பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 5
மரப்படிகளின் ஓசை கேட்டதும் தேவிகை விஜயையின் கையை தொட்டு “அரசர்” என்றாள். “எப்படி தெரியும்?” என்றாள் விஜயை. “அவருடைய காலடி ஓசைதான்” என்றபடி தேவிகை எழுந்து வெளியே சென்றாள். சகதேவனின் காலடியோசை தனக்குத் தெரியாது என்று எண்ணியபடி விஜயை எழுந்து அறைவாயிலில் நின்றுநோக்க கீழிருந்து மரப்படிகளில் யுதிஷ்டிரர் ஏறிவருவதை கண்டாள். தொடர்ந்து நகுலனும் சகதேவனும் வந்தனர். தேவிகை யுதிஷ்டிரரை எதிர்கொண்டு கைகூப்பி “வருக, அரசே!” என்றாள். யுதிஷ்டிரர் “அன்னை எப்படி இருக்கிறார்?” என்றார். “விழித்துவிட்டார்கள். ஆனால் ஒன்றும் பேசவில்லை” என்றாள் தேவிகை .
அவர்களுக்குப் பின்னால் பெரிய கால்களை ஓசையின்றி எடுத்துவைத்து பீமன் மேலேறி வந்தான். அவன் பேருருவம் ஒரு வெண்நிழலென எழுவதாக அவளுக்குத் தோன்றியது. யுதிஷ்டிரர் அறைவாயிலில் நின்று விஜயையிடம் “உள்ளே நுழையலாமா என்று அன்னையிடம் கேட்டு சொல்க, அரசி!” என்றார். திடுக்கிட்டு “வாழ்த்துகிறேன், அரசே” என்றபின் விஜயை அறைக்குள் திரும்பிப்பார்த்தபோது குந்தி கண்மூடி மஞ்சத்தில் படுத்திருந்தாள். துயிலிலென மூச்சு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இமைகளுக்குள் விழிகள் உருள்வது தெரிந்தது. விஜயை “சற்று பொறுங்கள்” என்றபின் அறைக்குள் சென்றாள்.
குந்தியின் அருகே குனிந்து “அன்னையே, அரசர் தங்களை பார்க்க வந்துள்ளார்” என்றாள். குந்தி உதடுகளை அழுத்திக்கொண்டு வாய்நீரை விழுங்கினாள். “அவர்களை உள்ளே வரச் சொல்லலாமா, அன்னையே?” என்றாள் விஜயை. குந்தி விழிதிறக்கவோ சொல்லெடுக்கவோ இல்லை. நெஞ்சு மட்டும் மெல்ல அசைந்தது. ஒருசிலகணங்கள் பொறுத்துவிட்டு “அவர்களை உள்ளே அழைக்கிறேன், அன்னையே” என்றாள் விஜயை. பின்னர் வெளிவந்து “உள்ளே வருக, அரசே!” என்றாள்.
யுதிஷ்டிரர் கூப்பிய கைகளுடன் தலைகுனிந்து சிறிய மஞ்சத்தறைக்குள் நுழைந்தார். நகுலனும் சகதேவனும் தொடர்ந்து வந்து அவருக்குப் பின்னால் நின்றனர். வாயிலை முற்றாக அடைத்தபடி வந்த பீமன் நன்றாக தலைகுனிந்து உள்ளே வந்து மறுபக்கமிருந்த சாளரத்தருகே சென்று அதில் சாய்ந்து வெளியே நோக்கியபடி நின்றான். யுதிஷ்டிரர் அமர்வதற்காக சிறிய மூங்கில் பீடமொன்றை இழுத்துப்போட்டாள் விஜயை. அவர் அதில் அமர்ந்தபடி “அன்னையே, தங்கள் உடல்நலம் மேம்பட்டிருக்கிறதென்று எண்ணுகிறேன்” என்றார்.
குந்தியின் கழுத்தில் மீண்டும் வாய்நீர் விழுங்கும் அசைவு ஏற்பட்டது. “அன்னையே, எங்கள் தரப்பில் ஏதேனும் பிழை இருந்தால் பொறுத்தருள்க! எதன்பொருட்டு தாங்கள் உளக்கொதிப்படைந்தீர்கள் என்று தெரியவில்லை. எதன்பொருட்டென்றாலும் உங்கள் மைந்தர் உங்கள் காலடியில் வணங்கி கனிவை கோர வந்துள்ளோம். தாங்கள் உடல்நலம் தேறி எழவேண்டும்” என்றார். குந்தி மறுமொழி உரைக்காததைக்கண்டு யுதிஷ்டிரர் திரும்பி சகதேவனை பார்க்க சகதேவன் அருகே வந்து “தாங்கள் அவையில் நான் எழுப்பிய சொற்களுக்கு மறுமொழி ஏதும் உரைக்கவில்லை. தங்களுக்கு மாற்றுரை உண்டென்றால் அதை இப்போது உரைக்கலாம், அன்னையே” என்றான்.
