அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமறிய ஆவல். தங்கள் சிறுகதை விவாதம் தொடரில் ‘போயாக்’ சிறுகதைப் பற்றிய எனது எண்ணங்களை அனுப்புவதில் மகிழ்கிறேன். இது விவாதம் என்பதால், முதல் எண்ண ஓட்டங்களிலிருந்தே என் குறிப்புகளை வைக்கிறேன்.
ஒரு புது நிலத்தில் பணி நிமித்தமாகச் செல்லும், இளைஞனின் மன ஓட்டங்களிலிருந்து பின்னப்பட்ட கதை. கதையின் துவக்கத்தில், ஏற்படும் மனக் குழப்பங்களுக்கு அவன், டாக்சி ஓட்டியின் சிகரெட்டினைத் தூண்டுதலாய்ச் சொல்கிறான். ஆனால், அவனது மனநிலை, ஏற்கனவே சமநிலை இழக்கும் தருவாயில் இருக்கிறது. அங்கு எந்த ஒரு புறக்காரணியும் அவனது சாந்தியைக் குலைப்பதாகவே இருந்திருக்கும். அவன் மனத்தடுமாற்றத்தைத் தொடர்ந்து காட்டுவதற்காகவே, சேற்றில் புதைந்த காலணியும் வருகிறது. அவனால், அப்புது நிலத்தில் நிலை கொள்ள இயலவில்லை.
முதலைகளை வகுப்பில் கண்டு அடையும் பீதியினை, அப்படியே வாசகர்களுக்கு ஆச்சர்யமாகக் கடத்தாமல், மெல்ல இதை எதிர்நோக்கவே வைக்கிறார் எழுத்தாளர். ஏற்கனவே, படகில் உரங் உடானை அறிமுகப்படுத்தி, முதன்மை கதாபாத்திரம் செல்லவிருக்கும் நிலத்தின் விசித்திரங்களை எதிர்நோக்கியே இருக்க நம்மைத் தயார் செய்கிறார்.
புதிய நிலத்தின் ஒவ்வொரு சிறு எதார்த்தமான தகவல்கள் கூட, ஒரு ஏலியனுக்கு குமட்டலை வரவழைக்கிறது. அல்லது, தான் வாழ்ந்திருந்த சூழலே, உலகின் ஒரு பொது நிலையாக இருக்க வேண்டும், பிற வகை உணவுகளும், கதைகளும், நிலங்களும், நிகழ்வுகளும் ஒரு அந்நியத்தனத்துடனே பார்க்கப்பட வேண்டும் என்ற கற்பிதம் ஒரு பெரும் மனத்தடையை ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்குகிறது.
ஆனால், விதிவிலக்காக மதுவின் மீதும், சீமாவின் மீதும் தவிர்க்க முடியாத கவர்ச்சி உருவாகிறது. மதுவுக்கும் முதலைக்கறிக்கும் உள்ள தொடர்பும், சீமாவின் மீதான கவர்ச்சிக்கும் அவள் தந்தையின் மாந்திரீகம் தரும் பதற்றமும் ஒன்றுக்கொன்று அல்லாட வைத்து, இறுதியில், அவனை குமட்டலுக்குள் தள்ளிவிடுகிறது.
எழும் ஒவ்வாமையின் வெளிப்பாடாகத்தான், இக்கதையின் புறச்சூழல் சித்தரிக்கப்பட்டுள்ளது. மென்மையை தன் இனிய ஆயுதமாக்கி, ஈர்க்கும் அழகியைக் கூட, அவள் புழுமட்டும் தின்னாமல் இருந்திருக்கலாம், என்ற ஏக்கத்துடனேயே ரசிக்க முடிகிறது அவனால். கதாபாத்திரத்தின் தேர்வினாலும், கதையின் தகவல்களாலும், சித்தரிப்புகளாலும், உருவாகிவரும் நம்பகத்தன்மை மிகவும் அழகானதாக இருக்கிறது.
சீமாவின் மீது உந்தப்படும், கிளர்ச்சியைத் தன் குற்ற உணர்வினால், மறைக்க முயலுவதும், அதனைத் தொடர்ந்து தன் தந்தைக்கான உடல்நலக் குறைவை, தன் குற்ற உணர்ச்சியின் நீட்சியாகவே பார்ப்பதும், ஒரு கட்டமைக்கப்பட்ட மனத்தின் அல்லலூறுகள். தன் நெற்றியில், வளர்ந்துவிடப்போகும் ஆண்குறி பற்றிய பயத்தினால், தனது ஆசிரியர் என்னும் நிலை அறுந்து, தான் காமுகன் என்று நெற்றியில் பச்சைக் குத்தப்படப் போவதை எண்ணுகின்ற தவிப்பினால், நிலைதடுமாறுவதையும் சிறப்பாக புனைவிழுத்துக் கொண்டுள்ளது.
அவனே, நிலத்திலிருந்து நீருக்குள் விழும் மனிதனாகவும், நீரிலிருந்து நிலத்திற்குத் தவறுதலாய் இடம்பெயர்ந்து விடும் முதலையாகவும் இருக்க இயன்றிருக்கிறது; அந்த முதலையும் கூட அவன் உள்ளிருந்து கொந்தளிக்கும் நீரிலிருந்தே அவனை விழுங்கிடுகிறது. மறுத்தாலும், ஏற்றாலும் ஏலியன்களும், தானிருக்கும் சூழலின் ஒப்பந்தங்களுக்கு உட்பட்டவர்களாகிவிடுவது என்னும் தன்மையை ரசிக்க முடிகிறது. இக்கதையை நற்கதைகளுள் ஒன்றெனவே நினைக்கிறேன்.
அன்புடன்
கமலக்கண்ணன்.
***
அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,
வணக்கம்.
போயாக் சிறுகதை வாசித்தேன். எனக்கு இக்கதை ஏமாற்றமே. அசிரித்தையான மொழி, மிகச் சுமாரான சித்தரிப்புகள், (காட்சிகளிலும் சரி, உணர்வுகளிலும் சரி) என கதையை விலகி நின்று படிக்கவே முடிந்தது. பாதிக்குமேல்தான் கதை ஆரம்பித்து, எதற்காக அப்படி முடிகிறதென்றால் தலைப்பை நிறுவ என்பதுபோல் இருக்கிறது. கதை நடக்கும் களம் பலம் சேர்க்கவில்லை. இக்கதை எங்குவேண்டுமானலும் நடக்கலாம். மேலும் சிறுகதையில் நான் எதிர்பார்ப்பது அதிக விவரங்களை அல்ல. ஒரு முரண். அதை அடைய முடியும் கதைகள் என்னை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன. ரேமண்ட் கார்வரின் கதை ஒன்றைப் படித்தேன். பக்கத்துவீட்டைப் பார்த்துக்கொள்ளும் தம்பதிகள் கதையின் முடிவில் அவ்வீட்டினுள் மாட்டிக்கொள்வார்கள். கதை முழுவதும் அதிகம் சொல்லப்பட்டிருக்காது. முடிவிலோ இரு வீடுகள் இருவேறு உலகங்களாக மாறி நிற்கும். ஏன் இது நினைவுக்கு வந்ததென்றால் சிறுகதையில் நான் எதிர்பார்ப்பது கதையின் முடிவுக்குப் பின் அது வளரவேண்டும் என்றே. விரிவாக சொல்கிறேன் என்று பல தகவல்களைச் சொல்லி, ஒரு முடிவில் போய் நிறுத்தினால், “நல்லாருக்கு, ஆஹா, அச்சோ” போன்று ஒருவார்த்தையில்தான் நம்மிடம் எதிர்வினைகள் வெளிப்படும்.
விரிவாக எழுதும் நினைத்தும் உந்துதல் வரவில்லை. ஆசிரியரின் தளத்தில் பாராட்டி வந்த கடிதங்களை வெளியிட்டிருந்தார். தெரிந்த பெயர்கள் இருந்தன. அவர்கள் ஓரிரு வரிகளில் குறைகளைச் சுட்டிக்காட்டி மற்றபடி நன்றாகத்தான் இருக்கிறது எனச் சொல்லியிருக்கின்றனர். ஆச்சர்யமே…
நன்றி,
சங்கர்
***
ஜெ,
கறாரான விமர்சனம் வேண்டும் என்று கோரி முன்வைக்கப்பட்ட கதைகளில் ஒன்று போயாக் என்பதனால் என் கருத்தைச் சொல்கிறேன்.
அ. இந்தக்கதையின் மிகச்சிறந்த அம்சம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களம். புனைவு எழுத்துக்கு மிகமிக உதவியானது இது. உண்மையில் இக்கதையின் ஒரே நல்ல விஷயமும் இதுதான். அந்தச்சூழலும் அங்குள்ள மனிதர்கள் பற்றிய சித்தரிப்புகளும்
ஆ. ஆனால் இக்கதையிலுள்ள பிரச்சினைகள் பல. ஒன்றுக்குமேல் படிமங்களை கதைக்குள் திணித்தது முக்கியமான குறை. முதலைகள் ஒரு நல்ல படிமம். அங்கேதான் கதை ஆரம்பிக்கிறது. “அவரவர் உலகின் எல்லைகள்’ என்று அதை சொல்லியும் விட்டார் ஆசிரியர். ஆனால் முதலைகளின் கதையை அப்படியே விட்டுவிட்டார். அந்த பழங்குடிப்பெண்ணின் காதல், அவர் அப்பா என கதை வேறு ஒரு உலகுக்குச் செல்கிறது. அவர் அப்பா மந்திரவாதம் செய்து ஆண்குறி வளரச்செய்வதைப்பற்றி கதை செல்கிறது. ஒரு சிறுகதை என்பது ஒரு கருதான். ஒரு படிமம்தான். எல்லைமீறல், முதலை, பழங்குடிப்பெண் மூன்றும் மட்டுமேகொண்டு கதை நெய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஒரு தொன்மமோ நம்பிக்கையோ குலவழக்கமொ ஏதோ ஒன்று மேலும் அம்மக்களை முதலையுடன் இணைத்திருக்கலாம்.
இ. சினிமாவில் ஒரு ரூல் உண்டு. கதைக்குள் லேட்டாக நுழை. மூன்னாடியே வெளியேறு. அதுதான் சிறுகதைக்கும். பிரச்சினை எல்லைமீறல் என்றால் கதையை அதிலேயே ஆரம்பித்திருக்கவேண்டும். அங்கே கதாநாயகன் வருவதில் அல்ல. முதலை எல்லைமீறலைக் குறிக்கும் படிமம் என்றால் அது ஒரு பின்னணிச்செய்தியாக போகிறபோக்கிலே சொல்லப்பட்டிருக்கவேண்டும். சும்மா வாசித்தால் ஒரு பின்புலவிளக்கமாகவும் மேலே கற்பனைசெய்தால் படிமமாகவும் அது தெரிந்திருக்கவேண்டும்
இ. எல்லைமீறல்தான் கதை என்றால் எல்லைமீறலுக்கான உந்துதல் அதை ஜெயிப்பதற்கான முயற்சியும் போராட்டமும் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அந்தப்பெண் மீதான கவர்ச்சி படிப்படியாக உருவாவதைச் சொல்லியிருக்கலாம்
ஈ. கடைசி வரியிலே ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார். அதுதான் கதையின் மையம் என்றால் முதலையெல்லாம் தேவையே இல்லை. அது ஒரு சப்பைக்கதை.
உ. எழுத்துப்பிழைகள் நிறையவே உள்ளன. றகர ரகர வேறுபாடுகள் கவனிக்கப்பட்டிருக்கலாம்
ராமச்சந்திரன்
***