வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 1

blவிஜயை தேரின் முகப்புச்சாளரத்தின் சிறு திரையை மெல்ல விலக்கி அப்பால் ஏவுபீடத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியிடம் “அணுகிவிட்டோமா?” என்றாள். அவன் “முதல் காவல்நிலை தெரிகிறது, அரசி” என்றான். “நன்று” என்றபின் அவள் திரையை மூடிவிட்டு இருக்கையில் சாய்ந்தாள். அவளருகே தாழ்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த முதிய சேடியான அபயை “பெருஞ்சாலை வந்துவிட்டதே காட்டுகிறது, நகர் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்றாள். வெறுமனே அவளை நோக்கிவிட்டு விஜயை விழிதிருப்பிக்கொண்டாள்.

அவள் பேச விரும்புகிறாளா இல்லையா என்பதை கணிப்பதற்காக அபயை அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் அவளே புரிந்துகொண்டு “சிபிநாட்டு அரசி இப்போது அங்குதான் இருக்கிறார்கள் என்று அறிந்தேன்” என்றாள். “ஆம்” என்று விஜயை தலையசைத்தாள். “போர் குவியம் கொண்டிருக்கிறது. சிம்மக்குரல் கேட்ட மான்கூட்டமென ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு சிதறிச் சுழல்கிறார்கள்” என்று சேடி சொன்னாள். “சிம்மத்தை நோக்கியே ஓடுபவர்களும் உண்டு” என்று மேலும் அழுத்தினாள்.

விஜயை திரும்பி அவள் விழிகளை பார்த்தாள். இருமுறை சொல்லுக்கு ஆயம்கூட்டி அதைத் தவிர்த்து பின் எடுத்த சொல்லை தவிர்க்கமுடியாமல் “போரைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொருவரும் தங்கள் இயல்பில் முயல்கிறார்கள். ஏதேனும் ஒரு குரலுக்கு தெய்வங்கள் உளம் அளித்தால்கூட நன்றுதானே?” என்றாள். அபயை நகைத்து “தெய்வங்களிடம் உள்ள தீய வழக்கம் என்னவென்றால் அவை மனிதரின் சொற்களையோ எண்ணங்களையோ நம்புவதில்லை, ஆழங்களை மட்டுமே கருத்தில் கொள்கின்றன” என்றாள்.

விஜயை அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். முப்பதாண்டுகளுக்கும் மேலாக அவளுடன் இருந்துகொண்டிருக்கும் சேடி அவள். அவள் சிறுமியாக இருக்கையில் எப்போதும் அபயையுடன் இருக்கவே விரும்பினாள். அரண்மனைச்சேடியரின் சிரிப்பும் பேச்சும் உடலசைவுகளும்கூட ஒன்றுபோலவே இருக்கையில் அவள் மட்டும் எங்கும் எப்போதும் தனித்து தெரிந்தாள். இளமையில் அவள் விழிகளில் நஞ்சு கலந்த நகைப்பு எப்போதும் இருந்தது. அன்று அது ஒவ்வொரு கணத்தையும் பொருள்கொள்ளச் செய்வதாக, வெடித்து நகைக்கச் செய்வதாக இருந்தமையால் அவள் தனக்கு அணுக்கமாக ஆனாள்.

அகவை நீளும்தோறும் அபயையில் இருந்த பிற கூறுகள் அனைத்தும் மறைந்து அந்த நச்சு நகைப்பே அவளென்றாகி திரண்டது. முகத்தில், விழிகளில், சிரிப்பில் எங்கு அந்நகைப்பிருக்கிறதென்றே தெரியாமல் அதுவே அவள் உருவென எப்போதும் முன் நின்றது. எப்போது அவளை தன் உள்ளம் விலக்கத் தொடங்கியது என்று விஜயை எண்ணிப் பார்த்தாள். அவைநடுவே திரௌபதி சிறுமை செய்யப்பட்ட அன்று, அச்செய்தியை அவளிடம் சொன்ன அபயை கோணலாக வளைந்த கீழுதடும் விழிகளில் எள்ளலின் ஒளியுமாக “நன்று, இனி பாரதவர்ஷத்தில் பெண்டிர் அனைவரும் எண்ணிக்கொதிக்க பிற உரு ஒன்று கிடைத்தது. தன்னை எண்ணிக்கொதிக்கையில் சார்ந்தோரை வெறுத்தும் தப்பித்துக்கொள்ளலாம்” என்றாள். அக்கணத்தில் தான் விஜயை அவளை முற்றாக வெறுத்தாள். வாளை உருவி அவள் சங்கை அறுத்து பெருகும் குருதியைக் காணவேண்டுமென்று பொங்கி எழுந்த ஆழம் ஒன்றை வென்று அத்தருணத்தை கடந்தாள்.

