சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்
அன்புள்ள ஜெ
ஒர் இளம் படைப்பாளி என்றால் உடனே பலர் ஆலோசனை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள். நவீன் தளத்திலும் உங்கள் தளத்திலும் சில கடிதங்களை படிக்க அலுப்பாக இருந்தது. இதே கதையை நீங்கள் எழுதியிருந்தால் இப்படியெல்லாம் எழுத துணிவார்களா? கதையின் நுண்ணுர்வுகளை சற்றும் அணுகாமல் சித்தரிப்பு சரியில்லை, முன்னாலேயே முடித்திருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னால் என்ன செய்வது? நவீன் பொறுமையுடன் சகித்துக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
ஏதோ முரண் தென்படவில்லை என்கிறார் ஒருவர். ஆரம்பம் முதலே முரண் தானே? நகர நாகரிகம்- பழங்குடி, சுத்தம்-அசுத்தம், அறிவியல் ஒழுங்கு-மூட நம்பிக்கையும் யதார்த்ததை மீறியதும் என்று துவங்குகிறது. கட்டுக்கும் கட்டற்றவைக்கும், பயத்துக்கும் அறிவுக்கும் இடையே திணருகிறான் கதைசொல்லி. சாராயத்தின் துணைகொண்டு தன் இயல்பை மீறுகிறான். கடைசியில் அது ஒரு சிறுமியை வன்புணர்வதில் போய் முடிகிறது.
திரும்பிவரும்போது படகில் ஒராங் ஊத்தாங் குரங்கு நல்ல வசதியாக உட்கார்ந்துகொள்கிறது. நாமும் நமது சிறிய படகுக்குள் அதைத்தானே செய்கிறோம்? சகமனிதன் மீதான சுரண்டலுக்கும் அகங்கார செயல்பாடுகளுக்கும் எத்தனை சால்ஜாப்புகள் சொல்லிக்கொள்கிறோம்?
(அன்பு சீனு – அந்த கடைசி பாரா என்பது அதுதானே, அதைப்போய் வெட்டச்சொல்கிறீர்களே?!!? நகுலன் நாஞ்சில்நாடனுக்கு குடுத்த அட்வைஸ் தான் நினைவுக்கு வருகிறது).
முதலை எனும் ஆழ்படிமம் நம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வெண்முரசிலும் விரிவான பல கதைகள் உண்டு. அதை மலேசிய பழங்குடி புலத்தில் வைத்து புதிதாக சொல்லியிருப்பது நவீனின் சாதனை.
காமத்தின் அகங்காரத்தின் இருளை, அதை சந்திக்கும் சராசரி மனிதனின் தவிப்பை சித்திரிக்கிறது ‘முதலை’. கதையாசிரியருக்கு வாழ்த்துக்கள்!
அன்புடன்
மதுசூதனன் சம்பத்
அன்புள்ள மது
அது உண்மை. ஆனால் இந்த விவாதம் ஒரு வகை சிறுகதைப்பட்டறை என்று நானே முன்னால் அறிவித்தேன். எவர் எழுதியதாக இருந்தாலும் பட்டறையில் படைப்புகள் முழுமையற்றவையாக, செய்முறைநிலையில் இருப்பதாகவே கொள்ளப்படும். அதன் குறைகளும் நிறைகளும் பேசப்படும். ஊட்டியில் நாங்கள் நடத்தும் காவியமுகாமில் கவிதைகளும், கதைகளும் அவ்வாறுதான் விவாதிக்கப்படும். அது எழுத்தாளருக்கு அக்கதையின் பிறசாத்தியங்களைச் சுட்டிக்காட்டக்கூடும் – நல்லெண்ணத்துடன் எடுத்துக்கொண்டால். புண்பட்டுச் சினம்கொள்ளாமலிருந்தால்.
