ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 6

oru

ஒரு கோப்பை காபி [சிறுகதை]

அன்பு ஜெ,

தங்கள் “ஒரு கோப்பை காபி” சிறுகதையை முன்வைத்து என் எண்ணங்கள் கீழே-

ஐரோப்பாவிற்கு மத்தியகிழக்கு/அரபியர்கள் கொடுத்த ”அரான்சினி” ஒரு சிசிலி (இத்தாலி) மத்திய தரைக்கடல் உணவாக பார்க்கப்படுகிறது.வேகவைத்த அரிசி ப்ரெட் துகள் இணைந்த சைவ /அசைவ பொறித்த உருண்டை.

ஏழு வருடங்களுக்கு முன்னாள் நடந்த இறப்பும் அதன் தொடர்ச்சியுமே முடிச்சு.ஒரு இந்திய ஃபில்டர் காபியில் அமைதியுறும் மகாவிற்கு கதை இறுதியில் இந்தியப் பலகாரம் போல் உள்ள ”அரான்சினி”யும் பிடிக்கும் என்றும் உணர்த்தப்பட்டு குழப்பம் அடைந்த ஒரு இந்திய ஆண் மனதிற்கு தீர்வு இந்தியச் சடங்குகளில் தானோ?. தன்னுள் இருக்கும் அப்பாவை உணர்ந்து தானே மார்த்தாவிடம் மன்னிப்பும் கேட்க வந்தான் மகா!

தங்கள் எழுத்தில் விரியும் மார்த்தாவின் உருவம் அருமை.மார்த்தாவின் சோழி நிறப் பற்கள் பற்றி சொல்லி விட்டு, உடனே ஜானுவிடம் மகா கண்ட வெண்பற்கள் பற்றி சொல்லிச்செல்வது தங்களுக்கே உரித்தானது.மகா வின் உள்ளே ஒரு இந்திய அப்பா ஒளிந்து கொண்டிருப்பதை அம்மா உணர்ந்தது போல மார்த்தாவும் உணர்ந்ததை, ஜானுவால் உணர முடியவில்லை.

குறையாகச் சொல்லும் அளவிற்கு இல்லையென்றாலும் சம்பாஷணையாகவே கதை சென்றதில் ஏற்படும் சிறிது ஏமாற்றம் எனக்கு உண்டு .மேலும் உளவியல் சிக்கலிற்கு சடங்கு தீர்வு அளிக்கப்படாமலே கதை முடிந்திருக்கலாமோ என்ற எண்ணமும் கூட.

அயல்நாட்டவர் சித்தரிப்பு இடம் பெரும் சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து படிக்க ஆசையுண்டு. கெய்ஷா,சூரியனைத் தொற்றிக்கொள்தல் போல.

இக்கதையைப்போல, கிழக்கு மேற்கு சந்திக்கும் கதையான திரு.அ.முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்கக்காரி” என் நினைவில் நிற்கும் கதை.வியட்நாமிய ‘லான்ஹங்’ வும் இலங்கையின் ‘மதி’ யும் அருமையாக வெளிப்பட்டுஇருப்பார்கள் கதையில்.இஞ்சியை உப்பிலே தோய்த்து உண்டு திருமண பந்தத்தை ஆரம்பிப்பர் இருவரும். பெண்ணின் கட்டில் ஆணின் கட்டிலை விட உயரம் கம்மி போன்ற தகவல்கள் தெளிக்கப்பட்டிருக்கும் கதையில். தீர்வு எதுவுமின்றி ஒரு ஆசிய மனம் சந்திக்க நேரிடும் கிழக்கு மேற்கு குழப்பத்தை மட்டுமே சொல்லியிருப்பார் திரு.அ.முத்துலிங்கம்.

நன்றி ஜெ.

ரமணா சந்துரு

***

அன்புள்ள ரமணாசந்துரு

அவள் சொல்வது ‘கதையின்’ தீர்வு அல்ல. அது ஓரு கதைமுடிச்சு

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

“ஒரு கோப்பை காபி” கதையை பற்றி வந்த கடிதங்கள் , வெவ்வேறு திறப்புகளை அளித்தன. எவ்வளவு ஆழமாக வாசிக்க முடிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். கதையில் ,இன்னமும் திறக்கப் படாத கதவுகள் இருப்பதாகவே தோன்றுகிறது.

