சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5

நவீன்
நவீன்

சிறுகதை விவாதம் –1 போயாக்- ம.நவீன்

ஒரு சிறுகதை எந்தெந்த அம்சங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என பலமுறை தங்கள் தளங்களில் விவாதங்கள் நடந்திருக்கிறது. சென்ற ஆண்டில் கூட பல புதிய எழுத்தாளா்களின் கதைகளையும் அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்திருக்கிறேன். இந்த வருடத்தின் தொடக்கமாக இந்த விவாதம் அமையட்டும்.

என்னளவில் ஒரு புனைவு எழுத்தாளன் – எதேனும் ஒரு நிகழ்வையோ, ஒரு படிமத்தையோ, ஒரு தத்துவத்தையோ தன் கண்ணோடத்தின் மூலமாக தனக்கு கிடைத்த திறப்பை மொழியின் துணையோடு விவாிக்கிறான். நவீன் போயாக் கதையின் மூலம் மூன்று விஷயங்களை விவரிக்கிறார். முதலாவதாக, ஒரு புதிய இடத்திற்கோ அல்லது நாம் வாழும் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலுக்குச் செல்லும் போது, நம் மனம் அடையும் பதட்டத்தையும், அச்சூழல் குறித்த அறியாமையினால் நமக்கு ஏற்படும் பயத்தையும் கதையின் முதல் பாதியில் விவாிக்கிறார் கதையின் நடுவில் வரும் துணைக் கதை அதை தெளிவாக காட்டுகிறது. ஜேத்தாவா தன் மகன் முதலைகளால் கொல்லப்பட்டதன் வெறுப்பு சற்றும் இல்லாமல், அவா் இது மனிதா்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் என கூறி அந்த நிலத்தின் கலாச்சார வெளியை திறக்கிறார், இதை வாசித்தவுடன் தங்கள் பயணக் கட்டுரையில் ஒருமுறை நீங்கள் நண்பா்களுடன் பஞ்சாப் சென்று இருந்த போது, அங்கு இலை போடாமல் கைகளில் சப்பாத்தி பரிமாறியதால், மரியாதைக் குறைவாக பஞ்சாபிகள் நடந்து கொள்கிறார்கள் என தங்கள் நண்பா்கள் நினைத்தாக கூறியது நினைவிற்கு வந்தது.

கதையை வாசித்து முடித்தவுடன் சென்ற ஆண்டு நீங்கள் பகிர்ந்த ராம் செந்திலின் மடத்து வீடு சிறுகதையும் வாசித்தேன். அந்தக் கதையில் வரும் இளைஞா்கள் பெண்கள் மட்டும் வாழும் அந்த மடத்து வீட்டிற்கு செல்லும் போது ஏற்படும் ஒருவித நெருடலை விவாித்து இருப்பாா். மடத்து வீட்டின் நோக்கம் அந்த நெருடலை பற்றியது இல்லை என்றாலும், புதிய இடத்தால் மனத்திற்கு வரும் பதட்டத்தின் நீட்சியே அந்த இளைஞா்களின் இறுதி உரையாடல். மடத்து வீட்டைப் போல், போயாக்கும் கதையின் முன்னே வரும் பதட்டத்தின் நீட்சியாகவே இறுதி உரையாடலான மனிதன் – முதலை ஒப்பந்த உரையாடலைக் கொண்டுள்ளது.

இரண்டாவதாக – தன் மனம் தவறு என சொல்லும் விஷயத்தைச் செய்து பார்ப்பதும், அதனால் ஏற்படும் கலகத்தால் பாதிக்கப்படுவதும் மனித வாழ்கையில் தவிர்க்க முடியாதாகிறது. சீமாவைப் பாா்த்ததும் அவள் அழகில் மயங்கி, வா்ணணைக்களுக்குப் பிறகு, அவளின் தங்கையின் மூலம் தெரியவரும் – மாந்தீரீக விஷயங்களினால் – கதையின் மையப்பாத்திரத்தின் மனம் நிலைக்கொள்ளாமல் தவிப்படைகிறது. அதன் பிறகும் சீமாவை தொட்டதினால், தன் நெற்றியில் ஆண்குறி வளர்ந்துவிடும் என பயத்தால் பாதிக்கப்படுவதம் – புலம்புவதும் – அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல செயல்களை நினைவுபடுத்துகிறது.

மூன்றாவதாக – நாம் எதிர்மறை சிந்தனையில் இருக்கும் போது நமக்கு நடக்கும் ஒரு சிறு சறுக்கல்களைக் கூட அந்த சிந்தனையோடு தொடர்புப்படுத்ததி மனம் ஒரு கதையை உருவாக்கி கொள்ளும். தன் தந்தையின் உடல் நிலை மோசமானதற்கு சீமாவை தொட்டதே காரணம் என அவாின் மனம் ஒரு கதையை உருவாக்கிக் கொள்கிறது. அதன்பால் நின்று வருந்தவும் செய்கிறது. தங்களின் ஒரு கோப்பைக் காப்பி சிறுகதையுலும் கூட மையப்பாத்திரத்தின் அம்மா தன் கணவரின் செயல்களால் பாதிக்கப்பட்டு ஒரு எதிர்மறை நோக்கில் பயணம் செய்யும் போது நடக்கும் நிகழ்வு – அம்மாவின் மனதில் ஒரு கதையை உருவாக்கி விடும். அம்மா அந்த கதையில் சிக்கிவிடாமல் தடுக்க சொற்களின் வழியாகவும், இடமாறுதலின் வழியாகவும் தன்னாலானதைச் செய்தபடியே இருப்பாா். கதை நடக்கும் நிலம் – கதையின் மையம் – இவ்விரண்டும் மேலே கூறியவற்றில் மாறுபட்டு இருந்தாலும், செயலின் விளைவுகள் ஒன்றாகவே உள்ளது. மனிதனின் நுண்ணறிவு வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பல கண்ணோட்டங்கள் தேவைப்படுகிறது.

