுண்டு. கொடுநோன்புகள் ஒவ்வொன்றும் அத்தெய்வங்களுக்குமுன் தன்னை காட்டுவதேயாகும். அகன்றிருந்து விழியொளிர அவை நோக்கிக்கொண்டிருக்கின்றன. நோன்பு முழுத்தவன் அத்தெய்வத்திற்கு நிகரானவன் ஆகிறான். எழுந்து வந்து அவை அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொள்கின்றன. விழைவதை அருள்கின்றன.”

நடுங்கியமைந்திருந்த அவையை புன்னகையுடன் விழியோட்டி நோக்கி கணிகர் தொடர்ந்தார் “அந்நோன்பு கொண்டவர்கள் தங்கள் முதற்தெய்வத்தின் முன்னிலையில் நீராலோ குருதியாலோ உறுதிபூண்டு உறவுகளை உதறிச்செல்வார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதற்குரிய சடங்குகள் உள்ளன. அவ்வாறு தன்னை அளித்தவன் அணுவிடை நோன்பு தவறினாலும் அத்தெய்வம் அவனை அறைந்து சிதறடிக்கும். மறுகரை இல்லா இருளுலகுக்கு இட்டுச்செல்லும்.”

“அரசே, மீட்பின்மை என்னும் பெருந்துயரில் புழுக்களெனத் துழாவி உழலும் பலகோடி ஆத்மாக்களால் ஆனது அப்பெருநரகு என்பார்கள். அதை மகாதாமஸம் என்று நூல்கள் வகுக்கின்றன. தான் என்று தருக்கி தன்னால் விழைவு பெருக்கி இயலுமென்று மயங்கி ஊழின் ஒருகணத்தில் எழுந்து அந்நோன்பை கொள்கிறார்கள் மானுடர். வென்றவர்கள் உண்டு, அவர்கள் அத்தெய்வங்களால் இப்புவியை முழுதாளவும் விண்ணில் அழிவிலாது திகழவும் செலுத்தப்படுகிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. உதிர்பவர்களே பெரும்பாலானவர்கள்.”

“அவர்களின் கதைகளை அறியாதவர்கள் இங்கில்லை. ஆயினும் அத்தெய்வங்களை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறார்கள். ஆழம் பெருங்கவர்ச்சி கொண்டது. அடியிலி முடிவிலாது ஈர்ப்பது. அக்கொடுந்தெய்வங்கள் கணந்தோறும் நிழல்பெருக்கும் ஆற்றல் கொண்டவை. அந்நிழல்கள் ஒவ்வொன்றும் அத்தெய்வங்களின் படைக்கணங்கள். ஒவ்வொருவரிலும் எழுந்து என்னால் இயலும் ஏனென்றால் நான் பிறிதொருவன் என்று நம்பவைக்கின்றன அவை. அவ்வாணவத்தால் தூண்டிலிட்டு அவனை இழுத்துச்சென்று தங்கள் தலைத்தெய்வத்தின் காலடியில் வீழ்த்துகின்றன.”

“அரசே, அறிக! ஆகவேதான் நிழல் நோக்காதே என்று மைந்தரிடம் சொல்லி வளர்க்கிறார்கள் நம் அன்னையர். நிழல் கண்டவன் தன் மெய்யுருவுக்கு மீளவியலாது” என்று சொல்லி கைகூப்பி மெல்ல அமைந்தார் கணிகர். இரு விழிகளும் சரிந்து, இடக்கை மீசையை நீவிக்கொண்டிருக்க துரியோதனன் தன்னுள் அமைந்து அசைவிழந்திருந்தான். அவனை நோக்கியபடி அவை உறைந்திருந்தது. விழிநீர் வழிந்து பளபளத்த கன்னங்களுடன் விதுரர் அறியாது நெஞ்சில் கூப்பியமைந்த கைகளுடன் அமர்ந்திருந்தார்.

தாரை இளைய யாதவரை நோக்க அஞ்சினாள். அறியாத கொடுந்தெய்வமொன்று அங்கே அமர்ந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. அவள் விழிதிருப்பியபோது துரியோதனனுக்குப் பின்னால் எழுந்த பெருநிழலை கண்டாள். மூச்சொலியுடன் அசலையின் கைகளை பற்றிக்கொண்டாள். “என்னடி?” என்று சலிப்போசையுடன் அசலை கேட்டாள். “அங்கே” என்றாள் தாரை. “என்ன?” என்றாள் அசலை. தாரை கண்களை மூடிக்கொண்டாள்.

விதுரர் எழுந்து நடுங்கும் குரலில் “ஆனால் இந்த நிலத்தின் அரசர் இன்னும்கூட திருதராஷ்டிரரே, தந்தையை துறப்போர் தன் முடியையும் துறக்கவேண்டியிருக்கும்” என்றார். சகுனி “அல்ல, அவருக்கும் அவர் தந்தைக்கும் முடியளிப்பது இக்குடியவை. அன்று முடிகொண்டிருந்தவர் திருதராஷ்டிரர், அவர் மைந்தர் என்று கோலேந்தியிருந்தார் துரியோதனர். இன்று அவர் அஸ்தினபுரியின் முடிசூடி அமர்ந்திருக்கிறார். அவரை வென்று முடிகோருபவர்கள் களம் வந்து நிற்கவேண்டும். இக்குடியவையை வென்றமையவேண்டும்” என்றார். விதுரரின் கைகள் நெஞ்சில் இணைந்து அமைந்து நடுங்கின. கால் தளர்ந்து அவர் இருக்கையிலமர்ந்தார்.

