பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 8
தன் தனியறைக்குள் விஜயை மஞ்சத்தில் கண்மூடி, கைகால்கள் முற்றிலும் தளர்ந்து வாழைத்தண்டுகள் என எடைகொண்டு இறகுச் சேக்கைமேல் படிந்திருக்க, புதைந்தவள்போல கிடந்தாள். அன்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற ஓவியங்களாக அவள் முன் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. மிக அப்பால் சிறுவர்கள் விளையாடும் ஓசையை அவள் கேட்டாள். ஒரு சுவருக்கு அப்பாலென அவர்கள் அங்கே துரத்தி விளையாடுகிறார்கள் என்று தோன்றியது. அல்லது அவர்கள் நடுவே ஒரு குட்டிப்புரவி இருக்கக்கூடும்.
அவள் எழுந்து சென்று அச்சுவரைப்பற்றி மறுபக்கம் நோக்க விரும்பினாள். தான் இருப்பது ஒரு சிறு மலர்ச்சோலையில் என்று உணர்ந்தாள். சகலபுரிக்கு அருகே இருந்த பிரம்மகிரி எனும் சிறுநகரம். இமயமலைச் சரிவுகளுக்கு ஏறும் மலைப்பாதைகள் தொடங்கும் புள்ளி அது. சிறுசந்தையாக இருந்து வளர்ந்து கோட்டையும் சுங்கச்சாவடியும் கொண்டு நகரமென்றாகியது. அதன் வடமேற்கே இருந்த குளத்தினருகே அந்த மாளிகை அமைந்திருந்தது. எப்போதாவது மலையில் வேட்டைக்குச் செல்கையில் மூத்த தந்தை தன் படைவீரர்களுடன் அங்கு சென்று தங்குவதுண்டு. அவள் இருமுறை மட்டுமே அங்கு சென்றிருந்தாள்.
மலைச்சரிவுகளில் மட்டுமே வளரும் புதர்ச்செடிகள் மண்டிய தோட்டம். அதற்கு வேலியிட்டதுபோல் வான்தொட எழுந்த தேவதாருப் பெருமரங்களின் நிரை. மறுபுறம் பெருங்கூச்சல். என்ன செய்கிறார்கள் அங்கே? சிரிப்பொலி கேட்டமையால் அது பூசலல்ல என்று தெரிந்தது. அவள் சுற்றுமுற்றும் பார்த்தபோது புரவிகளுக்கு நீர் வைக்கும் மரக்குடைவுத் தொட்டி ஒன்றை கண்டடைந்தாள். அதை இழுத்துச் சென்று அச்சுவரருகே போட்டு மேலேறினாள். மதிலின் விளிம்பை கைகளால் பற்ற முடிந்தது. கட்டைவிரல் ஊன்றி எழுந்து மறுபுறம் பார்த்தபோது அங்கே சிறுவர்கள் ஒருவரையொருவர் துரத்தி வாழைமட்டையால் மாறி மாறி அறைந்துகொண்டிருப்பதை கண்டாள்.
ஒவ்வொரு முகமும் முன்னரே அவள் அறிந்தது எனத் தோன்றியது. மூத்தவர் ருக்மரதன் சிறுவடிவம் கொண்டதுபோல் ஒருவன். ருக்மாங்கதரின் மைந்தனா பிறிதொருவன்? அவர்களின் மைந்தர்கள் பிரபாகரன், சந்திரசூடன்… முக்தனும் மூஷிகனும் தப்தனும் வக்ரசிம்ஹனும் குபேரனும்… அனைவருக்கும் மலைமக்களுக்குரிய மென்மஞ்சள் நிறம். கரிய நீள்கூந்தல். எலும்புகள் தெரியும் சிற்றுடல். நடுவே ஓடிச் சிரித்த ஒருவன் மட்டும் கரியவன். தோல்கீறி எடுத்த காராமணிவிதையின் ஒளி கொண்டிருந்தான். வியர்வையில் மேலும் மின்னியது தோல். திரும்புகையில் விழிதொட்டுச் செல்லும் சுடர்கொண்ட பற்கள்.
அவன் கால்கள் செம்மண்ணில் உதைத்து உதைத்துத் தாவின. கைகள் காற்றில் சுழன்றன. கரிய சுருள்குழல் கற்றைகள் தோளிலும் முதுகிலும் விழுந்து உலைந்தெழுந்தாடின. உச்சிக்கொண்டையில் சிறு மயிற்பீலி சூடியிருந்தான். அவனை இருவர் சேர்ந்து பற்றினர். பிற இருவர் சேர்ந்து அவன் கால்களை பற்றினர். அவன் பிடிபட்டுவிட்டதைக் கண்டதும் அத்தனை சிறுவர்களும் அவனை சூழ்ந்துகொண்டனர். கூச்சலிட்டு நகைத்தபடி அவனை இழுத்துச்செல்ல முயன்றனர்.
