வைரமுத்து,ஆண்டாள்
எனக்கு வரும் கடிதங்களில் பலர் வைரமுத்து குறித்து வசைபாடி எழுதித்தள்ளுகிறார்கள். முகநூலில் பகிரப்படும் வைரமுத்து குறித்த வசைகளை எனக்கு வெட்டி அனுப்புகிறார்கள். நான் வைரமுத்து ஞானபீடம் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளைக்குறித்து எழுதியமையால் இந்த வசைகளுடன் இணைந்துகொள்வேன் என நினைக்கிறார்கள்.
தெள்ளத்தெளிவாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் எழுதியது இலக்கியவிவகாரம். இதில் மதவெறியர்கள், அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்களுக்கு இடமில்லை. இவர்கள் இன்று வைரமுத்துவைப்பற்றி எழுதியிருப்பவை கீழ்மை நிறைந்தவை. எந்த நிதானமுள்ள இந்துவும், இந்தியனும் நாணத்தக்கவை. வைரமுத்து கூறிய கருத்து கண்டிக்கப்படவேண்டியதென்றால் அதை கருத்துத் தளத்தில் கடுமையாக மறுக்கலாம், வசைபாடுவது கீழ்மை. தெய்வத்தமிழ் என தமிழை இறைவடிவாகக் கொண்டாடிய மரபில் வந்த எவரும் கவிஞனுக்கு எதிராகக் கீழ்மையைக் கொட்டமாட்டார்கள்.
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்து அவர் சார்ந்த திராவிட இயக்கமும், இந்திய இடதுசாரிகளும் கடந்த ஐம்பதாண்டுக்காலமாக இங்கே உருவாக்கி வரும் ’இந்தியமரபைச் சிறுமைசெய்வதே முற்போக்கு’ என்று நம்பும் தரப்பிலிருந்து எழுவது. இத்தகைய இழிவுரைகளுக்கு பலநூறு உதாரணங்கள் இங்குண்டு. இன்றுதான் இதற்கு எதிர்ப்பு உருவாகிவருகிறது. இவையே சுதந்திர அறிவியக்கம் என்று இங்கே பரவலாக நம்பப்பட்டுவந்த காலம் முதல் தனித்தகுரலாக நின்று அவற்றை எதிர்த்துவந்தவன் நான். இன்றும் என் நிலைபாடு அதுவே.
வைரமுத்துவின் பிழை என்பது நம் சூழலில் புழக்கம் கொண்டுள்ள நஞ்சூட்டப்பட்ட கருத்தை இயல்பான முற்போக்குக் கருத்தாக எண்ணி முன்வைத்த அசட்டுத்தனம் மட்டுமே. அவரைக் கண்டிக்கவும் எதிர்ப்புரை முன்வைக்கவும் உரிமை மட்டுமல்ல பொறுப்பும் இங்குள்ள மெய்நாடும் சிந்தனையாளர்களுக்கு உண்டு. ஆனால் அது வசைபாடுவதும் வெறுப்பைக்கக்குவதும் அல்ல.
வைரமுத்து மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்பு என ஏதுமில்லை. அதை அவருக்கும் அவருக்கும் எனக்குமான பொதுநண்பர்களுக்கும் எப்போதும் தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். நானும் அவரும் ஒரே காலகட்டத்தில் தமிழிலக்கியத்தில் செயல்படுபவர்கள் என்பதனால் அது இன்றியமையாததாகிறது. .எந்தவகையான வெறுப்புடனும் விலக்கத்துடனும் சொல்லப்படுவதல்ல என் கருத்து.கூடுமானவரை தன் ரசனைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என விழையும் விமர்சகனின் மதிப்பீடு மட்டுமே.
அவரைத்தான் நான் தனிப்பட்டமுறையில் நவீனத் தமிழின் மிகச்சிறந்த பாடலாசிரியர் என நினைக்கிறேன். ஆம், கண்ணதாசனைவிடவும். அதற்கான என் விமர்சனக் காரணங்களை முன்னரே எழுதிவிட்டேன்.பாடல் என்பது எடுத்தாள்கைக் கவிதை. [Applied Poetry] ஏற்கனவே மொழியில் உள்ள கவித்துவத்தை மெட்டுக்கு இணங்க அமைப்பது. ஒருவகை மொழித்தொழில்நுட்பம். மரபுத்தேர்ச்சியும் இசையமைவும் கொண்ட உள்ளம் அதற்குத்தேவை. புதுக்கவிதையின் விந்தையான சொல்லாட்சிகளையும் நாட்டாரியலின் அரிய சொல்லாட்சிகளையும் திரைப்பாடல்களில் சரியாக அமைத்த வைரமுத்துவின் சாதனைக்கு நிகராக இந்திய அளவிலேயே மிகச்சிலர்தான் உள்ளனர். அவருடைய விரிவான மரபிலக்கிய ஞானமும் நவீனக்கவிதை வாசிப்பும் அதற்கு அடித்தளம்.
அதேசமயம் கவிஞர் என்னும் வகையில் அவருடைய இடம் பலபடிகள் கீழானது. அவர் வானம்பாடிக் கவிமரபிலிருந்து எழுந்தவர். கவிதையை நேரடிப்பிரகடனமாகக் கருதியவர்கள் அவர்கள். வைரமுத்து அந்த அழகியலுடன் திராவிட இயக்க மேடைப்பேச்சுக்கான அடுக்குச்சொல்லாட்சிகளையும் இணைத்துக்கொண்டவர். ஆகவே மேலும் கீழே சென்றவர். நல்ல கவிதை கவிதைவாசகனுடன் நிகழும் உரையாடல். வைரமுத்துவின் கவிதை எளிய ரசிகர்களை நோக்கிய ஒரு மேடைநிகழ்வு. அனைவருமறிந்த கருத்துக்களை அனைவருக்கும் உகக்கும் மொழியில் சொல்லும் முயற்சி அது. இன்றைய காலகட்டத்தின் கவிஞர்களின் நூறுபேரின் பட்டியலில்கூட வைரமுத்துவை நல்ல கவிதைவிமர்சகன் சேர்க்கமாட்டான்.
வைரமுத்து பாடலாசிரியர் என்பதே அவர் கவிஞராக ஆவதற்கான தடையாகவும் அமைகிறது. கவிதை நேரடியாகவே கவிஞனின் உளத்தூண்டலில் இருந்து பிறக்கிறது. முன்பில்லாத தன்மையே அதன் முதன்மைத் தகுதி. பாடல்களுக்கு இவ்வியல்புகள் தடைகள். ஆகவேதான் தமிழின் நல்ல கவிஞர் பலரும் பாடலாசிரியர்கள் அல்ல. பாடலும் கவிதையாகலாம், ஆனால் நல்ல இசைப்பாடல் நல்ல கவிதையாக வேண்டியதில்லை.
உரைநடையாசிரியர் என்னும் நிலையிலும் வைரமுத்துவுக்கு தமிழ் புத்திலக்கியச் சூழலில் குறிப்பிடத்தக்க இடமில்லை. அவருடைய உரைநடை செயற்கையான சொல்லாட்சிகளால் ஆனது. அவர் அவருக்கு முந்தைய திராவிட மேடைப்பேச்சுக்களில் இருந்து பெற்றுக்கொண்டது அது. அவருடைய புனைகதைகள் செயற்கையான தருணங்களை புனைந்து வழக்கமான ’அரசியல்சரி’ கொண்ட கருத்துக்களை முன்வைப்பவை. அவர் எழுதிய நூல்களில் கள்ளிக்காட்டு இதிகாசம் மட்டுமே ஓரளவேனும் குறிப்பிடத்தக்கது. அவர் வளர்ந்த சூழலின் வாழ்க்கையின் சித்திரம் அதிலுள்ளது. இளமையில் அவர் பெற்றுக்கொண்ட நுண்தகவல்களின் தொகை என்பதனாலும் அது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதிலுள்ள பேயத்தேவர் தமிழிலக்கியத்தின் நல்ல கதாபாத்திரங்களில் ஒன்று.
ஓர் ஆளுமை என்ற வகையில் அவர்மேல் எனக்குள்ள மதிப்பையும் விமர்சனத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். முதிராஅகவை இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமே. முக்கியமாக அவரிடம் எதிர்மறைக்கூறுகள் இல்லை. சோர்வூட்டும் உளநிலை இல்லை. ஊக்கமும் நன்னம்பிக்கையும் அளிக்கும் அவருடைய கவிதைகளால் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்ற பலரை நான் அறிவேன்.
அவருடைய வெற்றித்தமிழர் பேரவை என்னும் அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இளைஞர்களை இலக்கியத்திற்குள் ஈர்க்கும் பணியை செய்துள்ளது. இன்று சிறந்த வாசகர்களாக, அவரைக் கடந்து வந்துள்ள பலர் அங்கிருந்து எழுந்தவர்கள்.
அதேசமயம் தொடர்ச்சியான அரசியல் தூண்டில்கள் வழியாக அவர் விருதுகளையும் அங்கீகாரங்களையும் நோக்கி செல்வது அவருடைய ஆளுமைக்கு இழுக்கு. அவர் பேசும் இலட்சியவாதத்திற்கு எவ்வகையிலும் இசைவதல்ல அது.
மொத்தமாக, அவரை ஓர் இலக்கியவாதியாக ஏற்க எனக்கு தயக்கமில்லை. தனிமனிதராக மதிப்பும் உண்டு. ஆனால் இலக்கியமதிப்பீட்டில் அவர் முக்கியமான கவிஞரோ குறிப்பிடத்தக்க புனைகதைப்படைப்பாளியோ அல்ல.
வைரமுத்து சாகித்ய அக்காதமி பெற்றபோது நான் இக்கருத்துக்களை விரிவாக விவாதித்து அவர் விருதுபெற்றமைக்கான கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்திருந்தேன். அவருடைய நண்பர்களும் என் நண்பர்களுமான மரபின்மைந்தன் முத்தையா போன்ற பலர் எனக்கு எதிர்ப்பை விரிவாக பதிவுசெய்திருந்தனர். இது ஓர் இலக்கியவிவாதம். அவரவர் தரப்பை முடிந்தவரை முன்வைக்கவேண்டியதுதான். முற்றாக எது சரியானதென்று எவரும் இப்போது சொல்லிவிடமுடியாது என்னும் தன்னுணர்வு அனைவருக்கும் இருக்கும்.
வைரமுத்து தமிழிலக்கியத்தில் செயல்படும் கவிஞர், ஆனால் தமிழிலக்கியத்தின் முகம் என காட்டப்படும் தகுதிகொண்டவர் அல்ல. இவ்வேறுபாட்டையே நான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறேன். இப்போது சூழல் மிகக்கலவையாக ஆகிவிட்டிருக்கிறது. ஒருவரிகூட வாசிக்கும் வழக்கமில்லாதவர்கள் இலக்கியக்கருத்துக்களை சொல்லும்களமாக குமுகஊடகங்கள் ஆகிவிட்டிருக்கின்றன. ஆகவே வெறுப்பும் காழ்ப்பும் உச்சஎதிர்நிலைகளும் மட்டுமே காணக்கிடைக்கின்றன. எத்தனைமுறை சொன்னாலும் ஓங்கி ஒலிக்கும் மொண்ணைக்குரல்களையும் வெறுப்புகளையுமே முதலில் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆயினும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான். இந்தக்குப்பைப்புயலைக் கடந்து நல்ல வாசகர் செவிகொள்ளக்கூடும் என நம்புவதனால்.