விடுபட்டவர்கள் -கடிதங்கள்

சி.பி.ராமசாமி அய்யர்
சி.பி.ராமசாமி அய்யர்

விடுபட்ட ஆளுமைகள்

திரு. ஜெயமோகன்,

உங்களது தளத்தில் “விடுபட்ட ஆளுமைகள்” என்கிறப் பதிவை படித்தேன். அதில் சர்.சி.பி.ராமசாமி ஐயரைப் பற்றிய குறிப்பு குறித்த எனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சர்.சி.பியின் பெரும்பாலான சாதனைகளை அதில் கூறிவிட்டிருந்தீர்கள். ஆனால், ஒன்றை மட்டும் குறிப்பிடவில்லை – சுதந்திரத்திற்குப் பிறகு தி.மு.க. தனி ‘திராவிட நாடு’ கேட்டுப் போராடிய போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழியை நேரு, சர்.சி.பியிடம் கேட்டார்; அப்போது சர்.சி.பி அளித்த அறிவுரையின் பேரிலேயே நேரு அரசாங்கம், ‘பிரிவினை கேட்டு போராடும் கட்சிகள் தேர்தலில் நிற்கத் தடை’ என்று சட்டம் இயற்றியது – இந்தச் சட்டம் இயற்றப்பட்ட அடுத்த நாளே அண்ணா, திராவிட நாடு போராட்டத்தைக் கைவிட்டார்! ஆக, இன்றைய தமிழக அரசியல் சூழலோடு நெருங்கியத் தொடர்பு கொண்டவர், சர்.சி.பி!!

மேலும், சர்.சி.பி பற்றிய, வரலாற்று எழுத்தாளரான திரு. வி.ஸ்ரீராம் அவர்களின் காணொளி ஒன்றையும் இணைக்கிறேன்:

பவித்ரன் நாராயணன்

அன்புள்ள ஜெ

 

விடுபட்ட ஆளுமைகள் நூல் பற்றிய உங்கள் குறிப்பு அழகாக இருந்தது. நாம் அறியாத ஓர் உலகத்தை அறிமுகம் செய்வதாக இருந்தது. நான் ஒரு எஞ்சீனியர். சென்னை மௌண்ட் ரோடு வழியாகச் செல்லும்போது அங்குள்ள கட்டிடங்களை பார்ப்பேன். அவற்றை வடிவமைத்தவர்கள் கட்டியவர்களைப்பற்றி எவராவது எழுதியிருப்பார்களா என நினைப்பேன். தமிழகத்திலுள்ள முக்கியமான அணைகளைக் கட்டிய பொறியாளர்களுக்கு ஒரு சின்ன வரலாற்றுக்குறிப்பாவது இருக்கிறதா என நினைப்பேன்.

 

நாம் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. இப்படி எந்தத்துறையிலும் எந்தச்சாதனையாளரைப்பற்றியும் எதுவுமே பேசப்படுவதில்லை. ஆகவேதான் சினிமாவைப்பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் சினிமாவிலிருந்து மட்டுமே இங்கே விஐபிக்கள் உருவாகி வருகிறார்கள். சினிமா டைரக்டர்கள்தான் இங்கே அறிவுஜீவிகள். அவர்கள் கண்டபடி உளறுவதுதான் அரசியல், அறிவியல் எல்லாமே.

 

நமக்கு பலதுறைகளிலே சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை நம் கல்விநிலையங்களிலே சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களைப்பற்றி விக்கிப்பீடியா எண்டிரி கூட இல்லை. இந்நூலில் உள்ள சட்டமேதைகள் எத்தனைபேரைப்பற்றி விக்கி எண்ட்ரி இருக்கும்? ஒருவரி வாசிக்கக்கிடைத்தாலே அது அரியவிஷயம். இப்படி அறிவில் ஆர்வமில்லாத அதைப்புறக்கணிக்கக்கூடிய ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம் உலகத்தில் வேறு எங்காவது இருக்குமா என்றே நான் சந்தேகப்படுகிறேன்.

 

நான் எஞ்சீனியராக உலகநாடுகளில் பயணப்படுகிறேன். நிறைய ஜீனியஸ் எஞ்சீனியர்களை இப்போது தெரியும். ஆனால் என் 25 வயதில் இந்தியாவுக்கு வெலியே செல்வது வரை யாரையுமே தெரியாது. இன்றைக்குச் சட்டம்படிக்கும் மாணவர்களிலோ அல்லது வக்கீல்கலிலோ எத்தனைபேருக்கு அவர்களின் முன்னோடிகலில் உள்ள இந்த ஜீனியஸ்களைத்தெரியும்? தெரியாவிட்டால் அவர்கலுக்கு தங்கள் துறைகளில் உள்ள சாதனைகள் என்ன இலட்சியங்கள் என்ன என்பது எப்படித்தெரியும்? இந்த நூல் ஒரு பாப்புலர் நூல் என நினைக்கிறேன். ஒரு வார இதழில் வெளிவந்திருக்கிறது. மிகமிக வரவேற்கத்தக்க விஷயம்

 

செந்தில்குமார்

முந்தைய கட்டுரைசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3
அடுத்த கட்டுரைசிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா