அன்புள்ள சார்!
‘ஒரு கோப்பை காபி’.. இந்திய ஆண்களின் ஆழ்மண இக்கட்டுகளை மிகவும் நேர்த்தியாக, படிம தன்மையுடன், மெல்லிய குறிப்புக்களுடன் சொல்லி செல்கிறது.
நம்மை நாம் உள்ளூர பார்க்க சொல்கிறது. தொடக்கத்திலேயே.. ‘நாங்கள் பில்டர் காபியை போலவே.. மூன்று குணங்களின் கலவை’ என்பது பெண்கள் சார்ந்து தற்போது நம் மன நிலைதான் என்று படுகிறது.
பெண்ணை நம் சம்பிரதாய பிம்பத்துடன் பார்க்கும் மன நிலை முதலாவது. தாயாக, தன் வாழ்க்கையை குடும்பத்துக்காக மட்டுமே அர்ப்பணிக்கும் தியாகியாக, அப்பாவின் வார்த்தைக்கு மாற்று சொல்லாத ஒருத்தியாக, எல்லா வற்றுக்கும் மேல் அப்பா என்னதான் கொடுமை படுத்தினாலும் அவர் மேல் தூய அன்புடன் இருக்கவேண்டியவளாக, கர்ப்புக்கரிசியாக மட்டுமே பார்க்க சொல்லும் மன நிலை. மனைவியிடமும் உள்ளுக்குள் இதையேதான் எதிர்ப்பர்க்கிறோம்.
இரண்டாவது, ஐரோப்பா கல்வி நமக்கு அளித்த நோக்கு. பெண்களை தனக்கு நிகராக பார்க்க வேண்டும்.. அவர்களின் மேம்பாட்டை பார்த்து மகிழ வேண்டும் என்ற லட்சிய வாதம். உண்மையாக அதை விரும்புகிறோம். ஆனால் இது நம் மேல்தட்டு மனதில் நமக்கு நாமே திணித்து கொண்டது. இன்னும்.. உள்ளுக்குள், ஆழ் மனதுக்குள் செல்லவில்லை.
மூன்றாவது, இந்த இரண்டுக்கும் நாம் மனதில் “வெற்றிக்கரமாக” சமைத்து வைத்திருக்கும் சமரசம்! ஒரு பில்டர் காபி போலவே. உண்மையில்.. இந்த வெற்றி ஒரு பாவனை என்றுதான் நினைக்கிறேன். உள்ளுக்குள் இரண்டுக்கும் போராட்டம் புகைந்து கொண்டே இருக்கும்.
அதனால், பெண்கள் உண்மையாகவே சுதந்திரமாக மாறும் போது.. தம்முடைய புதிய எழுச்சி தந்த துடுக்குதனதுடன் பழைய மன கட்டுப்பாடுகளை வீசி எறியும்போது நாம் துனுக்குறுகிறோம். உள்ளுக்குள் கவலை கொள்கிறோம். இங்குதான் நம் பழைய ஆழமன நம்பிக்கைகளுக்கும், இன்று கற்ற லட்சிய வாதத்துக்கு போராட்டம் மனதில்
பெரிதாக எழுகிறது. எந்த ஒரு psychological conflict-ம் உழவியல் பிரச்சனையாக வெளிப்படும் என்பார்கள். இந்த கதையில் வரும் மகாவுக்கு நிகழ்வது இதுதான்.
பிறப்பிலிருந்து அப்பாவுக்கு அடிபணிபவளாகவே அம்மாவை பார்த்த அவனுடைய ஆழ்மனது அவனுடையது.
ஆதலால், அப்பாவை “கொன்ற” குற்ற உணர்விலிருந்து அம்மா அவ்வளவு சீக்கிரமாக வெளியே வந்தது தாங்க முடியவில்லை. காலம் காலமாக கணவன் இறந்தால் உடன் கட்டை எற துடிக்கும் பெண்களை பார்த்து வந்தோம் இல்லையா! அமெரிக்காவுக்கு வந்த பிறகு அவளில் வரும் தன்னதிகாரம், என்றும் காணாத புதிய மாற்றம் அவனால் தாங்க முடியவில்லை. ஆனால், அவனின் கல்வி அளித்த லட்சியவாத மனது தன்னில் உள்ள அந்த ஆற்றாமையை அங்கீகரிக்க மறுக்கிறது. அதனால்தான் தனக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள முடியாதவனாக தவித்து மார்த்தாவிடம் தவிக்கிறான்.
கதையின் குறிப்புகளின் படி.. மார்த்தா விடமும் அவனுக்கு இதே பிரச்சனைதான் இருந்திருக்கும். கல்வி அழித்த வாய்ப்புகளுடன்.. அமெரிக்க வந்த அவன் அவளை காதல் மனம் கொள்கிறான். அவளின் சுதந்திரமான் குணம், அறிவு, அவனைவிட அவளுக்கு இருக்கும் உயர் பண்புகள் அவனால் தாங்கிக்கொள்ளாமல் போயிருக்கலாம். அது மனதளவிலேனும் அவள்மேல் வன்முறையாகவே முடிந்து இருக்கும். பிரிந்து விட்டார்கள் . தன் (ஆழ்) மனதுக்கு உகந்த பெண்ணை இரண்டாவதாக மனம் புரிந்து அவளுடன் “பிரச்சனை” இல்லாமல் வாழ்கிறான்.
மார்த்தாவின் பால் அவனுக்கு குற்ற உணர்வும் இருக்க கூடும். அதுவும் அவனுடைய மன போராட்டத்தை மேலும் கிளறி இருக்கலாம்.
அவன் மூலம் இந்திய ஆண்களை மிக சரியாக புரிந்து வைத்து இருக்கிறாள் மார்த்தா. ‘இதெல்லாம் உங்கள் இந்திய ஆண்களின் பிரச்சனை…’ என்று சொல்லி அவனை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த நினைக்கவில்லை. நாசுக்காக அவன் பிரச்சனைக்கு நம் சடங்குடன் கூடிய ஒரு மன நாடகத்தை நடிக்க சொல்கிறாள்.
“அப்பாவை தற்செயலாக கொன்றது நான்தான். அம்மா இல்லை. அதனால் அவளுக்கு குற்ற உணர்வு தேவை இல்லை. அவள் எப்படி மாறினாலும் பிரச்சனை இல்லை. என் ‘பாவத்தை’ மன்னிக்க, என் குற்ற உணர்வை போக்கத்தான் இந்த சடங்கு!” என்று அவன் ஆழ்மனத்துக்கு சொல்லிக்கொள்ளும் ஒரு நாடகம் அது.
மகாவின் மனநிலையின்படி.. அவனுக்கு அது தீர்வு அளிக்கலாம்.
ஒரு சராசரி இந்திய ஆணாக நம்மில் என்றுமுள்ள இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?
அன்புடன்,
ராஜு
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய “ஒரு கோப்பை காபி” சிறுகதை படித்தேன். இங்கே இரண்டு சம்பவங்களினால் கோர்த்து உள்ளீர்கள் .
1) மகா தன் அம்மாவை சமாதான படுத்தும்போது அதை அவள் உடனடியாக ஏற்றுக்கொள்வதும், தன் தவறில்லை என்று இன்னொருவர் சொல்லும் பொது அதை அவள் மனம் ஏற்று அமைதியடைவதும்; .
2) ஏதோ ஒரு விதத்தில் மார்த்தாவை ஏமாற்றிய மகா, தன்னை மார்த்தா மன்னித்தவுடன் தன் ஒட்டுமொத்தமான மன அலைச்சலிலிருந்து மீளும் தருணத்தோடு கதை முடிகிறது.
நம் மனம் அதன் உச்சகட்ட கவலை அலைச்சலில் இருக்கும் போதே அது தன் அமைதிக்கு தானாகவே தயாராகிவிடுகிறது. ஒரு சொல்லோ உந்துதலோ அரவணைப்போ மன்னிப்போ தான் மிட்சம் . அது கிடைத்தவுடன் தான் தயாராகி இருந்த இடத்திற்கு மனம் அதன் போக்கில் சென்று சேர்ந்துவிடுகிறது.
மார்த்தாவிடம் சொல்லும் போதே அவன் மீண்டுவிட்டான், அவளின் மன்னிப்பு மட்டும் தான் பாக்கி. மகாவிடம் அவன் தாய் சொல்லும் போதே அவள் மீண்டுவிட்டாள், மகாவின் ஆறுதல் மட்டும் தான் பாக்கி. என் வாழ்வில் இதை பொருத்திப்பார்க்கும் பொது என்னக்கு ஆச்சரியமாக உள்ளது. நானும், என்னிடத்தில் மற்றவர்களும் இப்படியான சம்பவங்களை செய்துகொண்டுள்ளோம்.
தலைப்பு தான் எனக்கு புரியவில்லை. மகாவும் அவனுடைய அம்மாவும் ஒரே ரசாயனம் தான் என்று எடுத்துக்கொள்ளலாமா?
நன்றியுடன்,
விஜயகுமார்
சிகாகோ.
***