எண்ணியிராக் கணமொன்றில் அவன் அப்பிடிகளை இலை கிளைகளை என உதறிவிட்டு இருவரின் தோள்மேல் மிதித்தேறி பிற இருவரின் தலையை மிதித்து தாவி ஓடி அப்பாலிருந்த மரக்கிளையொன்றைப் பற்றிஆடி மேலே சென்றான். கீழிருந்து அவர்கள் கைநீட்டிக் கூச்சலிட மரக்கிளையில் நின்று கால் எம்பி உதைத்தபடி சிரித்தான். மரக்கிளையிலிருந்து மலர்கள் அவர்கள்மேல் பொழிந்தன. மலர்மழையில் கைவிரித்துக் கூத்தாடி அவர்கள் சிரித்தனர். ஒரு கூரிய நினைவுபோல் அவள் உணர்ந்தாள். அம்மைந்தர் அனைவரும் முன்னரே இறந்துவிட்டிருந்தனர்.
பெருவிடாயுடன் அவள் விழித்துக்கொண்டாள். மஞ்சத்தில்தான் படுத்திருக்கிறோம் என்னும் உணர்வே ஆறுதலை அளிப்பதாக இருந்தது. அது என்ன கனவு என்று மீண்டு சென்று அள்ள முயன்றாள். மரக்கிளை ஒன்றில் நின்று உலுக்கி மலர் பொழியவைத்த கால்கள் மட்டுமே தெளிவுறத் தெரிந்தன. கருநிறக் கால்கள். செம்பவள நகங்கள். செம்மண்ணால் சிவந்த அடி. அதன் பின்னரே கதவுக்கு வெளியே சேடியின் குரல் கேட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். எழுந்து சென்று கதவைத் திறந்து ஆடையை சீரமைத்தாள். அப்போதும் உள்ளம் முழுவிழிப்பு கொள்ளவில்லை.
“துயின்றுவிட்டீர்களா, அரசி?” என்றாள் சேடி. “இல்லை” என்றாள். “இளைய அரசர் தங்கள் அறைக்கு வருகிறார்” என்றாள். அவள் ஒருகணம் உளமுறைந்த பின் மீண்டு “இல்லை, எனக்கு உடல்நலமில்லை” என்று சொன்னாள். அதற்குள் இடைநாழியின் மறுமுனையில் சகதேவன் தோன்றினான். புன்னகைத்தபடி அவளை நோக்கி வந்தான். அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் கதவைப் பற்றியபடி அவனை விழிதூக்கி நோக்கி நின்றாள். அருகணைந்து “நன்று, துயின்றிருப்பாய் என்று எண்ணினேன்” என்றான்.
சேடி தலைவணங்கி விலகிச் செல்ல “உள்ளே வருக!” என்றாள் விஜயை. அவன் அவள் தோளில் கைவைத்து “அவை நிகழ்வுகள் உனக்கு சலிப்பை ஏற்படுத்துவதை உன் உடலசைவாலேயே அறிந்தேன். உன்னை பார்க்கவேண்டுமென்று தோன்றியது. உனக்கிணையாகவே சலிப்பு கொண்ட ஒருவன் எனக்குள் இருந்து உன்னை பார்த்துக்கொண்டிருந்தான்” என்றான். “நான் ஒன்றும் சொல்லவில்லையே” என்றாள் அவள். “நீயும் சிபிநாட்டரசியும் பேசிக்கொண்டு செல்வதை கேட்டேன். என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை என்றாலும் முகம் சலிப்பையே தெரிவித்தது.”
“சலிப்பல்ல” என்று அவள் சொன்னாள். “எனக்கு அந்நிகழ்வுகளில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்னும் உணர்வு மட்டுமே.” சகதேவன் “ஆம், உண்மையில் எங்கள் எவருக்கும் சொல்வதற்கு எதுவுமில்லை, இது அன்னையும் இளைய யாதவரும் மட்டுமே ஆற்றும் ஒரு களமாடல்” என்றபடி அறைக்குள் சென்று மஞ்சத்தில் அமர்ந்தான். அவள் அவனருகே கைகளைக் கட்டியபடி நின்றாள். “வா, அமர்ந்துகொள்!” என்று தன்னருகே மஞ்சத்தை சுட்டிக்காட்டினான். “இல்லை, இங்கு நின்றுகொள்கிறேன்” என்றாள் அவள்.
அவன் விழிகள் சற்று மாற புருவம் சுருங்க “ஏன்?” என்றான். “களைப்பு. இன்று பகல் முழுக்க அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன்” என்றாள். “ஆம், நானும் நன்கு களைத்திருக்கிறேன். தூது ஓலைகள், உளவுச் செய்திகள், அரசாணைகள். ஒருகணத்தில் சலித்து வேறெங்காவது சென்று என்னை முற்றிலும் கழற்றி வைக்காவிடில் இன்றிரவு துயிலமுடியாதென்று தோன்றியது. அதனால் இங்கு வந்தேன்” என்றான். அவள் “புரிகிறது” என்றாள். அவன் அவளை நோக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தான். அவன் விழிகளை தவிர்த்து அவள் ஆடையை கையில் சுழற்றிக்கொண்டிருந்தாள்.
சகதேவன் மெல்ல கனைத்து “சுகோத்ரனை இங்கு வரும்படி ஆணையிட்டு ஓலை அனுப்பியிருக்கிறேன்” என்றான். அவன் என்ன எண்ணுகிறான் என அவளுக்கு அக்கணமே புரிந்தது. நெய்யில் அனல் என சினம் எழுந்தது. எண்ணியபடி அவள் முகத்தை அது மலரவைக்கவில்லை என்று கண்டு அவன் “இங்கு அவன் இருந்தால் இந்நாட்கள் இத்தனை வெறுமைகொள்ளாது” என்றான். அவள் உணர்ச்சியின்றி “நன்று” என்றாள். “நீ மைந்தனைப் பார்க்க விழையவில்லையா?” என்று அவள் விழிகளை நோக்கி கேட்டான். அவள் அவன் முகத்தை ஏறிட்டு “அவ்வாறல்ல” என்றாள்.
“நீ கேட்ட முதற்கணம் மகிழவில்லை” என்றான். “இல்லையே…” என்றாள். “நம் மைந்தன். அவன் இங்கிருப்பதைப்போல இனிது பிறிதில்லை” என்றான். “ஆம்” என்றாள். அதிலிருந்த உணர்வுத்தண்மை அவனை சினம்கொள்ளச் செய்தது. “நீ அவன் வரவில் மகிழவில்லை. எனக்கு அவன் என் தந்தையர் வடிவம். எனவே என் உள்ளம் எண்ணியதும் எழுகிறது” என்றான். அவள் விழிதாழ்த்தி வெறுமனே நின்றாள். அவள் உடலிலேயே புறக்கணிப்பை உணர்ந்து அவன் மூண்டெழுந்தான். “தோள்விரிந்த மைந்தனுடன் இருந்தால் நீ சகலபுரியின் சிறுமியென நடிக்கமுடியாது போலும்” என்றான்.
அவள் உள்ளத்தில் அக்கணம்வரை இருந்திராத பெருஞ்சீற்றம் உருவாயிற்று. அவன் விழிகளை கூர்ந்து நோக்கி, வெறுப்பில் சுருங்கிய முகத்துடன் “அவன் வந்தால் என்ன? அணுகி வருவது பெரும்போர். அவன் மடிந்த பின்னர் நினைவுகொள்வதற்காகவா நோக்குவது?” என்றாள். அக்கூரிய சொல்லால் அவன் திடுக்கிட்டு இரு கைகளும் நடுங்க விரல்களை கோத்துக்கொண்டான். “என்ன சொல்கிறாய்? என்ன…?” என்றான். அவன் நடுக்கமே அவளை மேலும் மேலுமென எழச் செய்தது. “மைந்தரை களப்பலி கொள்ளும் போர். உங்கள் அன்னையின் ஆணை. என் மைந்தன் பத்தாவது தலை. அதை இறுதியாக நோக்க இங்கு வரவழைக்கிறீர்கள். நோக்கி மகிழ்க!” என்றாள்.