பிறகு அவள் சொல்லும் அத்தனை சொற்களிலும் அந்த நஞ்சையே உணர்ந்தாள். ஆனால் அவளை தவிர்க்க இயலவில்லை. அவளை ஒழித்து கானாடலுக்கோ ஆலயம் தொழவோ சென்று சில நாட்களை கழித்ததுண்டு. அந்நாட்கள் முற்றிலும் வெறுமைகொண்டு எண்ணுவதற்கும் மகிழ்வதற்கும் ஏதுமின்றி கடந்து சென்றன. அவ்வெறுமை தாளாமல் மீண்டும் அவளிடமே திரும்பி வந்தாள். வெறுப்பையும் கசப்பையும்போல நாட்களை நிறைக்கும் பேருணர்வுகள் பிறிதில்லை என்று உணர்ந்தாள். அவ்விருள் பின்புலத்தில் மின்னுகையிலேயே உவகை பொருள்கொள்கிறது. இனிமைகள் அணுக்கமாகின்றன.

பின்னர் அவளின்றி தானில்லையென்று தெளிந்தாள். அவளை விலக்கும் முயற்சியை கைவிட்டாள். ஒவ்வொரு எண்ணம் தனக்குள் எழுகையிலும் இதை அபயை எப்படி சொல்லென ஆக்குவாள் என்று உள்ளிருந்து ஒரு கணிப்பு ஓடுவதை உணர்ந்தபோது தன் விழைவுகளால் அவளை அத்தனை ஆண்டுகளில் மெல்ல வனைந்தவள் தானே என்றுணர்ந்தாள். கல்லைச் சூழ்ந்து வேர்பரப்பி கவ்வி கல்லை அசைவிலாது நிறுத்தும் அருகத்து நச்சுமரமென அவள் தன்னை ஆட்கொண்டிருக்கிறாள்.

பெரிய தந்தை சல்யர் இந்திரப்பிரஸ்தத்திற்குத் துணையாக படையுடன் கிளம்பிச்சென்று வழியிலேயே அஸ்தினபுரியுடன் சேர்ந்துகொண்ட செய்தியை அவளிடம் வந்து சொன்ன உளவுச்சேடி காத்யை “அஸ்தினபுரியுடன் படைக்கூட்டு அமைவதற்கு நம் அரசர் கைச்சாத்திட்டிருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன் அஸ்தினபுரியில் அச்செய்தி அவையறிவிப்பாகவும் பின்னர் நகர்மன்றுகளில் அரசறிவிப்பாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, அரசி” என்றாள். “நன்று” என்று சொல்லி அருகே நின்ற அபயையிடம் “உளவுச்சேடிக்கு பரிசில் அளித்து அனுப்புக!” என ஆணையிட்டுவிட்டு கைகளை மார்பில் கட்டியபடி பீடத்தில் உளம் செயலிழந்து அமர்ந்திருந்தாள். பரிசில் பெற்று அவள் செல்வதை வெறித்து நோக்கிக்கொண்டு நெருநேரம் இருந்தாள்.

“ஒருவழியாக அவர் நிலைகொண்டார்” என்றாள் அபயை. “என்ன?” என்றாள் விஜயை. “எளிய மனிதர்களுக்கு நிலை என்பதே வாழ்வின் பெரிய அறைகூவல். எதிலாவது மீளவியலாதபடி சிக்கிக்கொண்டுதான் அவர்களால் நிலைபேறை அடையமுடியும்.” விஜயை “விந்தையான நடத்தை” என்றாள். அபயை “இதை முன்னரே உணர்ந்திருக்காவிடில் நீங்கள் பெரிய தந்தையை அறிந்ததில்லை என்றே பொருள்” என்றாள். “இதை நீ உணர்ந்திருந்தாயா?” என்று விஜயை சீற்றத்துடன் கேட்டாள். “தன் மருகனுக்கெதிராக, மகள்கொடையளித்த அரசுக்கெதிராக படைகொண்டெழுபவர் தந்தையென்றா இதுநாள்வரை கருதியிருந்தாய்?”

அபயை “இல்லை. ஆனால் அரசியல்களம் மாறிக்கொண்டே இருக்கிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு மத்ரநாடு பால்ஹிகக் கூட்டமைப்பின் சிறுபகுதியாக நின்றிருந்தபோது இந்திரப்பிரஸ்தத்தின் மணவுறவு அதை மேலெடுத்தது. பாண்டவர் உறவைக் காட்டியே மத்ரம் வளர்ந்தது. சகலபுரி செல்வத்தை அடைந்தது. கோட்டையும் படைக்கலத்திரளும் கூலிப்படைகளும் அமைந்தன. ஆனால் இந்திரப்பிரஸ்தம் வீழ்ந்து அஸ்தினபுரிக்கு அடிப்பட்ட பின்னரும் பதினான்காண்டுகள் மத்ரம் தனித்து நிற்கமுடிந்தது” என்றாள் அபயை.

“அரசி, பதினான்காண்டுகள் அஸ்தினபுரியை அஞ்சி அஞ்சித்தான் இங்கே வாழ்ந்திருந்தோம். அஞ்சுபவர்களைப்பற்றி அல்லும்பகலும் எண்ணுவது மானுடர் இயல்பு. எண்ணுந்தோறும் வளர்வதே எதுவும். அஞ்சும் எதிரியைப்போல மானுடர் உள்ளூர வழிபடும் பேருருவம் பிறிதொன்றில்லை. துரியோதனர் தேடிவந்திருக்கிறார் என்ற செய்தியாலேயே மூத்த அரசர் உவகைகொண்டு திளைத்திருப்பார். அவரை நேரில் கண்டதுமே அவர் அகம் ஓடிச்சென்று அடிபணிந்திருக்கும். அதை தன் வெற்றி என்றே கொண்டாடியுமிருக்கும். இனி அச்சமில்லை என்ற செய்திக்கு அப்பால் நாம் அடையும் விடுதலை பிறிதில்லை.”

அவளை வெறித்து நோக்கிக்கொண்டு விஜயை அமர்ந்திருந்தாள். எண்ணங்களேதும் ஓடவில்லை. “இப்பதினைந்து ஆண்டுகளில் பால்ஹிகக் கூட்டமைப்பு சோமதத்தரின் மைந்தர்களால் வலுவுறக் கூட்டப்பட்டது. பால்ஹிகபுரியின் பெருங்கோட்டை இம்மலைநாடுகள் அனைத்துக்கும் அச்சமூட்டும் மையமென்றாகியது. பால்ஹிக அரசர் சலன் தலைமையில் நம்மை மலைவெள்ளச் சரிவெனச் சூழ்ந்துகொள்ளும் பெரும்படை உள்ளது. ஆயினும் நம்மை அவர்கள் இன்றுவரை தொடவில்லை. அந்தத் தன்னம்பிக்கையும் துணிச்சலும் நம் மூதரசரில் இருந்தாகவேண்டும்” என்றாள் அபயை.

“நம்மை நசுக்குவது இளைய பால்ஹிகருக்கு மிக எளிய செயல். அவர் அதை செய்யவில்லை” என்றாள் விஜயை. அடுத்த சொற்றொடரைச் சொல்ல அவள் உதடுகள் அசையவில்லை. “அவர் உங்கள் மீதான காதலால் சகலபுரியை விட்டுவிட்டார் என்கிறீர்களா?” என்றாள் அபயை. “ஏன் இருக்கக்கூடாது?” என்று விஜயை சீற்றத்துடன் கேட்டாள். “இருக்கலாம்… வேறு எண்ணங்களாலும் இருக்கலாம்” என்றாள் அபயை. “அதற்கு ஏன் நகைக்கிறாய்? உன் நச்சுநகைப்பு என்னை சீற்றம்கொள்ளச் செய்கிறது” என்றாள் விஜயை. “இளவரசி, நஞ்சில்லாத நகைப்பென ஏதுமில்லை” என்றாள் அபயை.

“நம் மூத்த அரசர் மாறா முடிவுகள் கொண்டவரல்ல. அந்தந்தத் தருணங்களுக்கு எதிர்வினையாற்றி முன் செல்பவர். அத்துடன்…” என்றாள் அபயை. விஜயை தலை தூக்கி “அத்துடன்?” என்றாள். மெல்லிய புன்னகையுடன் அபயை “அங்க நாட்டரசருக்கெதிராக படைகொண்டு நிற்கவேண்டும் என்று அவருள்ளம் எப்படி முடிவெடுக்கும்?” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “என்ன சொல்கிறாய்?” என்றாள் விஜயை. “பல்லாயிரம் தயக்கங்களால் ஆனது ஒவ்வொரு முடிவும். அதை மட்டுமே சொன்னேன்” என்றாள் அபயை. விஜயை கைவீசி “உளறாதே” என்று சொன்னாள். தலைதிருப்பி அப்பேச்சை அப்படியே தள்ளி அப்பால் ஒதுக்கினாள்.

பின்னர் “தந்தை இதை ஏற்பாரென்று எண்ணுகிறாயா?” என்றாள். “ஏன்?” என்று அபயை கேட்டாள். “இத்தனை நாள் பாண்டவர்களின் நட்பு நாடென்றே மத்ரம் தன்னை எண்ணியுள்ளது. இங்கு பிறந்து வளர்ந்த அனைவருமே ஐவரின் கதைகளைக் கேட்டு உளம் விரிந்தவர்கள். ஒருநாளில் ஒரு செய்தியில் அவர்கள் மாறக்கூடுமா என்ன?” என்றாள். அபயை புன்னகைத்து “தாங்கள் மக்களையும் அறிந்திருக்கவில்லை, அரசி” என்றாள். “எப்படி இதை நம் மக்கள் ஏற்பார்கள்? களத்தில் எதிர்நின்று பாண்டவர் ஐவரையும் கொல்லும் வஞ்சினத்தை அரசர் உரைப்பதை இவர்களின் உள்ளம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்?” என்று விஜயை கேட்டாள். அபயை “உள்ளத்திற்கு தேவையென்ன? சொற்கள்தானே? இப்புவியில் எல்லையின்றிச் சிக்குபவை, எப்போதும் பஞ்சமில்லாதவை சொற்களே” என்றாள்.

“நான் தந்தையிடம் சென்று பேசவிருக்கிறேன். இது தீய முடிவு. இக்குலம் முற்றழிவதற்கு வழிவகுக்கும். தந்தை எடுத்த முடிவென்பதால் மைந்தர்கள் இதை ஒப்பவேண்டியதில்லை. தந்தையை சொல்கொண்டு பின்னிழுக்கும் பொறுப்பும் அரசரென அதை செய்யும் கடமையும் மூத்தவருக்குள்ளது” என்றாள். அபயை “இப்போது தாங்கள் அவைபுகுந்து இச்சொற்களை சொன்னால் அது எந்நிலையில் நின்று உரைக்கப்படுவதாக அவர்களால் கொள்ளப்படும், அரசி?” என்றாள். “நான் இந்நாட்டு மகள்” என்றாள். ஆனால் “தாங்கள் சூடியிருக்கும் மணிமுடி இந்திரப்பிரஸ்தத்திற்குரியது. சகதேவரின் ஆழியை விரலில் அணிந்திருக்கிறீர்கள். மாற்றுநாட்டு அரசி வந்து அவைநின்று பேசுவதற்கு நிகராகவே உங்கள் சொற்கள் பொருள்கொள்ளப்படும்” என்றாள் அபயை.

“நீங்கள் இம்மண்ணைச் சார்ந்தவர் என்பதனால் அவையில் கடுமையாக மறுத்துரைக்கப்படமாட்டீர்கள். வெற்று முறைமைச்சொற்கள் உங்களுக்கு முன் விரிக்கப்படும். இயல்பாக அவற்றினூடாக வழுக்கி நகர்ந்து மறு எல்லை சேர்ந்து திரும்பி வருவீர்கள். அனைத்தும் பிசிறின்றி நடந்ததென்று உள்ளம் சொல்கையில் ஆழத்தில் பிறிதொன்று நீலம் பாரித்து அடிபட்டு கன்றி வலிகொண்டு துடித்துக்கொண்டிருக்கும்” என்றாள். விஜயை அவள் விழிகளையே நோக்கியபின் “என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றாள். “பொறுத்திருங்கள். இச்செய்தி நமக்கு வந்திருப்பதனால் இதற்கு முன்னரே அரசரை வந்தடைந்திருக்கும். இளவரசர்கள் ருக்மாங்கதரும் ருக்மரதரும் இதற்குள் இறுதி முடிவை எடுத்துவிட்டிருப்பார்கள். இங்கே அவர்களே சொற்கோன்மை கொண்டவர்கள், உங்கள் தந்தையும் உடன்பிறந்தாருமல்ல” என்றாள் அபயை.

“அவையில் இது பேசப்பட்டதென்றால் ஓரிரு நாழிகைக்குள்ளேயே அரண்மனை எங்கும் இதுவே பேச்சென்றாகும். நோக்குக, சற்று நேரத்திலேயே இங்குள்ள மக்களின் உள்ளங்கள் திசைமாறத் தொடங்கும். அதை அவர்கள் உடல்களே காட்டும். ஏவலரையும் மக்களையும் மட்டும் கூர்ந்து நோக்குங்கள். ஆவதென்ன என்று அவர்களே உங்களுக்கு காட்டுவார்கள்” என்றாள். “நான் மூத்தவர் ருக்மாங்கதரிடம் பேசலாமென்று எண்ணினேன்” என்றாள் விஜயை. “முதலில் நம் வாயிற்காவலனிடம் பேசமுடியுமா என்று பார்ப்போம்” என்றாள் அபயை.

விஜயை “உன் நஞ்சு எப்போதும் எனக்கு ஒவ்வாமையையே அளிக்கிறது” என்றாள். “அது உண்மை என்பதனால்கூட” என்றாள் அபயை. சினத்துடன் எழுந்து மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு விஜயை தன் அறைக்குள் சென்றாள். ஓசையுடன் கதவை மூடி மஞ்சத்தில் குப்புற விழுந்து இரு தலையணைகளால் முகத்தை அழுத்திக்கொண்டாள். சீராக முறையாக உளச்சொல் கோக்க வேண்டுமென்று எண்ணினாலும் சிதறிச் சிதறி பரந்துகொண்டிருந்தது அகம். ‘எவ்வாறு அது இயலும்? எவ்வாறு?’ என்றே உளம் மையச்சொல் கொண்டிருந்தது. பின்னர் சலித்து மல்லாந்து படுத்தபோது இனி என்ன செய்வதென்று வினா எழுந்தது.

இந்திரப்பிரஸ்தத்தில் அரசமுறைமைகளின்றி அரசியர் இருப்பது தகாதென்பதனால் அவர்கள் அனைவரும் பிறந்த இல்லத்திற்கே செல்லும்படி குந்திதான் ஆணையிட்டிருந்தாள். மைந்தனைப் பிரிந்து மத்ரநாட்டுக்கு அவள் வந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆயின. ஆண்டுக்கு ஒருமுறை மைந்தர்கள் வந்து அவளை பார்த்துச் சென்றார்கள். பதின்மூன்று ஆண்டுகள் ஒரு முழுவாழ்வை வாழ்ந்து முடிக்கப் போதுமானவை. நிமித்தநூலின்படி ஒரு வியாழவட்டம் ஒரு முழுப் பிறப்பிறப்புக்கு நிகர். நினைவுகள் நதியொழுக்கில் நுரையுடன் ஒதுங்கிச்சுருளும் குப்பைப்படலமென்றாகி உள்ளத்தில் எங்கோ ஒதுங்க அவள் பிறிதொருத்தியென எழுந்தாள்.

இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அகம்படியும் துணைப்படையும் இன்றி மத்ரம் நோக்கி கிளம்பியபோது சிறுமையுணர்வும் சோர்வும் இருந்ததென்றாலும் உள்ளத்தின் ஆழத்தில் மெல்லிய இனிமையொன்றும் உணரக் கிடைத்தது. என் இளமைக்குத் திரும்புகிறேன் என்று அதை சொல்லென ஆக்கிக்கொண்டாள். விட்டுவந்த அனைத்தும் அங்கு அங்கிருக்கின்றன. முதிரா அகவை! அறியாமையின் ஆயிரம் உவகைகள்! மத்ரம் அவளை கண்ணீருடன் எதிர்கொண்டது. சகலபுரியின் தெருக்களில் மக்கள் கூடி கண்ணீருடன், உளவிசையுடன் அவளுக்கு வாழ்த்து கூவினர். அவர்களின் கண்ணீரை தான் பெற்று பெருக்கி முகம்பொத்தி பீடத்தில் அமர்ந்திருந்தாள்.

அரண்மனைக்குள் நுழைந்து அன்னையை அணுகி கால்தொட்டு சென்னிசூடியபோது அழுதபடி அவள் மடியில் விழுந்துவிட்டாள். அவள் தலையை தன் உடலுடன் அணைத்து குழலை வருடியபடி அன்னை “பொறுமை கொள், மகளே! அனைத்திற்கும் தெய்வங்கள் நல்ல நோக்கம் ஒன்றை கரந்திருக்கும் என்று எண்ணிக்கொள். அரசியரின் வாழ்வு நூறு மடங்கு பெரிது. செல்வங்களும், துய்ப்புகளும், உவகைகளும், புகழும் போலவே தனிமையும், துயர்களும், சிறுமைகளும் நூறு மடங்கு. எனவே ஆற்றலும், துணிவும், கூடவே அகன்று நிற்கும் தெளிவும் நூறு மடங்கு தேவை” என்றாள்.

சேடியர் கைபற்றித் தூக்க தளர்ந்த காலடிகளுடன் நடந்துசென்று மஞ்சத்தில் விழுந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். அன்று துயின்று மறுநாள் காலை எழுந்தபோது மீண்டும் சிறுமகளாக மாறிவிட்டிருப்பதுபோல் உணர்ந்தாள். அரண்மனையெங்கும் உலவி ஒவ்வொரு தூணையும் சுவரையும் தொட்டு மீட்டெடுத்தாள். அடுமனை முகப்பிலிருந்த தூணின் மேலிருந்த சிறுவெடிப்புக்குள் அவள் ஒருமுறை கரந்து வைத்திருந்த சிறுசோழியை கண்டெடுத்தபோது சிரித்தபடி துள்ளிக்குதித்து அன்னையை அணுகி “அன்னையே, இது என்ன தெரிகிறதா?” என்றாள். அன்னை குனிந்து நோக்கி “இது தென்கடல் சோழி. இங்கு வந்த விறலி ஒருத்தியால் உனக்கு பரிசளிக்கப்பட்டது. எங்கு வைத்திருந்தாய்?” என்றாள். “அடுமனை முகப்புத்தூணின் ஒரு சிறுபொந்தில். இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்திருக்கிறது” என்றாள். “ஆம், ஒன்றிரண்டு அவ்வாறு எஞ்சிவிடும்” என்று அன்னை சிரித்தபடி சொல்லி அவள் தலையை வருடினாள்.

அன்று பகல் முழுக்க சோழியை அரண்மனையின் சேடியரிடமும் தோழியரிடமும் காட்டிக்கொண்டு அலைந்தாள். அன்றிரவு அதை தன் கைகளுள் வைத்து நெஞ்சோடணைத்துக்கொண்டு துயின்றாள். ஒவ்வொரு நாளுமென மீண்டு வந்தாள். மைந்தரை, கணவரை, புகுந்த நகரை, அங்கிருந்த பெற்றிகளை முற்றிலுமாக மறந்தாள். மீண்டுமொரு இளமை. இம்முறை அது மிக அரிதென்றும் எளிதில் மறைவதென்றும் உணர்ந்திருந்தமையால் இருமடங்கு வெறியுடன் அள்ளி அணிந்துகொண்டாள். ஒவ்வொரு மலரையும் சூடினாள். ஒவ்வொரு இனிமையையும் எண்ணி எண்ணிப் பெருக்கி அருந்தினாள். ஒவ்வொரு நாளும் நிறைவின்மையுடன் துயின்று எதிர்பார்ப்புடன் மறுநாள் விழித்தெழுந்தாள்.

மத்ரத்தை அவள் அதுபோல முன்பு விரும்பியதே இல்லை. தொட்டுத் தொட்டு விரித்து அதை நூறு மடங்கு பெருக்கிக்கொண்டாள். அதன் கோட்டைகள், மாளிகைகள், பறவைகள், சுனைகள் அனைத்தும் ஒன்றுஆயிரமென பெருகி அவளைச் சூழ்ந்தன. முன்பு அச்சிறுமலைநகரை அவள் சிறையென எண்ணியிருந்தாள். அதன் கோட்டை இறுக்கிக் கட்டிய இரும்புக் கச்சை என மூச்சுத்திணறச் செய்தது. சற்றே சினமெழுந்தாலும் கையில் சிக்கும் பொருட்களைக்கொண்டு அவ்வரண்மனையின் மரச்சுவர்களை அறையும் வழக்கம் கொண்டிருந்தாள். அவையே தன்னை காவல்காக்கும் பூதங்களென்பதுபோல.

பாண்டவர்கள் உபப்பிலாவ்யத்திற்கு திரும்பிவிட்டார்கள் என்று செய்தி வந்தபோது அவள் அடைந்தது ஏமாற்றத்தைத்தான். அவையில் அச்செய்தியை பாண்டவர்களின் தூதன் உரைத்தபோது சல்யரும் தந்தையும் மூத்தவர்களும் எழுந்து மகிழ்வொலி எழுப்பினர். அவையமர்ந்திருந்த குடித்தலைவர்கள் அனைவரும் தங்கள் கோல்களைத் தூக்கி “பாண்டவர்கள் வெல்க! இந்திரப்பிரஸ்தம் வெல்க! மத்ர அரசி வெல்க! தொல்குடி பெற்றுப்பெருகுக!” என்று வாழ்த்துரைத்தனர். அவைமுறைப்படி எழுந்து கைகூப்பி புன்னகையுடன் நின்றபோது அவ்வொலிகளை உள்ளிருந்து உந்தி வெளியே தள்ளும் பிறிதொன்றை தன்னில் உணர்ந்தாள்.

சல்யர் “இது நற்செய்தி… இந்திரப்பிரஸ்தம் இல்லாமலிருந்தும்கூட நாம் பால்ஹிகக் கூட்டமைப்புக்கு அடிபணியவில்லை. இனி பாண்டவர்களின் அவையில் நம் இடம் அவர்களின் உதவியைக் கோருபவர்கள் என்றல்ல, அவர்களுக்கு உதவும் நட்புநாடு என்று” என்றார். தியுதிமானர் “ஆனால் நாம் அவர்களின்றி நிற்கமுடியாது. அவர்கள் மீண்டுவருவார்கள் என்ற அச்சமே நம்மை காத்தது” என்றார். ருக்மாங்கதன் “நம்மை நாமே குறைத்துக்காண வேண்டியதில்லை, இளைய தந்தையே. இங்கே நாம் எத்தகைய படைவல்லமை கொண்டிருக்கிறோம் என்பது சோமதத்தனின் மைந்தர்களுக்குத் தெரியும்” என்றான்.

ருக்மரதன் “போர் நிகழ்ந்தால் அது பால்ஹிகர்களை ஆற்றலிழக்கச்செய்யும். கின்னரர்களும் உசிநாரர்களும் இறங்கி மலைநாட்டில் பரவுவார்கள். அந்த அச்சமே அவர்களை விலக்கியது” என்றான். சல்யர் “அதற்கும் அப்பால் ஒன்றுண்டு, நம் விற்கள்” என்றார். ருக்மாங்கதன் “ஆம் தந்தையே, நான் அதையே சொன்னேன்” என்றான். த்யுதிமானர் “நான் குறைத்துச் சொல்லவில்லை…” என்றார். அவையிலிருந்த குடிமூத்தார் ஒருவர் “சல்யரை அறியாதோர் மலைநாட்டில் இல்லை” என்றார். “ஆம்! ஆம்! ஆம்!” என்று அவை கூச்சலிட்டது. ருக்மாங்கதன் “மீண்டுவரும் பாண்டவர்கள் தங்கள் நகரை வெல்லவும் நம் மூத்தஅரசரின் படைவல்லமையும் வில்லாற்றலும் தேவையாகும். அளிப்போம், மறுவினையாக நம்மை அவைமுதன்மையாக அமர்த்தக் கோருவோம்” என்றான். மீண்டும் “ஆம்! ஆம்! ஆம்!” என்று அவை கூச்சலிட்டது.

தன்னை இரண்டெனப் பகுத்து ஒன்றை இந்திரப்பிரஸ்தத்திற்கு அனுப்பிவிட்டு அங்கேயே தங்கிவிட முடியுமா என்று எழுந்த எண்ணத்தை என்ன இது என்று வியந்துநோக்கி விலக்கினாள் விஜயை. “அபிமன்யூவுக்கு மணமகளென்று ஒருத்தியை கொண்டுவந்திருக்கிறார்கள். விராட குலத்தவள். அத்திருமணம் இன்னும் சில நாட்களில் அங்கு நிகழும். இங்கிருந்து அரசக் குழுவொன்று அங்கு செல்லவேண்டியுள்ளது” என்று அன்னை சொன்னாள். “நீ இந்திரப்பிரஸ்தத்து மருகி. அன்னையரசியர் அனைவரும் அங்கிருப்பதே முறை. ஆனால் நாம் இங்கிருந்து கிளம்பி அங்கே செல்ல இனி பொழுதில்லை. எண்ணி நாளெடுத்து முடிவு சூழ்ந்திருக்கிறார்கள்.”

சல்யர் அவையில் “பொறுப்போம். அது ஒரு சிற்றூர். அங்கு முறையாக அரசியர் தங்கும் மாளிகைகள் உள்ளனவா என்று அறியவேண்டும். பிற அரசியர் அங்கு செல்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். அதன் பின்னர் பிறர் வியக்கும் சீர்வரிசைகளுடன் மத்ரநாட்டு அரசியை அனுப்புவோம்” என்றார். “ஆம், அதுவே முறை” என்று அவை ஏற்பொலி எழுப்பியது. சிபிநாட்டரசி தேவிகை செல்லவில்லை என்று செய்தி வந்தபோது அவளுடைய பயணமும் தவிர்க்கப்பட்டது. அவளுக்குள் சிறுமியொருத்தி கைவிரித்து துள்ளிக் குதித்தாள். சிறுபாவாடை உடையென விரிய சுழன்று சுழன்று படிகளில் ஏறி ஓடினாள்.

இன்னும் சிலநாள். அந்நாட்கள் மேலும் விரியக்கூடும். இங்கிருக்கும் வரை எனக்கு முதுமையும் இறப்பும் இல்லை. அகத்தறைக்குத் திரும்புகையில் அபயை அவள் கைகளைப் பற்றி “நன்று, இன்னும் சில நாட்கள்” என்றாள். அவள் கண்களை நோக்கி “இங்கிருந்து விரைந்து சென்று அவரைப் பார்க்கவே நான் விழைகிறேன்” என்றாள் விஜயை. “ஆம், அவ்விழைவும் தேவைதான்” என்று சொன்ன அபயை “ஆனால் இவையனைத்தும் உடனே முடியுமென்றில்லை. இந்திரப்பிரஸ்தம் கௌரவரால் திருப்பியளிக்கப்படும்போதே தாங்கள் இங்கிருந்து கிளம்புவீர்கள்” என்றாள்.

“அதற்கு எத்தனை நாட்களாகும்?” என்றாள் விஜயை. “ஆம், மாதங்களும் ஆண்டுகளும் யுகங்களும்கூட எண்ணிநோக்கினால் நாட்கள்தானே?” என்றாள் அபயை. சினத்துடன் அவளை நோக்கிவிட்டு அகத்தறைக்குள் சென்றபோது உண்மையிலேயே அந்த அரசியல் பூசல் பலமாதம் நீடிக்குமென்றும் அதுவரை மத்ர நாட்டிலேயே வாழலாம் என்றும் அவள் விழைந்தாள்.

மறுநாள் அபயையிடம் “அங்கு என்னடி நடக்கிறது? மெய்யாகவே சொற்படி நகரை திருப்பியளிக்க அவர்கள் மறுக்கிறார்களா?” என்றாள். “ஒன்று கணித்துக்கொள்ளுங்கள், அரசி. ஒருபோதும் அஸ்தினபுரியின் அரசர் தன் மண்ணில் ஒரு துளியையேனும் பிறருக்கு அளிக்கமாட்டார். தம்பியருக்கோ தந்தையருக்கோ கூட” என்றாள் அபயை. “அப்படியென்றால் என்ன ஆகும்?” என்று அவள் கேட்டாள். அபயை “அனைத்தும் இனிதே. அது நமது ஆடலே அல்ல. இங்கிருந்து நோக்கி காத்திருப்போம்” என்றாள் . “ஆம்” என்று விஜயை சொன்னாள்.

அக்கணமே அவ்வெண்ணங்கள் அனைத்தையும் உள்ளத்தின் ஓரத்தில் ஒதுக்கி ஒவ்வொரு அடியாக வைத்து பின்னகர்ந்து மத்ரத்தில் எதுவும் அறியாது திளைத்த இளமகளென தன்னை ஆக்கிக்கொண்டாள். இசை கேட்டாள். சூது விளையாடினாள். தோழியருடன் சென்று நீர்விளையாடிக் களித்தாள். சோலையாடலும் நிலவூணும் நூல்பயில்தலுமென நாட்கள் சென்றன. போர் முதிர்ந்துவிட்டதென்று ஒருநாள் அறிந்தபோது அது அதிர்ச்சியளிக்கும் புதிய செய்தியாக இருந்தது. “போரா?” என்று அபயையிடம் கேட்டாள். “ஆம், உருள் பெருந்தேரை ஆயிரம் வடம் பற்றி இழுத்துகொண்டு வந்து இல்லத்து முன் நிறுத்துகிறார்கள் ஷத்ரியர்கள். அதன் பீடத்தில் கடலென குருதி கிடைத்தாலும் விடாய் அடங்காத காலதேவி அமர்ந்திருக்கிறாள்” என்றாள் அபயை.

“நீ கற்ற காவியங்களெல்லாம் உன் வஞ்சத்தால் திரிந்து புளித்து சொற்களாக வெளிவருகின்றன” என்றாள் விஜயை. “காவியங்களின் இயல்பு அது, அரசி. அவை ஒவ்வொரு உள்ளத்திலும் ஒவ்வொரு கணமும் திரிபடைந்துகொண்டே இருக்கின்றன. சற்றேனும் சொல்திரிபோ பொருட்திரிபோ இன்றி கவிதை வரி ஒன்றை திரும்பச்சொல்பவர் அதை அடைந்ததே இல்லை என்று பொருள்” என்று அபயை சொன்னாள்.

சல்யர் கிளம்பிச்சென்ற அன்று அவருக்கு குருதிப் பொட்டிட்டு கோட்டை முகப்பு வரை சென்று வழியனுப்பி திரும்புகையில் விஜயை “இப்போரில் எவர் வெல்வார்கள்?” என்றாள். அபயை “வெல்வது அவளே, காலதேவி” என்றாள். “வாயை மூடு” என்று அவள் உரக்க சீறினாள். “இனி இச்சொல்லை என்னிடம் உரைக்காதே.” அபயை சிரித்து “ஆம், இனி நாம் போர் பற்றி பேசவே வேண்டியதில்லை” என்றாள். பின்னர் சிலநாட்களில் மீண்டும் அவள் அனைத்தையும் மறந்தாள். போரை, அஸ்தினபுரியை, இந்திரப்பிரஸ்தத்தை, கணவரை, மைந்தரை. சல்யர் அஸ்தினபுரியுடன் சேர்ந்துகொண்ட செய்தி வரும்வரை.

முதல் காவல் கோட்டத்தில் தேர் நின்றது. தேர்ப்பாகன் “மத்ரநாட்டு அரசி விஜயை” என்று அறிவித்து முத்திரையை காட்டினான். காவலன் அதை வாங்கி நோக்குவதும் பிறிதொரு காவலனிடம் காட்டுவதும் ஓசைகளாகவே தெரிந்தது. திரைக்கு அப்பால் வாயிலில் வந்துநின்ற காவலர் தலைவன் “மத்ரநாட்டு அரசியை வணங்குகிறேன். இந்நகர் தங்கள் வருகையின் பொருட்டு மகிழ்கிறது” என்றான். “நன்று, நலம் சூழ்க!” என்றாள் விஜயை. தேர் கடந்துசென்றது. அவள் மெல்ல சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு கற்பனையிலிருந்த அந்தச் சிறுநகரின் கோட்டை அணுகுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

முந்தைய கட்டுரைஈழ இலக்கியச் சூழலில் இருந்து ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைஅழகியமரம்