பகுதி இரண்டு : பெருநோன்பு – 6
தேர் உருளத்தொடங்கியதுமே அசலை சினத்துடன் காந்தாரியிடம் “அவர் நம்மை தவிர்க்கிறார். எது மெய்யோ அதை எதிர்கொள்ளாதொழிகிறார்” என்றாள். “அது முதியவர்களின் இயல்பு. அவர்களின் உள்ளம் ஆற்றல் இழந்திருக்கிறது. உணர்வுகள் தொடர்ச்சியை இழந்துவிட்டிருக்கின்றன. புலன்கள் கூர் மழுங்கியிருக்கின்றன. ஆகவே சூழ நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒன்றோடொன்று பொருத்தி முழு வடிவாக உருவாக்கிக்கொள்ள அவர்களால் இயல்வதில்லை. தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றை முற்றாக தவிர்ப்பது முதியவர்களின் இயல்பு. தாங்கள் இளமையில் புரிந்துகொண்ட மெய்மையை திரும்பச் சென்று தழுவிக்கொள்வதும் அதை கொண்டுவந்து நிகழ்காலத்தின் மீது கண்மூடித்தனமாக பொருத்தி வைப்பதும் அவர்கள் எங்கும் செய்வதுதான்” என்றாள்.
காந்தாரி கைகளைக் கட்டியபடி அசையாது அமர்ந்திருந்தாள். தேரின் சகடகுலுக்கலில் அவள் உடலின் தசைகள் மெல்ல ததும்பிக்கொண்டிருந்தன. “அவர் சொல்வது மெய். அரசர் அவர் சொல்வதை கேட்கப்போவதில்லை. நூற்றுவர் கௌரவரும் கேட்கப்போவதில்லை. ஒருவேளை படைத்தலைவர்களும் அவரை தவிர்க்கலாம். அங்கர் முன்நின்று நடத்தினால் அஸ்தினபுரி அவரை மீறி படைமுகம் கொள்ளவும்கூடும். ஆனால் இக்குலப்பேரழிவை நோக்கி செல்கையில் மூதாதையர் தரப்பிலிருந்து ஓர் எதிர்க்குரல் எழுந்ததென்று வேண்டாமா? அவர்கள் அழியவேண்டுமென்றால் அவர்களை மீறிச்சென்று அழிந்தால்தானே அது முறையாகும்? அவர்களுடன் தானும் சென்று வில்லேந்தி நிற்பேன் என்று சொல்வது பிழையென அவருக்கு ஏன் தோன்றவில்லை?” என்றாள் அசலை.
காந்தாரி அவள் சொற்களைக் கேட்டதுபோலவே தெரியவில்லை. அவள் கைகளைப்பற்றி மெல்ல உலுக்கி அசலை “அன்னையே, தன் வாழ்நாளெல்லாம் எதன்பொருட்டு போராடினாரோ அதை இறுதியில் போட்டுடைக்க எப்படி அவரால் இயல்கிறது? என்ன நிகழ்கிறதென்று அவர் உணர்ந்திருக்கிறாரா என்ன? ஒவ்வொன்றையும் கண்முன்னால் இழந்துவிட்டு வெறுமையுடன் திரும்பப்போகிறாரா?” என்று கேட்டாள். “மானுடர் முன்வாழ்வில் வென்று எழுந்தபின் பின்வாழ்வில் தங்களைத்தாங்களே தோற்கடித்துக்கொள்கிறார்களா?”
காந்தாரி மெல்ல உடலை அசைத்தபின் “அனைத்திற்கும் விடையாக அவர் ஒன்றை சொன்னார். அவரிடம் முற்றிலும் அன்பில்லையென்று” என்றாள். “அது எப்படி முதுதாதை ஒருவர் முற்றிலும் அன்பிழந்து போகமுடியும்?” என்றாள் அசலை. “அவர் அதை சொன்னதுமே அது பொய்யல்ல என்று உணர்ந்தேன்” என்று காந்தாரி சொன்னாள். “என் உள்ளத்தின் ஆழத்தில் ஒன்று அக்கணமே அதை ஏற்றுக்கொண்டு ஆம் ஆம் என்றது. நீயும் நானும் அன்பில் நின்றுகொண்டு பேசுகிறோம். அன்பு மிகச் சிறிய பீடம். அன்பின்மை சூழ்ந்திருக்கும் எல்லையின்மை. இங்குள எளிய உண்மைகள் மட்டுமே அன்பினால் அறியப்படும். என்றுமுள பேருண்மைகள் அன்பின்மையில் அமைந்தவை. அவர் அவற்றை கண்டிருக்கலாம். இங்கு நின்றபடி நாம் அவரிடம் சொல்லாட முடியாது” என்றாள்.
“என்ன சொல்கிறீர்கள், அன்னையே? நாம் அன்பின்மை கொள்ளமுடியுமா என்ன?” என்றாள் அசலை. காந்தாரி தன் சிறிய செவ்விதழ்களை அழுத்தியபடி அமர்ந்திருந்தாள். தேரசைவில் அவள் உடல் குலுங்கியதில் உள்ளே சொற்கள் முண்டியடித்து வெளிவர உந்துபவைபோல் இருந்தன. பின்னர் “இப்போது மேற்கு மாளிகை சாளரத்தோரம் இருவர் அமர்ந்திருக்கிறார்களே, இறுதியாக அவர்களை எப்போது நீ எண்ணினாய்?” என்றாள். அசலை எதிர்பாராத குளிர்ந்த அடியென அதை ஏற்று உடல்குலுங்கினாள். காந்தாரியை தொட்டிருந்த அவள் கைகள் அறியாமல் நழுவி பின்னகர்ந்தன.
“மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும். அதற்கு முன் அங்கு சம்படை அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன் சிவை அமர்ந்திருந்தாள். சம்படையை இளமையில் என் இடையிலிருந்து நான் இறக்கிவிட்டதே இல்லை. ஒவ்வொரு நாளும் அவளுக்கு உணவூட்டி உறங்க வைத்த பின்னரே நான் மஞ்சத்திற்கு செல்வேன். என் கையாலேயே அவளுக்கு ஆடை அணிகளும் பூட்டுவேன். எத்தனை எளிதாக அவளை மறந்தேன்! எவ்வளவு இயல்பாக ஒவ்வொருவரும் அவர்களிடமிருந்து விலகுகிறோம்! நம் அன்பின் வலையில் ஏன் அவர்கள் இல்லை?” என்றாள் காந்தாரி.
அசலை மூச்சை நிறுத்த முயல்பவள்போல் உதடுகளை அழுத்தி தோள்களை குறுக்கினாள். “ஏனெனில் அன்பில் திளைத்து நாம் வாழ்வது அது இனிதென்பதனால்தான். மைந்தரை நெஞ்சோடணைப்பதும், கொழுநருடன் தழுவியிருப்பதும், உடன்பிறந்தவருடன் ஆடிக்களிப்பதும் உவகை அளிக்கிறது. முற்றிலும் உவகையளிக்காத ஒன்றை முழுமையாகவே நம் உலகிலிருந்து விலக்கிவிடுகிறோம்” என்றாள் காந்தாரி.
“நான் எண்ணிப்பார்க்கிறேன், சம்படை நோயுற்றிருந்தால் நாங்கள் பத்து உடன்பிறந்தாரும் ஒவ்வொரு கணமும் அவளை உடனமர்ந்து பேணியிருப்போம். ஏனெனில் நோயுற்ற ஒருவரை பேணுவதென்பது முதல் நோக்கில் துயரென்றாலும் அடியில் இன்பமளிப்பது. நம்மை அளிநிறைந்தவர்கள் என்றும் அருள்கொண்டவர்கள் என்றும் நமக்குக் காட்டுவது. இது அப்படியல்ல. அவர்கள் ஏன் நம்மால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்? ஏனெனில் நம் அனைவரிலும் ஒரு சிறுபகுதி அவர்களாகவும் இருக்கிறது. அது நாம் பார்க்க விரும்பாத பகுதி. அதை நம்மிலிருந்து வெட்டி வீசினாலொழிய நாம் மகிழ்ந்திருக்க இயலாது.”
“இதெல்லாம் நாமே நம்மை துன்புறுத்தும்பொருட்டு எண்ணிக்கொள்வதுதான். நமது குற்றஉணர்வையும் நாம் இனிதென சுவைக்கிறோம்” என்றாள் அசலை. “இல்லை, எந்தப் பேரன்பின் பீடமும் அன்பின்மை எனும் வேலியால் பாதுகாக்கப்பட்டே நிலைகொள்கிறது. அன்பின் எந்த எல்லையையும் இறுதிவரை சென்று தொட்டுப்பார், அப்பால் விரிந்திருக்கும் அன்பின்மையின் பெருவெளி காணக்கிடைக்கும். அதுவே மெய்மை. அவர் அங்கிருக்கிறார்” என்றாள் காந்தாரி.
அசலை பற்களை இறுகக்கடித்து காந்தாரியின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் வெண்ணிறத் தசை மூச்சில் அசைந்தது. இரு புயங்களிலும் வெண்தசை அதிர்ந்துகொண்டிருந்தது. அக்கணம் அவள்மேல் அத்தனை வெறுப்பு ஏன் வருகிறதென்று அசலையின் உள்ளாழம் அவளை நோக்கியே வியந்தது. மறுகணம் கூர்கொண்டு சினம்கொண்டு முன்னெழுந்தது. “நாம் இதை ஏன் பேசிக்கொள்கிறோம்? ஏனெனில் இத்தருணம் அடைபட்டுவிட்டது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆகவே இப்படி சில கொள்கைகளை உருவாக்கிக்கொண்டு அதை கடந்து செல்கிறோம். வேறொன்றுமில்லை” என்று அசலை சொன்னாள். “ஆனால் நான் அன்னை. என்னால் அப்படி இயல்வது எளிதல்ல. அனைத்து வாயில்களையும் நான் முட்டியாகவேண்டும்.”
காந்தாரி “ஆம், அன்னையர் இறுதிக்கணம் வரை முயல்வார்கள். விலங்குகளும் பறவைகளும்கூட அப்படித்தான். ஒருபோதும் அவை பின்வாங்குவதில்லை” என்றாள். “நானும் அன்னையென உன்னுடன் எழவே விரும்புகிறேன். நீ சொல்வது எதுவானாலும் அதை இயற்றுகிறேன். எனக்கு எண்ணங்கள் எழவில்லை. என் உள்ஆழத்தில் கதவுகள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன. நான் சொன்னது அதைப்பற்றி மட்டும்தான்” என்றாள் காந்தாரி. “அப்படியானால் தேரை திருப்பச் சொல்லுங்கள். பீஷ்மரிடம் செல்வோம், அவர் உருவாக்கி வைத்திருக்கும் அந்த சொற்கவசத்தை உடைப்போம். அதற்குள் முதுமையின் வெற்றுச் செயலின்மை மட்டுமே உள்ளது, எந்த அறமும் அல்ல என்று அவருக்குக் காட்டுவோம்” என்றாள் அசலை.
மீண்டும் காந்தாரியின் கைகளைப்பற்றி மெல்ல உலுக்கி “அன்னையே, இத்தருணத்தில் இப்போரில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஒரு சொல் மட்டும் அவரால் உரைக்கப்படுமென்றால் அதிலிருந்து நாம் நெடுந்தொலைவு செல்லமுடியும். கிருபரையும் துரோணரையும் பின்னிழுக்க முடியும். நம் படையில் பாதியையேனும் தயங்கவைக்க முடியும். தங்கள் ஆற்றல் பாரதவர்ஷத்தையே வெல்லும் தகைமைகொண்டதென்ற எண்ணத்தால்தான் அரசர் இங்கு போருக்கெழுந்திருக்கிறார். அவரை நம்மால் நிறுத்த முடியும்” என்றாள்.
காந்தாரி “மீண்டும் முயல்வதில் எனக்கு தடையேதுமில்லை. ஒருமுறை என்ன நூறுமுறை உன்னுடன் வந்து அவருடன் சொல்லாடுகிறேன். இப்போது நாம் அரண்மனைக்கு மீள்வோம். பிறிதொரு தருணத்தில் அவரை சந்திப்போம்” என்றாள். “இன்று நாம் அவரைப் பார்த்த இடமும் பொருத்தமானதல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தக் காடும் தனிமையும் ஊழ்கத்திற்குரியவை. அங்கிருப்பவர் தன்னை முனிவரென்று உருவகித்துக்கொண்டு நம்மிடம் பேசினார். அவர் படைக்கலம் பயில்கையில் அல்லது அவையமர்ந்து நெறிநூலாய்கையில் சென்று மீண்டும் அவரை பார்ப்போம். அங்கிருப்பவர் தன்னை களவீரரென்றும் அரசுசூழ்பவரென்றும் உருவகித்துக்கொண்டிருப்பார். அவரிடம் சொல்லவே நம்மிடம் சொற்கள் உள்ளன.”
“ஆம் அன்னையே, நாம் மீண்டும் அவரை சந்திப்போம். அவர் இப்போருக்கு எதிர்நின்றாக வேண்டும், நமக்கு வேறுவழியில்லை” என்று அசலை சொன்னாள்.
காந்தாரியின் அரண்மனையில் அவளை கொண்டு இறக்கிவிட்டு தன் அரண்மனை நோக்கி செல்கையிலேயே அசலை கடந்ததொன்று நினைவுமீள்வதுபோல் இயல்பாக அவ்வெண்ணத்தை அடைந்தாள். பீஷ்மரின் குடிலிலிருந்து கிளம்பிய கணம் முதல் தன் உள்ளத்தின் ஒரு பகுதி திரும்பிச் சென்று அக்குடிலில் அவருடன் இருந்துகொண்டிருப்பதையும் அவருடைய ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கிக்கொண்டிருப்பதையும் அவள் உணர்ந்தாள். அமைதியிழந்தவராக வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு பயிற்சிக்களத்திற்கு சென்றார். இலக்குகளை மேலும் மேலும் சேய்மையானவையாகவும் சிறியவையாகவும் அரிதானவையாகவும் மாற்றி பயிற்சி செய்துகொண்டிந்தார். ஒவ்வொருமுறை இலக்கு எய்தப்படுகையிலும் அவர் மேலும் நிறைவின்மை கொண்டார்.
மீண்டும் மாளிகை முற்றத்திற்கு வந்து தேர்ப்பாகனை கையசைத்து அருகே அழைத்தாள். ஏறி அமர்ந்துகொண்டு பீஷ்மரின் குடிலுக்கு செல்லும்படி ஆணையிட்டாள். தேர் கிளம்புவது வரை அவளிடம் ஒரு பதற்றம் இருந்தது. இரு கைகளையும் விரல்கோத்து மடியில் வைத்து பிசைந்துகொண்டிருந்தாள். சகட ஒலியுடன் தேர் கிளம்பி முற்றத்தைக் கடந்து சாலையை அடைந்து சீராக ஓடத்தொடங்கியதும் சற்று இயல்புநிலையடைந்து பின்னால் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள். மெல்ல மெல்ல தன் உள்ளத்தை தளர்த்தி கண்களை மூடி அமர்ந்தாள். மெல்லிய துயில் ஒன்று அவள்மேல் படிந்து அவள் சித்தப்பெருக்கை கலைத்து விளையாடியது. அதற்குள் ஆயிரம் இளமைந்தர்களின் கூச்சல்களும், கங்கையின் கோடைக்கால நீர்ப்பெருக்கும், மிக அப்பால் எங்கோ கேட்டுக்கொண்டிருக்கும் மணியோசையும் ஊடுருவின. ஒரு மயிற்பீலி. அகலுமொரு குழலோசை. இவை இல்லாத கனவு எனக்கில்லையா? நான் கனவா கண்டுகொண்டிருக்கிறேன்? இல்லை, தேரில் அமர்ந்திருக்கிறேன்.
விழித்தெழுந்து ஆடையை சீர்படுத்தி வெளியே பார்த்தபோது அஸ்தினபுரியின் தெருவினூடாக தேர் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை மீட்டுக்கொண்டாள். அக்கணமே அவள் உள்ளம் பீஷ்மரின் குடிலுக்கு சென்றுவிட்டிருந்தது. அவரிடம் பேசவேண்டிய சொற்றொடர்களை ஒவ்வொன்றாக எடுத்து முறையாக அடுக்கிக்கொண்டாள். அது ஒழுங்குபெறும்தோறும் தன்னம்பிக்கையும் மெல்லிய உளநிறைவும்கூட அவளுக்கு ஏற்பட்டது.
பீஷ்மரின் குடில் முன்னால் தேர் சென்று நின்றபோது இறங்கி தேர்ப்பாகனிடம் அதை அப்பால் கொண்டுசென்று நிறுத்தும்படி ஆணையிட்டுவிட்டு குடில் நோக்கி சென்றாள். சகட ஒலி கேட்டு உள்ளிருந்து வந்த விஸ்வசேனர் அவளைப் பார்த்ததும் வியந்து பின் அதை மறைத்துக்கொண்டு கைகூப்பியபடி அருகணைந்தார். அவரது இரு மாணவர்களும் பின்னால் வந்தனர். முகமன் ஏதும் உரைக்காமல் “நான் பிதாமகரிடம் ஒன்று சொல்ல விட்டுவிட்டேன். அவரிடம் பேச வேண்டும்” என்று அசலை சொன்னாள்.
“பொறுத்தருள்க, அரசி! அவர் விற்பயிற்சிக் களத்திலிருக்கிறார். உளம்கூரும்பொருட்டு அவர் அங்கு செல்கையில் இங்கிருந்து ஒரு சொல்லும் அங்கு செல்லக்கூடாதென்பது ஆணை” என்றார் விஸ்வசேனர். “நன்று, ஆனால் எங்கிருந்து எச்சொல் வந்தாலும் உளம்கூர்வதற்கான பயிற்சியல்லவா மெய்யானது?” என்று சொல்லி புன்னகைத்த அசலை “என் வருகையை கூறுக! அவர் என்னை மறுதலித்தால் திரும்பிவிடுகிறேன்” என்றாள்.
“இல்லை, நாங்கள் அவரிடம் செல்லவேகூடாது என்பது ஆணை” என்று விஸ்வசேனர் சொன்னார். “சரி, நானே செல்கிறேன். அதன்பொருட்டு அவர் அம்புகளில் ஒன்று என்னை நோக்கி வருமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்ன அசலை “பயிற்சிக்களம் இத்திசையில்தானே?” என்று திரும்பினாள். அவளுக்குப் பின்னால் வந்தபடி விஸ்வசேனர் “அரசி, இது ஒப்புதலற்ற செயல்” என்று சொல்ல “நான் பார்த்துக்கொள்கிறேன், துயருற வேண்டாம்” என்று அவரை கையமர்த்திவிட்டு அவள் நடந்தாள்.
முதலில் காட்டுக்குள் செல்கையிலேயே அந்தப் பெரிய பயிற்சிக்களத்தை அவள் கண்டிருந்தாள். அங்கு மட்டும் மரங்களும் செடிகளும் வெட்டி விரிவாக்கப்பட்டு ஒளி ஒரு பெருங்குளம்போல் தேங்கிக் கிடந்தது. தொலைவிலேயே பீஷ்மரின் உடலசைவுகளை அவள் கண்டாள். வானில் தான் ஏவிய அம்புகளைத் தொடர்ந்த அம்புகளால் தைத்து மெல்ல கீழிறக்கிக்கொண்டிருந்தார். அவள் வருவதை உடை வண்ண அசைவிலிருந்தே உணர்ந்து திரும்பிப் பார்த்தார். அவர் உடலில் சினம் தெரிவதை அவள் கண்டாள். எனினும் நடையின் விரைவை குறைக்காமல் அவரை அணுகி “வணங்குகிறேன், பிதாமகரே” என்றாள்.
பீஷ்மர் மறுமொழி சொல்லாமல் அவளை உற்றுப்பார்த்துக்கொண்டு நின்றார். “தங்களிடம் சில சொற்கள் சொல்ல விட்டுப்போய்விட்டது. அரண்மனைக்குச் சென்ற பிறகே அதை உணர்ந்தேன். ஆகவே திரும்பி வந்தேன்” என்றாள் அசலை. “இங்கு எவருக்கும் நுழைவொப்பு இல்லை” என்று பீஷ்மர் சொன்னார். “ஆம், அறிவேன். அதன்பொருட்டு தாங்கள் ஏவும் அம்பை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லித்தான் இங்கு வந்தேன்” என்று அசலை சொன்னாள்.
பீஷ்மர் விழிகளை திருப்பிக்கொண்டு “நான் தனிமையில் பெண்டிரை சந்திப்பதில்லை” என்றார். “அத்தனை நொய்மையானதா உங்கள் நோன்பு?” என்று அசலை புன்னகையுடன் கேட்டாள். கடுஞ்சினத்துடன் திரும்பி “என்ன சொல்கிறாய்?” என்று பீஷ்மர் கேட்டார். “அத்தனை நொய்மையான ஒன்றை பற்றிக்கொண்டா இத்தனை காலம் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். சொல் பயின்றும் வில் பயின்றும் இத்தனை ஆண்டுகளாகப் புதைத்தும் அது இன்னமும் மட்கவில்லையா?”
பீஷ்மர் பெருகிஎழுந்த சினத்தை மெல்ல அடக்கி உதடுகள் இழுபட புன்னகைத்து “என்னை சீண்டும்பொருட்டு வந்தாய் போலும்” என்றார். “இல்லை, மூத்தவர்களின் மென்மையும் தயக்கமும் இல்லாமல் நேரடியாகச் சென்று உண்மைகளைத் தொடுவது என் வழக்கம். பிதாமகரே, இந்தப் போர் தொடங்குவது உங்கள் உள்ளுறைந்த ஒழியாக் காமத்திலிருந்து என்பதை தாங்கள் அறிவீர்கள்” என்றாள் அசலை. பீஷ்மர் “நீ இன்னும்கூட கடுமையாக சொல்லலாம். உனக்கு அது நிறைவளிக்குமெனில் நன்று” என்று புன்னகைத்தார்.
“இப்புன்னகையினூடாக நீங்கள் எதையும் மறைத்துவிட முடியாது. இது என்னை தடுக்கவும் இயலாது” என்று அசலை சொன்னாள். “இங்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அம்பை வந்து நின்றாள். அன்று உங்கள் உதடுகளிலிருந்து எழுந்த இதே போன்ற நச்சுப்புன்னகை ஒன்றுதான் அவளில் அனல் எழச்செய்தது. அஸ்தினபுரியின் நுழைவாயிலில் அணையாது அமைந்த அந்த எரியிறைதான் மூண்டெழுந்து இந்நகரை இன்று அழிக்கப்போகிறது” என்றாள்.
பீஷ்மர் “சூதர் கதைகளை நன்கு கேட்டிருக்கிறாய்” என்றார். “ஆம், அவையன்றி கடந்த காலத்திற்குச் செல்ல நமக்கு வழியேதும் இல்லை. ஆனால் அந்நிகழ்வை கதையென்று நீங்கள் கடந்துசெல்ல முடியாது. இங்கு நீங்களும் இருக்கிறீர்கள். அழியாக் குருதிவிடாயுடன் அங்கு அவளும் அமர்ந்திருக்கிறாள்” என்றாள் அசலை. “உங்கள் பிழைக்கு உங்கள் கொடிவழியினர் முழுமையாக பலிகொடுக்கப்பட வேண்டுமா?” என்று அசலை சீற்றத்துடன் கேட்டாள். அவளுடைய நிகர்நிலை அழியலாயிற்று. மூச்சில் முலைகள் எழுந்தமைய முகம் சிவந்து கண்கள் நீர்மைகொண்டன.
பீஷ்மர் உரக்க நகைத்து “இதைத்தான் கேட்க விட்டுப்போனாயா? செல்லும் வழியிலும் மீளும் வழியிலும் இச்சொற்களை புனைந்துகொண்டாயா?” என்றார். “இந்நகைப்பும் எதையும் மறைப்பதோ விலக்குவதோ இல்லை, பிதாமகரே” என்றாள் அசலை. “நீங்கள் அறிவீர்கள், இப்புவியில் எவரும் இளைய யாதவரை வெல்ல இயலாது. ஆகவே களம் அமையுமென்றால் உங்கள் மைந்தரும் பெயர்மைந்தரும் வழிமைந்தரும் முற்றாக இறந்தொழிவார்கள் என்பதும் உறுதி. எதன்பொருட்டு அப்பலியை கொடுக்கிறீர்கள்? அன்று அம்பையின் முன் ஓர் அம்பெடுத்து சங்கறுத்து குருதி சிந்த விழுந்திருந்தீர்கள் என்றால் அன்றே முடிந்திருக்கும் உங்கள் அழல். அன்று செய்யத் தவறியதை ஆயிரம் பல்லாயிரம் மடங்கு துயர் பெற்று நிகர்செய்ய விரும்புகிறீர்களா?”
பீஷ்மர் பொறுமையிழப்பதை அவரது கைகள் காட்டின. ஆனால் முகம் அதே புன்னகையை கொண்டிருந்தது. “உங்கள் மைந்தர் அனைவரையும் போரில் பலியிட்டு விண்ணுக்கான உங்கள் பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். நான் அன்னை. என் மைந்தரை இழக்க நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன். அதை உங்களிடம் சொல்லிவிட்டுச் செல்லவே வந்தேன்” என்றாள் அசலை. அவள் குரல் எழுந்தது. சினத்துடன் அவரை நோக்கி இரு காலடி வைத்து அணுகி கைநீட்டி கூவினாள்.
“இதையும் சொல்கிறேன்… நான் பெண்ணென்பதால் போருக்குப் பின்னரும் எஞ்சியிருப்பேன். உங்களுக்கு நீர்க்கடன் கொடுக்க எவன் கங்கையில் கைப்பிடி அள்ளியெடுக்கிறானோ அங்கு சென்று அவனிடம் சொல்வேன், ஆணவத்தால் அல்லது அச்சத்தால் ஆற்றவேண்டிய ஒன்றைத் தவறவிட்டு ஆயிரம் மடங்காக திருப்பி அளித்த அறிவிலி ஒருவருக்கான நீர் அது என. அதற்கு உன் அகமளித்தால் நீயும் அறிவிலிகளின் உலகிற்கே செல்வாய். தவிர்த்துவிடுக என்பேன். இங்கிருந்து என் எஞ்சிய வாழ்நாள் எல்லாம் உங்களை வீணரென்றும் கோழையென்றும் சொல்லில் நிறுத்துவேன். இது என் மைந்தர்மேல் ஆணை!”
பீஷ்மர் சினத்துடன் கைதூக்கி ஏதோ சொல்லவந்து, அச்சொல்லை அடக்கி வெறும் கையசைவாக அதை மாற்றி தலைதிருப்பி நின்றார். இல்லை என்பதுபோல் தலையசைத்து “நீ செல்லலாம். உன்னிடம் நான் பேசவேண்டியது ஒன்றுமில்லை” என்றார். “உங்கள் நோன்பில் உறுதியிருந்தால் என் விழிகளை நோக்கி பேசலாமே?” என்று அசலை சொன்னாள். “செல்க!” என்று பீஷ்மர் நடுங்கும் குரலில் சொன்னார். “உங்களிடம் உறுதியை எதிர்பார்க்கிறார்கள். நானும் எதிர்பார்த்தேன். ஆனால் அவ்வுறுதி சற்றேனும் இருந்திருந்தால் அன்று அம்பையை எதிர்கொண்டிருக்கலாம். ஒரு மூதாதை தன்னால் சுமக்க முடியாத எடையொன்றை தோளில் ஏற்றிக்கொண்டதன் விலையை அஸ்தினபுரி இன்று அளித்துக்கொண்டிருக்கிறது” என்றாள் அசலை.
அக்கணம் பொறையுடைந்த பீஷ்மர் திரும்பி உறுமியபடி கையை ஓங்கிக்கொண்டு அவளை நோக்கி வந்தார். அசையாது அவர் விழிகளைப் பார்த்து “நன்று” என்று அசலை சொன்னாள். “சென்றுவிடு!” என்று இறுகிய பற்களூடாக மூச்சொலியுடன் பீஷ்மர் சொன்னார். “உங்கள் கையிலிருக்கும் அம்பால் என் கழுத்தை வெட்டலாம். வாழ்நாளில் முற்றுறுதியுடன் ஒரு முடிவையேனும் எடுத்தீர்கள் என்ற புகழ் உங்களுக்கு அமையும்” என்று அசலை சொன்னாள். பீஷ்மர் தோள்கள் தொய்வுற தளர்ந்த காலடிகளுடன் பின்னகர்ந்து சென்று அங்கு இடப்பட்டிருந்த மூங்கில் பீடத்தின்மேல் அமர்ந்தார். தனக்குத் தானே என “இத்துயரையும் நான் தாங்கவேண்டுமென்பது ஊழ் போலும். இது ஒன்றுதான் எஞ்சியிருந்தது போலும்” என்றார்.
அசலை அவர் அருகே வந்து “இதுவும் தாங்கள் நடிக்கும் ஒரு மாற்றுரு மட்டுமே. நினைவறிந்த நாள் முதலே ஒன்றிலிருந்து பிறிதொன்றென மாற்றுருக்களைத் தாங்கி இந்த மேடையில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். பிறருக்குமேல் எழுந்த தலைகொண்ட பெருவீரர். ஆனால் நீங்கள் செருவென்ற களங்கள் எவை? அன்னைக்கென நோன்பு பூண்டவர். ஆனால் அணுகிய அத்தனை பெண்களுக்கு முன்னாலும் தோற்றவர். பிறருக்கென துயர் தாங்குபவர், ஆனால் குடியை முற்றழித்த மூதாதை. அனைவராலும் புறக்கணிக்கப்படுபவர், மைந்தராலும் பெயர்மைந்தராலும் துயருறுபவர். ஆனால் தன்னையன்றி பிறரை எண்ணாதவர். பிதாமகரே, நீங்கள் இவர்களில் எவருமல்ல. இத்தனை மாற்றுருக்களுக்கும் அடியில் உங்கள் மெய்யுரு என்ன என்று இத்தனிமையிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள்” என்றாள்.
பீஷ்மர் விழிகளைத் தூக்கி அவளைப் பார்த்து “நான் மட்டும்தான் இவ்வண்ணம் இருக்கிறேனா? மானுடர் அனைவரும் மாற்றுருக்களிலிருந்து பிறிதொரு மாற்றுருவுக்குச் செல்வதையே அகநிகழ்வெனக் கொண்டவர்கள் அல்லவா?” என்றார். “அனைவரும் அல்ல” என்று அசலை சொன்னாள். “தன் குருதியறத்தை மட்டுமே அறிந்தவர்கள், ஐயமின்றி தன் கடமையை ஆற்றுபவர்கள், ஊழ்கத்தில் அமர்ந்து உய்பவர்கள் தங்கள் மெய்யுருவிலேயே அமைகிறார்கள். பிதாமகரே, அன்னையர் அன்னையராக நிற்கையில் தாங்களாகவே நிலைகொள்கிறார்கள்” என்றாள் அசலை. “அன்னையென்று உணர்கையில் பிறிதொன்றும் அல்ல நான் என்று உறுதி கொள்கிறேன்.”
“சொல்க!” என்றார் பீஷ்மர். “என்னையாவது எதிர்கொள்வீர்கள் என எண்ணினேன். இத்தனை அகவைமுதிர்வுக்குப் பின்னரும் நீங்கள் என்னை தவிர்க்கவே முயல்கிறீர்கள்” என்றாள் அசலை. பீஷ்மர் நடுங்கும் நீள்விரல்களால் தாடியை நீவினார். அவள் திரும்பியபோது பின்னிருந்து அவர் குரலெழுந்தது. “என்னை யார் என்று நீ பார்க்கிறாய்? இத்தருணத்தில் நான் செய்ய வேண்டியதென்ன ?” என்றார்.
“நீங்கள் வெறும் ஒரு முதியவர் மட்டுமே. உடலுருக்கொள்ளாத பல்லாயிரம் மைந்தரின் தந்தை. நுண்வடிவில் அவர்கள் அனைவரும் வாழ்வது உங்கள் உடலுக்குள்” என்றாள் அசலை. “பிதாமகரே, நிகழா மைந்தரை உடன்பிறந்தார் குருதியில் கண்டு அதன் இசைவையும் இசையாமையையும் மாறி மாறி உணர்ந்து அலைக்கழிந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். பாலையின் முளைக்காத விதைமண்ணின் துயரம்தான் நீங்கள். இன்று கௌரவமைந்தரின் பெருக்கைக்கண்டு நீங்கள் கொண்டிருப்பது அன்பின்மை அல்ல, விலகலும் கசப்பும்தான். உங்கள் குருதியில் இக்கொடிவழி முளைத்திருந்தால் இம்மைந்தரும் பெயர்மைந்தரும் சிறப்புற்று அமைந்திருப்பார்களென்று ஒருகணமேனும் நீங்கள் எண்ணியதுண்டா?”
பீஷ்மர் அவளை ஒரு கணம் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். “சொல்லுங்கள், உங்கள் மைந்தரும் பெயர்மைந்தரும் உங்களுக்கு அளிக்கும் ஒவ்வாமையைத்தானே அவர்கள் மீதான பற்றாகவும் கடமையாகவும் மாற்றிக்கொண்டிருந்தீர்கள்? அவர்கள் பொருட்டு வில்லேந்தவும் வேலேந்தவும் உங்களைத் தூண்டுவது நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்கள் என்பதுதானே?”
பீஷ்மர் அவளை நோக்கி “உறவுகளை இப்படி ஆராய்ந்தால் ஒன்றும் எஞ்சாது, பெண்ணே. ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றும் உண்மையென்று தோன்றும். எதையும் எப்படியும் விளக்கிக்கொள்ளவும் இயலும்” என்றார். “அவையமர்ந்திருக்கையில் உங்கள் கண்களில் தெரியும் விலக்கத்தையும் கசப்பையும் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருப்பவள் நான். பதினைந்தாண்டுகளாக நான் நன்கறிந்தவை அவ்வுணர்வுகள். பிதாமகரே, பல தருணங்களில் தாங்களாக மாறி பீடத்தில் அமர்ந்து அந்த அவையை நானே நோக்கியதுண்டு” என்றாள் அசலை.
பீஷ்மர் “உள்ளத்தைப்பற்றி எவரும் எதையும் சொல்லிவிடமுடியாது, அல்லது எவரும் எதையும் சொல்லலாம்” என்றார். “ஆம், முழுமையாக எதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால் அத்தருணத்தில் அக்காலத்தில் பொருத்தி சிலவற்றை வகுத்துரைக்கவும் கூடும்” என்று அசலை சொன்னாள். “இன்று நீங்கள் வில்லேந்தி களம்புகுவது எதற்காக? இவர்கள் அனைவரும் இறந்து மறைகையில் உங்கள் உள்ளம்கொண்ட கசப்பு நிறைவடையும். அவர்களின் பொருட்டு வில்லேந்தி உடன்நின்று பொருதி விழுந்தால் உங்கள் குற்றவுணர்வும் சொல்நிகர் அடையும். உங்கள் முடிவுக்கு வேறென்ன அடிப்படை?” என்றாள்.
பீஷ்மர் “இத்தனை சொல்லாய்வும் மெய்யாய்வும் செய்து நாம் அடையப்போவதென்ன?” என்றார். அவர் விழிகளில் ஏளனம் எழுந்தது. துடுக்காகப் பேசும் இளமகளிடம் விளையாடும் தந்தை என முகம்சூடி “இந்த ஆடலால் நாம் நம்மை அறிந்துள்ளோம், பிறரை அதைக்கொண்டு உய்த்துள்ளோம் என்னும் நம்பிக்கையன்றி வேறென்ன கிடைக்கிறது?” என்றார்.
அசலை “உங்கள் உள்ளத்தை நீங்கள் எதிர்கொள்வதே இல்லை. பிதாமகரே, மிக இளமையில் காமத்தை விட்டு ஒழிந்துசெல்வதே அதை வெல்வதற்கான வழி என்று கண்டுகொண்டீர்கள். அதன்பொருட்டே பாரதவர்ஷத்தின் காடுகளிலும் நகரங்களிலும் மாற்றுருக்கொண்டு அலைந்தீர்கள். பின்னர் ஒவ்வொன்றிலிருந்தும் ஒழிந்துசெல்வதே கடந்துசெல்வது என்று கற்றுக்கொண்டீர்கள். இதோ, இவ்வெளிய உண்மையிலிருந்து ஒழிந்துசெல்லும் பொருட்டே இத்தருணத்தில் நீங்கள் எடுக்கவேண்டிய முடிவை தவிர்க்கிறீர்கள்” என்றாள்.
“இப்போது பெருந்தந்தையென தலையெழுந்து நின்று இப்போரை தவிர்க்கும்படி நீங்கள் ஆணையிடவேண்டும். இல்லை, எந்நிலையிலும் என் மைந்தர் களமெதிர் நின்று குருதி சிந்த நான் ஒப்பேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும். ஆம், அவர்களில் ஒருசாரார் உங்களை புறந்தள்ளி முன்செல்வார்கள். ஒருவேளை அங்கரையோ சல்யரையோ முன்நிறுத்தி களம்காணவும் கூடும். ஆனால் அவர்கள் அதை செய்தால் உங்கள் சொல்லை கடந்துசென்றே அதை செய்யவேண்டும். இருசாராரும் உங்களை கொன்றுவிட்டே தங்களுக்குள் மோதிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எது உகந்தததோ அதைச் செய்தவர் ஆவீர்கள். பிற அனைத்தும் வெறும் நடிப்புகளே.”
பீஷ்மர் அவளை நோக்கிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருந்தார். “இங்கு இந்தப் பொருளற்ற பயிற்சிகளைச் செய்துகொண்டு, காட்டிலும் களத்திலும் ஒடுங்கி அமர்ந்திருந்தால் பிறிதொருநாள் தெய்வங்களுக்கு முன் பெரிய ஒரு நிகர்பலியை நீங்கள் அளிக்கவேண்டியிருக்கும். கருதுக, ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒழிந்துசென்றதை ஓராயிரம் மடங்காக திருப்பி அளிக்க வேண்டியிருந்திருக்கிறது. இது இறுதி வாய்ப்பு. இத்தருணத்திலும் ஒழிந்தீர்கள் என்றால் எஞ்சுவதென ஏதுமில்லை. இதற்கப்பால் தங்களிடம் நான் சொல்வதற்கு என்னிடம் ஒருசொல்லும் இல்லை” என்றாள் அசலை.
பீஷ்மர் விழிதாழ்த்தி புன்னகைத்தார். உளவிசை தளர உடல் தொய்வுகொள்ள “நான் அறிவின்மை பல சொல்லியிருக்கக்கூடும். அதை நான் அறிவேன். அச்சொற்களனைத்தும் என் உளமறிந்த மெய் என்பதற்கப்பால் எனக்கு சொல்வதற்கொன்றுமில்லை” என்றாள் அசலை. பீஷ்மர் விழிதூக்கி “அல்ல, நான் அறிந்த அரசுசூழ் உரைகளில் இப்போது நீ நிகழ்த்தியதே மிகச் சிறந்தது. இத்தனை கூரிய சொற்களையும் முழுமுற்றான சொல்லாடலையும் உன்னால் எப்படி இயற்றிக்கொள்ள இயன்றது என்று வியந்தேன்” என்றார்.
அசலை நீள்மூச்சுடன் புன்னகைத்து “தன் குஞ்சுகளைக் காக்க சிறுதாய்க்குருவி கருநாகத்தை கொத்தி துரத்துவதை தாங்கள் கண்டிருக்கலாம். இது அன்னையரில் தெய்வங்கள் எழுந்தளிக்கும் ஆற்றல்” என்றபின் “வணங்குகிறேன், பிதாமகரே” என்றாள். பீஷ்மர் கைதூக்கி அவளை வாழ்த்தினார்.