வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 1

blபித்தளை எண்ணெய்க்குடங்களும் ஏற்றுவிளக்குகளின் செம்மணிச்சுடர்களுமாக விளக்கேற்றிகள் அரண்மனைத் தூண்களிலிருந்த பொருத்துவிளக்குகளையும், நிலைவிளக்குகளையும், தட்டுவிளக்குகளையும், மேலிருந்து தொங்கிய தூக்குவிளக்குகளையும், அறைமூலைகளில் முத்துச்சிப்பிகள் மாற்றொளி பரப்ப நின்ற கொத்துவிளக்குகளையும் சுடர் பொருத்தியபடியே கடந்து சென்றதை தாரை நோக்கிநின்றாள். காட்டெரி பரவிச் செல்வதுபோல அரண்மனையின் சாளரங்கள் அனைத்தும் செவ்வொளி கொண்டன. சுவருக்கும் கூரைக்குமான இடைவெளிகளினூடாக அனல்சட்டங்கள் அரையிருள் பரவியிருந்த வானில் நீட்டிப் புதைத்திருந்தன. அவற்றினூடாக பறந்து சென்ற பறவைகள் கனல்கொண்டு இருளில் அமிழ்ந்தன.

பொழுதொலி கார்வை கொண்டது. பறவைக்குரல்கள் கலைந்து செறிந்து முழக்கமென்றாகி அவியத் தொடங்கின. தொலைவில் ஒலித்துக்கொண்டிருந்த முரசொலிகளும் சகடங்களின் ஓசைகளும் அருகிலெனச் சூழ்ந்தன. இடமயக்கு விழிமயக்குடன் கலக்க ஒவ்வொன்றும் பிறிதொன்றென ஆயின. உப்பரிகை மேடையில் தூண்சாய்ந்து நின்றபடி கீழே விரிந்திருந்த பெருமுற்றத்தை தாரை நோக்கிக்கொண்டிருந்தாள். ஏவலரின் தலைப்பாகை வண்ணங்கள் மேலும் துலக்கம் கொண்டன. செந்நிறப் புரவிகளும் பல்லக்குகளின் திரைச்சீலைகளும் வண்ணமிழந்து வெண்மையோ என எண்ணச் செய்தன.

கீழே வெவ்வேறு செயல்களில் அலைந்துகொண்டிருந்த ஒவ்வொருவரும் அதுவரை இருந்த சோர்வை உதறி விரைவும் உள்ளுவகையும் கொண்டதுபோல் தோன்றினர். நோக்கியிருக்கவே இருள் மூடியது. ஒவ்வொன்றும் அதுவரை இல்லாத அறியா ஆழங்களை சென்றடைந்தன. ஒவ்வொரு பொருளும் பிறிதொரு பொருள்சூடி அமைந்திருந்தன. அந்திக்கு எப்போதுமிருக்கும் தனிமை. அதனுடன் அறியா இசை ஒன்று கலந்துவிட்டதுபோல. மச்சநாட்டில் அவளுடைய நதிக்கரை ஊரில் அந்திக்குரிய இசை உண்டு. காலை கொம்புகளின் ஓசையாலானது. உச்சிமயக்கம் சுருளவிழும் குழலோசை. அந்தி எப்போதும் தேம்பி மயங்கும் சிறுகுழலின் ஒலி அமைந்தது. வானில் கரையும் புகைபோன்ற இசை அது.

தாரை பெருமூச்சுவிட்டபடி முற்றத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். காவல்மாடத்திற்கு அப்பால் முற்றத்தின் முதல் எல்லையில் விகர்ணனின் புரவி தோன்றியது. நீள்மூச்சுடன் எழுந்து கைவளை ஒலிக்க கூந்தலை அள்ளி காதோரம் செருகி ஆடை திருத்திக்கொண்டு அவள் இடைநாழியை நோக்கி சென்றாள். அரண்மனை முகப்பில் புரவியில் வந்திறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு படிகளில் ஏறி அவன் கூடத்தை அடைந்தபோது அவள் மரப்படிகளின்மேல் கைக்குமிழைப் பற்றியபடி நின்றிருந்தாள். அவனைக் கண்டதும் புன்னகைத்தாள். அவனும் புன்னகையுடன் வந்து படிகளிலேறி அவளை அணுகி “ஏன் இங்கு நிற்கிறாய்?” என்றான். “வெறுமனே இவ்வறைகளில் காத்திருப்பதன்றி பிறிதென்ன செய்ய முடியும்? உள்ளே காத்திருப்பதற்கு உப்பரிகையில் காத்திருப்பது மேலல்லவா?” என்றாள்.

விகர்ணன் சிரித்தபடி அவள் தோளைப்பற்றி “வருக!” என்றான். அவள் அவன் கையை விலக்கியபடி “இடைநாழியில் ஏவலர் மட்டுமல்ல மூத்த அரசியரும் வரக்கூடும்” என்றாள். “ஏன், வந்தாலென்ன?” என்று அவன் கேட்டான். “அவர்களனைவரும் காமவிலக்கு நோன்பு கொண்டவர்கள்…” என்றாள். “அவர்களின்பொருட்டு நாமும் அதை கொண்டுள்ளோம்” என்றான் விகர்ணன். “அவர்கள் கொழுநரை சந்திப்பதே இல்லை” என்றாள் தாரை. “ஆம், அது முறை. ஆனால் நீ என்னை விலக்குவதற்கு பொருளேதுமில்லை” என்றான். அவள் குழலைப்பற்றி “மலர்மணம்…” என்றான்.

