ஒருமுறை என் அறைக்குள் நுழைந்த சாரு நிவேதிதா திகைத்து “ஸாரி” சொல்லி பின்னால் சென்றபின் தயங்கி என் அறைதானே என கேட்டு உறுதிசெய்துகொண்டபின் நுழைந்தார். அறைக்குள் பதினேழுபேர் இருந்தார்கள். நான் இருக்கும் அறையில் எப்போதுமே நண்பர்கள் நிறைந்திருப்பார்கள் பல சமயம் முப்பதுபேர்கூட. சென்னையில் நிகழும் இலக்கியச்சந்திப்புகள் பலவற்றையும் விட அதிகமானவர்கள்.
இது நான் செல்லும் எல்லா ஊர்களிலும்தான். கோவை, திருவனந்தபுரம், கோழிக்கோடு எங்கும். பொதுவாக நான் நண்பர்களை பேணுபவன் என இப்போது தோன்றுகிறது அருமனை உயர்நிலைப்பள்ளியில் என்னுடன் படித்தவர்கள் இப்போதும் அணுக்கமான நண்பர்கள்தான். பலர் அவர்களின் குழந்தைகளுக்கே ஜெய என வரும்படி பெயரிட்டிருக்கிறார்கள். பலரின் இல்லங்களில் என் படங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நான் எழுத்தாளன் என்பதே தெரியாது. சென்றமாதம் ஒரு நண்பன் நான் சினிமாவில் எழுதுகிறேன் என்று கேட்டு வியப்படைந்தான்.
1988 ல் நான் வடகேரளத்தில் காசர்கோடுக்கு தொலைபேசித்துறை ஊழியனாக பணிக்குச் சென்றேன். ஐந்தாண்டுகளுக்குப்பின் திரும்பிவந்தேன். அந்த நண்பர்கள் இன்றும் நீடிக்கிறார்கள். சமீபத்தில் காஞ்ஞாங்காட்டிற்குச் சென்றிருந்தபோது திரளாக வந்து அறையை நிறைத்தனர். இன்று அச்சந்திப்புகளில் துயரமென்பது ஒருசில நண்பர்கள் இறந்துவிடும் செய்தி.
[அ.கா.பெருமாள்,வேதசகாயகுமார், மா.சுப்ரமணியம்]
நண்பர்களைப் பேண நான் எதுவும் செய்வதில்லை. இயல்பாக அவர்களுடன் இருக்கிறேன், என்னுடைய எல்லா பலவீனங்களுடனும் தடுமாற்றங்களுடனும். என் ஆளுமைசார்ந்தோ இலக்கியம்சார்ந்தோ வரும் நட்புகள் எவையும் இன்றுவரை இல்லாமலானதில்லை. நான் இழந்த நட்புகள் விரல்விட்டு எண்ணத்தக்கவை. அத்தனை நட்புகளும் முப்பது நாற்பது ஆண்டுகளாக நீடிக்கின்றன. பொதுவாக அரசியல், மதம் சார்ந்து முன்முடிவுகளுடன் வரும் நட்புகள் மிகச்சீக்கிரமே விலகிவிடும் என்பது என் அனுபவம். தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் சிலவற்றைக்கொண்டவர்களையும் நட்புகளாக என்ன முயன்றாலும் நீட்டிக்க முடியாது. அத்தகைய நட்புகளை எத்தனை விரைவில் விடுவிக்கிறோமோ அத்தனை நன்று
நான் நட்பில் மிக மகிழ்கிறேன்.அது என் இயல்பில் வெளிப்படுகிறதென்பதே நட்புகள் பெருகக் காரணமென நினைக்கிறேன். ஏனென்றால் என் நட்பவையில் எப்போதும் சிரிப்பும் கேலியும்தான். என் நண்பர்கள் மகிழ்ந்திருக்கும் இடம் அது. பூசலுக்கு அங்கு இடமில்லை. கருத்துப்பூசலுக்குக் கூட.
