என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு

yanai

 

ஒரு யானையை , அதன் உயிரின் இறுதி துடிப்பும் அடங்கும் வரை ,அணு ஆணுக்காக சித்ரவதை செய்து அதை கொல்ல சிறந்த வழி ,அதன் வாயில் வெடி வைப்பது .

 

கர்நாடகாவின் நாஹர் ஹொலே  வனப் பகுதியில்  அப்படிக் காயமடைந்து திரியும் யானை ஒன்றை பின்தொடர்கிறார் சூழலியலாளர் ராமன் சுகுமார். பொதுவாக  அங்கு  வயலை துவம்சம் செய்ய வரும் வன மிருகங்களுக்கு ,[குறிப்பாக காட்டுப் பன்றி ],  பழத்தில் வெடி வைத்து பொறி  அமைப்பார்கள் . பன்றி அதை கடித்தால் ,அக்கணமே தலை சிதறி இறந்து போகும். யானை அதை உண்டால் ?

 

யானை தனது துதிக்கையால்  பழத்தை எடுத்து வாயில் வைத்து அதக்கும் , வாயிக்குள் உணவு அதக்கப்பட்ட பிறகே துதிக்கை வாயிலிருந்து மீளும் .  ஒரு வினாடி செயல்தான் இது யானைக்கு .  உணவை யானை வாய்க்குள் வைத்து அதக்கும் அக் கணம் , உணவுக்குள் பொதிந்திருக்கும் வெடி ,அந்த அழுத்தத்தால் வெடிக்கும் ,  துதிக்கையில் பலம் வாய்ந்த பகுதியான , யானைக்கு எல்லாமுமாக இருக்கும்  .துதிக்கையின் முனை பகுதி சிதைந்து போகும் ,  வாழைப்பூ  வாய் கிழிந்து போகும் . மத்தகத்திலிருந்து துதிக்கை துவங்கும் மேலண்ணம் உடைந்து போகும் .

 

உடைந்து போன மேலண்ணம் இப்போது ஒட்டு மொத்த துதிக்கையின்  பாரத்தையும் கணம் கணமாக வலி கொண்டு அறியும் .  சிதைந்த துதிக்கை   கொண்டு இனி ஒரு சிறு புல்லை கூட பறிக்க இயலாது ,  சிதைந்த வாய் ,பசி  தாகம் ,…  மரணம் வந்து அதற்கான விடுதலையை வழங்கும்  இறுதி கணம் வரை வேதனை.  இந்த வர்ணனை எதையும் ராமன் செய்யவில்லை .  காரணம் அவர் ஆய்வாளர் .உணர்ச்சிகள் கலவாமல் தன்  முன் நிகழும் நிலையை ஒரு அறிக்கை போல சொல்கிறார். உணவில் வெடி வைத்து வாய் சிதைந்த யானை .அவ்வளவுதான் அதற்க்கு மேல் இல்லை .  ஆனால் அதன் உணர்வு தீவிரம் இதுதான் .

 

இந்தியாவில் நவீன இயற்கை இயல் படிப்பை தனது பெரு முயற்சி வழியே முதல் முதலாக கொண்டு வந்த  மாதவ் கட்கில் அவர்களின் வழிகாட்டலின் படி ,யானைகள் ,மனிதர்கள்  இடையேயான இணக்கத்தையும் மோதலையும்  தனது ஆய்வுக்கு கருப்பொருளாக கொண்டபடி எண்பத்தி ஒன்றில் ,  வயல்கள் பெறுகிக்கொண்டிருக்கும் ,கிழக்குத்தொடர்ச்சி மலை சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள், ஒரு பாடாவதி ஜீப்பில்,காட்டெருமை குறித்த ஆய்வாளரான தனது நண்பருடன் நுழைகிறார் ராமன் சுகுமார் .

 

பத்து ஆண்டுகள்  ராமன் சுகுமார்  அந்த வனத்தில் நிகழ்த்திய கள ஆய்வும் ,அனுபவங்களும் அடங்கிய  நூலே  என்றென்றும் யானைகள்   எனும் இந்த ஆய்வு நூல் .  புராணம் ,வேதம் மதம் வழிபாடு வரலாறு  துவங்கி இன்றைய சினிமாக்கள் வரை  யானைகள் என்னவாக இருக்கிறது , ஒரு யானை பிறந்த குழந்தையாக இருந்து ,அது மூத்து மண் மறையும் வரை என்னவாக இருக்கிறது , தென்னிந்தியா துவங்கி ஆசியா முழுமைக்கும் ,யானைகள் எண்ணிக்கை ,அதன்  நிலை , என்னவாக இருக்கிறது ,  என்பதெல்லாம் அவரது கள ஆய்வுகள் ,அனுபவங்களுடன் இணைந்து நான் லீனியர் முறையில் விவரிக்கப்படுகிறது.

 

குறிப்பாக ஒரு யானை பிறந்து அது மெல்ல மெல்ல வளர்வது குறித்து இந்த நூல் அளிக்கும் சித்திரம் தலையாயது . இறந்த சக யானையை ,ஒரு யானைக்கூட்டம் எப்படி கையாளும் ? அது அப்படிக் கையாள்வதற்கு பின்னுள்ள காரணிகளை ராமன் சுகுமாரின் மாணவர் மிலிந் விளக்குவது மிக்க சுவாரஸ்யம் கொண்டது . இந்த விளக்கம் அளவே சுவாரஸ்யம் கொண்டது,  செங்குத்தான மலையை யானைகள் எங்கே ஏறி கடந்து செல்லுமோ, அந்த பாதையை ,அந்த வழிமுறையை அடி ஒற்றியே , மலை பாதையில் சாலை போடும், தொழில் நுட்பம் வளர்ந்தது என ராமன் குறிப்பிடும் இடம் .

 

ஒரு யானை ,அந்த யானை இருக்கும் குடும்பம் , அந்த குடும்பம் இருக்கும் குழு , அந்த குழு இணைந்திருக்கும் பெருங்குழு என ஒற்றை யானையின் பழக்க வழக்கம் துவங்கி , ஒட்டு மொத்த யானைகளின் சமூக செயல்பாடுகளையும், காளி , தாரா ,மீனாட்சி ,விநாயக் என வெவ்வேறு பெயர் சூட்டப்பட்ட  யானைகள்  வழிசெல்லும்  , ராமனுடன் பின்தொடர்ந்து சென்று வாசகனும் ஒரு இணை ஆய்வு மாணவன் என அவர் அருகே நிற்கும் அனுபவத்தை இந்த ஆய்வு நூல் வழங்குகிறது . திம்பம் வனப்பகுதியில் முன்னூறு யானைகள் கொண்ட பெருங்குழுவை ராமன் சுகுமார் உடன் நின்று கண்டு நானும் பரவசம் கொண்டேன் .

 

சத்யமங்கல காடுகளின் கோடை எவ்வாறு இருக்கிறது , வசந்தம் ,மழை காலங்கள் எவ்வாறு இருக்கிறது , ஒவ்வொரு சூழலையும் யானைகள் எவ்வாறு எதிர் கொண்டு தகவமைக்கின்றன , யானைகளின் கூடல் காலம் ,அது குட்டி ஈனும் காலம் ,அது உண்ணும் உணவுகள் ,வனத்தில் அந்த உணவுகளின் ,பெருக்கமும் குறைபாடும் ,யானைகளுக்குள் நிகழ்த்தும் மாற்றங்கள் ,யானைகள் செல்லும் வலசை ,காட்டுத்தீ , வயல் காக்கும் விவசாயிக்கள் , நோய்கள் ,  யானையை குறிவைக்கும் பிற  இடர்கள் என முற்ற முழுதான ஒரு முழுமை உணர்வை வாசிப்பில் வழங்கும் நூல் .

 

எண்பத்தி ஒன்று துவங்கி தொன்னூற்றி ஒன்று ஆண்டு வரையியலான பத்து ஆண்டுகள் கொண்ட   இந்த கள ஆய்வு நூலின் பகைப்புலம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. மொபைல் தொடர்புகள் உருவாகாத காலம் .  வீரப்பன் கோலோச்சும் காலம் . பொதுவாக இந்த எல்லைப்பகுதியில் சட்டம் தன் கடமையை செய்வது கிட்ட தட்ட இயலாத காரியம் . அந்த எல்லையில் இருந்து இங்கே ஊடுருவி குற்றங்கள் இழைத்து விட்டு ,அங்கே ஓடி பாதுகாப்பாக அமைந்து கொள்வது சர்வ சாதாரணம் .

 

இப்படி எல்லை தாண்டி வரும் யானை தந்த திருடர்களின், முதல் தரகர் செவ்வி கவுண்டர் என்பவர் .  அவர் பணிநிறைவு அடைந்த பின்பு ,அவர் இடத்தை எடுத்துக் கொண்டவனே வீரப்பன் .  ஆப்ரிக்காவில் இருந்து தந்தம் இறக்குமதி செய்ய அனுமதி உண்டு [வீரப்பன் காலம்] , ஆனால் தாள இயலா வரி . அந்த ஆப்ரிக்க தந்த இறக்குமதி லைசென்ஸ் வைத்திருப்பவர், செலவு குறைவாக கிடைக்கும் இந்த தந்தத்தை ,கள்ள மார்க்கெட்டில் இந்த தந்த கொள்ளையர்கள் வசமிருந்த பெற்றுக் கொள்வார் . ஜப்பான் வரை தந்த சிலைகளுக்கு நல்ல கிராக்கி . இங்கோ கேட்க ஒருவரும் இல்லை . கொல்ல வேண்டியதுதான்,விற்க வேண்டியத்துதான் .  [யானை செத்த பின் ,அல்லது அசைய இயலா நிலை எட்டிய பின் ,  கோடாலியால் தசையை வெட்டி பிளந்து ,தந்தம் பதிந்திருக்கும் வேர் பகுதியில் அமிலத்தை ஊற்றி ,தந்தத்தை பறித்து எடுப்பார்கள் ].