ஒரு சூழலில் இது மிக அவசியமானது. எந்தக்கதையும் முடிவிலாது விரிவாக்க, சுருக்க, மாற்றியெழுத வாய்ப்பளிப்பதே. எழுத்தின் ஒரு கட்டத்தில் அதற்கான அவசியம் எழுத்தாளனுக்கு இல்லாமலாகிறது. நான் என் இளமையில் தமிழிலும் மலையாளத்திலுமாக பல பட்டறைகளில் கலந்துகொண்டிருக்கிறேன். என் ஆசிரியர்களிடம் பேசுவதேகூட பட்டறைதான். இன்று இது ஒரு இணையப்பட்டறை அவ்வளவுதான்.
எதிர்வினையாற்றுபவர்களை வாசகர்கள் என்றல்லாமல், நண்பர்கள், சகபடைப்பாளிகள் என எடுத்துக்கொண்டால் இந்தச் சீண்டல் எழாது என்பது என் எண்ணம். இவ்வாறு வரும் எதிர்வினைகளில் எதை ஏற்பது எதை புன்னகையுடன் தவிர்ப்பது என்பது அந்தப்படைப்பாளியின் சுதந்திரம்.
இவ்வகை எதிர்வினைகளிலுள்ள சிக்கல்கள் சில உண்டு. அதையும் கருத்தில்கொள்ளவேண்டும். எதிர்வினையாற்றுபவர்கள் படைப்பாளிகள், அல்லது படைப்பிலக்கியத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் படைப்புமனத்தால் எதிர்வினையாற்றுகிறார்கள். தாங்கள் எழுதியிருந்தால் என்னவாக எழுதியிருப்போம் என்கிறார்கள். ஆகவே அது நம் படைப்புமனநிலையோ படைப்புமுறையோ அல்ல. ஆனால் அப்படி இன்னொரு கோணத்தில் நம் படைப்பை நாமே பார்ப்பதென்பது நமக்கே அதை புதியதாகக் காட்டும். புதிய திறப்புகளை அளிக்கும்.
எதிர்வினைகள் வெவ்வேறு வாழ்வுநிலைகளைச் சார்ந்தவர்களால் அளிக்கப்படுகின்றன. ஆகவே நாம் கூறும்கதையில் அவர்கள் மையப்படுத்தும் புள்ளி வேறாக இருக்கலாம். அந்நிலையில் நம் கதைக்குள் அவர்கள் வராமலும் போகலாம். ஆனால் அத்தகைய எதிர்வினைகளிலிருந்து நம் கதைக்கு எத்தனை வாசிப்புப்புள்ளிகள் சாத்தியம் என நாம் உணரமுடியும். நம்மையறியாமலேயே அடுத்தமுறை எழுதும்போது அவற்றைக் கருத்தில்கொள்வோம். அவற்றுக்கான பதில்கள் கதைகளில் அமையும்
கடைசியாக, ஒருபடைப்பாளியின் படைப்பெழுச்சியை எதிர்வினைகள் வடிவமைக்க முடியாது. அது தன்னிச்சையானதாக, அந்தரங்கமானதாகவே இருக்கும். ஆனால் படைப்பின் வடிவம் எதிர்வினைகளினூடாக மேம்பட்டு எழுவதேயாகும். ஆகவே எதிர்வினைகளில் வடிவம் சார்ந்த விவாதங்கள் மிக முக்கியமானவை. உலகமெங்கும் அப்படித்தான். இன்று மேலைநாடுகளில் அதை நேரடியாகப் பயில்வதற்கு பல்கலை வகுப்புகள் உள்ளன. இங்கே இணையச்சூழலில் செய்யப்படுவதைத்தான் அங்கே வகுப்புகளில் செய்வார்கள்
எதிர்வினைகளற்றுப் போவதுதான் இலக்கியத்திற்கு எதிரானது. அவலம் என்றே சொல்வேன். எந்த எதிர்வினையும் அவ்வகையில் நன்றே
ஜெ
சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2
சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1