குந்தியின் கண்கள் அதிர்ந்தன. உதடுகள் இழுபட்டு கன்னம் ஒருபக்கமாக கோணியது. அவள் வலக்கை துடித்து இழுபடுவதை விஜயை கண்டாள். “இப்போது பேசவேண்டாமே” என்று சொல்ல அவள் வாயெடுப்பதற்குள் குந்தி விழிதிறந்து “அவ்வினாவை உனது இறுதிமுடிவை அறிவிப்பதற்கு முன் என்னிடம் கேட்டிருக்கவேண்டும், அறிவிலியே” என்றாள். முதுமையில் சிவந்து சுருங்கிய அம்முகத்தில் தெரிந்த கடும்வஞ்சம் விஜயையை அச்சுறுத்தியது. முதுமையில் தசைதளர்ந்த முகம் வஞ்சத்தையும் கசப்பையும் மேலும் ஆற்றலுடன் வெளிப்படுத்துகிறதா?
ஈரமான விழிகள் வெறிக்க, சிறிய வாய் திறந்து வெண்பற்கள் வெளித்தெரிய, கடுஞ்சினத்தால் சிரிப்பென்றே தோன்றிய முகஅமைப்புடன் மூச்சிரைக்க குந்தி சொன்னாள் “உன் முடிவை அவை கேட்க அறிவித்த பின் என்னிடம் கேட்கிறாய் என்றால் என்ன பொருள்? நான் உன் ஏவல்நாய் அல்லவா?” சகதேவன் “அன்னையே, நான் அவையில் கூறிய அனைத்து முடிவுகளையும் மறுத்து கடக்க உங்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லியே நான் அதை கோரினேன்” என்றான்.
“கீழ்மகனே!” என்று அவனை நோக்கி சீறியபடி கையூன்றி எழ முயன்றாள் குந்தி. “போரின் முழுப் பொறுப்பையும் என் மீது சுமத்துகிறாயா? முழுக் குருதியையும் என் கையிலிருந்து நான் பெருக்கினேன் என்று கொடிவழிகள் எண்ணவேண்டுமென்று வகுக்கிறாயா?” என்றாள். “அவ்வாறல்ல…” என்று சகதேவன் சொல்லத்தொடங்க “ஆம், அதற்கு அதுதான் பொருள். உங்கள் விழைவுகளை துறந்துவிட்டீர்கள். அச்சிறுமதியள் தன் வஞ்சத்தையும் துறந்துவிட்டாள். அப்படியானால் எஞ்சுவதென்ன? என்னுடைய காழ்ப்பும், என்னுடைய பெருவிழைவும், அவ்வளவுதானே? அதை நான் எழுந்து அவையில் அறிவிக்கவேண்டும் அல்லவா? குடிகளென அங்கு அமர்ந்திருக்கும் கீழ்மக்கள் அதை ஊரெங்கும் சொல்லவேண்டும். சூதர்கள் பாடவேண்டும். தலைமுறைகள் அதை ஏற்றுரைக்கவேண்டும். வரலாறெங்கும் வஞ்சக்கொடுமகளாக நான் அறியப்படவேண்டும். எனக்கு முன் நீ நீட்டிய வினாவுக்கு பிறிதென்ன பொருள்?” என்றாள்.
சகதேவன் மறுமொழி சொல்லமுடியாமல் தலைகுனிந்தான். யுதிஷ்டிரர் தாழ்ந்த குரலில் “அவ்வாறல்ல அன்னையே, ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை முன்வைத்தார்கள்” என்றார். “என் உணர்வுகளை அந்த அவையில் நான் முன்வைக்க முடியாது. நான் அந்த அவைக்கு கட்டுப்பட்டவள் அல்ல, உங்கள் அன்னையென்றே அந்த அவையில் அமர்ந்திருந்தேன். நான் சொல்வதற்கிருந்தது எல்லாம் உங்களிடம் மட்டுமே” என்றாள் குந்தி. “கொழுநர் எனக்களித்த நிலத்தை எந்நிலையிலும் நான் உதறமுடியாது. என் மைந்தருக்கு நான் அளிக்கவேண்டிய நிலம் அது. அதற்கு முன்னும்பின்னும் எனக்கு சொல்லில்லை. ஆம், எவரிடமும் நான் பேச ஏதுமில்லை.”
யுதிஷ்டிரர் மெல்ல நடுங்குவதை விஜயை கண்டாள். “அறிவிலியே, நீ என்ன எண்ணினாய்? உன் கடன் என்பது நீ எண்ணி ஏற்றுக்கொள்வதென்றா? என்று நீ என் வயிற்றில் பாண்டுவின் மகனாக பிறந்தாயோ அப்போதே வந்தமைந்தது அக்கடன். அது உன் முன்னோரால் உனக்கு அளிக்கப்பட்டது. உன்னிலிருந்து உன் மைந்தருக்குச் செல்வது. பிறவிக்கடனைத் துறக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை” என்றாள் குந்தி. சிறுநடுக்கத்துடன் அவள் குரல் ஓங்கி ஒலித்தது. “நீ எதை துறக்கிறாய்? மண்ணையா? குடியையா? புகழையா? சிறுக்கனே, நீ துறப்பது உன் அறத்தை. அறத்தைத் துறக்க எவருக்கு உரிமை? சொல், நீ கற்ற நூல்கள் என்ன சொல்கின்றன? சொல்!”
யுதிஷ்டிரர் “கொள்வதையும் கொடுப்பதையும்விட துறப்பது மேலென்றே நான் கற்றிருக்கிறேன், அன்னையே” என்றார். “நீ என்ன, முழுதும் துறந்து காடேகும் முனிவனா? மண்ணைத் துறக்கும் ஷத்ரியன் தன் குலத்தை துறக்கிறான். தன் மூதாதையரையும் கொடிவழியினரையும் துறக்கிறான். மெய்ப்பொருள் காணும்பொருட்டு மட்டுமே ஷத்ரியன் மண்ணை துறக்கவேண்டும். தனக்கு நிகரான மைந்தனொருவனிடம் தன் மண்ணை ஒப்படைத்த பின்னரே அவன் கானேக வேண்டும். அஞ்சியும் வருந்தியும் விட்டுச்செல்பவன் மூதாதையருக்கு பெரும்பிழையை இழைக்கிறான். கொடிவழியினரை வஞ்சிக்கிறான். கீழ்மகனே, இன்று அவையில் அறிவித்த சொற்களுக்கு வேறென்ன பொருள்? நீ துறந்தது உன் தந்தை பாண்டுவை.”
உளவிசையால் அவள் எழுந்தமர்ந்தாள். “அவைநின்று பாண்டுவைத் துறப்பது என்னை பரத்தை என்று அறிவிப்பதற்கு நிகர். அதையும் சொல், உனக்கு பேரறத்தான் எனும் பெயர் கிடைக்கும். சொல் மூடா, துணிவிருந்தால் சொல்! மீண்டும் கூட்டு அவையை. என் அன்னை பரத்தை, பாண்டுவின் குருதிச்சரடில் நான் இல்லை என்று கூறு! ஆகவே அஸ்தினபுரியின் மண்ணை நான் துறக்கிறேன் என்று சொன்னால் எவரும் மறுமொழி சொல்லமுடியாது.” அவள் கழுத்தில் நரம்புகள் உடுக்கின் தோல்வார்கள் என இழுபட்டு விம்மி நின்றன. குரல் உடைந்து பிசிறியது.
“சொல் கீழ்மகனே, ஆண்மையுள்ளவன் என்றால் சொல்! இதோ நான் சொல்கிறேன், நீ பாண்டுவின் மைந்தனல்ல. ஆம், நீ பாண்டுவின் குருதிமைந்தன் அல்ல. நீ கேட்ட கதைகளெல்லாம் உண்மை, உன் தந்தை உடல்முளைக்கா தீயூழ் கொண்டவர். ஏற்புநெறியின்படி முகமறியா முனிவர் ஒருவரின் வெண்துளியில் முளைத்தவன் நீ” என்றாள். “அன்னையே” என்று நடுங்கும் குரலில் யுதிஷ்டிரர் அழைத்தார். இரப்பதுபோல அவருடைய இரு கைகளும் நீண்டிருந்தன. “குருதிவழியில் அல்ல, தொல்வேதம் ஒன்றின் நெறிவழியிலேயே நீ என் வயிற்றில் பிறந்து பாண்டுவுக்கு மைந்தனானாய். உன் தந்தை அருள நான் உனக்களித்ததுதான் குருகுலத்து மைந்தனென்னும் பட்டம். நீ அவையில் இன்று வீசிச் சுழற்றி எறிந்தது அதை” என்றாள்.
“நான் அவர் மைந்தன். என் தந்தையின் ஆணை அது, அன்னையே” என்று தழுதழுக்கும் குரலில் யுதிஷ்டிரர் சொன்னார். “அவருள்ளத்தை நான் அறிவேன். அவர் தொடுகை என் தோள்களில் இன்னமும் உள்ளது. நான் விழிநீர் சொட்டாமல் இன்றுவரை அவருக்கு நீரளித்ததில்லை.” குந்தி “விழியிழந்தவர் உனக்கும் தந்தை என்றால் பாண்டு உனக்கு யார்? எந்த நெறியின்படி அவர் உன்னிடம் தன் மைந்தர் உயிரை காக்கும்படி கேட்கிறார்? வெறும் குருதித்தொடர்பால். அறிவிலியே, அக்குருதித் தொடர்பல்லவா உனக்கும் பாண்டுவுக்கும் உள்ளது? எதன்பொருட்டு துரியோதனனை தான் துறக்க இயலாது என்று திருதராஷ்டிரர் சொன்னாரோ அதே நெறியின்படி நீ பாண்டுவை துறக்க முடியாது என்று உணராத கீழுள்ளமா உனது?” என்றாள்.
தான் சொல்லவேண்டிய இறுதிச் சொற்களை சென்றடைந்து மெல்ல கையூன்றி குந்தி மஞ்சத்தில் சாய்ந்தாள். தேவிகை பஞ்சுத் தலையணை ஒன்றை எடுத்து குந்தியின் முதுகுக்குப் பின்னால் வைத்தாள். கைகளை மார்பில் கட்டியபடி “இது என் ஆணை! பாண்டுவின் மைந்தனாகிய நீ பாண்டுவின் நிலத்தைப்பெற்று ஆட்சிசெய்தே ஆகவேண்டும். அதன்பொருட்டு இப்புவியை எதிர்த்தாலும் சரி. உடன்பிறந்தாரை மட்டுமல்ல, தந்தைமுறையென உன்னிடம் கையேந்துபவரையேகூட கொல்ல நேர்ந்தாலும் சரி. அதன்பொருட்டு நீ களம்பட்டாலும் எனக்கு அது பெருமையே” என்றாள் குந்தி.
மேலும் தெளிந்த குரலில் தொடர்ந்தாள் “அதை துறக்கிறாயென்றால் பிறிதொரு அவை கூட்டு. பாண்டுவின் மைந்தனென நீ அமைந்தது ஏற்புமகன் என்னும் முறைமைப்படியே என்றும், அதை துறக்கிறேன் என்றும் அறிவி. பாண்டவர் அல்லாதாகுக நீங்கள் ஐவரும். அசுரரோ நிஷாதரோ ஆகி கானேகுக! அம்பும் தோளும் கொண்டு மண் வென்று ஆள்க! அந்நிலமும் குலமும் உங்களிடமிருந்து புதுப்பெயர் கொண்டு எழட்டும். பாண்டுவின் பெயர் உன் கொடிவழிக்கோ நிலத்திற்கோ அமையலாகாது.”
யுதிஷ்டிரர் “அன்னையே, என்னை பேரிடருக்குள் தள்ளுகிறீர்கள். தாங்களே அறிவீர்கள், இப்புவியில் பாண்டவனெனும் பெயருக்கு அப்பால் நான் விழைவது பிறிதொன்றுமில்லை. என் தந்தையிடமிருந்து பிறிதனைத்தையும் துறந்தாலும் தலைசூட விரும்புவது அப்பெயரை மட்டுமே. அதை நான் எப்படி துறப்பேன்?” என்றார். குந்தி “அது உனக்கு முதன்மையானது என்றால் உன் தந்தை உனக்களித்த நிலத்தை வென்று முடிசூடுக! அப்பெயரை மட்டும் ஏந்தி பிறர் நிலத்தில் சிற்றரசனென கையேந்தி நீ நின்றிருப்பாய் என்றால் விண்வாழும் அவருக்கும் அவர் மூதாதையருக்கும் அதற்கிணையான இழிவு பிறிதில்லை” என்றாள்.