என் நோக்கில் , மார்த்தாவிடம் மன்னிப்பு கேட்கவும் வந்திருப்பதாக மகா கூறும் இடம் முக்கியமனது என நினைக்கிறேன். மகாவின் பிரச்சினை , தனது அம்மாவின் விடுபடலும் விடுபடலின் வேகமும் மகாவுக்கு , மார்த்தாவிடமிருந்து , தான் விடுபட்டதை நினைவுறுத்தியிருக்கலாம். இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடவே, மார்த்தா அவனை சடங்குகள் செய்ய பரிந்துரை செய்கிறாள்.

அன்புடன்,

அருண்

***

அன்புள்ள அருண்

இது ஒரு உலகியல் தளம். நாம் ஒர் இல்லத்திற்குள் நுழைந்து ஒரு சில பேச்சுக்களை கேட்கிறோம், எஞ்சியதை ஊகிக்கிறோம். நம் வாழ்வினூடாக அதை முழுமைசெய்துகொள்கிறோம். நம் வாழ்வை நாம் போடுவதே முக்கியமனாது

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறைக்கும் மேலாக ஒரு கோப்பை காபி சிறுகதை வாசித்தேன்,உடனடியாக நினைவுக்கு வந்தது காந்தியோடு பேசுவேன் என்கிற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ் ரா அவர்கள் எழுதிய சிறுகதை.

அவர் முடித்த இடத்திலிருந்து நீங்கள் ஆரம்பித்திருப்பதாக தோன்றியது உடனடியாக புத்தக அலமாரியை கிளறி அதையும் ஒரு முறை வாசித்து விட்டு எழுதுகிறேன்.

ஒரு சராசரி இந்திய வாழ்க்கை குறிப்பாக ஆண்களின் வாழ்க்கை மிகவும் சுமை மிகுந்ததாக இருப்பதாகவே படுகிறது அதை எளிமைப்படுத்தவோ புரிந்து கொள்ளவோ அவர்களும் முயற்சிப்பதாக தெரியவில்லை,காரணங்கள் பல.

ஆனால் மாறி வாரும் காலம்,புதிய கலாச்சாரம் குறிப்பாக,அயல் தேசங்களில் வாழும் வாய்ப்பு அவர்களை கொஞ்சம் அசைத்திருப்பதாகவே தெரிகிறது, அவர்களின் தர்க்க மனம் அந்த உண்மையை ஏற்கவே செய்கிறது , ஆனால் உள்ளே இருக்கும் ஆழம் அதை ஒப்புவதில்லை.

ஆழம் புனையும் அத்தனை வேடங்களையும் இந்த கதை தீட்டி தீட்டி செல்வதை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன்,அப்பாக்கள் அவ்வளவு சீக்கிரம் இறந்து விடுவதில்லை தானே?நுண் வடிவத்தில் அப்பா திரும்பி திரும்பி கதைக்குள் வந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவருடைய வேடம் திரிந்து விடுகிறது , மார்த்தாவுக்கு அது நன்றாக தெரிகிறது,எள்ளி நகையாடுவதற்கான வாய்ப்பு,ஆனால் மார்த்தா அன்னையாக மாறி பேசும் சொற்கள் இந்த கதையை மிகவும் நெருக்கமாக உணர வைத்தது.

காந்தியோடு பேசுவேன் கதையில் காந்தியை பற்றி ஒரு இடத்தில் அன்னை சொல்வதாக வரும். காந்தியும் புத்தரும் மட்டும் தான் இந்த தேசத்தில் பெண்களை புரிந்து கொண்டவர்கள் ஏனென்றால் அவர்கள் உள்ளூர பெண்களும் கூட,உண்ணாவிரதம் என்கிற போராட்ட வடிவத்தை அவர் தேர்வு செய்ததே அதற்கான சான்று என.

அதே போல ஒரு இடத்தில் காந்தி இப்படி சொல்வார், மகளே இந்தியாவில் குடும்ப வன்முறை என்கிற ஒன்றை உங்களை போல கணக்கில்லாத பெண்கள் சகித்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன்,உங்களிடமிருந்து தான் எனக்கான போராட்ட வடிவத்தை நான் பெற்றுக் கொண்டேன் என.

