வைரமுத்துவுக்கு ஞானபீடமா?
வைரமுத்து – எத்தனை பாவனைகள்!
அன்புள்ள ஜெயமோகன்,
ஓர் உன்மையான இலக்கிய வாசகன் என்ற முறையில் வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்குவது எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றது. இதனை நிறுத்த ஓர் தனி மனிதனால் கடினம் எனினும் ஓர் சமுக முயற்சியால் முடியும் என எண்ணுகிறேன். அதற்கான மனுவை தாக்கல் செய்த பதிவை இத்துடன் இனைத்துள்ளேன்.
இதற்கு குறைந்தது 100 ஆதரவு கிடைத்தால் மட்டுமே அந்த அமைப்பு இதனை பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளும். தமிழ் இலக்கியத்தின் மேல் சிறிதளவேனும் அக்கறை உள்ளவர்கள் இதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
நவின்.Gssv.
ஞான பீட விருது வைரமுத்து பெற முயற்சி செய்வதை பற்றி படித்தேன்
கீழ்த்தரமான முயற்சி
நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது கூறினார் , இது மட்டும் அல்ல , அவர் பெற்ற தேசிய விருதுகள் அனைத்திற்குமே அவர் , அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவரின் சகாக்கள் துணை கொண்டு டெல்லி யில் lobbying முறையிலேயே பெறப்பட்டது ….அது அவருடைய வழக்கமான முறை என்றும் , இதே முறையில் சென்றிந்தால் இளையராஜா அவரைவிட 100 மடங்கு விருதுகள் பெற்றிருப்பார் என்றும் கூறினார் , கள்ளி காட்டு இதிகாசம் டெல்லிக்கு சென்றதும் இப்படிதான் என்றும் கூறினார்
நீங்கள் கூறியது போல அவர் திரைப்பட பாடல் ஆசிரியர் மட்டுமே.
வாலி – இளையராஜா கூட்டணியில் சொற்கள் இல்லாமல் , பாய் விரி, பள்ளியறை , கண்டாங்கி சேலை , குயில், தெம்மாங்கு …என்று மொத்தம் 100 சொற்களுக்குள் தமிழ் பாடல் சுற்றிக்கொண்டிருந்த பொது புது ரத்தம் பாய்ச்சியதாய் இருந்தது ரஹ்மான் வைரமுத்து கூட்டணி 90களில் .
அதற்காக அவருக்கு தேசிய விருது குடுக்கலாம் …ஆனால கண்டிப்பாக இலக்கியத்திற்காக அல்ல.எனக்கு கண்டிப்பாக இலக்கியத்திற்கு யாருக்கு குடுக்க வேண்டும் எனபது தெரியாது ஆனால் யார்க்கு தகுதி இல்லை என்பது தெரியும்.
ஒரு தனியார் விழாவிற்காக வைரமுத்து பங்கேற்க விழா ஏற்பாடு செய்தவருடன் உடன் இருந்து இருக்கிறேன் , அவர் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் முனைப்பாக இருப்பார் என்றும் அதற்கு lobby செய்வதில் வெட்கப்படுவதில்லை என்றும் அறிவேன்
ஜெயகாந்தன் இறந்த போது குமுதம் பேட்டி அனைவரும் அறிந்ததே , ஜெயகாந்தன் மகள் அதை மறுத்த போது , அவர் மழுப்பியதும் உலகம் அறிந்ததே .
நன்றி
விஜய்
இனிய ஜெயம்,
எழுத்தாளர் நவீன் வசம் நேற்று பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் ஒன்று சொன்னார் . ஜெயமோகனை இங்கு அழைத்திருந்தோம் .முற்றிலும் இங்கிருக்கும் சூழலுக்கு எதிராக , [தீவிர நோக்கில் எது இலக்கியம் என்று சொல்லப்படுகிறதோ அப்படி ஒன்று இங்கே இல்லை என்ற உங்கள் குரலை சுட்டினார்]. இங்கே உண்மையில் என்ன தேவையோ ,எது நிகழவேண்டுமோ அதை பேசினார் . எஸ்ராவை அழைத்திருந்தோம் . அவர் மேடைக்கு எது தேவையோ அதை பேசினார் .கார்திகேசுவை புகழ்ந்து விட்டு போனார். காத்திகேசு இங்கே வைரமுத்து சிறந்த எழுத்தாளர் என முழங்கிக்கொண்டு இருப்பவர் .கார்த்திகேசு முன் வைக்கும் கருத்துக்களை மறுத்து இங்கே வல்லினம் ஒரு விமர்சனக் குரலை உருவாக்கிக் கொண்டிருக்க ,எஸ்ரா அதை முடித்து வைத்து விட்டார் .இதிலிருந்து மீண்டு ,மீண்டும் எது இலக்கியம் எனும் குரலை வலுப்படுத்த ,செலவிட்ட அதே ஆண்டுகளும் உழைப்பும் மீண்டும் எங்களுக்கு தேவை ” என்றார் .
மேலும் ”எஸ்ராவின் குரலை இந்த எல்லை வரை மட்டும் கருத்தில் கொண்டால் போதும் எனும் நிலையை சுட்டும் வகையில் , இங்கே தொடர்ந்து அவர் மேல், இன்றுவரை அவர் எழுதியவற்றில் மீது ஏதேனும் மதிப்பீட்டு விமரசன உரையாடல் நிகழ்ந்திருக்கிறதா ? ஏன் என்றால் எஸ்ரா எனும் ஆளுமைக்கு பின்னே அவர் எழுதிக் குவித்த பெருந்தொகை இருக்கிறது . அதுதான் அவரது குரலுக்கு மதிப்பு சேர்க்கிறது . எனில் அதன் மேல் ஒரு விமர்சன உரையாடலும் இங்கே இருக்கும் தானே” என வினவினார் .
இது கல்யாண வீடுகளில் ,அத்திம்பேர் மரியாதையுடன் தளுக்காக நடந்து கொள்ளும் இலக்கியவாதி ஒருவரின் கேள்வி அல்ல. உண்மையும் தீவிரமும் கொண்டு ஒரு சூழலுக்குள் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளம் எழுத்தாளரின் வினா இது இதற்க்கு நான் மழுப்பாமல் பதில் சொல்லியே தீர வேண்டும் .
நான் சொன்னேன் , ” மதிப்பீட்டு விமர்சனத்தை விடுங்கள். ஒரு எழுத்தாளனுடன் வாசகன் அந்தரங்கமாக உரையாடும் கடிதங்களில் கூட இப்படியெல்லாம் இன்று நிகழ்வதில்லை . ஒன்று பொது வெளியில் ,குப்பை குப்பை என கூப்பாடு ஒலிக்கும் ,அல்லது கம்பீரமான ஒரு மௌனம் திகழும் . இரண்டுக்கும் இடையில் இருக்கும் உரையாடல் என்பது மட்டும் நிகழவே நிகழாது. ஜெயமோகன் ”புதிய காலம்” எனும் பெயரில் அவருடன் நிகழ்ந்த சக படைப்பாளிகள் குறித்து மதிப்பீட்டு விமர்சனம் எழுதினார். நெடுங்குருதி எஸ்ரா பதின் இல் என்னவாக இருக்கிறார் ? அஞ்சலை கண்மணி குணசேகரன் வந்தாரங்குடி யில் என்னவாக இருக்கிறார் ? சு .வேணுகோபால் ? இவர்களின் இன்றைய ஆக்கங்கள் குறித்து ஒரு உரையாடலும் இங்கே நிகழவில்லை . போருக்கு பின்னான சூழலை மையம் கொண்ட இரு நாவல்கள் ,ஷோபா சக்தி எழுதிய பாக்ஸ் கதை புத்தகம் . மற்றும் சயந்தன் எழுதிய ஆதிரை ,இங்குள்ள வாசகர் அறிவர் , ஆதிரை நாவலே வென்ற படைப்பு . பாக்ஸ் கதை புத்தகம் கலை வெற்றி கூடாத ஆக்கம் . ஆனால் இவற்றை ஒப்பு நோக்கி ,அல்லது தனித் தனியாக வேணும் ஏதேனும் விமரிசன கட்டுரையோ ,வாசகர் பதிவோ காண முடியாது ”
இந்த பதிலை சொல்ல வெட்கமாக இருந்தது. ஆனால் உண்மை இதுதானே . வைரமுத்து குறித்து பொருட் படுத்தும் படி ஒரு கட்டுரை இல்லை என்ற உங்கள் ஆதங்கத்தின் ஊற்று முகம் இந்த ”இன்மையில் ” இருந்தே துவங்குகிறது.
உண்மையில் நாங்கள் அனைத்தையும் வாசிப்போம் , எது தீவிர இலக்கியம் என்ற திட்ட வட்டம் உண்டு , ஆனால் புத்திஜீவிக்கு அழகான மௌனத்தை மட்டுமே கைக்கொள்வோம் என்றால் அது என்ன வாசிப்பு ? நானறிந்த முகநூல் நண்பர் ஒருவர் பெயர் கச்சிராயர் பண்ரூட்டியில் இருந்து வந்திருந்தார் .இலக்கிய வாசிப்பும் கொண்டவர் . விஷ்ணு புறம் விருது விழாவுக்கு [விழாவுக்கு மட்டும் ] வந்திருந்தார் . ஆனால் திருவனந்தபுரம் தெய்வத்தை ,அனைத்து நாளும் காத்திருந்து சேவித்தார் , ஒவ்வொரு நாளின் உற்சவமும் தவறாமல் பதிவிட்டார். விஷ்ணுபுரம் விழா பற்றி ஒரு பதிவு இல்லை. எங்கோ இருக்கும் திருவனத்தபுற விழாவுக்கு [தீவிர இலக்கிய வாசகரை சொல்கிறேன்] புளியோதரை கட்டிக்கொண்டு ,மாட்டுவண்டியில் பயணம் போகிறோம். தமிழத்தின் பெருமையான இரண்டு நாள் இலக்கிய விழா இது .இதற்க்கு ஏன் இத்தனை உதாசீனம் . அந்த பிம்ப பொதியை , எப்போதும் எந்த டோரன்ட்டிலும் பார்க்கலாம். ஒரு எழுத்தாளனை ,அவன் முகத்தை ,அவன் ஆளுமையை ,அவன் சிந்திக்கும் முறையை இங்கு வந்தால்தானே பார்க்கும் முடியும் ? இதை இரண்டாம் பட்சமாக வைக்கும் தீவிர இலக்கிய வாசகன் என்ன வாசகன் ?
நவீனின் இந்த கேள்வி எதேயேனும் எழுதிக்கொண்டிருக்கும் தீவிர இலக்கிய வாசகர்கள் அனைவருக்குமான கேள்வி .
நவீன் கேட்ட இரண்டாவது கேள்வி . வைரமுத்து கவிப்பேரரசு பட்டம் பெறுகையில் ,மனுஷ்ய புத்ரன் செய்த எதிர்வினை ,இங்கே மலேஷிய சூழலில் பெரிய சலசலப்பை உருவாக்கியது . ஆனால் இன்று அவரது அரங்குகளில் கவிப்பேரரசு பட்டத்துடன் வைரமுத்து பதாகைகளை பார்க்க முடிகிறது . மனுஷ்ய புத்ரன் வழியே இங்கே நவீன இலக்கியம் குறித்து உருவாகி வந்த கவனத்தை அவரே சிதைத்து விட்டார் ? ஏன் இந்த சரிவு ?
நான் இன்றைய மனுஷ்ய புத்ரன் குறித்து சொன்னேன். இனிமேல் நான் தளபதி இல்லை , கவிப்பேரரசு என மேலிடம் சொல்லிவிட்டால் மட்டுமே வைரமுத்து கவிப்பேரரசு இல்லை எனும் நிலைப்பாட்டுக்கு மனுஷ் வருவார் என்றேன் .
முத்தமிழ் அறிஞர் அவர்களுக்கு போட்டியாக யாரேனும் ஞானபீட லாபியில் கலந்து கொண்டால் மட்டுமே இனி அவர் பொங்கி ”அழுவார் ” அது வரை பகடி மட்டுமே . நிற்க .
சமீபத்தில் வைரமுத்து ”அலங்கரித்த ”விழா மேடைகளில் ஒன்று கணையாழி விருது விழா. இப்படி ஒரு சூழல் இருக்கிறது என்று தெரிந்து விட்டது. இனி தீவிர இலக்கியத்தில் பொருட்படுத்தும் படி எதேயேனும் எழுதி, முதல் விருது பெரும் இளம் எழுத்தாளர்கள், அந்த விருதை வைரமுத்து வழங்குவார் எனில் ,அதை மேடையில் வைத்தே மறுக்க வேண்டும் ,ஏதேனும் நல்ல வாசகர் கையால் அந்த விருதை பெற்றுக் கொள்ள வேண்டும் . அதுதான் எழுத்தாளன், தான் ஒரு எழுத்தாளன் எனும் தன்னுணர்வுக்கு தனக்கு தானே செலுத்திக்கொள்ளும் மரியாதை.
எம் டி வி அவர்கள் இந்த சரிவுக்கு,துணை நின்ற ஆற்றல்களில் ஒன்றாக நிற்பதை ,அவரது வாசகனாக நான் விரும்பவில்லை. இன்னும் சமயம் உண்டு , வயதாகிவிட்டது என்பதால் புலி பூனை ஆகி விடாது . புலியாக நின்று தான் அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொள்கிறாரா, இல்லை உண்மையில் தான் ஒரு பூனைதான் என நிருவப் போகிறாரா பார்ப்போம் .
இறுதியாக ஜெயகாந்தன் மறைவதற்கு முன் , அவர் வைர முத்து சிறுகதை தொகுத்திக்கு மதிப்புரை அளித்தார் என்று ஜெயலலிதா கைநாட்டு போன்றதொரு சர்ச்சை எழுந்தது அது இப்போது அர்த்தம் பெறுகிறது .
தமிழுக்கு என்னைத் தெரியும் என்று சொல்லி மீசையை முறுக்கியவனை தேடி வந்த விருது அது, வைரமுத்து செய்யும் அத்தனை லாபியை விட , ஜெயகாந்தன் முறுக்கிய மீசைக்கு வலிமை அதிகம். வைரமுத்து வெல்ல மாட்டார் .
கடலூர் சீனு