“நாம் இளையோரல்ல” என்று அவள் அவன் கையை தட்டினாள். அவன் புன்னகைத்து “இந்த எல்லையைக் கடந்து மேலேறும்போது எப்போதும் இளையோனாகவே உணர்கிறேன்” என்றான். அவள் “இதுவும் பலமுறை சொன்ன மொழி” என்றாள். “மெய்யாகவே இங்கு உன்னுடன் இருக்கையில் மட்டுமே இப்புவியில் உவகை என ஒன்றுண்டு என அறிகிறேன். எங்கும் தனித்தவனாக, எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாக, எங்கோ செல்வதற்கு காத்திருப்பவனாக உணர்கிறேன். மெல்லிய உளத்தவிப்பின்றி எவர் முன்னும் அமர்ந்திருக்க என்னால் இயலவில்லை” என்றான் விகர்ணன்.

அவளுடன் நடந்தபடி “நான் எப்போதும் புரவிமேல் இருக்கிறேன் என்று உடன்பிறந்தார் நகையாட்டு உரைப்பதுண்டு. புரவி மீதிருக்கையில் ஓரிடத்திலும் நில்லாமல் ஒன்றிலிருந்து ஒன்றென உளம் தொட்டுச்செல்ல இயல்கிறது. அப்போது மட்டுமே என் அகத்தில் ஏதோ ஒன்று சற்றேனும் நிலைகொள்கிறது. ஓரிடத்தில் இருக்கையில் என்னுள் எழும் ஊசலாட்டம் நிலைகுலைய வைக்கிறது. பொறுமையிழந்து எழுந்து நின்று நெஞ்சிலும் தலையிலும் அறைந்துகொண்டு கூச்சலிட வேண்டுமென்று தோன்றும். பாய்ந்து எங்காவது தலையை முட்டிக்கொள்ள வேண்டுமென்று, எவரையாவது அறைந்து வீழ்த்த வேண்டுமென்று வெறி எழும்” என்றான்.

அவன் உணர்வை எளிதாக்கும்பொருட்டு சிரித்தபடி “இப்போது அந்த வெறி இல்லையே?” என்று அவள் கேட்டாள். அவனும் சிரித்தபடி “பார்த்துக்கொண்டே இரு. இன்னும் சில நாட்களில் பித்தனாகி இந்நகரின் தெருக்களில் அலையப்போகிறேன்” என்றான். தாரை அவன் கைகளைப்பற்றி “என்ன இன்று சற்று மிகையாக?” என்றாள். அவன் உணர்வெழுச்சி சற்றே தணிந்து “சற்று முன் செய்தி வந்தது. உபப்பிலாவ்யத்திலிருந்து இளைய யாதவர் கிளம்பி வந்துகொண்டிருக்கிறார். பாண்டவர்களிடமிருந்து நம் அவைக்கு செய்தி கொண்டுவருகிறார்” என்றான். “இளைய யாதவரா, ஏன்?” என்று தாரை கேட்டாள். “பாண்டவர்களின் தூதராகவா வருகிறார்?” அவன் “ஏன்?” என்றான். “அவர் யாதவபுரியின் மணிமுடி சூடிய அரசர் அல்லவா?” என்றாள் தாரை.

“இல்லை, துவாரகையின் மணிமுடியைத் துறந்து மைந்தனை அமர்த்திவிட்டு கிளம்பியிருக்கிறார். இன்று அவருடன் சாத்யகி அன்றி யாதவர் எவரும் இல்லை” என்றான் விகர்ணன். தாரை “ஆம், அவ்வாறே நிகழுமென்று நான் எதிர்பார்த்தேன்” என்றாள். “அவர் வருவது ஏன் என்பதும் உளவுச்செய்திகளினூடாக தெரிந்துவிட்டது. இங்கிருந்து சஞ்சயன் அங்கு தூது சென்றிருக்கிறான். தந்தையின் தனிப்பட்ட மன்றாட்டை அங்கு அவைமுன் வைத்திருக்கிறான். எந்நிலையிலும் பாண்டவர்கள் தங்கள் உடன்குருதியினரான கௌரவர்களுக்கு எதிராக படைக்கலம் ஏந்தலாகாதென்று தந்தை கண்ணீருடன் மன்றாடியிருக்கிறார். அதை ஏற்று அவ்வாறே என யுதிஷ்டிரர் உறுதி அளித்திருக்கிறார்.”

தாரை அவன் எண்ணியதுபோல் முகம் மலரவில்லை. புருவங்கள் சுளிக்க “அதன் பின் என்ன?” என்றாள். அவள் முகம் நோக்கி உளம் குழம்பி குரல் தழைய “அவ்வுறுதிமொழியுடன் இங்கு வருகிறார் இளைய யாதவர்” என்றான். தாரை “இங்கிருக்கும் நிலை அவருக்குத் தெரியாதா என்ன? அவ்வுறுதிமொழியை பேரரசருக்கு யுதிஷ்டிரர் அளிப்பதென்றால் ஒன்றே பொருள், தங்கள் மண்ணுரிமையை முற்றாக பாண்டவர்கள் கைவிடுகிறார்கள்” என்றாள். “ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றான் விகர்ணன். அவன் உண்மையில் அப்போதுதான் அதை உணர்கிறான் என தெரிந்தது.