காற்றில் உமிநீறென மீண்டும் அவள் சினம் மூண்டெழுந்தது. “கீழ்மகனே, இன்று நீ இருக்கும் இடத்தில் உனக்கு உளம் கூசவில்லையா? ஒவ்வொரு முறை இந்த சிற்றூரின் அவையில் வந்திருந்து நீ மணிமுடியும் செங்கோலும் கொள்கையில் என் உடல் தீப்பற்றி எரிகிறது. மகட்கொடையாகக் கிடைத்த இந்தக் கையளவு மண்ணில் ஓர் அரியணை அமைத்து அதில் பொய்முடியும் வெறுங்கோலும் கொண்டு அமர்ந்திருக்கிறாய். ஒவ்வொரு முறை நீ அவ்வாறு அமரும்போதும் பாண்டுவின் முகத்தில் காறி உமிழ்கிறாய். ஒவ்வொரு நாளும் அவரை நினைத்திருக்கும் துணைவியாக இங்கிருந்து நான் அதைக் கண்டு நாணுகிறேன்” என்றாள். “வேண்டாம்! நீ எனக்கு ஆற்றும் கடன் ஒன்றே உள்ளது, அப்பெயரை துறந்துவிடு.”
“அன்னையே!” என்று யுதிஷ்டிரர் சொல்லி அவள் கால்களை நோக்கி கைநீட்டினார். “தொடாதே! நீ அப்பெயரைத் துறந்தாய் என்றால் அக்கணமே உங்கள் ஐவரையும் துறப்பேன். எக்கணமும் நான் பாண்டுவின் மனைவி மட்டுமே. பிறிதெவரும் அல்ல. செல்க!” என்று குந்தி சொன்னாள். “அன்னையே!” என்று மீண்டும் கண்ணீருடன் யுதிஷ்டிரர் அழைத்தார். நீர்மணிகள் அவர் தாடியிலும் மார்பிலும் சொட்டின. “எழுந்து வெளியே செல்! இனி ஒரு சொல்லும் என்னிடம் கூறாதே. செல்க!” என்றாள் குந்தி.
பீமனின் பேருடலின் அசைவை விழிதிருப்பாமலேயே விஜயை உணர்ந்தாள். உரத்த குரலில் பீமன் “அன்னையே, இங்கு நீங்கள் உரைத்த சொற்கள் காட்டுவது ஒன்றே. போர் நிகழுமென்றால் அது உங்கள் விழைவின்பொருட்டே. ஏனென்றால் தன் வஞ்சத்தை நம் குலமகள் உதறிவிட்டாள். மண்விழைவை மூத்தவர் உதறிவிட்டார். அவர்களிருவரின் சொல்லுக்கு முற்றடங்கியவர்கள் நாங்கள் நால்வரும். உங்கள் விழைவு குருதிப்பெருக்கு என்றாகும். அதன் முடிவில் கொள்ளும் மண்ணும் செங்கோலும் பெற்றியும் உங்களுக்குத் தேவை என்றால் அச்சமோ நாணமோ இன்றி அவை நடுவே எழுந்து அதைச் சொல்வது அல்லவா முறை? அதற்குத் தயங்கி அப்பொறுப்பை மூத்தவர்மேல் சுமத்துவதற்காக நீங்கள் இந்த விழிநீர் நாடகம் இயற்றுவது கீழ்மை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?” என்றான்.
ஒரு கையை ஊன்றி ஒருக்களித்து அவனை நோக்கி இருமுறை ஏதோ சொல்ல வாயெடுத்து பின்பு மெல்ல தளர்ந்தாள் குந்தி. அவள் வலக்கையும் வலக்காலும் துடித்துக்கொண்டிருந்தன. பின்னர் மீண்டும் மல்லாந்து இடக்கையை ஊன்றி மஞ்சத்தில் படுத்தாள். உலர்ந்த உதடுகளை அவள் நாவுகள் வருடிச் சென்றன. சகதேவன் திரும்பி உதடசைவால் “நீர்” என்றான். விஜயை அருகிருந்த மண் குவளையிலிருந்து நீரை ஊற்றி கொண்டுசென்று “அன்னையே, நீர் பருகுக!” என்றாள். குந்தி சற்றே தலைதூக்கி நீரை வலக்கையால் வாங்கி குடித்தாள். வலக்கை அதிர்ந்துகொண்டிருந்ததனால் நீர் ததும்பி அவள் உடலில் கொட்டியது. விஜயை மரவுரியால் அதை துடைத்தாள்.
