ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8

oru

ஒரு கோப்பை காபி [சிறுகதை]

சார் ,

 

ஒரு கோப்பை  காபி  கதையில் மகனும்  அவனது முன்னாள்  மனைவியின்  அம்மாஅப்பாவின் தொடர்ச்சி , காலமாற்றம்  இரண்டு பேரையும் மாற்றியுள்ளது  , அவள் (  மேலை பெண் )  உன்னுடன்  எப்போதும் உடன் இருப்பதாக நினைத்து  கொள் , உன் மீது கோபமில்லை  என்கிறாள்  , அவன் என்னை மன்னித்து  விடு என்கிறான்  , அப்பா அம்மாவின் மன்னிப்பு கேட்பது போல , அம்மாவும் அப்பாமீது  கோபம் இல்லாது இருப்பது போல …

அதாவது அம்மா அவள் முன்னாள் மனைவி ,அவன் அப்பா , தன் முன்னாள் மனைவி வழியாக அப்பாவை வெறுக்காத அம்மாவை கண்டு சமாதானமடைகிறான்  .

அப்பாவை நீ கொன்றதாக  நினை  என்பதன் அர்த்தம் நீ அப்பாவின்  தொடர்ச்சி என்பது , அதை அவன் உணர்ந்து கொள்கிறான் அல்லது அவள் உணர்ந்ததை  அறிகிறான்

ஒரு புனைவு அல்லது ஏதேனும்  பதிவை விமர்சிக்கும் போது அதை விரிவாக வைத்து முன்வைக்கலாம்  , ஆனால் அந்த பதிவுகள் பற்றிய அவதானங்களை  (  வாசிப்பில் விளைந்த புரிதலை )  எழுதும் போதும் அப்படி விரிவாக எழுத வேண்டுமா  ? ஏனெனில் 4 வரியில்  சொல்லிவிட  முடியும் என்பதை ஒரு பக்கம் அளவிற்கு விரிவாக்கி சொல்கிறார்களோ என தோன்றுகிறது , அதாவது ஒரு அவதானமாக  இல்லாமல் அவர்களின் பார்வையில் கிடைத்த முற்றிலும் புதிதான ஒன்றை முன்வைக்கிறார்களோ  என தோன்றுகிறது , அதாவது மூல  பதிவும் வாசக  பதிவும் வேறு வேறு என்பதாக , இது ஒருவகையில் தவறு என நினைக்கிறேன் ..

ராதாகிருஷ்ணன்

*

அன்புள்ள ஜெயமோகன்  –

 

இந்த கடிதத்தை எழுதுவதற்கு முன் மீண்டும் “ஒரு கோப்பைக் காபி  ” படித்தேன்.  பிறர் மாற வேண்டும்  என்று  நினைக்கும் , அதை  ஒட்டி  காரியங்களை  செய்யும்  மனது  அவர்  ஒரே  அடியாய்  மாறி  முன்னெடுத்து  விட்டால்  பதறுகிறது . இதை  நானே  என்  வாழ்வில் பல முறை  பார்த்திருக்கிறேன் .தான் ஓட்டும் வண்டி தன் கட்டுப்பாட்டில் இல்லை என்னும் பரிதவிப்பு . அம்மாவுக்கு  குற்ற  உணர்ச்சி  இல்லையே  என்பது  என்  கட்டுப்பாட்டுக்குள்  நீ  இல்லையே  எனும்  கேள்வியின்  இன்னொரு  வடிவமாய்  தான்  நான்  பார்க்கிறேன் .

 

கதையில் வரும் தாய் என்னை பொறுத்த மட்டில் புத்திசாலி.  செத்த  கணவன்  பார்முலாவை தான்  ஏறக்  குறைய  மகனும்  பின்பற்றுவான்  என்பது அவளுக்கு யூகிக்க முடிந்திருக்கிறது.  “People fall into the same trap”  என்பார்கள். ஒரே பிரச்சனை வேறு வடிவில் வேறு மனிதர்களால் வெவ்வேறு   சூழ்நிலைகளில் வந்து கொண்டே  இருக்கும் . அது  ஒரு  pattern. நல்ல  வேலையாய் அவள் அந்த பேட்டர்னை உடைக்கிறாள் . அது  ஒரு விடுதலை உணர்வு என்பதை விட தான் ஒன்றை கான்ஷியஸாக செய்கிறோம்  என்ற  தன்னம்பிக்கை மற்றும் சந்தோஷம்.

 

அவள் பறக்க வேண்டும் என்பதே என் ஆசை .

 

 

நன்றி

ரஞ்சித் குமார் மோகனசுந்தரம்

*

அன்புள்ள ஜெ

 

ஒருகோப்பை காபி எனக்கு நினைவூட்டிய சில கதைகள் உள்ளன. ஒன்று தாயார் பாதம். அதிலுள்ள அன்னை தன்னை வேறு ஒருவகையில் விடுவித்துக்கொள்கிறாள் என நினைக்கிறேன். இதிலுள்ள அன்னை இன்னொரு வகையில் அதைச்செய்கிறாள். அது நமக்கு ஏற்புடையதாக இருக்கும்போது இது மட்டும் ஏன் உறுத்துகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி என நினைக்கிறேன். அது நமக்குள் இருக்கும் ஆண் அகங்காரம்தான்

 

பிள்ளைகள் ஒரு கட்டத்தில் அம்மாவை தன் அப்பாவின் அதே பாணியில் நடத்த ஆரம்பிப்பதை நம் குடும்பங்களில் எல்லாம் காணமுடிகிறது. அந்தமனநிலைதான் இக்கதையில் உள்ளது. மார்த்தா உளவியலாளர் என சிலர் எழுதியிருந்தார்கள். அப்படி தோன்றவில்லை. அவள் அமெரிக்கா உருவாக்கிய சுதந்திரமான பெண் என்ற கருத்தின் ஒரு மிகச்சிறந்த வடிவம் அவ்வளவுதான்

 

ஆனந்த் சுந்தரராஜன்

 

*

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இயக்குனர் மணிரத்னம் அவர்களின் அற்புத படைப்பு ”உயிரே”. லொட லொடவென்று பேசும் ஷாருக். அதிகம் பேசாத மனிஷா. படம் துவங்கி ஐந்து நிமிடம் வரை மூச்சு விடாமல் பேசும் நாயகனிடம், நாயகி பேசும் முதல் வசனம்,ஒரே வசனம், மிக சுருக்கமான வசனம், ”ஒரு கோப்பை தேநீர்”. தேசத்தின் மையத்திலிருந்து அவன். தேசத்தின் ஓரத்திலிருந்து அவள். கருப்பு சட்டை சிவப்பு ஸ்வெட்டர். சிவப்பு சுடிதார் கருப்பு சால்வை.முதல் காட்சியிலிருந்து இப்படி தொடர் முரணியக்கங்களால் நகரும் திரைக்கதை. அரசியல், ஆக்ரமிப்பு, புரட்சி, லட்சியவாதம், தீவிரவாதம்,தேசப்பற்று, சமூகம், வன்முறை என்று பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அவர்களால் கடைசி வரை  ஒரு கோப்பை தேநீரை அருந்த முடியாமல் வெடித்து சிதறுகிறார்கள். ஆணோ பெண்ணோ, புதுதில்லியோ அஸ்ஸாமோ, புது நாகரீகமோ தொன்மங்களோ, எதுவாகயிருப்பினும் அமர்ந்து ”ஒரு கோப்பை தேநீர்”அருந்தியபடி மனம் திறந்து பேசினால் புதிய திறப்புகள் நிகழும்.
”ஒரு கோப்பை காபி” – மென்மையாய் தொடங்கி திரில்லர் வடிவத்தில் சென்று தத்துவமாய் முடிகிறது. மகா விரும்பியது ஒரு எலிசபெத் மகாராணி சமையலறையில் இந்திய காபி போடுவதை. அதனாலேயே அவர்கள் பிரிகிறார்கள். சாதாரண மனிதர்கள் மட்டும்தானா என்ன? மகாகவி பாரதிக்கே சிஸ்டர் நிவேதிதாவிடம் உரையாடிய பின்புதான் செல்லம்மாவின் அருமை புரிகிறது. காந்தியும் கஸ்துரிபாயை அடித்தவர் தானே?
கதையில் அம்மா மாறுகிறாள் . மகா மாறுகிறான். மனம் திருந்தி மன்னிப்பு கேட்கிறான். ஆன்மிகம் ஒன்றே மாறாதது என்று நீங்கள் சொல்வதுண்டு. அத்தரிசனம் கிடைத்துவிட்டால் அலைபாயும் மனதும், கலங்கும் உள்ளமும் தெளிவடைகிறது. கோபங்கள், வன்மங்கள், துரோகங்கள் மறைகிறது. புன்னகை பிறக்கின்றது.
இந்திய சமூகம் உலகம் முழுதும் பரவி வரும் சூழலில்,உலக கலாச்சாரம் இன்று இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கும் நேரத்தில் , விவகாரத்து சதவீதம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் இக்காலங்களில், இச்சிறுகதை ஒரு முக்கியமான சிக்கலுக்கு தீர்வை சொல்கிறது. அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் சரி, மனம் திறந்து பேசி தீர்ப்பதற்கு தேவை ஒரு கோப்பை தேநீர் அல்லது ஒரு கோப்பை காபி மட்டுமே.
(குறிப்பு : தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஆவின் பால் பாக்கெட் என்பதால் பல தலைகள் தப்பியதாக செய்தி.
வெளிநாடுகளில்,  பிளாஸ்டிக் பால் டப்பாக்களால் கனமான ஆபத்து தொடர்கிறது)
நன்றி,
அன்புடன்,
ராஜா 
ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 6
ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 5
ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4
ஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3
ஒரு கோப்பை காபி- கடிதங்கள் 2
ஒரு கோப்பை காபி – கடிதம் 1
முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28
அடுத்த கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2