“அவ்வாறெனில் எதற்காக இளைய யாதவர் இங்கு தூது வருகிறார் என்று புரியவில்லை” என்றாள் தாரை. சிற்றறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் எடையுடன் அமர்ந்தபடி “நீ என்ன எண்ணுகிறாய்?” என்று விகர்ணன் கேட்டான். “நமக்கு முன் அகச்சான்றின் வினாவுடன் வந்து நிற்க எண்ணுகிறார். தந்தையின் ஆணையை தலைமேற்கொண்டு போரைத் தவிர்ப்பதாக யுதிஷ்டிரர் அறிவித்திருப்பதை நம் அவையில் சொல்வார். அதே தந்தையின் ஆணையை துரியோதனரும் கடைபிடிக்க வேண்டுமென்று கோருவார்.” விகர்ணன் கசப்புடன் சிரித்து “உளச்சான்றா? இவர்களுக்கா?” என்றான். பின்னர் “அவர் அறுதியாகக் கோருவது என்னவாக இருக்கும் என கருதுகிறாய்?” என்றான். “பாதி நாடு, இந்திரப்பிரஸ்தம்” என்றாள் தாரை. “அதை எப்படி மூத்தவர் ஏற்பார்? அவர் இன்றிருக்கும் நிலை நாடறிந்தது” என்று விகர்ணன் சொன்னான்.

தாரை “அதையே நானும் எண்ணுகிறேன்” என்றாள். விகர்ணன் மஞ்சத்தில் மெல்ல படுத்து முனகியபடி உடலை விரித்துக்கொண்டான். “நான் எண்ணி நோக்குவதை விட்டுவிட்டேன். எத்திசையில் எழுந்தாலும் சென்றடைய முடியாத முடிவிலியே தெரிகிறது. எனது எண்ணங்களோ விசை குறைந்தவை” என்றான். தாரை “நாம் தொடங்குமிடம் தெளிவாக இருந்தால் போதும், அது ஒன்றே நாம் செய்ய வேண்டியது. எது அறமோ அதில் உறுதி கொண்டிருப்போம். எங்கும் தயங்காமல் அதை முன் வைப்போம்” என்று அவன் அருகே சிறுபீடத்தில் அமர்ந்தபடி சொன்னாள்.

அவன் கண்களை மூடிக்கொண்டு “நம் சொல்லுக்கென்ன மதிப்பு?” என்றான். தாரை “அறம் எவர் நாவில் எழுந்தாலும் தனக்குரிய மதிப்பை கொண்டிருக்கிறது. ஒரு குரலேனும் இந்த அவையில் எழுகிறதென்பதே தெய்வங்களுக்கு உகந்ததாக இருக்கும். நீங்கள் அதன்பொருட்டு பழிக்கப்பட்டாலும் வெறுக்கப்பட்டாலும் ஏன் கொல்லப்பட்டாலும்கூட அது முறையே என்றாகும். பெரிய நோக்கங்களுக்காக நின்றிருப்பதிலும் மடிவதிலும் இருக்கும் தன்னிறைவு பிறிதெதிலும் இல்லை” என்றாள்.

“ஆம், இத்தனை அலைக்கழிப்புகளுக்கு மத்தியில் என்னை நிலைகொள்ளச் செய்வது அந்த எண்ணம்தான்” என அவன் விழிகளை திறக்காமலேயே சொன்னான். “நான் என எண்ணும்போது என்னால் பெருமிதம் கொள்ள இயல்கிறது. இன்று அஸ்தினபுரியில் நெஞ்சில் கைவைத்து நாணமோ தயக்கமோ இலாது தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ள தகுதிகொண்ட ஆண்கள் சிலர் மட்டுமே உள்ளனர்” என்றான். “நான் எனும் சொல்லைப்போல தூயது பிறிதில்லை என்று என் அன்னை சொல்வாள்” என்றாள் தாரை. “தன்முனைப்பு தீயது, ஆனால் விழைவிலாத தன்முனைப்புபோல் நலமியற்றுவது பிறிதொன்றுமில்லை.” அவன் கண்களை மூடியபடியே பெருமூச்சுவிட்டான். அவர்கள் சற்றுநேரம் தங்களுக்குள் சொல்லுழன்று அமர்ந்திருந்தனர்.

பின்னர் தனக்கே என “மீண்டும் மீண்டும் அவைகளில் எது அறமென்றும் முறையென்றும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றான் விகர்ணன். “நேற்று தூதரவையிலும் சொன்னேன். இந்நிலம் பாண்டுவின் மைந்தருக்குரியது. எந்நிலையிலும் இதை முழுதாள கௌரவருக்கு உரிமையில்லை. போரில் ஒருவேளை பாண்டவர்களை முற்றழித்து இந்நிலத்தை நாம் கொண்டால்கூட நம் குடிகளின் நெஞ்சிலிருந்து இது அவர்களின் நிலமென்னும் எண்ணத்தை நம்மால் அகற்ற இயலாது. நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்தும் அகற்ற இயலாது. அதை அகற்றும்பொருட்டு ஆயிரம் ஊடுவழி சூழ்வோம். அதனூடாக இது அவர்களின் நிலமென்பதை மீள மீள நாமே நிறுவிக்கொண்டிருப்போம்.”

