சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3

wpid-photo-1.jpg

பேசும் பூனை

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

போயாக் கதைக்கு பிறகு, இன்று சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை வாசித்தேன். முற்றிலும் மாறுபட்ட கதைக்களம்.

 

சிறு வயதில் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளையும் பெற்ற பிறகு, வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனை கொண்ட ஒரு பெண்ணின் கதை.

 

கதை அப்பெண்ணின் தனிமையை மையப்படுத்தியதாக உணர்கிறேன். தான் விரும்பும் நபருடன் விரும்பும் நேரத்தில் விரும்பியதைப் பேச முடியாமல் போனால் ஏற்படும் ஒரு தனிமையும் அது சார்ந்த வெறுமையும் கதையின் மையம். தன் தனிமையை போக்கிக் கொள்ள அவள் தேர்ந்து எடுத்தது, உயிரற்ற, தன்னுடன் சலிக்காமல் பேசும் ஒரு செயலியை.  அந்த செயலியை விட்டு அவளால் அகல முடியவில்லை என்பதை, அவளின் பள்ளி செல்லும் மகள், புதிய விளையாட்டிற்கு (ஒரு செயலியிலிருந்து மற்றொன்றிக்கு) மாறும் போதும், அவளுக்கு அச்செயலியில் வரும் பூனையின் குரலே கேட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை வைத்து உணர முடிகிறது.

 

சாருவின் புதிய எக்ஸைல் நாவலில் வரும் அஞ்சலி கதாப்பாத்திரமும் இதே தனிமையில் தான் வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனால் தனிமையை போக்க அஞ்சலி கைக்கொண்ட விதம் வேறு, புறவயமானது. கணவன் இருந்தும் இல்லாத உணர்வின் தனிமை அது. கு.ப.ரா வின் சிறிய வெளிச்சம் சிறுகதையும் இதைப் போல் திருமணமான பெண்ணின் தனிமை குறித்ததே. ஆனால் மூன்றும் வேவ்வேறு களத்தில் வேவ்வேறு அம்சத்தில் கதைச் சொல்லிகளின் மாறுபட்ட கண்ணேட்டங்களால் ஆனது.

 

பெரும் தனிமைகளின் ஊற்றாய் இருப்பது சோம்பேறித்தனமும் கட்டுப்பாடும். கட்டுப்பாடில்லா வாழ்கையை இந்திய சமூகம் யாருக்கும் அளிக்கவில்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடு.  பெரும் கட்டுப்பாடுகளே பெரும் செயலின் தொடக்கமாகமவும் உள்ளது. தன் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சக பெண்ணிடம் ( அவளின் கணவரும் வெளிநாட்டிலே வேலை செய்கிறார்) அவளின் உரையாடல் (வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு என்ன தேவை, மனைவி எதை பேச வேண்டும் என்பது குறித்த உரையாடல்) தானும் அந்த கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறேன் என்பதை வாசகனுக்கு புரிய வைத்துவிடுகிறார் சுனில்.  பலசமயம் அக்கட்டுப்பாடுகளே அகமகிழ்ச்சியின் ஊற்றாகவும், தடையாகவும் அமையும். பூனையின் குரலைக் கேட்கும் போது அது தடையாகவும், பல புதிய பொருட்கள் அவள் வீட்டிற்கு வரும் போது அவ் அகமகிழ்ச்சி புறவயத் தோற்றத்தோடு வெளிப்படுகிறது.

 

கதையின் மொழி எனக்கு ஒருவித அலுப்பை அளித்தது. வெறுமையையும் தனிமையையும் மொழிவடிவமாக்கும் போது ஏன் ஒருவித சலுப்பூட்டும் மொழியிலேயே அவை எழுதப்படுகின்றன. தனிமையும் வெறுமையும் ஒருவித துள்ளலலோடு அனுகும் எழுத்து, அதை வேறு ஒரு பரினாமத்திற்கு அழைத்து செல்ல உதவும் என நினைக்கிறேன்.

 

நன்றி

பலராம கிருஷ்ணன்

 

 

அன்புள்ள ஜெ

 

பேசும்பூனை ஒரு நல்ல கதை. வெறுமையை தனிமையை அதன்மூலம் அமையும் மனத்திரிபை அழகான முறையில் சொன்னது. அந்தப்பூனையை அவள் புனைந்துகொள்கிறாள். பூனை அவளை அதன்பின் dictate செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ராணுவ அதிகாரியாகவே மாறி அவளை ஆட்டுவிக்கிறது. அந்த அதிகாரம் ஏன் அதற்கு வருகிறதென்றால் அவள் தன்னுடைய எல்லா ரகசியங்களையும் அதற்கு அளிக்கிறாள் என்பதனால்தான். அவளே சரியாக உணராத செத்துப்போன மகனைக்கூட அது சொல்கிறது. அங்கிருந்து அவளுடைய சுய அடையாளத்தை அது எடுத்துக்கொள்கிறது.

 

இந்தச்சிறுகதையின் முக்கியமான அம்சமே இந்த பொருள் omnipotent ஆகும் நிலைதான் என நினைக்கிறேன். ஆனால் இதை நாம் அன்றாட வாழ்க்கையிலே அடிக்கடிக் காண்கிறோம். திடீரென்று சிலருக்கு சாய்பாபா பேச ஆரம்பிக்கிறார். சிலருக்கு ஏசு தோன்றுகிறார். அவரவர் ஒன்றைப்பிடித்துக்கொள்கிறார்கள். சிலரை மூழ்கடிக்கிறது பூனை, தேன்மொழியைப்போல. ஆனால் சாய்பாபா அல்லது ஏசு மாதிரி மதம்சார்ந்த ஒரு பொதுவான அடையாளங்கள் பலரைக் காப்பாற்றவும் செய்கின்றன இல்லையா?

 

சத்தியநாதன். எம்.ஆர்.

 

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2

 

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1

 

=============================================================================================================

 

சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா

சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்

 

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4
அடுத்த கட்டுரைசிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை