பேலியோ

images (7)

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

பேலியோ டயட் குறித்து தங்கள் கருத்தென்ன? இன்றைக்கு மிகப்பரவலாக  திட்டவட்டமான பலனை தரக்கூடிய டயட் என இதுவே கூறப்படுகிறது. தங்கள் கருத்தறிய ஆவல்

வெற்றிச்செல்வன்

**

அன்புள்ள வெற்றிச்செல்வன்,

என் நண்பர்களில் குறைந்தது இருபதுபேர் இப்போது பேலியோ எனப்படும் கொழுப்புணவு முறைமையில் இருக்கிறார்கள். அதேயளவு நண்பர்கள் ஆரம்பித்து விட்டுவிட்டார்கள். சொல்லப்போனால் திருச்சி வழக்கறிஞரான செல்வராணி மட்டுமே தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக அந்த உணவுமுறையில் நீடிக்கிறார்

நண்பர்களுக்கு அம்முறையை உண்மையில் அறிமுகம் செய்தது நான், அப்போது நியாண்டர்செல்வன் அவ்வளவு பிரபலம் அல்ல என நினைக்கிறேன். நான் கடல் படப்பிடிப்பின்போது அரவிந்தசாமியிடமிருந்து அதைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அதைப் பயன்படுத்தி என் எடையை பதினைந்துகிலோ வரைக்கும் குறைத்தேன். அப்போதைய புகைப்படங்களில் மிகமிக மெலிந்தவனாக இருப்பதைக் காணலாம்

அப்போதுதான் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்றேன். அ.முத்துலிங்கத்திடம் அந்த உணவுமுறைமையைச் சொன்னேன். அவர் அது மிகப்பழைய முறை என்றும் எழுபதுகளில் அவருடைய மனைவி அதை சிலமாதங்கள் கடைப்பிடித்தார் என்றும் சொன்னார். என்ன ஆயிற்று என்று கேட்டேன். வேடிக்கையாக ‘ஊஞ்சல் ஆடி நின்னுபோட்டுது’ என்றார்

அதன்பின் அதைப்பற்றிச் சொன்னார். பழக்கத்தோட ஃபைட் செய்றது ஈஸி இல்லை. அதைச்செய்ய ஏலுமெண்டால் தவம் செய்து கடவுளையும் அடையலாம்” மிக முக்கியமான அவதானிப்பு அது. அவருக்கே உரிய மெல்லியகிண்டலுடன் சொல்லப்பட்டது.

மனித உடலும் உள்ளமும் பழக்கம் என்பதனால் கட்டமைக்கப்பட்டது. நம்மை அடிமைப்படுத்துவது பழக்கம்தான். ஒருமாதம் காலை பத்துமணிக்கு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் பின்னர் அதே நேரத்தில் வெந்நீர் இல்லாமல் இருக்கமுடியாது. உடல் பதைக்கும்.மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும்.

நம் வாழ்க்கை என்பது நூற்றுக்கணக்கான பழங்கங்களால் ஆனது. காலை எழுவது முதல் மூன்றுவேளை உணவுண்பது, காலைக்கடன் கழிப்பது, தேநீர் அருந்துவது, காலைநடை செல்வது, துயில்வது என. நாம் சுவை என அறிபவை அனைத்தும் நாப்பழக்கங்கள்தான். விழிச்சுவையும் செவிச்சுவையும்கூட பழக்கங்களே.அழகு , ஒழுங்கு என நாம் எண்ணுவன அனைத்தும் பழக்கங்களே.

கூடவே நாம் வாழ்நாளெல்லாம் பல்வேறு பழக்கங்களுடன் போராடிக்கொண்டும் இருப்போம். அத்தனை போதைகளும் உடல், மனப்பழக்கங்கள்தான். பழக்கங்கள் மெல்ல மாறலாம். ஆனால் ஒரு சிறிய பழக்கத்தை மாற்றிக்கொள்வதற்குக்கூட மிகமிகக் கடுமையான உடல் – உள்ளப் பயிற்சி நமக்குத்தேவையாக இருக்கிறது. அதற்கு பயிற்சி வழிமுறைகளே கூட இன்று உள்ளன.

பழக்கம் என்பது எதிர்மறை இயல்பு அல்ல. அது மனித உடலின் அடிப்படைச் செயல்முறை. பூமிக்கு வரும் குழந்தை ஸ்பேர்பார்ட்ஸ்’ களின் ஒரு தொகுதி மட்டுமே. கண் கை காது எதுவுமே ஒன்றோடொன்று இணையாமல்தான் இருக்கும். இங்கே இச்சூழலில் புழங்கித்தான் அது தன் அத்தனை இயல்புகளையும் திறன்களையும் அடைகிறது. காற்றுக்கு நீருக்கு உணவுக்குப் பழகுகிறது. நோயெதிர்ப்புசக்தி பெறுகிறது. பழக்கம் என்பது அதற்காக நமக்கு அளிக்கப்பட்டது

பேலியோ முறையின் சிக்கல் என நான் உணர்ந்தது சட்டென்று நான் அறிந்த அனைத்து சுவைகளையும் இழந்தேன் என்பதுதான். என் உலகில் பெரும்பகுதி இல்லாமலாகியது. என் மனம் அதையே நினைத்து ஏங்கியது. வெறும் சோறு வடிக்கும் மணமே என்னை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. முழுப்பிரக்ஞையையும் நான் என் சுவையுணர்வுடன் போராடவே செலவிடநேரிட்டது

ஒரு கட்டத்தில் எனக்கே விந்தையாகப் பட்டது. என்ன இது, மொத்த வாழ்க்கையையும் எதைத்தின்பது எதை விலக்குவது என்பதற்காக மட்டுமே செலவிடவேண்டுமா என. என் மனம் முழுக்க சாப்பாட்டு நினைவு. கனவுகளும் சாப்பாடுதான். ஒரு கட்டத்தில் முடிவுசெய்தேன், எடை இருந்தால் இருந்துவிட்டுப்போகிறேன். அதற்காக சாப்பாடே கவனமாக வாழ்வது வீண் என

நான் பெரிய எடையெல்லாம் இல்லை. ஆகவே பேலியோவை விட்டதும் மீண்டும் சராசரியான என் எடைக்கே வந்துவிட்டேன். பலநண்பர்கள் முன்னைவிட எடைக்கு வந்துவிட்டனர். பேலியோவை ஆண்டுக்கணக்கில் கடைப்பிடிப்பவர்கள் மிகமிக அரிது. வாழ்நாளெல்லாம் கடைப்பிடிக்கமுடியுமா என்றே நான் சந்தேகப்படுகிறேன். இருக்கலாம், கடுந்தவம் செய்யும் யோகியர் இருக்கிறார்களே. என்னால் இயலாது.

உணவுப்பழக்கம் எதுவாக இருந்தாலும் அதை மிக மெல்லத்தான் மாற்றிக்கொள்ளமுடியும். உடல் ஏற்கவேண்டும். அதைவிட உள்ளம் ஏற்கவேண்டும். பேலியோ முறையைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக கைவிட்டு பேலியோவை ஏற்கவேண்டும். நம் உணவுஏற்புமுறையே முழுமையாக மாறவேண்டும். மாவுச்சத்திலிருந்து கொழுப்புக்கு அது செல்லவேண்டும். அது எளிதல்ல. வாழ்நாள் முழுக்க என எண்ணுவது பீதியூட்டுவது.

இது உள்ளம். உடலுக்கும் இதே சிக்கல் உண்டு. அரிதாக மனிதர்கள் பெரும் எடை கொள்வது உண்டு.உள அழுத்தம் வேலைச்சுமை ஆகியவற்றால் மிதமிஞ்சி உண்ணுதல். குடிப்பழக்கம் போல பல காரணங்கள். ஆனால்பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய சராசரி எடைக்குள்தான் இருக்கிறார்கள். அதை உடலே ஒருமாதிரி வகுத்து வைத்துள்ளது. அந்த எல்லையின் உச்சத்தில் அல்லது கீழெல்லையில்..

ஊஞ்சலை பிடித்து இழுக்கலாம். ஆனால் அது தன் நிலைக்கு மீளும் விழைவு கொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு நாளும் பயிற்சிகொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். கொஞ்சநாள் விட்டால்கூட மீண்டும் சராசரிக்கு திரும்பிவிடும். பல ஆண்டுகள் மூர்க்கமாக, தவமாக , அந்த உணவுமுறையை இயற்றினால் உடல் நம் நோக்கத்தை புரிந்துகொண்டு அது குறித்துக்கொண்டிருக்கும் சராசரியை மாற்றிக்கொள்ளக்கூடும்.

மீண்டும் சொல்கிறேன், அதை அடைபவர்கள் இருக்கலாம். அனைவருக்கும் இயல்வது அல்ல. எழுபதுகளில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஓர் அலையாக இருந்த இந்த உணவுப்பழக்கம் மெல்ல மறக்கப்பட்டது இதனால்தான்.

ஒவ்வொரு இருபத்தைந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் உணவுப்பழக்கம் சார்ந்த புதிய கருத்து ஒன்று உருவாகி மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக பின்னகரும். நான் அனைத்தையும் செய்துபார்க்கும் வழக்கம் கொண்டவன். 1986 முதல் சமைக்காத உணவு என்னும் கருத்தில் ஈடுபட்டு கடைப்பிடித்தேன். திரு ராமகிருஷ்ணன் [சிவசைலம்] அவர்களின் நூலையும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன். அதனால் எனக்குச் சில நன்மைகள் இருந்தன. ஆனால் என்னை மாற்றிக்கொள்வதன் இழப்புகள் காரணமாக அதைத் தவிர்த்தேன். இன்று அந்த அலை அடங்கி பேலியோ வந்துள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1
அடுத்த கட்டுரைசிறுகதை -ஓர் அறிவிப்பு