அருந்தி முடித்து மீண்டும் தலையணையில் படுத்து கண்களை மூடினாள் குந்தி. அவள் முகத்தை துடைத்த பின் விஜயை “அன்னை நலம் குன்றியிருக்கிறார். இப்போது நாம் பேசவேண்டியதில்லை. அனைத்தையும் முடிவெடுப்போம்” என்றாள். “ஆம், அன்னை இன்னும் சற்று அமைதி கொள்ளட்டும்” என்றபின் யுதிஷ்டிரர் எழுந்தார். குந்தி கண்திறந்து “அமர்க!” என்றாள். பிறிதொருவர் அவளுடலில் எழுந்ததுபோல் குரல் மாறுபட்டிருந்தது. யுதிஷ்டிரர் மீண்டும் அமர்ந்தார். பீமன் பெருமூச்சுடன் சாளரத்தில் சாய்ந்தான்.
குந்தி “இதை நான் முதன்மையாக இளையவன் பீமனிடம் சொல்கிறேன். ஏனென்றால் அவன் என் உள்ளத்திற்கு முதன்மை அணுக்கன்” என்றாள். விழிகள் சரிந்திருக்க, இமைக்குமிழிகள் அலைபாய “அவனுடைய பேருடல் பாண்டுவின் அகவிழைவு. அவனை பிறர் விழிநோக்க அவர் குலவியதில்லை. ஆனால் எவரும் நோக்கவில்லை என்று உணர்ந்தால் அவன் பெருந்தோள்களையும் நெஞ்சையும் வருடி வருடி உளம் மகிழ்வார். அப்போது அந்த முகத்திலெழும் கனவை நான் அருகிலென காண்கிறேன். என் உடலினூடாக அவர் கொண்ட கனவே பேராற்றலுடன் எழுந்து முன்னிற்கிறது. மந்தா, அவைநின்று விழியிழந்த மூத்தவரின் மைந்தரைக் கொல்வேன் என வஞ்சினம் உரைத்தது நீயல்ல, அவருடைய அகத்தமைந்த அறியாத ஒன்றே என்று நான் உணர்ந்தேன். பிற எவரிடமும் பகிரமுடியாத கனவொன்றில் அதை அவரே சொல்லவும் கேட்டேன்” என்றாள்.
விஜயை அந்தச் சிற்றறைக்குள் பிறிதொருவர் வந்து நுண்வடிவில் நின்றிருக்கும் உணர்வை அடைந்து மெய்ப்புகொண்டாள். “அவையில் எழுந்து நான் யார், என் விழைவென என்று சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எந்த விழிமுன்னும் நான் எப்போதும் தயங்கியிருந்ததும் மறைந்திருந்ததும் இல்லை. இன்று ஏன் அவ்வாறு சொல்லாதொழிகிறேன் என்றால் இது என் விழைவல்ல என்பதனால்தான்” என்றாள் குந்தி. “நீங்கள் அறியாத பாண்டுவை நான் அறிவேன். பிற எவரும் அறியாத பாண்டு. மணமங்கலத் தனியறையில் இரவில் என்னை முதலில் அருகே கண்டதும் தன் உடலின் எல்லையை உணர்ந்து உளம் தளர்ந்து நின்ற அந்தத் தோற்றம் அணுவிடையும் கலையவில்லை. நான் இன்சொல்லெடுத்ததும் சிறுமைந்தன் எனக் குழைந்து என்னருகே விழுந்தார். அடைக்கலம் கோரி விழிநீர் விட்டார்.”
“எந்தப் பெண்ணும் அக்கணமே தன்னை அவருக்கு முழுதளிப்பாள். நான் என்னை எதுவும் எஞ்சாது அவருக்கு கொடுத்தேன். மாவீரமும் மங்காத அறநிலையும் கொண்டவர் என் கொழுநர். என் இறையே இச்சிறு போதாமையால் நீ தோற்று உடையவேண்டுமா என்று என் உளம்உருகி கொந்தளித்தது. என் மடிமீது முகம் புதைத்து அழுத ஆண்மகனை நெஞ்சோடணைத்தபோது அவருக்கு அன்னையென்றும் ஆனேன். செயலற்ற உடல்கொண்ட ஆண்மகனின் துயர் தெய்வங்களும் திகைத்தொழியும் ஆழம் கொண்டது. பெண்ணுடலில் இருந்தபடி அந்த இருண்ட எல்லைகளுக்கு நானும் சென்று அவரை அடுத்தறிந்தேன். நான் அறிவேன் என அவர் அறிவார். ஆகவே நாங்கள் ஒருசொல்கூட அதைப்பற்றி பேசிக்கொண்டதில்லை.”
“அன்று அவ்விரவில் என் அன்னைதெய்வங்களைச் சான்றாக்கி அவரை அணைத்து என்றும் உங்கள் துணைவி மட்டுமே என்றேன். என் வாழ்வும் மீட்பும் உங்கள் அரசியென மட்டுமே என்று சொல்லளித்தேன். இக்கணம் வரை ஒவ்வொரு கணமும் வாழ்வது அச்சொல்லுக்காகவே. எண்ணி நோக்குக, அரசும் குடிமுதன்மையும் அளிக்கப்பட்ட பின்னரும் அரசு துறந்து ஏன் காட்டுக்குச் சென்றார் உங்கள் தந்தை? இங்கிருக்கும் விழிகளை எதிர்கொள்ள இயலாமல். கேட்கப்படாத வினாக்களால் சூழ்ந்திருக்கும் இந்நகரில் வாழமுடியாமல். அனைத்தையும்விட பேருடலும் பெருந்தந்தையுமான தமையனுக்கு நிகராக அவையமர முடியாமல்… அவருடன் சென்று அக்காட்டில் நானும் வாழ்ந்தேன்.”
“மண்ணையோ முடியையோ விழைவதாக ஒருகணமும் அவர் உரைத்ததில்லை. என்னிடம் எந்த விழைவையும் ஆணையையும் அவர் தெரிவித்ததுமில்லை. ஏனெனில் தனக்கு அதற்கான தகுதியில்லை என்று அவர் எண்ணினார். நாணிலாத வில்லென்று ஒவ்வொரு கணமும் உணரும் பெருந்துயரில் வாழ்ந்து மறைந்தார். இங்கு வாழ்ந்த நாட்களில் அவர் அறிந்த உவகை மைந்தர்களாக உங்களைப் பெற்றது. மேலும் மேலும் மைந்தர்களைக் கொடு என என்னிடம் கேட்டார். அவர் என்னிடம் கேட்டதை நான் மறுத்தேன். கேட்காதொழிந்ததை தலைக்கொண்டேன்” என்றாள் குந்தி.
“ஒவ்வொரு நாளும் அவர் அருகே அமர்ந்து அவர் கால்களை வருடி முகம் நோக்கி இருக்கையில் என் நெஞ்சுக்குள் சொல்லிக்கொள்வேன். என் தெய்வமே, இயற்ற முடியாமையினால் நீ துறந்த எதுவும் உன்னை விட்டுச் செல்லாதென்று அறிவாயா? நீ வென்றெடுக்காமல் சென்றாய் என்றால் விண்ணிலும் நிறைவு கொள்ளமாட்டாய். நான் நீயே என்றுணர்க! உன்பொருட்டு இந்நிலத்தை வெல்கிறேன். இப்பாரதவர்ஷத்தின் மீது உனது வாள் நிலைகொள்ளச் செய்கிறேன். ஆணவம் மிக்க வாள். பிறிதொன்றிலாது ஆளும் வாள். அறத்தின் இரக்கமின்மையால் ஒளிகொண்டது. என் கண்ணீர் எத்தனைமுறை அவர் காலடியில் விழுந்திருக்கும்? என் வாழ்வு அச்சொல்லுக்கென இயற்றப்படும் தவம். அதை என் அன்னைதெய்வங்கள் அறியும்.”
“முன்பொருமுறை சௌவீரத்தை வென்று அம்மணிமுடியுடன் நகர்புகுந்தீர்கள். அதை களியாட்டாக என் தலையில் சூட்டினீர்கள். அக்கணம் நான் மெய்ப்புகொண்டேன். என் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னில் எழுந்து அதை பாண்டு சூட்டிக்கொள்வதை உணர்ந்தேன். அன்று முடிவெடுத்து உறுதிகொண்டேன். விண்ணமர்ந்திருக்கும் தெய்வமே, மும்முடி சூடி உன் மைந்தர் சத்ராஜித் என அரியணை அமர்ந்தார்கள் என்றால் வென்றேன் என்று.” உள்ளிருந்து எழுந்த விசை மீண்டும் அவளை எழுப்பி அமரச்செய்தது. அவள் முகத்தில் ஒரு தசையமைப்பென்றே ஆகி எப்போதும் இருந்த வஞ்சச்சுளிப்பு முற்றிலும் மறைந்து அவள் அழகுகொண்டிருப்பதை மெல்லிய அகநடுக்குடன் விஜயை உணர்ந்தாள்.
“உங்களை என்னிடம் விட்டுவிட்டு அவர் மறைந்தார். அது உதிர்தல் அல்ல, அறுபட்டு விழுதல். யுதிஷ்டிரா, நீ பார்த்திருப்பாய் அவர் உடலில் எழுந்து இறுகி நின்றிருந்த விழைவை. பார்த்தாயல்லவா? சொல், பார்த்தாயல்லவா? அது என்ன? ஒருகணமேனும் அதை நீ மறக்கமுடியுமா?” என்றாள் குந்தி. யுதிஷ்டிரர் வலிப்புகொள்ளப்போகிறவர்போல அதிர்ந்துகொண்டிருந்தார். நடுங்கும் கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அதில் முகம் சேர்த்துக்கொண்டான் சகதேவன். “வெறுங்காற்றில் வீணென நின்ற அவ்விழைவு அடங்கவேண்டுமென்றால் அவன் எத்தனை மகளிரை கொள்ளவேண்டும்? இவன் எத்தனை மல்லர்களை வெல்லவேண்டும்? நீ எத்தனை அரியணைகளில் அமரவேண்டும்? எண்ணியிருக்கிறாயா?” குந்தி கேட்டாள்.
சிலகணங்கள் அவள் சொல்லின்றி உறைந்தாள். மானுடர் உள்ளும்புறமும் சொல்லில்லாமலாகும் கணங்கள் தெய்வங்களுக்குரியவை என விஜயை எண்ணினாள். குந்தி பெருமூச்சுடன் மீண்டும் மஞ்சத்தில் சாய்ந்தாள். “அதன்பொருட்டே என் வாழ்வு. ஒருமுறைகூட சொல்லென பாண்டு திரட்டிக்கொள்ளாத வஞ்சினமே என்னுள் நிறைந்துள்ளது. அவர்பொருட்டு என் மைந்தர் அரியணை அமர்ந்தாகவேண்டும். மும்முடி சூடியாகவேண்டும். அவர் கொடிவழிகள் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பல்லாயிரம் ஆண்டுகள் இப்புவியில் பாண்டு என்னும் சொல் நின்றாகவேண்டும்.”
உறுதியான குரலில் அவள் சொன்னாள் “பிற எதுவும் எனக்கு பொருட்டல்ல. ஆயிரம் பெண்டிரின் மங்கல நாணறுக்க நான் சித்தமாக இருக்கிறேன். பல்லாயிரம் குழந்தைகளின் சங்கறுத்து குருதிகொள்ள தயங்கமாட்டேன். புரங்களை எரிக்க, விளைநிலங்களை தரிசாக்க, வேதியர் பழிகொள்ள, முனிவர் தீச்சொல்லேற்க, நூறாயிரம் யுகங்கள் கொடுநரகில் நின்றெரிய எனக்கு தயக்கமில்லை. எழுபதாண்டுகளுக்கு முன் என் மடியில் தலைவைத்து விழிநீர் உகுத்த என் கொழுநனைக்கண்டு நெகிழ்ந்து எழுந்த ஒரு துளி விழிநீரே என் உள்ளம். அது எந்த அவையும் அறியவேண்டியதல்ல. அதை சூதர்கள் பாடவேண்டியதில்லை. தலைமுறைகளும் நினைவுகூரவேண்டியதில்லை.”
“நீங்களும் அறியவேண்டியதில்லை என்றே எண்ணியிருந்தேன். இத்தருணத்தில் அதை கூறும்படி அமைந்தது. இனி உங்கள் பொறுப்பு” என்றபின் திரும்பி விஜயையிடம் அவர்கள் செல்லலாம் என்பதுபோல் கைகாட்டினாள். விஜயை பெருமூச்சுவிட்டாள். தேவிகை விஜயையின் கைகளை தொட்டாள். குந்தி கண்களை மூடிக்கொண்டு நீள்மூச்செறிந்தாள். தேவிகை விஜயையிடம் தலையசைத்துவிட்டு “அரசே, கிளம்பலாம்” என்று யுதிஷ்டிரரிடம் சொன்னாள்.
உடல் பலமடங்கு எடைகொண்டுவிட்டதைப்போல சகதேவனின் கைகளைப்பற்றி உந்தி எழுந்து மெல்லிய தள்ளாட்டத்துடன் நடந்து யுதிஷ்டிரர் வெளியே சென்றார். நகுலனும் சகதேவனும் அவரை தாங்கிக்கொண்டு வெளியே சென்ற பின்னரும் பீமன் அசையாமல் சாளரத்தருகே நின்றிருந்தான். அறையின் ஒலியின்மையும் அசைவின்மையும் மூச்சுத்திணற வைத்தன. விஜயை தானும் வெளியே ஓடிவிடவேண்டுமென்று எண்ணினாள். ஏதோ அறியா விசையால் தூக்கி அகற்றப்பட்டதுபோல ஒருகணத்தில் பீமன் எழுந்து வெளியே சென்றான்.