சகதேவன் விடாய்கொண்ட பறவைபோல வாய் திறந்து தாடை தவிக்க “அன்னைக்கு அவருக்குரிய உணர்வுகள் உள்ளன. நீயும் அறிவாய் அல்லவா?” என்றான். அவன் குரல் குலுங்கும் தேரில் அமர்ந்திருப்பதுபோல் இடறியது. “எச்செயலுக்கும் அத்தனை மிகையுணர்வுகளை காட்ட முடியும். உங்கள் அன்னை தன்னை கணவருக்காக வாழ்பவராக நடிக்கிறார். அதை அவர் மைந்தரிடம் சொல்லட்டும், என்னைப்போன்ற பெண்களிடம் சொல்லவேண்டாம்” என்றாள் விஜயை. “நீ அன்னையை சிறுமை செய்கிறாய்… என் செவியறிய அன்னையைப் பழிக்கும் சொற்களை பொறுக்கமாட்டேன்” என்றான் சகதேவன். “என்ன செய்யப்போகிறீர்கள்? வாளெடுத்து என் சங்கை அறுங்கள். நான் என் மைந்தனுக்கு முன்னரே விண்செல்கிறேன்” என்றாள் விஜயை.
அவன் வெறுப்பு நிறைந்த விழிகளுடன், இறுகிய உதடுகளுடன் அவளை நோக்கி அமர்ந்திருந்தான். அவள் விசைகொண்டமையால் உடைந்தெழுந்த குரலில் “என்ன சொன்னார்கள்? அவர்கள் விழைவதெல்லாம் பாண்டுவின் அகத்திலெழுந்ததை என்றா? பாண்டுவின் அகம் இவர்களின் விழைவுக்கு மாறானதென்றால் இவர்கள் கருத்தில் அது பதிந்திருக்குமா? தன் விழைவுக்கு மாறாக பாண்டு இருந்தார் என இவர்கள் சலித்துக்கொண்ட சொற்களை நானும் கேட்டிருக்கிறேன். கன்றோட்டும் குலத்தில் பிறந்த இவர்களுக்கு மும்முடி சூடிய மைந்தனின் அன்னை என அமைய விழைவே இல்லையா? ஆணிலியின் உள்ளத்து ஆழத்தை சென்றறிந்தார்களா? எத்தனை நடிப்புகளினூடாக தன்னை புனைந்துகொள்கிறார்கள் மானுடர்!” என்றாள்.
அவள் மூச்சிரைக்க தன் மேலாடையை இழுத்தாள். அது இடையிலிருந்து நழுவ சலித்தபடி சுருட்டி அப்பால் வீசினாள். “போதும்!” என்றபடி சகதேவன் எழுந்தான். “குருதிவிடாய் கொண்டு பீடத்தில் அமர்ந்திருக்கும் கொற்றவை உங்கள் அன்னை. எங்கள் மைந்தரை வெள்ளாடுகளென இழுத்துச் செல்கிறார்கள் அவர்களுடைய பலிபீடத்திற்கு” என்றாள் விஜயை. வலிகொண்டவன்போல முகம் சுளிக்க பற்களைக் கடித்தபடி சில கணங்கள் அமர்ந்தபின் சகதேவன் “சுகோத்ரன் படைக்கலம் பயிலவில்லை” என்றான்.
அந்தத் தாழ்ந்த குரல் அவளை மேலும் வெறிகொள்ளச் செய்தது. சினமும் இளிவரலுமாக முகம் கோட “நன்று! முப்பொழுதும் உணர்ந்தவர் அல்லவா? ஆகவே முன்னரே மைந்தனை படைக்கலம் பயிலாது காட்டுக்கு அனுப்ப முடிந்தது” என்றாள். அவன் முகம் வெளுத்து உயிரிலாதவன்போல் அவளை நோக்க அவளுக்குள் பெருவஞ்சம் கொண்ட பிறிதொருத்தி எக்களித்தாள். “நன்று! ஒரு மைந்தன் எஞ்சும்போது அவனிலூடாக குடி வாழ்கிறது. அவனில் தோள்வல்லமையும் அவைமுறைமையும் திகழவில்லையென்றால் என்ன? தன் குடியிலிருந்து மண்மறைந்த அனைவர் பெயரையும் பிறழாது சொல்லும் நினைவுத்திறன் கூடியிருக்கும் அல்லவா? பாரதமெங்கும் சென்று பாண்டுவின் கொடிவழியின் நிரையை உரைத்து மன்னர் அவைகளில் பரிசில் பெற்று வாழட்டும்” என்றாள்.