“நம் கொடிவழிகள் அவ்வச்சத்தையும் தயக்கத்தையுமே நம்மிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள் என்றேன். ஒருபோதும் கௌரவர்களின் கோல் இம்மண்ணில் நிலைக்காது என்றபோது மூத்தவர் என்னை நோக்கி சிரித்து மூடன் என்றார். ஆம், மூடன் சொல் இது. பாண்டவர்களை போரில் வெல்ல இயலாதென்று மீண்டும் சொல்கிறேன். அவையிலும் தனி அவையிலும் மீள மீள அதையே சொல்வேன். ஏனெனில் இதுவரையிலான நிகழ்வுகள் அனைத்துமே ஊழ் அவர்களின் தரப்பிலிருப்பதை காட்டுகின்றன. அத்துலா நம்மை நோக்கி சரியவேண்டுமென்பதற்கான எந்த முறைமையும் கண்ணுக்குத் தென்படவில்லை. ஊழை ஆள்பவராக அவர்கள் தரப்பில் இன்று இளைய யாதவர் நின்றிருக்கிறார் என்றேன்.”

“இன்று காலை மீண்டும் மூத்தவரிடம் மன்றாடினேன், முற்றழிவை தவிர்ப்பதற்கேனும் நாம் அவர்களுக்குரிய நிலத்தை கொடுத்தாகவேண்டும் என்று. காலை களப்பயிற்சியின்போது மூத்தவரிடம் பேச வாய்த்தது. அவர் கதையுடன் இருந்தார். இதற்குமேல் ஒரு சொல்லில்லை மூத்தவரே, முனிந்தால் என் தலையை அடித்து உடையுங்கள் என்றேன். அவர்களுக்குரிய நிலத்தை நாம் அளிப்போம். அதனூடாக அறம் காத்தோம் எனும் பெரும்மதிப்பை அடைவோம். நம் குடிகளை முற்றழிவிலிருந்தும் காத்துக்கொள்வோம். பிறிதொரு வழி உங்கள் முன் இல்லை. பழிகொண்டு அழிய வேண்டாம் என்றேன்.”

அவன் கசப்புடன் சிரித்து ஒருக்களித்து “முன்பெல்லாம் என் மீது சினந்தார்கள். என்னை முனிந்து ஒதுக்கினார்கள். இப்போது எளிய நகையாட்டினூடாக என்னை கடந்து செல்கிறார்கள். என் சொற்களைக் கொண்டு விளையாடுகிறார்கள். அவர்கள் என்மேல் சினம் கொண்டபோது எப்படியோ என் சொற்கள் அவர்களுக்குள் கடக்கின்றன என்று எண்ணினேன். இன்று வெறும் அவைநகையாட்டென மாறி நின்றிருக்கையில் முற்றிலும் பொருளற்றவனாக உணர்கிறேன்” என்றான். “ஆம், உங்களை ஓர் இளியன் என சமைத்துவிட்டனர். இன்று காலை ஆலயம் செல்லும் வழியில் ஒரு சூதன் அப்படி ஒரு பாடலை பாடுவதை கேட்டேன். நம் வீரர்கள் கூடிநின்று அவனை ஊக்கி கைதட்டியும் சிரித்தும் மகிழ்ந்தனர்” என்றாள் தாரை.

“இன்று மாலை முடிவெடுத்தேன், இனி ஒருபோதும் இந்நெறியை இவர்கள் முன் சொல்வதில்லை என்று. நகையாட்டுக்கு இலக்காகும் நெறி இழிவுபடுத்தப்படுகிறது. பின்பு அதில் அனலென ஏதும் எஞ்சியிருப்பதில்லை” என்றான் விகர்ணன். “உளக்கொதிப்பை ஆற்றுவதற்காக புரவியிலேறி நகரை சுற்றிவந்தேன். கிழக்குத்திசை காட்டுக்குள் நுழைந்து நெடுந்தூரம் சென்றேன். இங்கு திரும்பிவர வேண்டியதில்லை, அப்படியே சென்றுவிடலாம் என்று எண்ணினேன். பின்னர் ஏதோ ஓர் உள்ளுணர்விலென புரவியை திருப்பினேன். இங்கே எனக்கு ஏதோ செய்தி இருக்கிறதென்று தோன்றியது. நகர்நுழைந்தபோது அதை உணர்ந்தேன்.”

“கோட்டை முகப்பிலேறி அங்கிருந்த ஒற்றனிடம் என்ன நிகழ்கிறது என்றேன். அவன்தான் இளைய யாதவர் நகர்புகவிருப்பதை கூறினான். கோட்டை முகப்பில் இளைய யாதவருக்குரிய புதிய கொடி ஒன்றை கொண்டுவந்திருந்தான். அது துவாரகையின் கருடக்கொடி அல்ல. யாதவ குலத்துக்குப் பொதுவான பசுக்கொடி. இப்போது இளைய யாதவர் துவாரகையின் தலைவரல்ல என்று அவனிடமிருந்து அறிந்தேன். விதுரரை சென்றுகண்டு முழுச் செய்தியையும் அறிந்துவிட்டு வந்தேன்” என்றான் விகர்ணன்.