கிராதம் வாசிப்பின் இடையில் இதை வாசிப்பதால் இப்படி யோசிக்க தோன்றுகிறது ,ஒரு புறம் உலகின் மிக பெரிய இலக்கிய முயற்சியில் இருக்கிறீர்கள் ,அதனோடு ஒப்பிடும் போது இந்த கதை ஒரு கூழாங்கல் ,ஆறே கதாபாத்திரங்கள் ஒரு சொல் மிகை கிடையாது, ஆனால் அத்தனை கோணங்களும் தன்னியல்பாக இணைந்து வைரம் போல ஒளிர்கிறது கதை.

இரண்டையுமே எளிதில் வசமாகும், வற்றாத அந்த கைகளுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்

சந்தோஷ்

***

அன்புள்ள சந்தோஷ்

எந்தக்கதையுமே சொல்லப்படாதவற்றால் ஆனதுதான். வெண்முரசின் பாணி செவ்வியல். அது அத்தனையையும் சொல்லமுயலும். எல்லா தரப்பையும் வளைக்கும். அதற்கு அப்பால் ஒன்றை மட்டும் வாசகனுக்கு விட்டுவிடும். அதுவே முக்கியமானது, சாரமானது. அது எப்போதுமே ஆன்மிகமான, தத்துவார்த்தமான ஒரு தளமாகவே இருக்கும் அத்தனை உணர்வுகள் பேச்சுக்கள் வழியாகவே அங்கே செல்லமுடியும். இத்தகைய கதைகள் உலகியலைப் பேசுபவை. ஆகவே பெரும்பாலும் உணர்த்திச்செல்கின்றன. ஏனென்றால் அவை எளிதாகவே சென்றடையத்தக்கவை

ஜெ

வணக்கம் தலைவரே,

***

இரண்டு / மூன்று விஷயம் ,

1) ஒரு கோப்பை காபி , எங்க அப்பாவோட தாத்தா இப்படித்தான் அடிபட்டு இயற்கை எய்தினார்னு ஒரு கேள்வி , ரொம்ப பெரிய என்ன சொல்றது வேதியர் , கிட்ட தட்ட 60 ,65 வருஷம் வரைக்கும் எங்க கொள்ளுப்பாட்டிய ரொம்ப மோசமா நடத்தினார்ன்னும் அப்பறம் அவருக்கு பக்கவாதம் வந்தப்போ அந்த அம்மா தினப்படி கம்பால ரெண்டு சாத்து சாத்தி தான் சோறு போடுவாங்கணும் ஒரு தகவல்.

என்ன ஒரு விசேஷம்னா இப்போ எங்க அப்பா ரொம்பவும் நடமாட்டம் குறைஞ்சு போயி அவரோட ஆறைக்குளே தான் இருக்காரு. நான் கூடவே இருக்கறதுனால எங்க அம்மா அவர அடிக்கறவரைக்கும் போகல :-) . கதையிலே வர அந்த அம்மாவோட நான் கண்டிப்பா உடன்படறேன் . 1950 60 லே பொறந்து 70 80 லே கல்யாணம் ஆனவங்க மனைவி எல்லாம் இந்த மாதிரி தான் இருப்பாங்கன்னு நினைக்கிறன். எங்க அம்மாவுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து இருந்தது .

2) நல்லா போயிகிட்டுஇருந்த சூழ இருத்தல் கட்டுரையில் எதுக்கு அந்த தேவையில்லாத கடைசி வரி . not fair .

3) எனக்கு ரெண்டு மருமகனுங்க ஒருத்தனுக்கு 5 வயசு இன்னொருத்தனுக்கு 3, அவனுகளுக்கு நான் வச்சிருக்கற செல்ல பெயர் என்ன தெரியுமா மூத்தவன் ஜெயமோகன் ரெண்டாவது சாரு :-)

ஆனந்த் நடராஜன்

***

அன்புள்ள ஆனந்த்

ஒரு நகைச்சுவைக்காகச் சொன்னது அந்த வரி…மருமகன்களுக்கு வாழ்த்துக்கள்.

பொதுவாக குடும்பவன்முறை என்பது நாம் அனைவரின் குடும்பங்களிலும் உள்ளதுதான். நானும் தாயார்பாதம் முதல் வெவ்வேறுவகையில் அதையே எழுதுகிறேன்

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26
அடுத்த கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1