“வாயை மூடு!” என்றபடி சகதேவன் கையோங்கி எழுந்தான். உரக்க நகைத்து “விராடபுரியில் முற்றும் துறந்து அகன்று அமைந்திருந்தவர் என்றனர். இச்சினம் வியப்பூட்டுகிறது” என்றாள் விஜயை. அவன் தாடை இறுகியது. கைகளை இறுக்கிச்சுருட்டி பற்கள் கிட்டிக்க “நீ என்னை துன்புறுத்த விழைகிறாய்” என்றான். அவள் “கண்டடைந்துவிட்டீர்கள், நன்று!” என்றாள். சகதேவன் மெல்ல அடங்கி “இன்று நீ வேறேதோ உளநிலையில் இருக்கிறாய். எவர் மீது எழுந்த கசப்பை என் மீது கொட்டுகிறாய்?” என்றான். “எவர் மீதும் அல்ல. என் மீதான கசப்புதான். ஷத்ரியக்குடி பிறந்தவள் நான். என் மைந்தனை கணியன் ஆக்க வேண்டாம் என்று அன்று உரைக்கும் சொல்லற்று இருந்தேன். அந்தத் தயக்கத்திற்கு விலையாக இன்று சிறுமையை ஈட்டியிருக்கிறேன்” என்றாள்.
சகதேவன் அவளை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான். “செல்க, உங்கள் மைந்தனை கொண்டுவந்து குலவுக! ஆனால் தோள்தேம்பி உடல்மெலிந்த அச்சிறுவனை என் முன் கொண்டு நிறுத்தி இவனே உன் மைந்தன், இவனைப் பெறுவதற்குத்தான் நீ தகுதியானவள் என்று என்னிடம் சொல்லவேண்டாம்” என்றாள். அவள் முலைக்குவைகள் மூச்சில் எழுந்தமைந்தன. ஆடையை கசக்கிக்கொண்டிருந்த கைகள் இறுகப்பற்றி நிலைத்து பின் மெல்ல தளர்ந்தன.
சகதேவன் எழுந்து மெல்லிய புன்னகையுடன் “அனைத்து நஞ்சையும் கொட்டிவிட்டாயா?” என்றான். “இல்லை, எஞ்சியதை என் மைந்தர் களம்பட்டுக் கிடக்கையில் நெஞ்சிலும் வயிற்றிலும் ஓங்கி அறைந்து கதறியபடி சொல்கிறேன். என் குடிப்பிறந்த அனைவரும் என் மைந்தரே. இங்கும் அங்கும்” என்றாள். சகதேவன் பெருமூச்சுடன் “இனி நாம் இவ்வாறு காணநேராது” என்று மேலாடையை எடுத்து அணிந்தபடி வெளியே செல்ல திரும்பினான். அவன் முகத்தில் புன்னகை எழுந்தது. “விஜயை, இப்போது அந்த அருகனடியார் என்னில் எழுகிறார். அவர் உன்னிடம் சொல்வது ஒன்றே. உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுவனவற்றுக்கு மானுடர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அதை தெய்வங்களுக்கு அளித்துவிடுவதே நம்மை துயரிலிருந்து விடுபடச் செய்யும். தன்னை இரண்டாக பகுத்துக்கொண்டபடிதான் மானுடர் புவியில் வாழமுடியும்” என்றான்.
அச்சொற்கள் முற்றெழுவதற்குள்ளாகவே அவள் நடுக்கம் கொண்டாள். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் பேரச்சம் கொண்டவள்போல கேட்டாள். “உன் நாகநாக்குச் சேடியிடம் அதை கேள். அவள் சொல்வாள்” என்றபின் “என்னிலும் இருவர் உண்டு. அறிபவர் ஒருவர், அறிவனவற்றைக் கடந்தவர் பிறிதொருவர்” என்றான். அவளை நோக்கி மீண்டும் ஒருமுறை புன்னகைத்துவிட்டு வெளியேறினான். மலைத்த விழிகளுடன் அவள் அவன் செல்வதை பார்த்து நின்றாள்.
முதற்புலரியில் அபயை வந்து அவளை எழுப்பும்வரை விஜயை அரைத்துயிலில் எங்கென்றில்லாமல் இருந்தாள். சகலபுரியா அஸ்தினபுரியா இந்திரப்பிரஸ்தமா துவாரகையா என. விழித்தெழுந்த பின்னர் அந்நகர் அவள் அதற்கு முன் எப்போதுமே அறிந்திராதது என தெளிந்தாள். அந்த அறியா நகரை எண்ணியபடி அவ்வாறே படுத்திருந்தாள். அபயை “அரசி, இளைய யாதவர் அஸ்தினபுரிக்கு செல்லவிருக்கிறார். இன்னும் சற்றுநேரத்தில் அரண்மனை முற்றத்திலிருந்து கிளம்புவார்” என்றாள்.