தாரை “இது ஒருவகையில் நற்செய்தியே” என்றாள். “இதனால் என்ன விளையுமென்று என்னால் கணிக்க முடியவில்லை. இச்செய்தியுடன் வெறும் ஒரு தூதன் வருவான் எனில் அவனால் இங்கு இயற்றப்படுவதென எதுவுமில்லை என்றே சொல்வேன். வருபவர் இளைய யாதவர் என்பதனால் ஏதேனும் நன்று நிகழக்கூடுமென்று கருதுகிறேன்.” விகர்ணன் “நன்றென எது நிகழும்?” என்று கேட்டான். “ஒருவேளை பிதாமகர் உளம் திரும்பக் கூடும். இப்போரில் தான் நேரிடையாக இறங்க இயலாதென்று அவர் உரைப்பாரெனில் அரசர் மற்றொன்றை எண்ணியே ஆகவேண்டும்” என்றாள்.

“அங்கர் இன்று போரிலிறங்கும் நிலையில் இல்லை. அவரால் மதுவின்றி ஒருபொழுதும் கடக்க முடியவில்லை என்றார்கள். அவரை ஷத்ரிய அரசர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தோன்றவில்லை. இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் ஷத்ரியப் பேரவையில் பீஷ்மரோ அங்கரோ படைமுகம் நிற்பார்கள் என்று சொல்லித்தான் நம் அரசர் முதன்மை கொள்ளமுடியும். அவர்கள் இருவரும் படைநடத்த வரமாட்டார்கள் என்றால் ஷத்ரியர்கள் போருக்கு தயங்கக்கூடும். போருக்கு அவர்கள் எழுந்தார்கள் என்றாலும்கூட நம் அரசருக்கு முதன்மை அமையாது. சல்யரோ ஜயத்ரதரோ அஸ்வத்தாமரோதான் முதன்மை கொள்வார்கள். அதை நம் அரசர் விரும்பமாட்டார்.”

விகர்ணன் “அவர்களும் நம் அரசருக்கு அணுக்கமானவர்கள் அல்லவா?” என்றான். “நீங்கள் அரசர்களின் உள்ளம் அறியாத எளியவர்” என்றாள் தாரை. “அரசர் எவராயினும் அவர்களின் பிறரறியா முதன்மைக் கனவு மும்முடி சூடி பாரதவர்ஷம் மீது கோலோச்சுவதே. எவர் படைமுதன்மை கொண்டாலும் அவரே பாரதவர்ஷத்தை வென்றார் எனக் கொள்ளப்படும்.” விகர்ணன் “அங்கர்?” என்றான். “அவர் எளிய அரசர் அல்ல. பெருங்கொடையாளர். அவர் அளிக்கும் முதன்மைக் கொடையை பெற்றுக்கொள்பவர் நம் அரசரே” என்றாள்.

விகர்ணன் “இவையனைத்துமே வெறும் வாய்ப்புகள்தான், பகடையின் பக்கங்கள்போல” என்றான். தாரை புன்னகைத்து “இன்று இந்த அரண்மனையில் போருக்கு எழுபவர்கள், போர்ஒழிய விழைபவர்கள் என அனைவருமே இத்தகைய எளிய வாய்ப்புகளில் தொற்றிக்கொண்டுதான் எண்ணம் வளர்க்கிறார்கள்” என்றாள். “நான் என்ன செய்வது?” என்று விகர்ணன் கேட்டான். “நீங்கள் இயற்றுவதற்கு ஒன்றே உள்ளது. இளைய யாதவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்று தங்கவைக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடன் இருங்கள். அவையில் அவர் எழுந்து தன் தரப்பை கூறுகையில் கௌரவர் பக்கத்திலிருந்து அவரை ஏற்றுக்கொண்டு பேசுங்கள். இங்கிருந்து எழும் அறத்தின் குரலாக ஒலியுங்கள்” என்றாள் தாரை.

விகர்ணன் “ஆம், இப்பொழுதுபோல பிறிதெப்போதும் நான் செய்ய வேண்டியது தெளிவாக இருந்ததில்லை” என்றான். தாரை அவன் முழங்காலில் தலை வைத்து அவன் கால்விரல்களைப் பிடித்து இழுத்து விளையாடியபடி “அறத்தைச் சார்ந்திருப்பதற்கு நமக்குக் கிடைக்கும் பரிசென்பது நாம் கலங்காதிருக்க முடியுமென்பதுதான். தீதைச் சார்ந்திருத்தல் எத்தனை வலுக்கொண்டதாயினும் எத்தனை சொற்பெருக்கால் நிலைநிறுத்தப்படினும் ஆழத்தில் கலக்கம் கொண்டதாகவே இருக்க இயலும்” என்றாள். “ஆம்” என்றபின் விகர்ணன் அவள் குழலை மெல்ல நீவினான். நெற்றி வகிட்டின்மேல் சுட்டுவிரலை வைத்து வருடி குழல்பற்றி அளைந்தான். அவள் விழிதாழ்த்தி அவன் விரல்களுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.

விகர்ணன் குனிந்து நோக்கி “சிறுமியைப்போலவே இருக்கிறாய்” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “ஒவ்வொருமுறையும் இவ்வெண்ணம் எழுகிறது, நீ ஒரு சிறுமி என்று” என விகர்ணன் சொன்னான். அவள் சிரித்து “நன்று, பெண்கள் கேட்க விழையும் சொல்” என்றாள். “சிறுமியருக்குரிய கள்ளமின்மை ஒன்று உன்னிடம் இருக்கிறது. அதுவே உன்னை இயல்பாக அறத்தில் நிறுத்துகிறது” என்றான் விகர்ணன். “பிறிதொன்று அறியாமல் அறத்தில் நிலைகொள்வதென்பது பெரும்பேறு. இருளை அறிந்து ஒளிக்கு மீள்பவர்கள் மிகச் சிலரே. வந்த பின்னரும் சற்றேனும் அவர்களிடம் இருள் எஞ்சியிருக்கும். ஏனென்றால் இருள் என்பது சுவைகளால் ஆனது என்பார்கள். இருளையே அறியாதவர்கள் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவர்கள்.”

தாரை மீண்டும் விழிதாழ்த்தி முகம் மெல்ல சிவந்து அனல்கொள்ள “என்னைப்பற்றி நான் கொண்டுள்ள எண்ணம் ஒன்றே, அன்னையிடமிருந்து நான் கொண்ட சொற்களே என் நெறி. எது என்னுள் சரியென்று தோன்றுகிறதோ அதன்பொருட்டு முற்றிலும் நிலைகொள்வது. அதற்கப்பால் எதையும் நான் அறிந்துகொண்டதும் இல்லை” என்றாள். “இந்த முதிரா இளமையே உன்மேல் பெரும் ஈர்ப்பை எனக்களிக்கிறதுபோலும்” என்றான் விகர்ணன். அவன் புன்னகையும் மறைந்தது. “இவ்வறையிலிருந்து வெளியேறினால் ஒவ்வொரு அடிக்கும் எனக்கு அகவை கூடுகிறது. முதுமைகொண்டு உடல் கால்களின்மேல் எடை கொள்கிறது. இதற்குள் நுழைகையில் அகவைகளை உதறி சிறுவனாகிறேன். ஒவ்வொரு நாளும் இளமை எனும் ஆற்றில் நீராடி அழுக்கை களைந்து மீள்வதுபோல.”

தாரை எழுந்து “சற்று ஓய்வெடுங்கள். நான் உங்களுக்கு உணவும் இன்நீரும் கொண்டுவருகிறேன்” என்று ஆடை திருத்தினாள். விகர்ணன் எழுந்து கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் மேலாடையைத் தூக்கி பீடத்திலிட்டு மஞ்சத்தில் கால்களை நீட்டிப்படுத்தான். “கண்களை மூடியபடி படுத்துக்கொள்ளும்போதுதான் எத்தனை களைப்புற்றிருக்கிறேன் என்று தெரிகிறது. மெய்யில் பகல் முழுக்க நான் ஆற்றிய பணியென ஒன்றுமில்லை. உளக்கொந்தளிப்பே எடை தூக்கி அலைந்ததற்கு நிகரான களைப்பை அளிக்கிறது” என்றான். அவள் “ஓய்வெடுங்கள்” என்றபின் வெளியே சென்று கதவை மெல்ல மூடினாள்.

.

blவிகர்ணனின் தோளுக்குப் பின்னால் மறைந்தவளாக மரப்படிகளில் ஏறி நீண்ட இடைநாழியினூடாக தாரை நடந்தாள். கால் தளர அவள் தயங்கி நின்றபோது சற்று முன்னால் சென்று அவள் தொடராமையை முதுகால் உணர்ந்து அவன் திரும்பிப் பார்த்தான். அருகணைந்து “என்ன?” என்றான். இல்லை என்று அவள் தலையசைத்தாள். “என்ன?” என்று அவன் மீண்டும் கேட்டான். நோயுற்றதுபோன்ற புன்னகையுடன் “ஒன்றுமில்லை” என்றாள்.

விகர்ணன் சிறிய எரிச்சலுடன் “இப்போது அவர் தனித்திருக்கிறார். ஆனால் எப்போது வேண்டுமானாலும் அவரைப் பார்க்க மக்கள் வரக்கூடும். இன்றும் அஸ்தினபுரியின் மக்களில் பெரும்பகுதியினர் யாதவர்களே. இங்கு அவர் தங்கியிருப்பது இன்னமும் அவர்களுக்குத் தெரியாதென்று தோன்றுகிறது” என்றான். தளர்ந்த மெல்லிய குரலில் தாரை “அப்படியென்றால் நாம் பிறிதொருமுறை அவரை வந்து பார்க்கலாமே?” என்றாள். முகம் சுளிக்க “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்றாள் புன்னகைக்க முயன்றபடி.

