சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5

wpid-photo-1.jpg

.

பேசும் பூனை

அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு,

 

 

இது வரை ஆயிரம் முறை எழுத ஆரம்பித்து முடிக்காத என்னை “பேசும் பூனை” பேச வைத்திருக்கிறது.நன்றி.

சமீபத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சிறுகதைகளில்  ஒன்று பேசும் பூனை.

 

 

அதன் பேசும் பொருள் என் மனதிற்கு மிக அணுக்கமான ஒன்று பெண்ணின் மன ஆழத்திற்குள் உறைந்திருக்கும் அடர்த்தியான, குளிர்ந்த தனிமையை , தொடுகின்ற, நலுங்க வைக்கின்ற எதுவுமே அவளுக்கு அவஸ்தைதான், வேதனைதான், இடர்ப்பாடுதான், அசௌகர்யம்தான். அதை ஒரு ஆண்  புரிந்து கொண்டு எழுதும்போது அடடா என்று ஒரு ஆச்சர்யம், அப்பாடா என்று ஒரு ஆசுவாசம்.அம்மாடி என்று கண்ணோர கசிவு! Ofcourse எழுத்தாளன், காலம் , இடம், வெளி எல்லாவற்றையும் கடந்தவன் என்பது போல பால்களையும் கடந்தவன்தான். பெண்ணின் மனதை அவள் போலவே அவனும் அறிகிறான் எனும்பொழுது ஜன்னலோரத்தில்  எதிர்பாராமல் சட்டென்று விரிகிற பூவாய் ஒரு சந்தோஷம். அதை தி.ஜா தந்திருக்கிறார்,  ஜெ மோ நீங்களும் தந்திருக்கறீர்கள், இப்போது சுனீல் கிருஷ்ணன்.

 

 

சில மாதங்களுக்கு முன்னால் என் தோழி ஒருத்தி பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னாள்.அவள் கணவர் வெளியூரில் ஏழு, எட்டு வருடங்கள் வேலைபார்த்து விட்டு அப்போதுதான் அங்கு வேலை மாற்றல் கிடைத்து வந்திருந்தார்.”இத்தனை நாளா ஜாலியா  தனியா இருந்தேன், இப்போ இவர் வந்து என் ரூமை ஷேர் பண்ணிண்டு, என் பாத் ரூமை யூஸ் பண்ணிண்டு இருக்கறது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு!” இத்தனைக்கும் அவர்கள் ஒருவர் மீது மற்றவர் ரொம்ப பிரியமான தம்பதிகள். அவள்மேல் அவருக்கு உயிர். அவளுக்கும் அப்படியே.

 

 

அவள் என்னிடம் உதடுகள் சிரிக்க, கண்கள் கலங்க  கேட்டாள்”உனக்கு புரியறதா மாலதி?” நான் புரிகிறது என்றேன்.

பெண்ணுக்கு மெய்யாக இருக்கிற அவள் தனிமை மீது அத்து மீறுகிற உண்மையும் பிடிப்பதில்லை , அதிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க உதவுகிற மெய் நிகர்சனமும் சலித்து விடுகிறது. அது குழந்தையின் அழுகையை கண நேரம் நிறுத்துகிற கிலுகிலுப்பைதான். பின் அவள் உண்மையில் விரும்புவதுதான் என்ன?million dollar question?இதைத்தான் அழகிய எதார்த்த நடையில் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் சுனீல்.

 

 

எனக்குத் தோன்றுவது, பெண் ஆயிரக்கணக்கான கதவுகளும் , பல்லாயிரம் ஜன்னல்களும் உள்ள அரண்மனையில் தன் உள்ளே வாழ்கிறாள். நினைக்கும் பொழுது ஆணை வாசலில் நிறுத்தி ஒவ்வொரு கதவாக அடைத்துக் கொண்டு உள்ளே போய் விடுவாள். ஆண்தான் பாவம், கூறையும் , சுவரும் இல்லாத வெற்றிடத்தில் கையது கொண்டு மெய்யது பொத்தி அமர்ந்திருக்கிறான் பாவம்!

 

 

அன்புடன்

மாலதி சிவா

 

 

அன்புள்ள ஜெ

 

பேசும்பூனை சிறுகதைதான் இந்தவரிசையில் வந்த நான்கு கதைகளிலும் சிறந்தது என நினைக்கிறேன். இந்தக்கதையிலுள்ள சிறப்பு இதிலுள்ள புதுமைதான். தமிழ்ச்சிறுகதைகளுக்குச் சிலமரபுகள் உண்டு. ஒன்று அவை அசோகமித்திரன் கதைகளைப்போல இருக்கும். அல்லது ஏதாவது மேலைநாட்டுக்கதையின் வடிவத்தை நகலமைத்து செயற்கையாக இருக்கும். அல்லது குமுதவிகடகுங்குமகல்கி [நன்றி சுஜாதா] பாணியில் இருக்கும். இவை இல்லாத ஒருபாணியில் இருந்தது. அந்த உரையாடல் [பூனை தேன்மொழி] நகுலனின் நினைவுப்பாதையையும் சம்பத்தின் இடைவெளியையும் ஞாபகமூட்டியது.

 

அச்சிறுகதையிலிருக்கும் குறை என்னவென்றால் ஃப்ளோ இல்லை என்பதுதான். சரளமாகவும் எளிமையாகவும் மொழி ஒழுகியிருக்கவேண்டும். கொஞ்சம் தடங்கலுடன் அவ்வப்போது வெவ்வேறு டியூனில் செல்கிறது. ஆனால் தமிழில் ஒரு நல்ல சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது என்ற நிறைவை அடைந்தேன்

 

குமார் மகாதேவன்

 

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -3
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6