விஜயை எழுந்தமர்ந்து “அறையிலிருந்து கிளம்பிவிட்டாரா?” என்றாள். “சங்கொலி கேட்டேன்… அரண்மனை முகப்புக்கு அரைநாழிகைக்குள் சென்றுசேர்வார்” என்றாள் அபயை. “நான் அதற்குள் நீராடி ஆடைமாற்ற முடியுமா?” என்றாள் விஜயை. “பொழுதிருக்கிறது, அரசி” என்றாள் அபயை. நீராட்டறையை அடைந்து வெந்நீரில் நனைந்தெழுந்து தலையும் உடலும் துவட்டி பொன்னூல் கரையிட்ட வெண்பட்டாடை அணிந்து ஈரக்குழலை தோளில் விரித்திட்டு விஜயை மூச்சிரைக்க இடைநாழியினூடாக ஓடினாள். உடன்வந்த அபயையிடம் “தலையில் மலர் இல்லையடி… ஓடிச்சென்று ஒரு மந்தாரமாவது கொய்து வா” என்றாள்.
படிகளில் இறங்கி இடைநாழியினூடாக முதன்மை முற்றம் நோக்கி செல்லும்போதே அவள் சங்கொலியை மீண்டும் கேட்டாள். இந்நகரின் அரண்மனை இத்தனை சிறிதாக இருப்பது எத்தனை நன்று என எண்ணிக்கொண்டாள். தொலைவிலேயே முகப்புவாயிலில் தேவிகையும் சேடியும் நிற்பதை கண்டாள். மூச்சுவாங்க அருகே சென்று நின்றாள். தேவிகை “துயிலெழமாட்டாய் என எண்ணினேன்” என்றாள். “ஏன்?” என்றாள் விஜயை. “இந்நாட்களில் நீ பெரும்பாலும் ஒளியெழுந்த பின்னரே விழிப்பு கொள்கிறாய்.” விஜயை புன்னகைத்தாள். “நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா? ஒவ்வொருநாளுமென உன் விழிகள் களைப்பு கொள்கின்றன. முகம் வெளுத்து வருகிறது. விழித்திருக்கையிலேயே துயில்கொள்பவள் போலிருக்கிறாய்” என்றாள் தேவிகை.
“நான் துயின்று நெடுநாட்களாகின்றன என்று தோன்றுகிறது. படுத்ததும் சித்தம் சற்றே மயங்குகிறது. பின்னர் விழிப்பு. எண்ணங்களை என்னால் நிறுத்தவே முடியாது. ஆனால் துயில்நீத்தலும் அல்ல. இரவு செறிந்து வெளுப்பதையே என்னால் உணரமுடியாது. ஒரு நாழிகை கடந்திருக்குமென எண்ணுவேன். கரிச்சான் ஒலி கேட்கும். முதற்புலரியில்தான் சற்றே எண்ணம் அழியும்” என்றாள் விஜயை. “ஆம், நீ துயில்நீப்பு கொண்டிருக்கிறாய் என்பதை உன் விழிகளே காட்டுகின்றன” என்று தேவிகை சொன்னாள். “நீ அரண்மனை மருத்துவரிடம் ஏதேனும் மருந்து கேட்டுப்பெறலாம்.” விஜயை “எதற்கு?” என்றாள். “துயிலுக்கு” என்றாள் தேவிகை.
விஜயை ஒன்றும் சொல்லவில்லை. “அது பிழையல்ல. அரண்மனைகளில் பெரும்பாலானவர்கள் அகிபீனாவோ பிறிதோ துணைகொண்டுதான் இரவில் துயில்கின்றனர். பேரரசியும்கூட ஒவ்வொருநாளும் மருந்துண்டுதான் துயில்கொள்கிறார்” என்றாள் தேவிகை. “அவள்?” என்றாள் விஜயை. “நானும் அவ்வாறே எண்ணினேன். அவள் சேடியிடம் கேட்டேன். இல்லை என்றாள். இரவில் நூல்நவில்கிறாள். எழுந்துசென்று படுத்து அக்கணமே துயின்று முதற்புலரியின் பறவைக்குரலில் விழித்துக்கொள்கிறாள்.” விஜயை சில கணங்களுக்குப் பின் “ஆம், அவள் இயல்பு அது” என்றாள்.
அபயை வெண்ணிற மந்தார மலருடன் வந்தாள். அதை வாங்கி விஜயை தன் குழலில் முடிச்சிட்டு சூட்டிக்கொண்டாள். சங்கொலி எழுந்தது. இடப்பக்க வாயிலினூடாக நிமித்தக்காவலன் சங்கொலி எழுப்பியபடி வந்தான். தொடர்ந்து மங்கலத்தாலமேந்திய மூன்று சேடியர் வர அவர்களுக்குப் பின்னால் திரௌபதி இருபுறமும் அணுக்கச்சேடியர் தொடர சீராக காலடி வைத்து அன்னம் ஆற்றில் ஒழுகுவதுபோல வந்தாள். தேவிகையும் விஜயையும் தலைவணங்கி வாழ்த்துரைத்தனர். “நன்று சூழ்க!” என வாழ்த்திவிட்டு அவள் படிகளில் இறங்க இருவரும் அவளுக்கு இருபுறமும் இணைந்தனர்.
அரண்மனையின் மறுபக்கத்தில் இருந்து கொம்போசை எழுந்தது. கொடிவீரனும் கொம்பூதியும் முன்னால் வர மங்கலத்தாலமேந்திய சேடியர் மூவர் தொடர்ந்து வந்தனர். இசைச்சூதர் மூவர் அவர்களை தொடர யுதிஷ்டிரர் நகுலனும் சகதேவனும் பின்னால் வர தொய்ந்த தோள்களுடன் சிற்றடிகளை விரைந்து எடுத்துவைத்து வந்தார். முற்றத்தில் அவர் கிழக்கு நோக்கி நிற்க அவருக்கு இடப்பக்கம் திரௌபதி சென்று நின்றாள். அவளருகே தேவிகையும் விஜயையும் நின்றனர். முற்றத்தில் எரிந்த புன்னையெண்ணைப் பந்தங்களின் தழல் காற்றில் கிழிந்து பறந்துகொண்டிருந்தது. நிரைகொண்டு நின்றிருந்த காவலர்களின் வேல்முனைகளில் நெருப்புத்துளிகள் தெரிந்தன.
காவல்மாடத்திற்கு அப்பாலிருந்து பீமன் தனியாக நடந்து வந்தான். பேருடல் மெல்ல உலைந்தாட பருத்த கைகளை விசி அங்கிருக்கும் எவரையும் பார்க்காதவனாக அவன் வந்து யுதிஷ்டிரருக்கு தலைவணங்கி பின்னால் சென்று கைகளை மார்பில் கட்டியபடி நின்றான். குளிர்காற்று ஆடைகளை படபடக்கச் செய்தபடி சூழ்ந்து கடந்துசென்றது. அரண்மனைக்குள் எங்கோ எவரோ எவரையோ அழைத்தார்கள். அரண்மனைக்குப் பின்னால் மிக அப்பால் ஒரு புரவி கனைத்தது. காவல்மாடத்திற்கு அப்பால் சாலையில் புரவிக்குளம்படிகள் கேட்டன. “வருகிறார்கள்” என்றாள் தேவிகை. விஜயை பெருமூச்சுவிட்டாள்.
மூன்று புரவிகள் இழுத்த விரைவுத்தேர் காவல்மாடத்தருகே சற்று தயங்கி வளைந்து முற்றத்தில் ஏறியது. கற்பலகைகளில் அதன் சகட ஓசை மாறுபட்டது. புரவிகள் விரைவு குறைந்து குளம்புத்தாளம் ஓய முன்பின் காலெடுத்து வைத்து நின்றன. இரு ஏவலர் சென்று மரப்படியை வைத்தனர். தேருக்குள்ளிருந்து இளைய யாதவர் இறங்கியதும் மங்கல இசை எழுந்தது. யுதிஷ்டிரர் அருகணைந்து கைகூப்பி முகமன் உரைத்தார். தேருக்குள் இருந்து அர்ஜுனன் இறங்கி இளைய யாதவரின் பின்னால் நின்றான்.
இளைய யாதவர் அனைவருக்குமாக கைகூப்பி “சென்றுவருகிறேன். நன்று நிகழ்க!” என்றார். யுதிஷ்டிரர் “உன் சொல் வெல்லும்” என்றார். புன்னகைத்த பின் இளைய யாதவர் திரௌபதியிடம் “இப்பயணத்தில் எனக்கு உளநிறைவளிப்பது ஒன்றேதான் அரசி, நீங்கள் பொறுத்தருளி கடந்துசென்றுவிட்டீர்கள் என்று அந்த அவையிலேயே சென்று அறிவிக்கும் பேறு எனக்கு அமைகிறது. அத்தருணம் தெய்வங்களால் வாழ்த்தப்படுக!” என்றார். திரௌபதி புன்னகைத்து “அவ்வாறே ஆகுக! அன்னை காந்தாரியிடம் என் வணக்கங்களை தெரிவியுங்கள், யாதவரே” என்றாள். “ஆம், அவர்களை தனியாகவும் சந்திப்பேன்” என்றார் இளைய யாதவர்.