பலராம கிருஷ்ணன்

***

இனிய ஜெயம் ,

//ஈ. கடைசி வரியிலே ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார். அதுதான் கதையின் மையம் என்றால் முதலையெல்லாம் தேவையே இல்லை. அது ஒரு சப்பைக்கதை.//

கதையின் ஆசிரியரே கேட்டுக்கொண்டதற்கு இணங்க கறார் விமர்சனம் ஒன்றினை முன்வைத்திருக்கிறார். அவரது .ஈ. பகுதியை தவிர்த்து பிறவற்றுடன் உடன்படுகிறேன் .

ஈ பகுதியின் முடிவு அந்த வாசகரின் விமர்சனமோ ,கருத்தோ அல்ல. அது ஒரு கமெண்ட். அது தவறு .

கறார் விமர்சனம் என ஆசிரியரே கேட்டாலும், விமர்சன பூர்வமாக அக்கதையின் பலமான அலகுகளை முன்வைத்த பிறகே, பலவீன அலகுகளை முன்வைக்க வேண்டும் .முன்னது அந்த கதையின் ஆழத்துக்கு வாசகர் பயணித்ததன் சான்று .அதுவே பின்னர் வரும் பலவீனம் மீதான விமர்சனத்தை வாசகரையும் ,அந்த எழுத்தாளரையும் பரிசீலிக்க வைக்கும்.

இந்த கதையில் விமர்சகரின் போதாமை என்ன?

//ஈ. கடைசி வரியிலே ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார். அதுதான் கதையின் மையம் என்றால் முதலையெல்லாம் தேவையே இல்லை.//

எதையும் சட்டகத்துக்குள் வைத்தே வாசித்து பழகியதன் விளைவு இது .

ஏன் அந்த டிவிஸ்ட் கதையின் மையமாகத்தான் இருக்க வேண்டுமா? எது கதையின் மையமோ அதை முற்றிலும் மௌனமாகவிட வாசகனை உண்மையில் திருப்பிவிடும் ஒரு ட்விஸ்ட்டாக. அதற்கு அப்புனைவு மேற்கொண்ட பாவனை அது என இருக்க கூடாதா?

உதாரணமாக இப்படி சொல்கிறேன் .கதை சொல்லி வானிலிருந்து தரைக்கு வருகிறான் .

//அன்று மதியம் எனக்காக ஒரு சிறப்பு விருந்தொன்று ரூமா பஞ்சாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜேத்தாவும் லயாவும் என் கரம் பற்றி அழைத்துச்சென்றனர். அவர்கள் இருவருக்குமே என்னைப் பாரமாரிக்க வேண்டும் என்பதில் அக்கறை இருந்தது. எனக்கு அந்த ஊரைப் பிடிக்க வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். ஏற்கனவே ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கவந்த ஆசிரியர்கள் இந்தச் சூழல் பிடிக்காமல் பள்ளி மாறி போனதால் மாணவர்கள் மிகவும் பின்தங்கிவிட்ட வருத்தம் இருவருக்கும் இருந்தது. ஈபானியர்களான இருவருக்குமே தங்கள் இன குழந்தைகளுக்குக் கல்வியின் வழியே விடுதலை கிடைக்கும் என்ற உணர்வு இருந்தது. ஆங்கிலம் வராத அவர்களுக்கு என் வருகையும் இருப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக்கொண்டே இருந்தனர்.//

இது கதையில் வரும் கதை சொல்லின் தன்னுரை .

எனில் இக்கதைக்குள் கதைசொல்லி விடுதலைஒன்றின் சிறு ஒளிக்கீற்றாக வருகிறான். அவன் அங்கே என்ன செய்கிறான் .என்பதே மௌன மையம் என்றாகிறது.

எனில் இது கதைசொல்லின் காமத்துடன் நின்றுவிடுவதல்ல. அவனால் துளி பங்களிப்பு நிகழ்ந்து உருவாகும் ஒரு மாற்றம், ஒரு கலாச்சார நகர்வு, எனும் அலகுக்கு அவனால் கடக்க இயலா காமம் வழியே அவன் செய்யும் துரோகம் நோக்கி புனைவு நகர்கிறது.

ஒரு புனைவு அது முன்வைக்கும் சாத்தியங்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் வாசிப்பு முதலில்.

அதன் பிறகே கறார் கத்தி கொண்டு கொத்து பரோட்டா .

இதுவே விமர்சன உரையாடலின் வைப்புமுறையாக இருக்க வேண்டும்.

கடலூர் சீனு

***

சிறுகதைவிவாதம், நவீனின் போயாக்’ -2

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1

முந்தைய கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4
அடுத்த கட்டுரைசிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்