குறள் அறிதல்- கடிதம்

kural

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

குறளினிது மீண்டுமொருமுறை கேட்டுமுடித்தேன். நந்தியைச் சுற்றி உள்ளே சென்றேனோ இல்லையோ, கொம்புகளுக்கிடையே சிவ நடனத்தைக் கண்டேன்.

குறளின் வரலாற்று, சமூகப் பின்புல விளக்கத்திற்குப்பிறகு, வாழ்க்கையில் நிகழும் தருணத்துடன் இணைத்து விளக்கியது ஒரு பரவசத்தை உண்டாக்கியது. இப்படி பள்ளியில் எனக்குச் சொல்லித்தரப்படவில்லையே என்ற வருத்தம் எழுந்தது. இலக்கிய ரசனை தவிர்த்த ஒரு விதி நூலாக மட்டுமே தெரிந்துகொள்ளவும் படிக்கவும் கூடிய சூழல்தான் பள்ளிகளில் இருந்திருக்கிறது. பின்னர் சற்றே ஆர்வமுற்று ஆங்காங்கே தமிழ் இலக்கியப் பரிச்சயம் நிகழ்ந்தபோது கூட குறள் எண்ணெய் மினுக்கும் மூலவராக, பிரமிப்புடன் ஆனால் சற்றுத் தள்ளியே நின்று பார்க்கும்படியான சூழலே எனக்கு இருந்தது.

உங்கள் உரைக்குப் பிறகு, குறள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எங்கோ ஒரு தருணத்தில் தன்னை நிகழ்த்திக்கொண்டிருப்பது புரிந்தது. அந்த தரிசனம் நிச்சயமாக ஒரு விவரிக்க இயலாத பரவச அனுபவத்தை எனக்குத் தருவதை ஆச்சர்யத்துடன் உணர்கிறேன். குறள் நெறி, குறள் பேசும் அறம், குறள் சொல்லும் வாழ்க்கை என்பது போன்ற சொற்றொடர்களை விட குறள் இனிது என்பது மனதுக்கு நெருக்கமாக உணரவைக்கிறது.

வாழ்க்கையில் பல “வேடிக்கை மனிதர்களை” இனங்கண்டுகொள்ள பாரதியின் வரிகள் உதவியதுண்டு. ஆனால் குறளையும் அப்படி தரிசிக்க ஒரு அணுகுமுறையை கற்றுக்கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி. சமீபத்தில் கூட ‘அகலாது அணுகாது” ஒரு இடத்தைக் கடந்தேன். இந்த முறையில் குறளைப் பயில்வது, உற்சாகமாகவும், மேலும் பல குறள்களைத் தெரிந்துகொள்ளவும் ஒரு பெரும் தூண்டுதலாக இருக்கிறது. அனுபவத்திற்கு இயைந்துசெல்லும் தெரிந்த சில குறள்களின் தரிசனம் தாண்டி, பாதித்த நிகழ்விற்கு குறளைப் பின்னோக்கித் தேடுவதும் நிகழ்கிறது.

‘நெஞ்சத்து அகம்’ கவிவதைக்காட்டி நகுவதை விளக்கியது ஒரு ப்ரமாத மின்னல். ‘செல்விருந்திற்கான (ஆஹா! என்ன ஒரு வார்த்தைப் ப்ரயோகம்!) அனுபவமும் நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது..

இரு குறள்களைப்பற்றிய உங்கள் பார்வையை அறிய விழைகிறேன். அது என் புரிதலை மேலும் தெளிவாக்குமென்ற ஆர்வத்தில்….

1.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு.

‘அப்பற்றை பற்றுக’ என்பதின் மேலதிக விளக்கமாக ஏதும் இருக்கிறதா? ஏன் மறுபடி சொல்லப்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது? உரைகளிலும் நான் படித்தவரை இந்தச் சொற்றொடரைக் கடந்து பொதுவான விளக்கமே அளிக்கப்பட்டிருக்கிறது. சொல்லடுக்குமுறையைத் தாண்டிய வேறு ஏதேனும் உணர்த்தப்படுகிறதா? அதைப் பற்றுவது கடினம் என்பதால் இருமுறை சொல்லப்பட்டிருக்கலாமா? ‘நஹி நஹி ரக்ஷதி’ என்று பஜகோவிந்தத்தில் வருவதுபோல்? (இது சரியான ஒப்புமையா என்று தெரியவில்லை. சட்டென்று மனதில் தோன்றியமையால் எழுதினேன்) உங்களின் விளக்கத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

(ஆறுமுறை ஒரு சொல் பொருள் மாறாமல் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ஒரே குறள் இதுவாக மட்டும் இருக்கலாம். தேடியவரை வேறு எதுவும் கண்ணில் படவில்லை)

2.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

இதைப் பொருள்கொள்கையில், வரிசைப்படுத்துதலில் மேன்மையான குணத்தை முதலில் சொல்லி குற்றத்தை பின் சொல்லுவது புரிகிறது. அவற்றுள் மிகை நாடிய பிறகு “மிக்க” கொள்வது எனும் இடத்தில், அரசியலில் அறம் சொல்ல வந்ததால், நன்றாக இருப்பினும் தீதாக இருப்பினும் மிகையான குணத்தை பலமடங்கு ஏற்றிக் கொள்ளுதல் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும்போது அரசியலில் ஒரு நல்லது செய்ததை எப்படி பெருக்கிக் எடுத்துக்கொள்ளமுடியும்? என்ற ஒரு பொருள் குறைவு வருவதுபோலும் தோன்றுகிறது.

  1. படர்மெலிந்திரங்கல் பெண்டிர்க்கு உரியதாகக்

காட்டப்பட்டாலும்,

‘காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளன்’

என்ற குறளை ஒரு ஆணுக்கு பொருத்திப் பார்த்து, அங்கிருந்து

‘தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு’ வரை விரித்துப் பார்க்கும்போது ஒரு கவிதை நயம் கிடைக்கிறது.

  1. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்’ என்பதற்கும்

‘யான் எனது எனும் செருக்கழிப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகல்’ என்பதற்கும் உள்ள தொடர்பும் வேறுபாடும் தெரிந்தபோது வியக்க வைத்தது.

‘சங்கச் சித்திரங்கள்’ புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். இலக்கியங்களை இலக்கிய நயத்திற்காக தள்ளிவைத்துப் பார்க்காமல், எப்போதுமே சமகால வாழ்க்கையின் நுண்ணுணர்வுகளினூடே புரிந்துகொள்ளுதல்தான் அதன் நிகழும் தருணம் போலும்!

கங்கை ப்ரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தாலும் பூக்குடலையில் செல்லும் அகலின் வெளிச்சம் தனக்கேயான ஒரு பெருக்கை காட்டிச்செல்வதுபோலிருந்தது “குறளினிது”.

‘செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது’.

மீண்டும் நன்றியுடன்

நா .சந்திரசேகரன்

முந்தைய கட்டுரைஒரு கோப்பை காபி- கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைநிலைப்பதும் கலைப்பதும் ஆனது