துரியோதனன் எழுந்து ஓங்கி அவைநிறைத்த குரலில் “அவையோர் அறிக! மூத்தோரும் ஆசிரியரும் அறிக! இதோ அறிவிக்கிறேன், என்னை என் தெய்வத்திற்கு முற்றளிக்கவிருக்கிறேன். இனி நான் கலிதேவனுக்கு மட்டுமே ஆட்பட்டவன். எந்தையை என் தெய்வத்தின்பொருட்டு விலக்குகிறேன். ஆகவே அவருடைய ஆணையோ கண்ணீரோ என்னை இனி ஆள இயலாது” என்றான். இரு கைகளையும் இரப்பவர்போல நீட்டி விதுரர் கண்ணீர்விட்டார். விகர்ணன் திகைத்து எழுந்து நின்றான். ஆனால் அவையினர் விழியசையாமல் அமர்ந்திருந்தனர்.

“அரசன் என்று இனி இங்கிருந்து நான் ஆள்வது என் தெய்வத்தின்பொருட்டே. இந்நாடும் குலமும் என் தெய்வத்திற்குரியவை என்று அறிவிக்கிறேன். இந்த அவை அதை ஏற்குமெனில் இக்கோலையும் முடியையும் ஏந்துகிறேன். என் இளையோர் உடனிருப்பார் என்றால் அவர்களையும் என் தெய்வத்திற்கே ஆட்படுத்துகிறேன். அவையும் உடன்பிறந்தாரும் என்னை மறுதலிப்பார்களேயானால் இங்கிருந்தே இறங்கி நடந்து என் தெய்வத்திடம் சென்று சேர்கிறேன். ஆணை!” என்றான்.

அவையிலிருந்த முதிய குடித்தலைவர் ஒருவர் வெறியாட்டு கொண்டவர்போல் எழுந்து இரு கைகளையும் விரித்து உரத்த குரலில் “எங்கள் குடித்தெய்வம் நீங்களே. உங்கள் சொற்களே எங்களுக்கு வேதம். எந்தையே! அரசே!” என்று கூவினார். அவையிலிருந்தவர்கள் அனைவரும் அலைசுருள்வதுபோல எழுந்து கைகளையும் கோல்களையும் தூக்கி ஆட்டி “துரியோதனர் வெல்க! கலிமைந்தர் வெல்க! அஸ்தினபுரி வெல்க!” என்று கூவினர். “வெல்க கலி! வெல்க கரிவடிவோன்! வெல்க இருளுருவன்!” என்று ஒருவர் ஆர்ப்பரிக்க அனைவரும் இணைந்து முழங்கினர். வெறிகொண்ட முகங்கள். சீறுவனபோல திறந்த வாய்கள். நோக்கிழந்து வெறிப்புகொண்ட விழிகள்.

தாரை நடுங்கிக்கொண்டிருந்தாள். அசலையின் தோளுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள். துரியோதனன் கையசைக்க ஓசைகள் அணைந்தன. “கேளுங்கள் இளைய யாதவரே, கலியமர்ந்த தலையுடன் இவ்வரியணையில் இருந்து இதோ சொல்கிறேன். இந்த அஸ்தினபுரி எனக்குரியது. இதன் ஒவ்வொரு பருமணலும், ஒவ்வொரு துளிநீரும், ஒவ்வொரு உயிரும் என் தலைவனின் உடைமை. இதில் எவருக்கும் பங்களிக்க இயலாது. இங்கிருந்து எழும் பெருங்காகத்தின் சிறகுகள். இந்த பாரதவர்ஷமே என்னுடையது. இவ்விரிநிலத்தில் ஒவ்வொன்றும் என் தலைவனுக்குரியது. ஆம், இதுவே என் ஆணை!”

மீண்டும் வெறிகொண்டு கூவத் தொடங்கியது அவை. தலைப்பாகைகளை எடுத்து வீசி கோல்களை வீசிப்பற்றி கைவீசி எம்பிக்குதித்து கூச்சலிட்டனர். தாரையின் தலைக்குள் வீணைக்குடம் என ரீங்காரம் நிரம்பியது. இடமும் காலமும் மறைந்தன. அவள் தோளைப்பற்றி “எழுக… செல்வோம்!” என்றாள் அசலை. அவள் அசலையின் வலுவான கைகளால் தூக்கப்பட்டு அவள் உடலுடன் இணைந்து மெல்ல நடந்தாள். மறுதோளை சேடி பற்றிக்கொண்டாள். குரல்கள் உடலைத் தொடமுடியுமென்று உணர்ந்தாள். மெல்லிய இறகுத் தொடுகை. கருமையின் தொடுகை, காகச்சிறகுகள்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : ஞாநி
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம்- இரு கோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்