ராமன் சுகுமார்
ராமன் சுகுமார்5

இந்த நூலுக்குள் ,இந்த தந்த கொள்ளையர்கள் , அவர்களின் வலை அமைப்பு ,  வீரத் தியாகி வீரப்பன், அக் கூட்டத்துடன் நேர்மையும் ,வீரமும் கொண்டு போராடி உயிர் விட்ட ,சிதம்பரம் ,சீனிவாசன் போன்ற அதிகாரிகள்   அனைத்தும்  விரிவாகவே வருகிறது.

 

ஆய்வாளருக்கே உரிய கருணையே அற்ற கறார் பகுதி என , எந்த யானையை ,எதன் பொருட்டு ,எவ்வாறு கொல்லலாம் என ராமன் பரிந்துரைக்கும் பகுதியை சொல்வேன் .

நூலுக்குள் உலகெங்கும் விவாபித்து நிற்கும் யானை, வன உயிர் ,தாவர  ஆய்வாளர்கள் , அவர்கள் பற்றிய சிறு சிறு குறிப்புகளுடன் நூல்நெடுக்கிலும் வந்தபடியே இருக்கிறார்கள்.[இந்த நூலாசிரியர்  ராமன் சுகுமார் ராமுலஸ் விட்டேக்கரின் எனது கணவனும் ஏனைய விலங்குகளும் நூலில் சில வரிகளில் வந்து போகிறார் ]   .இணையத்தில் அப்பெயர்களை உள்ளிட்டு தேடினால் ஒவ்வொருவரும் மிக முக்கிய ஆளுமைகள் ,யானைகளை அறியும் பொருட்டு ,அவற்றின் நல்வாழ்வின் பொருட்டு தமது ஆயுளை அர்ப்பணித்தவர்கள் .  அவர்கள் மட்டுமே கொண்ட மிக முக்கிய கூடுகை ஒன்று மேற்கு வங்கத்தில் நிகழ்ந்திருக்கிறது .அங்கே அந்த ஆளுமைகளுடன் கலந்து ,தனது பத்து வருட ஆய்வின் ஒவ்வொரு அலகும் சரிதான் என உறுதி கொள்கிறார் ராமன் .   இந்த நூலில் சில வார்த்தைகளில் வந்து போகும் முக்கியமான இருவரில் ஒருவர் ,யானைகள்  பல கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் தனது குழுவுடன் தொடர்பு கொள்ள  பயன்படுத்தும் கேளா ஒளி மேல் ஆராய்ச்சி செய்கிறார் [மழைக்காலமும் குயிலோசையும்] ம கிருஷ்ணன் . மற்றவர் யானைகளுக்கு மருத்துவம் பார்க்கிறார் . இறந்து போன யானை ”உள்ளே இறங்கி ” அதன் பாகங்களை பரிசோதித்திக்கிறார். வெளியே வந்து.கை கழுவிவிட்டு ,எந்த சலனமும் இன்றி தனது மதிய உணவை  உண்ண துவங்குகிறார் . ஆம் யானை டாக்டர் கே .  கறாரான ஆய்வு மனம் கொண்ட இந்த நூலாசிரியர் கூட யானை டாக்டரை ,அவரது ஆளுமையை பிரமிப்புடன்தான் அணுகுகிறார் .

 

தமிழினி வெளியீடான, என்றென்றும் யானைகள் எனும் இந்த சிறு நூல்,[ ஆம் நூறே பக்கம் .பத்து ஆண்டுகள் உழைப்பை பொதிந்து வைத்திருக்கும் நூறு பக்கம் ]  யானை டாக்டர் சிறு கதையுடன் இணைத்து வாசித்து ,பரவ வேண்டிய நூல்  .எலிபன்ட் டேஸ் அன் நைட் .  டென் இயர்ஸ் வித் எலிபன்ட்  எனும் தலைப்பில் ராமன் சுகுமார் எழுதிய ஆங்கில நூலை , வாசகனுக்கு நெருக்கமானதொரு மொழியில் ,மொழிபெயர்த்திருக்கிறார் டாக்டர் ஜீவானந்தம் .

 

கம்பீரமான விலகிய தந்தங்கள் கொண்ட  அந்த கஜராஜனை காணவில்லை . வீரப்பன் கொன்ற யானைகளில் அவனும் ஒன்றாக இருக்கலாம். இனி இந்த வனத்தில் அவனது கால்தடத்தை என்னால் காண முடியாது ,அதை தொடர்ந்து சென்று ,அது முடியும் நீர் நிலையில் இனி அவனை என்னால் பார்க்க முடியாது .

 

இந்த நூலில் ராமன் சுகுமார் வரிகள் இவை .எழுதி கால் நூற்றாண்டு கடந்த வரிகள் .இக்கணம் அந்த கஜராஜனை அவனது இன்மையை , எண்ணி கண்கள் கலங்கி ,தொண்டை கட்டுகிறது.

 

இந்த நூலுக்குள் பொதிந்த இந்த அம்சமே இதை ஆய்வு நூல்  எனும் நிலையில் இருந்து எழுந்து  , இலக்கிய சிறகுகள் கொண்டு பறக்க  வைக்கிறது .

 

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவைரமுத்து,ஞானபீடம் -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைசிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்