“இது உகந்த தருணமென்றுதானே உன்னை அழைத்து வந்தேன்?” என்றான் விகர்ணன். “ஒன்றுமில்லை…” என்று அவள் தலைகுனிந்து உதடுகளை உள்மடித்து அழுத்திக்கொண்டாள். எண்ணியிராதபடி விம்மலொன்று நெஞ்சிலிருந்து எழுந்து மூச்சை அடைத்தது. அவ்வோசை கேட்டு அருகணைந்து அவன் “என்னடி?” என்றான். அவன் குரல் கனிந்திருந்தது. கைகளைக் கூப்புவதுபோல் வைத்து வாயையும் மூக்கையும் அதில் அழுத்திக்கொண்டு அவள் தலைகுனிந்து நின்றாள். அவன் அவள் முகவாயைப்பற்றி முகத்தை தூக்கி “என்னடி?” என்றான். இரு சிப்பிகள்போல அவள் விழிகள் மூடியிருந்தன. இமைப்பீலிகளை நனைத்து மெல்ல ஊறிய விழிநீர் கன்னங்களின் பக்கவாட்டில் வழிந்தது.

“நீ அவரை நூல்களில், கதைகளில் மட்டுமே அறிந்திருக்கிறாய். அது பிறிதொருவர் என்று உணர்க! நான் அறிந்த இளைய யாதவர் ஒவ்வொருவருக்கும் அணுக்கமானவர். இப்புவியிலிருக்கும் எந்த மானுடனும் சற்று உளம் கனிந்தால் தந்தையென்று, தோழனென்று, மைந்தனென்று அவரை உணரமுடியும். அவரிடம் நீ எத்தயக்கத்தையும் உணரவேண்டியதில்லை. எந்த முறைமையையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. நீ விரும்பி எச்சொல்லையும் உரைக்கலாம். தந்தை மடிநோக்கிச் சென்று ஏறி அமரும் இளமகளின் உரிமை உனக்குண்டென்று உணரலாம்” என்றான்.

அவள் மேலாடையால் முகத்தையும் கண்களையும் துடைத்தபின் “அதை நான் அறிவேன்” என்றாள். “பிறகென்ன?” என்றான். “அதனாலல்ல” என்றாள். “பின்பு?” என்றான் விகர்ணன். “ஒன்றுமில்லை” என்றபின் “செல்வோம்” என்று அவள் அவனுடன் நடந்தாள். ஒருமுறை அவளை நோக்கியபின் மறுமொழி எதுவும் சொல்லாமல் அழைத்துச் சென்றான். அவர்களின் காலடிகளிலேயே உள்ளம் ஒலித்தது. அவன் காலடிகளில் விரைவுத்தாளம் இருந்தது. அவள் வலக்கால் சற்று இழுபட்டு மரத்தரையில் உரசும் ஒலி எழுந்தது.

இளைய யாதவரின் அறைவாயிலில் நின்ற காவலன் விகர்ணனைக் கண்டதும் தலைவணங்கினான். “எங்கள் வருகையை அறிவி” என்றான் விகர்ணன். தாரை மீண்டும் விகர்ணனின் கைகளை பற்றிக்கொண்டு அவன் உடலோடு ஒட்டிக்கொண்டாள். “அஞ்சாதே” என்றான் விகர்ணன். “நானும் அவரை அஞ்சியே அணுகினேன். முதற்புன்னகையிலேயே அவர் என்னை முற்றிலும் வென்றார். ஒன்று உணர்க, சான்றோர்களும் அரசர்களும் முனிவர்களும் தங்கள் பெருமையால் நம்மைவிட்டு தொலைவிலிருக்கிறார்கள். ஆனால் கால வடிவான பேருருவர்களோ தங்கள் முழுவுருவால் நம் ஒவ்வொருவருக்கும் மிக அணுக்கத்தில் இருக்கிறார்கள்.”

“அழைக்கிறார்” என்று காவலன் வந்து சொல்ல விகர்ணன் “வா” என்று சொன்னான். தாரை அறைக்குள் நுழைந்து விகர்ணனுக்குப் பின்னால் நின்றாள். ஏதோ சுவடியை நோக்கியபடி மஞ்சத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த இளைய யாதவர் விகர்ணனிடம் முதல் வினாவாக “அது யார் உனக்குப் பின்னால்?” என்றார். “அரசே, இவள் என் துணைவி தாரை. உங்களை சந்திக்க வந்தாள்” என்றான் விகர்ணன். “மச்சநாட்டு சூக்திகனின் மகள் அல்லவா? உன் இல்லத்திற்கு வந்திருக்கிறேன். சிறுமகவென உன்னை தூக்கி எறிந்து பிடித்தாடியிருக்கிறேன்” என்று சிரித்தபடி இளைய யாதவர் எழுந்து அருகே வந்து அவள் வலக்கையைப் பிடித்து இழுத்து தன் தோளுடன் சேர்த்துக்கொண்டார்.

அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன அச்சம்?” என்றார். “அச்சமில்லை” என்று அவள் சொன்னாள். “வா, இங்கு அமர்ந்துகொள்!” என்று அவளை கைப்பற்றி அழைத்துச்சென்று தன் முன்னால் பீடத்தில் அமர்த்திக்கொண்டார். விகர்ணனிடம் மஞ்சத்தைக் காட்டி “அங்கு அமர்க!” என்றார். விகர்ணன் “இல்லை, நான் நிற்கிறேன்” என்றான். “அமர்க!” என்றார். “தங்கள் மஞ்சம்…” என அவன் தயங்க “அதற்கென்ன?” என்றார். அவன் தயங்கி மெல்ல அதன் விளிம்பில் அமர அவர் அவள்முன் பிறிதொரு பீடத்தில் அமர்ந்தார்.

“உன்னை நான் நன்கு அறிவேன், தாரை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன் அஸ்தினபுரியின் அவையில் இவன் நாவில் எழுந்த சொல் உன்னால் உரைக்கப்பட்டதென்று அப்போதே உணர்ந்தேன்” என்றார். “இல்லை” என்று தாரை மறுத்தாள். “நான் அவரிடம் பேசுவதுண்டே ஒழிய…” என்று அவள் தயங்க “நீ அவன் உளச்சான்று” என்று இளைய யாதவர் சொன்னார். அவள் புன்னகைத்து விகர்ணனைப் பார்த்துவிட்டு நாணத்துடன் தலைகுனிந்து “அவ்வாறல்ல, தன்னியல்பிலேயே நேர்நிலை கொண்டவர் அவர். அது என் நல்லூழ்” என்றாள்.

“உண்மை. பின்னர் திரும்பிப்பார்க்கையில் உங்களைப்பற்றி நீங்களே நிறைவுகொள்ளும் செயல்களை இப்போது இயற்றுகிறீர்கள். இது உங்களை ஆற்றுப்படுத்தட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அரசே…” என தாரை ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் கன்னத்தைத் தட்டி “நான் உன் தந்தையால் மூத்தவரே என அழைக்கப்படுபவன். என்னை நீ தந்தையே என அழைக்கலாம்” என்றார் இளைய யாதவர். அவள் கழுத்திலும் நெற்றியிலும் நரம்புகள் புடைக்க முகம் சிவக்க மூச்சுத்திணறுபவள்போல தலைகுனிந்தாள். “கூறுக, தந்தையே என” என்று அவர் அவள் தலையை மெல்ல அறைந்தார். “தந்தையே” என விம்மலோசையுடன் கூறிவிட்டு தாரை கைகளில் முகம் அமைத்து விம்மியழலானாள்.

அவர் அவள் தோளைப்பற்றி மெல்ல உலுக்கி “என்ன விழிநீர்? நிறுத்து” என்றார். அவள் உதடுகளை அழுத்திக்கொள்ள “நிறுத்து” என அவள் பின்னந்தலையை மீண்டும் அறைந்தார். அவள் நிலைதடுமாறி அவர் மேலேயே விழப்போக அவர் அவளை பற்றிக்கொண்டார். “மிகச் சிறிய உடல்கொண்டிருக்கிறாள். குழந்தையாக இருக்கையில் நான் இவளை ஒற்றைக்கையில் தூக்குவேன். இவள் குடியில் இவள் அரிய வெண்ணிறம் கொண்டிருந்தாள். ஆகவே சூக்திகன் இவளை வெள்ளிப்பரல் என அழைத்தான். இவர்களின் மொழியில் ரஜதி…” என்றார்.

நெடுநாட்களுக்குப் பின் அச்சொல் காதில் விழுந்ததனால் தாரை முகம் மலர்ந்தாள். “ஆம், என்னை அப்படித்தான் அனைவரும் அழைப்பார்கள்” என்றாள். “மிகச் சிறியது ரஜதி. ஆனால் சர்மாவதியின் பேரொழுக்குக்கு எதிராக நெடுந்தொலைவு செல்லும் ஆற்றல்கொண்டது. ஆற்றுமுகப்பின் பெருஞ்சதுப்பு வரை முட்டையிடுவதற்காகச் செல்லும் என்கிறார்கள்” என்றார். தாரை நாணமும் சிரிப்புமாக “சர்மாவதியில் நீந்தியிருக்கிறீர்களா?” என்றாள். “தொடர்ச்சியாக ஏழுமுறை நதியை நீந்திக் கடந்திருக்கிறேன்.” அவள் “ஏழுமுறையா?” என்றாள். “ஏன், ஐயமா? மீண்டும் அங்கு சென்று நீந்திக் காட்டட்டுமா?” என்றார்.

“அய்யோ இல்லை, உங்களால் இயலும்… எந்தை மட்டுமே ஏழுமுறை நீந்தியவர்” என்றாள் தாரை. “செம்பட்டையன் என நான் உன் தந்தையை அழைப்பேன். அந்த மூடனை நான் இரண்டுமுறை தோற்கடித்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். விகர்ணன் “எந்தையே, உங்களைச் சந்திக்கும் கணம் வரை என் உள்ளம் ஊசலென ஆடிக்கொண்டிருந்தது. முதல் நோக்கிலேயே முழுமையாக நிலைபேறு கொண்டேன். அதன்பொருட்டே இவளை அழைத்து வந்தேன்” என்றான். அவர் அவள் காதைப் பிடித்து இழுத்து “இவளுக்கு எப்போதுமே நிலைபேறுள்ள நெஞ்சுதான்” என்றார்.

முந்தைய கட்டுரைசூரியதிசைப்பயணம்
அடுத்த கட்டுரைஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 6