நகுலனையும் சகதேவனையும் தழுவிக்கொண்டு “நம் மைந்தருக்காக நன்றே சூழ்வோம்” என்றார் இளைய யாதவர். “ஆம், மூத்தவரே. ஒவ்வொன்றும் கூடிவருவதாகவே தோன்றுகிறது” என்றான் சகதேவன். பீமன் அருகே வர அவர் கைவிரித்தார். பீமன் அவரை தன் விரிந்த கைகளால் தழுவிக்கொண்டு “தாங்கள் சொல்லும் எச்சொல்லும் எங்களுடையதே” என்றான். தேவிகையிடமும் விஜயையிடம் கைகூப்பி வணங்கிவிட்டு தேர் நோக்கி சென்றார். தேர் அருகே நின்ற அர்ஜுனனின் தோளில் மெல்ல தொட்டுவிட்டு படியில் ஏறி மேலே சென்று உள்ளே அமர்ந்தார். அர்ஜுனன் செயலிழந்து தொங்கிய கைகளுடன் அவரை நோக்கியபடி நின்றான்.
மீண்டும் மங்கல இசை முழங்கியது. சேடியர் குரவையிட்டனர். கோட்டைக்காவலர் கைகாட்ட பாகன் கடிவாளத்தை மெல்ல சுண்டினான். புரவிகள் காலடிகளை எடுத்துவைக்க சகடம் மெல்ல அசைந்து தேர் உயிர்கொண்டது. மெல்ல திரும்பி காவல்மாடம் நோக்கி சென்றது. பந்த ஒளியில் குடைவளைவு மின்ன கடந்துசென்று அப்பாலிருந்த சாலையில் ஏறி மறைந்தது. அர்ஜுனன் பெருமூச்சுவிட்டபின் திரும்பி உடன்பிறந்தாரை நோக்காமல் நடந்து அரண்மனைக்குள் சென்றான். திரௌபதி சொல்லின்றி யுதிஷ்டிரரை வணங்கிவிட்டு தானும் அரண்மனைக்குள் சென்றாள்.
யுதிஷ்டிரர் “நாம் எவ்வகையிலேனும் அவருக்கு இழுக்கு சேர்க்கிறோமா, இளையோனே?” என்றார். “அவருக்கு இப்புவியில் எவரும் புகழோ இழுக்கோ சேர்க்கவியலாது” என்றான் சகதேவன். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர். எதையோ சொல்ல எண்ணுபவர்போல தயங்கிவிட்டு “அவர் முடிமன்னராகச் சென்ற நகர் அது” என்றார். “ஆம், அவருக்கு அனைத்தும் ஒன்றே” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் தொண்டை அடைத்துக்கொண்டதுபோல மெல்ல கனைத்தார். பின்னர் மெல்லிய ஓசையுடன் விம்மியழுதார்.
“மூத்தவரே, என்ன இது?” என அவர் கைகளை பற்றிக்கொண்டான் சகதேவன். “என்ன நிகழ்ந்தது என்று…” என்றான். யுதிஷ்டிரர் விரைவிலேயே தன்னை அடக்கி இருமுறை மூச்சிழுத்துவிட்டு மேலாடையால் முகத்தை துடைத்தார். “இல்லை… ஏனென்றறியவில்லை. ஒருகணம் உளம்பொங்கிவிட்டேன்…” என்றார். உதடுகளை மடித்தபடி தலைகுனிந்து அவர் செல்ல நகுலனும் சகதேவனும் உடன்சென்றனர். பீமன் அவர்கள் செல்வதை இடையில் ஊன்றிய கைகளுடன் நோக்கி நின்றபின் சற்றுபின்னால் தானும் சென்றான்.
தேவிகை விஜயையின் கைகளைத் தொட்டு “வாடி!” என்றாள். இடைநாழியில் நடக்கையில் விஜயை துயில் ஓர் அலையென வந்து தன்மேல் அறைந்து முழுக்க நனைத்து மூடிக்கொள்வதுபோல் உணர்ந்தாள். மஞ்சத்தை சென்றடைவதைப் பற்றி எண்ணியபோது அது நெடுந்தொலைவு என்று தோன்றியது. அங்கு சென்று விழுந்தால் முற்றழிந்து மறைய துயில்கொள்வோம், பிறகு விழித்துக்கொள்ளவே வேண்டாம் என்பதுபோல.