நீதியும் சட்டமும்

ara

ஜெ,

ஆ.ராசா என உங்கள் இணையதளத்தில் தேடினேன். இந்தக்கட்டுரை வந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு 2011ல் நீங்கள் எழுதியது. அப்போது மோடி ஆட்சியில் இல்லை. ஆட்சியைப்பிடிப்பார் என்பதும் தெரிந்திருக்கவில்லை [அண்ணா ஹசாரே, ஞாநி, சோ ]

கனிமொழியோ ராசாவோ பெரும்பாலும் தண்டிக்கப்பட மாட்டார்கள். காரணம் இத்தகைய வழக்கில் உண்மையான ஆதாரங்கள் ஆவணங்களே. அவை அரசிடம், அரசியல்வாதிகளிடம் இருக்கும். அவற்றை அரசு பெரும்பாலும் நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில்லை. அரசியல்வாதிகள் அனைவருமே ஒரே வர்க்கம். நாளையே கூட்டுகள் மாறினால் என்னசெய்வது? அதை கணக்கிட்டே அவர்கள் செயல்படுவார்கள்.

இங்குள்ள எல்லா அமைப்புகளும் இப்படியே. முன்னர் சொன்னதுபோல அவையெல்லாமே அரசியல்வாதிகளை நல்லவர்கள் என்று நம்பிய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று திருடனும் போலீஸும் சமரசம்செய்துகொள்ளும் காலம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாரதிய ஜனதா ஒத்துழைப்பது எளிது, எதியூரப்பா வழக்கில் காங்கிரஸ் ஒத்துழைத்தால் போதும். பெரும்பாலும் கடைசியில் நடப்பது இதுவே. இன்றுவரை இதுவே இந்திய யதார்த்தம்.

நீங்கள் இந்தத்தீர்ப்பை எதிர்பார்த்திருந்தீர்கள் என நினைக்கிறேன். ஆனால் எங்களைப்போல சட்டத்தை நம்பியவர்களுக்கு இது பெரிய அடி. பெரிய மனச்சோர்வு.

ராஜசேகர்

**

அன்புள்ள ராஜசேகர்

இந்தத்தீர்ப்பு குற்றம்செய்தோருக்குச் சாதகமாகவே அமையும் என்பதற்கான அடிப்படைகள் இவை. இதில் விடுவிக்கப்பட்டவர்கள்:

1. வினோத் கோயங்கா – ஸ்வான்டெக் (  ரிலையன்ஸ் உருவாக்கிய போலி நிறுவனம்)

2. கௌதம் தோஷி – ரிலையன்ஸ் குழுமம்

3. ஹரி நாயர் — ரிலையன்ஸ் குழுமம்

4. சுரேந்திர பிப்பாரா – – ரிலையன்ஸ் குழுமம்

5. ஷாஹித் உஸ்மான் பல்வா – 2ஜி ரிலையன்ஸ் உருவாக்கிய போலி நிறுவனம்

6. சஞ்சய் சந்திரா – யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர்,

7. ஆசிஃப் பல்வா – குசேகுவான் நிறுவனம்

8. ராஜீவ் அகர்வால் – குசேகுவான் நிறுவனம்

இவர்கள் இல்லாமல் இன்று இருக்கும் அரசும் கிடையாது. மோடியே இவர்களிடம்தான் கடன்பட்டிருக்கிறார்.

இரண்டாவதாக சட்டத்தின் எல்லை. இன்றிருக்கும்  சட்டங்களைக்கொண்டு இரண்டு குற்றங்களைப் பெரும்பாலும் நிரூபிக்கவோ தண்டிக்கவோ முடியாது. ஒன்று, ஒரு குற்றத்தை ஒருவர் தூண்டினார், ஏவினார் எனப்படும் குற்றச்சாட்டு. மிகப்பெரும்பாலும் இது குற்றம் செய்தவர்களின் கூற்று மற்றும் சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையிலேயே அமைகிறது . காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு, தினகரன்  அலுவலக எரிப்பு, தா.கிருஷ்ணன் கொலை வழக்கு போன்றவை உதாரணம்

இரண்டு, அரசுக்கு இழப்பு உருவாக்கும் பொருளியல்குற்றங்கள். இவை பெரும்பாலும் ஊகக்குற்றங்கள். குற்றம் நடந்திருக்கும், ஆனால் ஊகிக்கவே முடியும். ஒருபோதும் ஐயம்திரிபறநிரூபிக்க முடியாது. எவராக இருந்தாலும். அப்படி விடுவிக்கப்பட்டவர்கள் பற்பலர். தண்டிக்கப்படவேண்டும் என்றால் அரசு அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் வைக்கவேண்டும். அதாவது பொதுப்பார்வைக்கு.

அரசுகள் அதை ஒருபோதும் செய்யாது. ஏனென்றால் எல்லா அரசுத்துறைகளும் ஏராளமான ஊழல்கள்,விதிமீறல்கள், பாரபட்சங்கள், பேரங்கள் வழியாக நடைபெறுபவை. ஆவணங்களை நீதிமன்றம்கொண்டு செல்வது அந்த துறையே தற்கொலைசெய்துகொள்வதுபோல. ஆகவே தொண்ணூற்றொன்பது சதவீதம்ஊ ழல்களை தண்டிக்க முடியாது. அரசு ஒத்துழைக்காவிட்டால் உண்மையில் வழக்கே இல்லை.

பொதுத்தளத்தில் மிகமிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் ஏ.ஆர்.அந்துலே உச்சநீதிமன்றத்தால் எந்த ஆதாரமும் இல்லை என விடுவிக்கப்பட்டார். அந்துலே இன்று ஆ.ராசா சொல்வதையே  அன்று சொன்னார்.அதுதான் தொடக்கம். அன்றுமுதல் இதுவே தொடர்கிறது.

என்னைப்பொறுத்தவரை அரசு என்பது பெரும்பாலும் ஒன்றே. ஆட்சிமாற்றம் அரசு மாற்றம் அல்ல. அரசை நிலைநிறுத்தும் வணிகமேலாதிக்கங்கள், சமூகசக்திகள் மாறுவதில்லை. ஆகவே மோடிக்கும் முன்னாலிருந்தவர்களுக்கும் நடைமுறையில் எந்த வேறுபாடுமில்லை. அதைத்தான் அன்று சொன்னென்.

ஆகவேதான் தேர்தல், ஆட்சிமாற்றம் குறித்தெல்லாம் நான் எந்த ஆர்வமும் காட்டவில்லை, ஒரு சொல்லும் எழுதவுமில்லை. நான் எண்ணியது இந்திய மனசாட்சியால் இங்கே ஊழலுக்கு எதிரான மேலும் வலுவான அமைப்பு உருவாகும் என்றே. அண்ணா ஹசாரேவை இந்தியா கைவிட்டது. அறிவுஜீவிகளும் இணைந்து அவரை தோற்கடித்தார்கள். இன்று திமுக ஒரு தார்மிக சக்தி என அவர்கள் கும்மியடிக்கிறார்கள்.

பொதுவாக  இவ்வகை வழக்குகளில் என்ன நிகழுமென்றால் ஊடகப்புயல் கிளப்பப் பட்டு அரசியல் லாபம் கொய்யப்படும். கடைசியாகத் தண்டிக்க முடியாது என்பதனால் விசாரணையின்போதே ஒரு வகையான கடுந்தண்டனை வழங்கப்பட்டு  சமூகமனசாட்சி  நிறைவுசெய்யப்படும்.

ஆகவே இவ்வழக்கில் என்ன நிகழுமென்பது 2011லேயே தெளிவாகத்தெரிந்ததுதான்– அரசு செயல்படும் முறைகள் அறிந்தவர்களுக்கு.  அரசையே வெளியே நின்று கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட லோக்பால் போன்ற அமைப்புகளின் இடம் இங்கேதான் வருகிறது. அதில் பொது ஊழியர்கள் மக்களின் தரப்பாக இடம்பெற முடியும். ஆகவேதான் லோக்பால் மசோதாவைச் சொல்லியே பதவிக்கு வந்த பாரதிய ஜனதாக்கட்சி அதை தூக்கி அந்தப்பக்கமாகப் போட்டுவிட்டது

லோக்பால் அமைந்தால்கூட அதிலிருக்கும் மக்களின் தரப்பான பொது ஊழியர்களுக்கு ஆதரவாக மக்களின் உணர்ச்சிகள் இருக்கவேண்டும். இல்லையேல் அதுவும் அரசியல்கட்சிகளின் இரண்டாவது அணியாக ஆகிவிடும்.

இந்தத் தீர்ப்பின் மிகமோசமான அம்சம் என்னவென்றால் ஊழல் ஒன்றும் பெரிய விஷயமே அல்ல, ஊழலைப்பற்றிப் பேசுபவர்கள் ஏழை எளியவர்களுக்கு எதிரானவர்கள் என ஒரு கோஷ்டி கிளம்பியிருப்பதுதான். இந்தியாவில்  அறிவுஜீவிகளால் எதுவும்சாத்தியம்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 17
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–13