பேசும் பூனை
அன்புள்ள ஜெ
சந்தேகமில்லாமல் தமிழில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைகளின் பட்டியலில் பேசும்பூனையைச் சேர்க்கலாம். வாழ்க்கையின் வெறுமையையும் ஒவ்வாமையையும் விதவிதமாக தமிழ்ச்சிறுகதை எழுதிக்காட்டியிருக்கிறது. அதிலும் இங்கே பெண்களுக்கு வாழ்க்கையில் ’சாய்ஸ்’ ஏதும் இல்லை. வாய்த்த வாழ்க்கையை வாழவேண்டியதுதான். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும். அந்த எலிப்பொறிவாழ்க்கையை வெவ்வேறுவகையாக நம் கதைகள் சொல்லியிருக்கின்றன. இன்றைய நவீனத்தொழில்நுட்பத்தின் குறியீட்டைக்கொண்டு மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் சுனில்கிருஷ்னன்
தேன்மொழி ஒரு சராசரி கீழ்நடுத்தர பெண். அவளுக்கு வாய்க்கக்கூடிய இன்னொரு கீழ்நடுத்தரச் சராசரிக் கணவனாக கணேசன். மனைவிமேல் பிரியம் உண்டு. ஆனால் அந்த சூழலுக்குரிய குடியும் செலவுமாக வாழ்க்கை. பெண்பிள்ளை. தேன்மொழிக்கும் கணேசனுக்கும் ரக்ஷிதா என்ற மகள் இருப்பது பெயர்கள் வழியாக ஒரு மிகச்சிறந்த அப்சர்வேஷன். தேன்மொழியின் வெற்றிடத்தை தொழில்நுட்பத்தின் உருவாக்கமான விர்ச்சுவல் பூனை நிரப்புகிறது. அவள் தன்னுள் இருக்கும் அனைத்தையும் கொண்டு அதைப்புனைந்துகொள்கிறாள். பூனை பேச ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கதை தொடங்குகிறது. சொன்னதைச் சொல்லும் பூனை சொல்லாததைச் சொல்ல ஆரம்பிக்கிறது.
அவளுடைய டிப்ரஷனின் வெளிப்பாடாகவே அது ஆகிறது. பொதுவாகவே டிப்ரஷன் உள்ளவர்கள் இப்படி பொருட்களின் மேல் உயிரோட்டத்தை உருவாக்கி பூதம்போல வளர்ப்பார்கள். அதை ஒரு தற்கொலை முயற்சி வழியாக அவள் கடக்கிறாள். ஆனால் கடக்கவில்லை. அந்தச் சின்னப்புள்ளியில் இருந்து அது மீண்டும் வரும். அவளுக்கு வாழ்க்கை விரும்பியதுபோல இல்லை. முக்கியமாகக் காமம். அது கற்பனையில்தான் கொஞ்சமாவது சுவாரசியம். நேரில் பெரிய அவஸ்தை. அங்கிருந்து ஆரம்பிக்கிறது எல்லாமே அவளுடைய முதல்கரு இல்லாமலானது, அந்த மகன் அவள் மனசுக்குள் இருப்பது எல்லாம் அதற்குக்காரணமாக இருக்கலாம்
இரண்டு விஷயங்கள். ஒன்று டிப்ரஷன் உள்ளவர்கள் இதேபோல எதையாவது வாங்குவது கண்டபடி தின்பது என்று பெரிய அப்செஷன் நோக்கிச்செல்வார்கள். அதை தடுக்கமுடியாமல் செய்துகொண்டே இருப்பார்கள். அந்த மனநிலையைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
இன்னொன்று சும்மா ஒரு ஞாபகம் 36 சௌரங்கிலேன் என ஞாபகம். ஒருபாட்டியிடம் பூனை இருக்கும். அது அவர்களுடைய தனிமை. அந்தவீட்டுக்கு ஒரு ஜோடிவந்து தங்க ஆரம்பிக்கும்போது அந்தபூனையை விட்டுவிடுவாள். அவர்கள் வராமலானபோது மீண்டும் அந்தப்பூனையை எடுத்துக்கொள்வாள்
இதை விமர்சனமாக எழுதும்படி நீங்கள் கோரினீர்கள். ஆகவே இன்னும் சில வரிகள். ”பத்தொன்பது வயதில் வேண்டா வெறுப்பாக கணேசனை மணந்து கொண்டபோது கழுத்தை உறுத்திய மாலை, அவன் ஊர் திரும்பிய சமயத்தில் தனிமையில் அழுதபோது ஓர் ஆசியைபோல் மேகத்தைத் துளைத்து மண் அடைந்த ஒளிகுழல், வயிற்றுள் உருண்டு உதைத்த சிசு, ஹர்ஷிதா தோளில் பால் கக்கியபோது அப்பிய ஈரம்” என்றெல்லாம் நிறையச் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன். கதையிலேயே அவளுடைய லௌகிக உலகம் உடைந்துகிடப்பது தெரிகிறது
ராமச்சந்திரன்,
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று தாங்கள் குடுத்திருந்த சுனில் கிருஷ்ணன் கதை பிடித்திருந்தது.
காரணங்கள் கீழே:
1.முதலில் கதை நன்றாக தங்கு தடையின்றி கதைக்கு தேவையான மொழியுடன் விவரணைகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
- வடிவம் மிகச் சரியாக உள்ளது
- எப்போதும் நாம் கிடைத்த வாழ்க்கையையும், விரும்பிய வாழ்க்கையையும் ஒரே சேர வாழ்ந்துகொண்டேயிருக்கிறோம். மனம் சிதையும் போது தானாகவே பின்னதை நோக்கிப் போகத் தொடங்குகிறோம். அழகாக வெளிப்பட்டிருக்கிறது இக்கதையில்
- இக்கதை வேறு சில கதைகள நினைவுபடுத்துகிறது. முடிவும் எதிர்பார்த்த ஒன்றே. இருந்தும் கதை பிடிக்கிறது.
நன்றி,
சங்கர்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று, நண்பர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் பேசும் பூனை சிறுகதையின் மீதான எனது கருத்துக்களை எழுதுவதில் மகிழ்கிறேன்.
சாம்பல் நிறமொரு குட்டி என்று பாரதியை நினைவு படுத்தும், வரிகள் வாசிக்கத் துவங்கியதுமே மனதில் வந்து போனது. ஆனால், நல்லவேளையாக கதை முடிக்கையில் அப்படியேதும் எண்ணம் தொடரவில்லை.
எளிமையான கதை சொல்லல் வழியே மனதின் ஆழத்தில் இருக்கும் சிக்கல்களையும் சிடுக்குகளையும் அளைவதன் சவாலினை கொண்டு பயனிக்கும் இக்கதை அதில் அடைந்திருக்கும் தொலைவை ரசிக்க முடிகிறது. அப்பயனின் பக்க விளைவாகவே, மொழியாடலிலும், காட்சியாக்கங்களிலும், எளிமையாகச் சொல்லிவிட்டுவிடலாமா அல்லது தீவிரத்தை நோக்கி நகரலாமா என்ற தடுமாற்றம் கதைசொல்லிக்கு ஆங்காங்கே ஏற்படுவதாகவே உணர்கிறேன். உதாரணமாக ‘ கோபக்கார புள்ளுகள்’ என்ற சொற்பிரயோகம். அறீஸ் அக்காவுடனான உரையாடல் மற்றும் நட்பு.
கதையின் அடி நோக்கமான ஃபெடிஷ் வகையறாவின் நுணுக்கம், இன்றைய குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களையும், போதிய பொருளாதாரமே தரும் சிக்கல்களையும் புறச்சூழல்களாகச் சித்தரிப்பதில் துலங்கி இருக்கிறது. ஜடப் பொருளின் மீதான இச்சை மெல்ல சுகானுபவத்தில் தொடங்கி எப்படி மனதைச் சூழ்கிறது என்பதையும், அந்த வளைவு வரைபடத்தின் இறுதியில் அது விட்டுச் செல்லும் துயரத்தின் வடுவையும் சொல்லிச் செல்வதில் இக்கதை வென்றுள்ளது.
கட்டற்ற தன்மையை மெல்ல கதாபாத்திரத்திற்குள் நுழைத்த விதத்தைப் போலவே, அவளது மீட்சி (வடுவுடன் கூடிய மீட்சியாயினும்) மீதும், இதர கதாபாத்திரங்களின் விரிவின் மீதும் செலுத்தியிருந்தால், இதனை ஒரு மகத்தான குறுநாவலாக கொண்டாடியிருக்க முடியும். இது தான் எடுத்துக் கொண்ட நோக்கத்தின் அடிப்படையில் நல்ல சிறுகதையாக நிலை கொள்கிறது.
தொடர்ந்து ஐரோப்பிய அமேரிக்கத் திரைப்படங்களில் மெய்நிகர் உலகின் பாதக விளைவுகளை உணர்ச்சி ரீதியாக, கதை தொழில்நுட்பங்களுடன் காண முடிகிறது. அவ்விடத்தின் தொடர்ச்சியில் தமிழுக்கான எளிமையான, அதே நேரத்தில் தமிழ்ச் சூழலின் பிற்புலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பே.
தொடர்ந்து நாள்தோறும் பயன்படுத்தும் சாதனத்தை நேரடியாக சிறுகதையாக்கிட முனைந்ததும், அதற்குள் சரிவிகிதமாக உணர்ச்சி வேகத்தினை புகுத்திய அழகுமே இக்கதையின் சிறப்பு.
.
அன்புடன்
கோ.கமலக்கண்ணன்.