புதிய இருள்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.’ புதிய இருள்’ கட்டுரை குறித்த என் கருத்து. இந்த அதிர்ச்சியான தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட எதிர்பார்த்தது தான். தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் சசிகலா – தினகரன் குடும்பத்திற்கு இந்த வெற்றி கல்லறையில் அறையும் கடைசி ஆணியை தடுத்து கொண்டதாக தான் கொள்ள வேண்டும். நல்லதோ கெட்டதோ, இந்த வெற்றிக்காக தினகரன் மேற்கொண்ட செயல்கள், முயற்சிகள் ஆச்சரியமானது.மற்றவர்களால் மேற்கொள்ள படாதது. சென்ற தடவை, தேர்தல் நின்ற பிறகும் தொடர்ந்து தொகுதிக்கு சென்று மக்களுக்கு சில உதவிகளை செய்திருக்கிறார். கடந்த எழுபது வருடங்களில், மாநிலத்திலும் மத்தியிலும் நிறைய ஆட்சி மாற்றங்கள் வந்த பொழுதும், தலைநகரில் இருக்கும் ஆர். கே. நகர் தொகுதியில் அடிப்படை வசதிகளில் கூட ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர்களுடைய பொருளாதார நிலைமை தென் சென்னை போன்ற இடத்திற்கு குடிபோகவும் சாத்தியமில்லை. இப்படி பட்ட சூழ்நிலையில் அவர்களிடம் பெரிதும் எதிர்பார்க்க முடியாது. இதன் மூலம் நான் புரிந்து கொண்டது நாட்டின் பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் சரி சமமாக சென்று சேர வேண்டும். மற்றவர்கள் நலனில் நம் நலமும் உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முடிவை வைத்து தமிழகத்தின் எல்லா தேர்தல் முடிவுகளும் இருக்கும் என்று அச்சப்பட தேவையில்லை என்பது என் எண்ணம்.புதிய இருள் விலக புதிய வெளிச்சம் வரும்.
சங்கர் துரைசாமி
அன்புள்ள ஜெ சார் வணக்கம்.
புதிய இருள் படித்தேன். இருளிலிருந்து காரிருள் நோக்கி நாம் செல்வதன் துவக்கம் போலிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் இந்த மக்கள் திரள் தவறாமல் தவறு செய்யும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள தேர்தல். அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. இது ஜனநாயகம் ஆதலால் மக்கள் விரும்பும் வழி எதுவோ அதுவே அரசாள நினைப்போரின் வழி. இது ஒரு நச்சு சுழற்சி. எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்படுகிறது என மக்கள் நினைக்கிறார்கள். மாபெரும் உண்டியலில் போடும் பணத்தை பல்லாயிரம் மடங்காக பறித்துக் கொள்ளலாம் என்று ஓட்டுக்கு பணம் அளிப்பவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். வறுமையை காரணமாக சிலரும் கொடுப்பதை வேண்டாமென ஏன் கூற வேண்டும் என பலரும் நினைப்பதே இதன் ஊற்றுமுகம்.
மரம்போல்வர் மக்கட்பண்பு இலாதவர் என எக்காலத்தும் எஞ்சியுள்ள விழுமியங்களை தொங்கிக் கொண்டிருக்கும் அறத்தின்பால் உறுதி கொண்டோருக்கு, மக்கட்பண்பு என்பது இது தானோ என்ற கேள்வியையும் அச்சத்தையும் எழுப்புகிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனில் அடிப்படை அறமே இல்லாத மரம் போன்ற மக்களுக்கு கூற்றாவது எது?
பண்பொத்தவர்களால் ஆன சமூகத்தில் இருந்தே பண்பாளர்கள் வரமுடியும். உறுப்பொத்த மந்தையிலிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
க.ரகுநாதன்
கோவை.
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
நேற்று நடந்த அவல சம்பவத்தை நினைத்து மிகவும் நொந்துபோய் உங்களிடம்
தெளிவு பெற இன்றே கடிதமெழுதவேண்டும் என்று நினைத்த நேரத்தில் உங்களின்
‘புதிய இருளை’ படித்தேன்.என்ன சொல்ல! “கொடுமை கொடுமையென்று
கோயிலுக்குப்போனா அங்கு கூடரெண்டு கொடுமை திங்கு திங்கென்று
ஆடித்தாம்”ங்கற கதையா போச்சு என் நிலைமை!.
அந்தக்காலத்திலேயே பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்திருக்கலாம் ஆனால்
அப்படி வென்றவர்களில் பெரும்பாலோர்,பெற்ற பதவியை கவுரவமாகவும்,மக்களுக்கு
சேவைசெய்ய ஒரு வாய்ப்பாகவும் நினைத்தார்களேயொழிய,இப்படி பின்னால் கொள்ளை
அடிப்பதற்கு ஒரு ‘முதலாக’ நினைக்கவில்லையென்று கருதுகிறேன்.
மக்களில் புனிதத்துவம் கிடையாதுதான் அதற்காக இப்படியா?.இத்தகைய
கீழ்மைநிலையை நாட்டில் வேறெங்கும் கண்டதில்லை!.கடந்த சில வருடங்களுக்கு
முன் நம்மைக்காட்டிலும் பின்தங்கிய மாநிலமென்று கருதப்படும் ஜார்கண்ட்
மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சிபுசோரன் முதலமைச்சராக
இருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்துதெடுக்கப்படவேண்டிய கட்டாயநிலையில்
நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில மக்கள் அவரை தோற்கடித்தார்கள்!.ஆனால்
இங்கோ?வடமொழியில் ஒரு பழமொழி உண்டு.” மக்கள் எப்படியோ அதற்கேற்றபடிதான்
அரசனும் இருப்பான்”என்று அதேநிலைதான் இங்கும்!
இதில் தேர்தல் ஆணையத்தை வேறு குறை கூறுகிறார்கள்.அவர்கள் மேலும் இதில்
என்ன செய்ய இயலும்?கள்ளவோட்டுக்களை தடுப்பதற்கு முறையான அடையாள
அட்டையும்,தில்லுமுல்லு செய்ய இயலாத வாக்கு பதிவு எந்திரத்தையும்
அறிமுகப்படுத்தி,முன்பு நடந்த தேர்தல் அக்கிரமங்களை – கூட்டாக கள்ள ஒட்டு
போடுதல்,வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற – வெற்றிகரமாக
தவிர்த்துள்ளார்கள்.பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டு தங்கள் ‘நல்ல
ஓட்டுக்களையே’ கள்ள ஓட்டுக்களாக செலுத்தும் மக்கள் உள்ளவரை இவர்களைப்
போன்றவர்கள் வெற்றிமேல் வெற்றிதான் பெறுவார்கள் என நினைக்கிறன்.
அன்புடன்,
அ .சேஷகிரி.
இனிய ஜெயம் ,
//இந்த இருண்டநாளில் அமர்ந்துகொண்டு ‘இல்லை ஏதேனும் நிகழும். எங்கோ ஒரு துளி அனல் எஞ்சியிருக்கும்’ என எண்ணி என்னை மீட்டுக்கொள்ள முயல்கிறேன்.//
புதிய இருள் பதிவின் இறுதி வாக்கியங்கள் இவை . ஆம் உங்கள் நிலையே எனதும் . ஆனால் துளி அனல் ”எங்கோ ”எஞ்சி இருக்கும் என நான் தேட மாட்டேன் . அது நிரந்தரமாக சுடரவேண்டிய எழுத்தாளனின் அகத்தில் அது இப்போதும் சுடர் விட்டுக்கொண்டிருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பேன்.
பிக்பாஸ் குறித்து தினசரி பதிவிட்ட எழுத்தாளர்கள் , வாராந்திர அறச்சீற்ற விலக்கால் அவதியுறும் எழுத்தாளர்கள். பகடி எனும் பெயரில் அதிகாரத்தின் கோவணத்தை உருவும் எழுத்தாளர்கள், தான் அத்தகையதொரு அதிகாரமையமாக மாறி விடக்கூடாது என தனக்குத்தானே சுய பகடி எனும் பெயரில் தன்கோவணத்தை தானே உறுவிக்கொள்ளும் எழுத்தாளர்கள், இவர்களிடம் இந்த இருள் சார்ந்த தன்னுணர்வு எஞ்சி இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பேன்.
இது காட்சி ஊடகங்கள் ,கூரிய மூளைகளை கூட மழுங்கடிக்கும் காலம். செய்தி மேல் செய்தி அருவி போல கொட்டுகிறது . நமது மூளை அந்த அருவிக்கு கீழ் வைக்கப்பட்ட சொம்பு போல, நிறைந்தும் நிறையாமலேயே கிடக்கிறது.
மொபைலும் , சாரமற்ற செய்திப் பெருக்கமும், உலகப்பொது முட்டைகோசுகளை குறிவைக்கும் சீரியல்களும் சொம்புகளுக்கானவை . எழுத்தாளன் இந்த சொம்புகளில் ஒருவனல்ல .
எழுத்தாளன் தனது அகத்தால்,நுண்ணுணர்வால் , நம்பும் விழுமியத்தால் எப்போதும் புற பாதிப்பை மீறி எழுபவனாகவே இருப்பான். லட்சியவாதம் சுயம் பிரகாசமானது. ஒட்டுமொத்த புறதாக்கம் எழுந்து வந்து அறைந்தாலும், அழியாமல் மீண்டெழுவது . அதன் பதாகை எழுத்தாளன்.
இன்றிருந்து நாளை மாயும் புற சூழலின் ,இருளின் ,கீழ்மையின் முன் என்றென்றைக்குமான ஒன்றின் பிரதிநிதியாக நின்றுஉரையாடவேண்டியவன் எழுத்தாளன் .
அத்தகு எழுத்தாளனைத்தான் எனது ஆதர்சமாக கொண்டிருக்கிறேன் என்பதை ,எனக்குள் நானே மீண்டும் ஒரு முறை உரக்க சொல்லிக்கொள்ள துணை நின்றது அப் பதிவு .
கடலூர் சீனு