விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்
அன்புள்ள ஜெயமோகன்
அவர்களுக்கு, நலம் , நலமறிய ஆவல் ,
ராஜ் கௌதமன் அவர்களுக்கு விளக்கு விருது கிடைத்தமைக்கு பெரு மகிழ்ச்சி ,
தற்போது நான் ரெண்டு வாரமாக சிலுவை ராஜ் சரித்திரம் படித்து வருகிறேன். பால்யம் இத்தனை துல்லியமாக உயிரோட்டமாக வெகு சில படைப்புகளில் மட்டுமே பதிவாகி இருக்கிறது. அரசியல் சரி தவறுகளுக்கு அப்பால் மதம் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் சார்ந்த உரையாடல்கள் தாண்டி மிளிரும் சிலுவை ராஜின் பால்யகாலம் . படிப்பவர்களுக்கு வெகு காலம் சிறு வயது நினைவுகள் அலைமோதும். தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய சாதனை . நிற்க.
இந்த புத்தகம் இப்போது பதிப்பில் இல்லை. கடந்த இரண்டு வருட சென்னை புத்தக விழாவில் முயன்று பின்னர் கோவை தியாகு நூல் நிலையத்தின் நூலக பிரதியின் ஒளிநகல் மூலமே படிக்கக் கிடைத்தது. தமிழினி யுனைடெட் ரைட்டர்ஸ் பிரிவு காரணமா என்று தெரியவில்லை ? தமிழினி வசந்தகுமார் அவர்கள் நூலின் கைப்பிரதddisk இல் உள்ளது என்றும் தேட வேண்டும் என்று கூறினார். இந்த நூல் புத்தக விழாவில் மறுபதிப்பு கண்டால் மகிழ்ச்சி. குறைந்தபட்சம் அண்ணா நூலகத்தில் பிரதி வைக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என் போன்ற மாச சம்பளக்காரனுக்கு நாஞ்சிலின் சதுரங்க குதிரை கொடுத்த தரிசனத்தை போல சிலுவை ராஜின் சரித்திரம் பல வாசகர்ளை சென்றடைய வேண்டும் .நூலகத்தின் அமைதியில் ஒரு மதிய நேரத்தில் என்றோ நாஞ்சில் நாடன் என்பவர் எழுதிய சில சொற்கள் சற்றே மனதை அசைக்க அவர் தம் பாதம் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அன்புடன்
மணிகண்டன்
அன்புள்ள ஜெ
நலம் தானே?
ராஜ்கௌதமனைப்பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். விளக்கு விருது அவருக்கும் சமயவேலுக்கும் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவருடைய சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை இரண்டுநாவல்களையும் வாசித்திருக்கிறேன். அந்நாவல்கள் இப்போது கிடைப்பதில்லை. தன்னைத்தானே பகடி செய்துகொள்ளும்படைப்புக்கள் அவை. தமிழிலக்கியத்தில் தன்வரலாற்றுத்தளத்தில் அவற்றுக்கு அழியாத இடம் உண்டு
அவருடைய ஆய்வுநூல்கள் எதையும் வாசித்ததில்லை. அவற்றைப்பற்றி நீங்கள் அன்றி எவரும் வாசித்துக்கேட்டதில்லை. இப்போது வாசிக்கவேண்டுமென ஆர்வமுள்ளது. ஆனால் நான் தமிழிலக்கியவாசகனே ஒழிய பண்பாட்டுஆய்வுகளை நுட்பமாக வாசித்துச்செல்பவன் அல்ல. ஏனென்றால் தமிழில் பெரும்பாலான பண்பாட்டு ஆய்வுகள் கசப்புடன் எதிர்மனநிலையுடனும் எழுதப்படுபவை. நான் ஆ.சிவசுப்ரமணியம் எழுதிய சிலநூல்களை வாசித்துள்ளேன். இவர்களெல்லாம் எழுந்ததுமே தங்கள் முகத்திலேயே காறித்துப்பிக்கொண்டு ஆய்வை ஆரம்பிப்பார்கள் என்று நினைத்தேன். ராஜ் கௌதமனை வாசிக்கவேண்டும்
அருண்குமார்