என் பதினேழாவது வயதில் கல்லூரியில் நுழைந்தது முதல் நான் தனியனாக ஆனேன். என் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணனின் இறப்பு அதற்குக் காரணம். வாசிப்பு அலைச்சல் என பல ஆண்டுகள். உளச்சோர்வின் காலம், அதன்பின் உளச்சிக்கலின் காலம். காசர்கோட்டில் உச்சகட்டத் தனிமையில் கடலோரமாக ஒரு பழைய முஸ்லீம் வீட்டில் தன்னந்தனியாகத் தங்கியிருந்தேன். வாசிப்பு ஒரு நோய்க்கூறுபோல என்னைச்சூழ்ந்திருந்தது
விடுபட்டபின் ஒன்றை உணந்தேன். அத்தனை இருண்டபாதைகளிலும் வாசிப்பும் நட்புமே என்னை வழிநடத்திவந்திருக்கின்றன என அதன்பின் என்றும் நண்பர்களின் அணுக்தையே முதன்மையாகக் கொண்டாடுகிறேன். முன்பொருமுறை எழுதினேன், இந்த இலக்கியவாழ்க்கையில் நான் அடைந்த பெரிய இன்பங்கள் என்னென்ன என்று. முதன்மையாக எழுதும் கணங்களின் மாறாக்கனவு. அடுத்தது இலக்கிய நண்பர்களுடன் இரவெல்லாம் பேசிக்களித்திருந்த நாட்கள்.
காசர்கோடு தொழிற்சங்கக் கம்யூனில்தான் இலக்கியநண்பர்கள் உருவானார்கள். என் முதல் இலக்கியநண்பன் என்றால் ரசாக் குற்றிக்கம் என்றபேரில் எழுதிய நண்பர் அப்துல் ரசாக்கைத்தான் சொல்லவேண்டும். அந்த கம்யூனில் இருபதுக்கும் மேற்பட்ட மிகச்சிறந்த இலக்கியவாசகர்கள் இருந்தனர்.
எழுதத் தொடங்கியபோதே என் இலக்கிய நண்பர்கள் உருவாகிவிட்டனர். 1986 ல் கலாப்ரியா நடத்திய குற்றாலம் பதிவுகள் இலக்கியப்பட்டறையில் யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், ந.ஜெயபாஸ்கரன், தண்டபாணி ,சமயவேல், அப்பாஸ், கோணங்கி என என் இலக்க்கியநண்பர்களில் பலரை ஒரே நாளில் சந்தித்தேன். அந்தப்பட்டறை முடிந்து யுவன் சந்திரசேகர் செல்லும்போது நானும் உடன் சென்று கோயில்பட்டியில் அவன் இல்லத்தில் தங்கினேன்..
அக்காலகட்டத்தில் இலக்கியநண்பர்கள் அனைவரும் வாரந்தோறும் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். ஒவ்வொருநாளும் தபால்பெட்டியில் ஏழெட்டு நீல உறைகளாவது இருந்தாகவேண்டும். தமிழக இலக்கிய உலகுடன் என்னைப்பிணைத்தவை அவை. ஒரு நல்ல படைப்பை வாசித்தால் அதைப்பற்றி இருபதுமுப்பது கடிதங்களை எழுதுவேன். அவர்களும் அவ்வாறே எழுதுவார்கள். இருநூறு பிரதிகள் விற்கும் சிற்றிதழில் வெளியாகும் அப்படைப்பு ஒருமாதத்திற்குள் பரவலாக தமிழகம் முழுக்க வாசிக்கப்பட்டிருக்கும்.
நாஞ்சில்நாடன், வண்ணதாசன்,தேவதேவன், ராஜமார்த்தாண்டன் போன்றவர்கள் என் மூத்த தலைமுறை கடிதத்தோழர்கள். சுப்ரபாரதிமணியன், எஸ்.சங்கரநாராயணன், ரிஷபன், ஹரிணி,கோலாஹல ஸ்ரீனிவாஸ், பவா செல்லத்துரை, கவிஞர் க.மோகனரங்கன், மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா என என் தலைமுறை கடிதத்தோழர்கள். மனுஷ்யபுத்திரன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ் லட்சுமி மணிவண்ணன் அடுத்த தலைமுறை கடிதத்தோழர்கள். தி.க.சியையும் வல்லிக்கண்ணனையும் ஞானியையும்கூட அவ்வாறு முதிர்ந்த கடிதத்தோழர்கள் என்று சொல்லலாம்தான்.
அக்கடிதங்கள் ஒவ்வொருநாளும் அவர்களை நினைக்கச்செய்தன. தமிழின் பிரம்மாண்டமான வணிகஎழுத்தின் உலகுக்குள் ஒரு தனிக்குழுவாக எங்களை உணரச்செய்தன. சிற்றிதழ்கள் குறித்த திட்டங்கள் தீட்டுவோம். இலக்கிய இயக்கங்களையே கற்பனையில் உருவாக்கியிருக்கிறோம். கொள்கைவிவாதங்கள் செய்திருக்கிறோம். தபால்காரரின் காக்கியுடை தொலைவில் தெரியும்போதே மனம் படபடக்க ஆரம்பிக்கும்.
அன்று பல ஊர்களில் சின்னஞ்சிறு இலக்கியச் சந்திப்புகள் நிகழ்ந்தன. நாகர்கோயிலில் சுந்தர ராமசாமியின் சபை. அதற்கு காகங்கள் என்று பெயர். திகசியின் நெல்லை சுடலைமாடன்தெரு இல்லம். கோயில்பட்டியில் தேவதச்சனின் சேது ஜுவல்லரீஸ் கடை. திருவனந்தபுரத்தில் ஆ,மாதவனின் செல்வி ஸ்டோர்ஸ் என்னும் கடை. தேவதச்சன் நம்மை அமரச்சொல்லிவிட்டு அவர்பாட்டுக்கு வணிகம் செய்துகொண்டிருப்பார். நடுவே ஆளில்லாதபோது ஆவேசமாகப் பீரிட்டுக்கிளம்புவார். ஆ.மாதவன் ஸ்டவ் ஊசி, பிளாஸ்டிக் குவளை என விற்றபடியே மெல்லியகுரலில் இலக்கியம்பேசுவார்.
மதுரையில் சுரேஷ்குமார இந்திரஜித்தும் கோவையில் ஞானியும் சென்னையில் ஞானக்கூத்தனும் சந்திப்புகளை ஒருங்கிணைத்தனர். சென்னையில் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் அறை ஓர் இலக்கிய மையம். எப்போதும் யாராவது ஒரு கவிஞர் அங்கிருப்பார்.
சென்னையில் நானும் என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷும் இணைந்து இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறோம். அங்கிருந்த ஒரு பூங்கா குப்பைமேடாக இருக்கும். அதனருகே அமர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். சூரியராஜன், சுந்தரகாந்தன், நிமோஷினி, இன்று கல்கியில் பணியாற்றும் அமிர்தம்சூரியா, அன்பு என அங்கே ஒரு நண்பர்வட்டம் எனக்கு அன்றிருந்தது.
தருமபுரியில் இலக்கியவட்டம் என ஏதுமில்லை. ஆனால் அருகே இருந்த மூக்கனூர்ப்பட்டியில் தங்கமணி என்னும் நண்பரின் ஊரில் ஒரு நல்ல வாசகர்வட்டம் இருந்தது. அப்பால் திருவண்ணாமலையில் பவாசெல்லத்துரையின் நண்பர்குழாம். சேலத்தில் கணபதி சுப்ரமணியன் என்னும் இலக்கியநண்பரின் அறையில் மாதமொருமுறை கூடி இலக்கியம்பேசுவார்கள். அங்கே குவளைக்கண்ணன், க.மோகனரங்கன், குப்புசாமி போன்றவர்கள் வருவார்கள்.
1995ல் நானே தர்மபுரியில் என் வீட்டில் இலக்கியவாசிப்பு அரங்கு ஒன்றை கொஞ்சநாள் நடத்தினேன். அதற்கு செங்கதிர், இப்போது ராஜஸ்தானில் உளவுத்துறை ஐஜி, வருவார். திருப்பூரிலிருந்து எம்.கோபாலகிருஷ்ணன் வருவார். மாற்றலாகி பத்மநாபபுரத்திற்குச் சென்றபின் அங்கே பிரேமனந்தகுமார் என் வீட்டருகே வாழ்ந்தார். அவர் அன்றாடம் சந்திக்கும் இலக்கிய நண்பர். முக்கியமான மொழியாக்கங்களைச் செய்தவர்.
அன்றெல்லாம் இலக்கியவிமர்சகரான வேதசகாயகுமார், மொழிபெயர்ப்பாளரான எம்.எஸ் என்னும் எம்.சிவசுப்ரமணியம், நாட்டாரியல் அறிஞரான அ.கா பெருமாள், மொழிபெயர்ப்பாளர் மா.சுப்ரமணியம்[நாராயணகுரு நூலின் மொழிபெயர்ப்பாளர்] ,ஆய்வாளர் தே.வே.ஜெகதீசன் [பத்ரகாளியின் புத்திரர்கள் நூலின் ஆசிரியர்] தமிழறிஞர் குமரிமைந்தன் என என் வீட்டிலேயே பெரும்பாலும் ஒரு இலக்கியசபை தினமும் இருக்கும். டீயும் காபியுமாக அருண்மொழி வந்துகொண்டே இருப்பாள்.
அந்த நண்பர்சபையை அப்படியே சொல்புதிது என்னும் சிற்றிதழாக ஆக்கினோம். எம்.கோபாலகிருஷ்ணன் ஆசிரியர். செந்தூரம் ஜெகதீஷ் வெளியீட்டாளர். பின்னர் அதில் சதக்கத்துல்லா ஹசனீ வந்து சேர்ந்துகொண்டார். அவ்விதழ் மூன்றாண்டுக்காலம் வெளிவந்தது. என் நண்பர்களினூடாகவே சினிமாப்பிரவேசம் நிகழ்ந்தது. லோகிததாஸிடம் என்னை கொண்டுசென்றவர் நண்பர் இசைவிமர்சகர் ஷாஜி. பாலாவிடம் கொண்டுசென்றவர் எழுத்தாளர் சுகா.
அரிதான இலக்கிய நட்புகள் பல ஈழப்போராளிகளுடன் இருந்தன. பெரும்பாலானவர்கள் இன்றில்லை. நான் இருபதாண்டுகள் கடிதத்தால் நெருக்கமான தொடர்புகொண்டிருந்து ஈழப்போர் முடிந்தபின் நேரில்கண்ட நண்பர் இலங்கைக் கவிஞர் கருணாகரன். என்றும் தொடரும் நட்புக்குரியவர் ’காலம்’ செல்வம்
இணையம் வந்ததும் திடீரென்று நண்பர்களின் வட்டம் பெருகியது. என் எழுத்துக்களை வெளியிட எவர் உதவியும் தேவையில்லாமல் நானே வலைத்தளமொன்றை நடத்த ஆரம்பித்ததே தொடக்கம். அதை எனக்காக அமைத்துத் தந்தவர் சிறில் அலெக்ஸ்.
இணையத்தில் எழுதுவதென்பது என் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோல. புகழ்பெற்ற கேரள வேதாந்த அறிஞர் ஆத்மானந்தர் [கிருஷ்ணமேனன்] காவலதிகாரியாகப் பணியாற்றினார். தினமும் காலையில் அவர் வீட்டின் திண்ணையில் வேதாந்த வகுப்பு நடத்துவார். உலகமெங்கணுமிருந்து சீடர்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அச்சபையை ‘ஐநா சபை போல இருக்கு’ என்று கிருஷ்ணன்நம்பி சொன்னதாக சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். ஒவ்வொருவருக்கும் அவ்வாறு ஒரு சபையை அமைக்க இணையம் வசதி தந்தது.
எனக்கு உலகமெங்கும் வாசகர்கள் உருவானார்கள். தொடர்ந்த கடிதத் தொடர்புகள் வழியாக நண்பர்களானார்கள். 2009ல் அந்நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஓர் அமைப்பாக ஆக்கி ஏதேனும் செய்யலாமே என்றார் நண்பர் அரங்கசாமி. அவ்வாறுதான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவானது. இன்று என் நண்பர்களுடனேயே வாழ்கிறேன். ஆண்டுக்கு ஐந்து பயணங்கள் செல்கிறேன். ஒரு கருத்தரங்கு, இரண்டு பெரிய விருதுவிழாக்கள். ஏராளமான தனிச்சந்திப்புகள்.
ஒருமுறை திரிச்சூரில் ஓர் இலக்கியக்கூட்டம். நான் மூன்றுகார்களிலாக பதினைந்து பேருடன் சென்றிறங்கினேன். அங்கே இருபதுபேர்தான் இருந்தார்கள். நான் பேசும் கூட்டங்களுக்கு ஐநூறுகிலோமீட்டர்கூட பயணம்செய்து வந்து கலந்துகொள்ளும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னை இலக்கியக்கூட்டத்திற்கு அழைத்தால் நானே கூட்டத்தையும் கொண்டுவந்துவிடுவேன் என்னும் வசை இன்று உண்டு. இப்போது இலக்கியநண்பர்களின் பட்டியலை நான் அளிக்கமுடியாது, எப்படியும் ஐநூறுபெயர்களைச் சொல்லியாகவேண்டும்.
அடிக்கடி நண்பர்களிடம் சொல்லும் ஒர் அச்சுறுத்தல் உண்டு, நண்பர்கள் சூழ இருந்து பழகிவிட்டேன். ஆகவே மேலே செல்வதென்றால்கூட நாலைந்துபேரை அழைத்துக் கொண்டுதான் செல்வேன் என்று.
***
(அந்திமழை – இதழுக்காக எழுதப்பட்டது)