2017ம் ஆண்டு துவக்கம் முதலே எனது அன்றாட அலுவல்களுக்கும் வாசிப்பிற்குமான நேரமொதுக்குதல் என்பது பிறழ்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்தச் சோம்பலுக்கான முறிமருந்தாக இலக்கியம்சார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், ஓரளவு எனை மீட்டுக்கொடுத்துவிடும் என நம்பியிருந்தேன். ஊட்டி காவிய முகாம் சென்று வந்து போதினும் சரிப்படவில்லை. வெண்முரசுடன் மட்டும் ஏதோ ஓடிவந்து கொண்டிருக்கிறேன்.
எனவே போதிய வாசிப்பின்மையாலும், அவையஞ்சி மெய்விதிர்ப்பார் வாசிப்பும் – வாசிக்காதார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் பூத்தலின் பூவாமை நன்று என்னுஞ்சொல்லிற்கேற்பவும் இவ்வாண்டின் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொள்ள முன்னெப்போதுமில்லா பெருமளவு தயக்கமும் தாழ்வுணர்ச்சியும் கொண்டிருந்தேன். இலக்கியத்தில் என் போன்ற சிறார்கள் அத்தகைய எளிய தயக்கங்கள் ஏதுமின்றி இத்தகைய விழாவில் கலந்து கொள்வதே போதுமானதும் நிறைவளிக்கக்கூடியதும் ஆகும் என்ற ஜெவின் சமீபத்திய பதில் பதிவு பேராறுதல்.
நேரில் சென்று ஆசானையும், ஆண்டுக்கோரிருமுறை மட்டுமே சந்திக்க சாத்தியப்பாடுள்ள நண்பர்களையும், காண அரிதான சிறப்பு விருந்தின எழுத்தாளர்களையும் கண்ணுற்று செவிவழியறிதல் மட்டுமே கொள்ளலாம் எனவும், கூடவே இரு நாட்களிலும் பரிவோடு பரிமாறப்படும் அயிற்சுவையறிந்து அன்னத்தில் பிரம்மத்தை உணரும் முயற்சியையும் மேற்கொள்ளலாம் எனவும் புறப்பட்டுவிட்டேன்.
அவதாரம் புகழ் சிகையலங்காரம் கொண்ட திருமாவளவனும் அத்தகைய அலங்காரமேதுமில்லா பண்ருட்டி ராதாகிருஷ்ணனும் உடன் வர ஒப்புக்கொண்டார்கள். புதுவையிலிருந்து வெள்ளியிரவு பத்தரை மணிக்கு புறப்பட்டு பெருஞ்சாய்விருக்கை வசதி கொண்ட பேருந்தின் இடையறுபடா நேர்ப்பயணத்தில் மறுநாள் காலை ஏழுமணியளவில் கோவை வந்து சேர்ந்தோம்.
மூத்தவர்களின் வரவேற்பரவணைப்பு தரும் உவகையும் உற்சாகமும் அளப்பரியது. இம்முறை அமர்வுகள் நிகழிடமும் விருது விழாவரங்கும் ஒன்றென அமைந்ததில் நிகழ்சிகளுக்கு ஒரு பிரம்மாண்டத்தன்மை ஏற்பட்டுவிட்டதாகவே எண்ணுகிறேன். நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணையின்படி அடுத்தடுத்து அமைக்கப்பட எழுத்தாளர்களுடனான உரையாடல்களும் கருத்தரங்கமர்வுகளும் மிகக்கச்சிதமாக பொருந்தி வந்ததில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் வழக்கமாக நமது ஞாயிறு மாலை விருதளிக்கும் விழாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கு சவால் விடுமளவிற்கு, இந்த அமர்வுகளுக்கும் பங்கேற்பாளர்கள் பெருகிக்கொண்டேயிருக்கிறார்கள் என்பதும், அனைத்து இருநாளமர்வு நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்படப்பட்டதும் வியப்பளிக்கும் புது விஷயம். .
சென்றாண்டு பார்த்தறிமுகமாகி சில நொடிகளிலேயே அணுக்கமாகிய நண்பன் சுரேஷ் பிரதீப் தற்போது சுரேஷ் பிரதீபர் என முதிர்ந்துயர்ந்து ஒரு எழுத்தாளராக நிற்கிறார். மட்டற்ற மகிழ்ச்சித் தவிர வேறொன்றில்லை.
மலேசியாவிலிருந்து வந்திருந்த எழுத்தாளுமைகளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளத் தவறியது பேரிழப்பே. எண்ணி எண்ணி வருந்தித்தான் கடந்து வர வேண்டும். மலேசிய இலக்கியவுலகின் இளையத்தளபதியை இனிமேலாவது தொடர்ந்து வாசிக்கவேண்டுமென எண்ணுகிறேன்.
வினாடி வினா – என் வரையில் மிகுந்த வெறுப்பளிக்கக் கூடியதாகவே அமைந்தது. நான் அறிந்து வைத்திருக்கும் விடைகளுக்கான வினாக்கள் ஒருபோதும் எனை நோக்கி கேட்கப்பட்டதேயில்லை. இது எனது பள்ளி-கல்லூரி காலந்தொட்டே தொடர்ந்து கொண்டிருப்பது. எனவே பரிசுப்புத்தகத்திற்கு பதிலாக விற்பனையரங்கில் காசு கொடுத்து வாங்கிய புத்தகமொன்றில் எனது ப்ரிய பி.ஏ. கிருஷ்ணன் அவர்களிடம் கையொப்பம் பெற்று மனதை ஆற்றுப்படுத்திகொண்டேன்.
பி.ஏ. கிருஷ்ணன் – அறிவியலின் தரவுகளுடன் அவர் முன்வைக்கும் எவையும் யாவரையும் சென்றடையக்கூடிய வசீகர மொழியுடன் இருப்பதே அவரது படைப்புகளின் பெரும்பலம் என்று நினைக்கிறேன். எனதாதர்சங்களில் ஒருவர். விரைவில் வெளிவரவிருக்கும் அவரது அடுத்த படைப்பை எதிர்நோக்கியிருக்கிறேன்.
ஜேனிஸ் பரியத் வெகு நன்றாக பேசியதாக பலரும் சொல்கிறார்கள். எனக்கென்னவோ அவர் பாடலிசைத்தது போலவே பட்டது. ஒளிரும் தனித்தன்மை வாய்ந்த ஆளுமையுடன் சேலையில் வந்து அவர் சிறப்பு செய்த அமர்வு அவ்வளவு அழகு. பண்ணளிக்கும் சொற்பரிமளயாமளைப் பைங்கிளிப் போல் இருந்தார்.
விருதளிப்பு விழாவில் ஜாஜாவின் மிகச் செறிவான உரை பெரிதும் மனங்கவர்ந்த ஒன்று. விழா முடிவில் ஆசானுடன் ஓர் நினைவுப்புகைப்படம் எடுத்துக்கொண்டு கண்ணில் பட்ட நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டு இரவுணவுண்டு இருக்கைமுன்பதிவு செய்யப்பட்டப் பேருந்தில் விழா நிகழ்வுகளின் மீதான அவரவர் கருத்துக்களை பகிர்ந்தபடியே நானும் நண்பர் ராதாகிருஷ்ணனும் ஊர் திரும்பினோம்.
விஷ்ணுபுரம் விருது விழா ஒவ்வொராண்டும் முன்னெடுத்து வைக்கும் அடி மண்ணளந்து முடித்து விண்ணளக்கும் எனவும் நம்புகிறேன்.
மிக்க அன்புடன்
மணிமாறன்
ஜெ,
ஆவலாக எதிர்நோக்கிய விருது விழா அதன் முழுமையோடு நிறைவுண்டது, விழவின் பொருட்டு முதல் நாள் காலை 3 மணிக்கு விழித்த அகம் இக்கணம் வரை அதிலேயே சுழல்கிறது, காலை விழா அரங்கில் நுழைந்தவுடன் சந்தித்த வாசக நண்பர்கள் மற்றும் நவீன் அவர்களுடனான மலேசிய இலக்கிய சூழல் குறித்த உரையாடலின் ஊடாக நிகழ்ந்த தங்களின் வருகையும், முடிகளைந்த தோற்றதின் விளைவாக என்னை மீண்டும் தங்களுக்கு அறிமுகம் செய்ய நேர்ந்து பின் உங்களுடனான தழுவலுடன் தொடங்கியது அன்றைய என் நிகழ்வுகளில், இளம் எழுத்தாளர்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் படைப்புகளின் விவாதங்களில் எழுப்பப்பட்ட வினாக்களும், அதை அவர்கள் எதிர்கொண்டு கூ(ரி)றிய பதில்களும் சிறப்பக அமைந்தன, கானொளி ஊடகத்தினால் அவர்களுடைய எழுத்துமுறை பதிக்கப்படுவதை பற்றியும், தொடர்ந்து அவர்களின் எழுத்தின் இருமை சார்ந்து அந்நால்வரிடமும் கேட்கப்பட்ட கேள்விகளை அவர்கள் சிறப்பாகவே எதிர்கொண்டனர், அதன்பின் அவ்விவாதத்தின் ஊடாக நீங்கள் கூறிய இன்றைய இளம் பதிவுஎழுத்தாளர்களின் ஒன்றேபோல் எழுதும் தன்மை பற்றிய காரணத்தை சுரேஷ் அல்லது விஷால் தொடர்ந்து விவாதிக்காமல் சிறுவிடை அளித்து கடந்துசென்றது ஏனோ ஒரு சிறு ஏமாற்றம் (அதில் அவர்கள் இன்றைய இளைஞர்கள் முழுக்க மெய்நிகர் மாய உலகத்தில் மட்டுமே இருக்கவைக்கப்படும் சுழல் பற்றியோ, பயணங்களினூடான அறியும் மானுட ஏதார்த்தங்கள் பற்றியும் விவாதித்து இருக்கலாம் என்பது என் எண்ணம்).
பிரபல பதிவு எழுத்தாளராக அறியப்படும் அபிலாஷ் அவர்களுடனான விவாவதம் அவரின் பதிவுகள் சார்ந்தும், ஏன் திவிரமான இலக்கிய நடை தனக்கு பெரிய பொருட்டு இல்லை என்றும் அவர் விவரித்த போது அதை நவினத்துவவாதி என்று அச்சபையிலேய அழைக்கப்பட்ட கே.என் செந்தில் அவர்கள் மறுத்து பேச முயன்ற வேளையில் உங்களால் பேச்சு மடைமாற்றப்பட்டது. அபிலாஷ் அவர்கள் எழுத்துக்களினூடே எழுத்தளர்களை மிக நெருக்கமாக அவதானிக்கிறாரோ என்ற விவாவதம் சிறப்பு.
அடுத்து போகன்சங்கர் உடனான மதிய அரங்கு அவரின் எழுத்தை போலவே அங்கதமும் மெல் உணர்வும் சார்ந்த நிகழ்வாக தொடர்ந்தது, தாங்கள் கூறிய ஆவிஉலகில் போகனின் பங்களிப்பு பற்றிய தகவல் மிக புதிதாக இருந்தது, அவரிடம் முன் வைக்கப்பட்ட அத்தனை கேள்விகளையும் மிக அனாயசமாக எதிர்கொண்ட விதம் அவரின் நெடும் வசிப்பின் வழிவந்தது என்று உணரமுடிந்தது. தன் கதைகளில் ஏன் தொடர்ந்து குழந்தை அல்லது அதன் இழப்பு சார்ந்து உள்ளது என்ற வாசகரின் கேள்விக்கு தான் சில கதைகள் மட்டுமே அவ்வாறு எழுதியதாகவும் ஆனால் தொடர்ந்து தன் வாழ்வின் பெரும் தருணங்கள் அவ்வாரான சூழலில்தான் அமைகிறது (அவர் பிணவரை அருகே வசிக்க நேர்ந்த அணுபவத்தையும்) என்று விளக்கினார், எழுத்தாளனுக்கும், மனநோயாளிக்குமான வேறுபாடு அல்லது ஒற்றுமை குறித்த அவரின் விவரிப்பும், போதைமருத்துவம் சார்ந்த அவரின் பேச்சும் அரங்கில் விவாதத்தை கிளப்ப அங்கும் நீங்களே ஊடே புகுந்து மடைமாற்ற நேரிட்டது. அவரின் பதிவுகளிலும் குறுகதைகளிலும் வெளிப்படும் அங்கதம் ஜெயமோகன் அவர்களை ஒத்திருப்பதர்கான காரணமாக இருவரின் வாழ்வியல் மொழி சூழலா என்று நான் வினவ அவர் தன் எழுத்தின் தொடக்கத்தில் அவ்வாறு இருந்ததாகவும் பின் அதை இன்று தான் தன்முனைப்பால் மாற்றி முயலுவதாகவும் மேலும் அது தன் மொழி சூழலாலும் நிகழ்வதாகவும் கூறியது விவாததின் நிறைவாக அமைந்தது. (குழு நண்பர்கள் போகன் தன் விழாபற்றிய பதிவில் கூறிய எழுத்தாளரை சந்தியுங்கள் போன்று, எழுத்தாளர்களை கண்டியுங்கள் என்ற அமர்வை பரிசீலிக்கலாம்). அடுத்து கவிஞர் வெய்யிலுடனான அமர்வில் அவர் தன் அரசியல் நிலைபாடுகளுடன் தன் கவிதைகள் ஏன் இனைக்கபடுகிறது என்றும், தன் கவிதைகளில் உள்ள மெல்அரசியல் தவிர்த்து தன் காதல் கவிதைகள் போதிய கவனம் பெறவில்லை என்றும், தான் என்றுமே கவிஞன் மட்டுமே, அன்றி அரசியல் கவி அல்ல என்று தன்நிலைவிளக்கமாக முடிந்தது.
மாலை மலேசிய எழுத்தாளர் நவீன் மற்றும் அவர் குழுவினருடனான தற்கால மலேசிய இலக்கிய சூழல் மற்றும் அங்குள்ள தமிழ் சமுகமனநிலை பற்றிய வருத்தமும், அவர்களின் பங்களிப்பு, நடைமுறை சிக்கல்கள் பற்றியுமாக விவாதமுமாக அமைந்தது, (நடுவில் ஒரு வாசகர் மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளில் இலக்கியம்சார்ந்த பங்கு குறைவாக இருப்பதாக கூறியபொழுது நவீன் சற்று காட்டமாக எத்தனை எழுத்தாளர்களை தாங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்ற எதிர்கேள்வி சற்று அவரை தடுமாறவேவைத்தது).உண்மையிலேயே இந்த விவாத அமர்வில் எனக்கு அவர்களின் வாழ்வில் மற்றும் இலக்கிய சூழலின் போதாமைகளை பற்றிய ஒர் சித்திரம் கிடைக்கப்பெற்றது
இரவு இலக்கியவினாடிவினா நிகழ்ச்சி இம்முறையும் என் வாசிப்பின் போதாமைகளை காட்டிய நிகழ்வாக அமைந்தது ஒரு வருத்தம்கலந்த மகிழ்ச்சி, வாசக நண்பர் சுனீல் எங்கள் குழுவின் பெரும்பாலான வாசகர்களுக்கு புத்தகம் கிடைக்க வழிசெய்தார். நிகழ்வின் தொடக்கதில் செல்வேந்திரன் அவர்களின் புதல்வி பாடிய பாடலும் அதர்க்கு அமர்வுமுடிந்த உடன் ஒரு முதுதந்தையாக திரு பி.ஏ கிருஷ்ணன் அவர்கள் பரிசளித்ததும் மிக இனிய கணங்கள். முதல் நாள் அமர்வுகள் முடிந்து இரவு நெடுநேரம் உங்கள் அரையில் வாசக உரையாடல் நிகழ்ந்த செய்தி தனியாக டாக்டர் பங்களாவில் தங்க வைக்கப்பட்ட எங்களில் சிலருக்கு சிறிது இழப்புணர்வை ஏற்படுத்தியது.
விழாவின் இரண்டாம் நாள் காலை எழுத்தாளர் பாவண்ணன் உடனான காலை நடையுடன் தொடங்கி அவருடனான தனிஉரையடலாக நிகழ்ந்தது. காலை முதல் அமர்வில் திரு பி.ஏ கிருஷ்ணன் அவர்களின் படைப்புலகம் குறித்தும் அவர் பதிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, அவரின் கலங்கிய நதி புத்தகம் குறித்து வாசகர்களால் சிறப்பாக விவாதிக்கப்பட்டது, தான் முதலில் ஆங்கிலத்தில் எழுதி பின்பு தமிழ் பெயர்பு செய்வதே தனக்கு உகந்ததாக இருப்பதாகவும் தொடர்ந்து அவரின் பதிவுகளில் உள்ள கடுமையைபற்றிய வினாவிற்கு, தன் மீது எறியப்படும் பல சிறுகற்களுக்கு மற்றாக தான் தன் பதிவுகளில் ஒரே ஒரு பாறையை திரும்ப எரிகிறேன் என்று கூறியது அவரது பதிவுகளை கடந்து அவரை ஒரு ஆளுமையாக நேரில்மட்டுமே அனுகிஅறியும் வாய்ப்பாக அமைந்தது.
அடுத்து விழாநாயகர் சீ.முத்துசாமி அவர்களுடனான அமர்வில் அவரின் வாழ்க்கை பின்புலம், அவர் இளமையில் சந்தித்த தமிழ் எழுத்தாளர்கள், அவரின் இலக்கிய பார்வை என்று சற்று உணர்ச்சிகரமான ஒரு உரையாடல்.
இவ்விழாவின் உச்ச நிகழ்வாக நான் கருதுவது ஜெனிஸ் பரியத் அவர்களுடனான அமர்வு, உண்மையில் அந்த இருவிரலில் பழிப்பு காட்டி தன் உடலே நாவாக மாறி அவர் உரையாடினார்(இவ்வாரன தேவதைகளை அதிகம் கண்டதாலோ அல்லது நம் மீனாம்பிகைஅக்கா MCP என்று முன்மொழிந்ததலோ என்னவோ தாங்கள் அதிகமும் தங்களின் சிறுதிரை கைபேசியை நோக்கிகொண்டிருந்திர்கள்), அவரின் வாழ்வியலே அவரின் இலக்கியமாக அவரின் படைப்புகளில் வெளிப்படுவதை உணரமுடிந்தது. தன் கலாச்சாரம் எப்படி ஒரு மரத்திக்கும், ஒரு நதிக்கும், தம்மை சுற்றி உள்ள அனைத்திக்கும் ஆன்மா உள்ளதாக கருதுகிறது என்றும், இயற்கையிடம் இருந்து நாம் ஒன்றை பெரும் பொழுது அதற்கு தாம் திரும்ப ஒன்றை அளிக்கவேண்டும் என்று தான் தந்தை கூறியதை பற்றியும் விவரித்ததே அவரின் இலக்கியமாக கருதுகிறேன். தன் தாய்வழி சமூகத்தையும், அதன் கலாச்சரம் பற்றி அவர் விவரிக்கும் பொழுது ஒரு பெண் வாசகர் தான் அங்கு வந்துவிட விரும்புவதாக கூறியதும் விவாத அரங்கின் அங்கத கணங்கள். தொடர்ந்து அவரின் படைப்பை பற்றிய வாசகரின் கேள்விகளுக்கு உணர்வுப்பபூர்வமாக பதில் அளித்தார், உங்கள் தளத்தில் வெளியான அவரின் இரு சிறுகதைகளை தொடர்ந்து வெளிவரவிருக்கும் அவரின் முழு தமிழ்பெயர்ப்பை வாசிக்க ஆர்வமாக உள்ளேன்.
மதிய நீண்ட இடைவேளைக்கு பின் மாலை உங்களுடன் சிறுநடை சென்று தேனீர் அருந்தும் பொழுது சிரித்து கண்கள் சிவந்தது, விழாதொடங்க சிலநிமிடங்கள் முன் கடந்த விழா நாயகரான வண்ணதாசன் அவர்களை சந்தித்து தழுவியபின் சமீபத்தில் தடம் இதழில் வெளியிடப்பட்ட அவரின் வாய்கால் சிறுகதை பற்றிய உரையாடல் அவரை நெகிழவைத்துவிட்டது, பின் அஃக் ஆசிரியார் பரந்தாமனை பற்றிய அவரது கட்டுரையும், அவரை பற்றிய அவரின் தனிப்பட்ட உரையாடல் பற்றி அவர் குறிப்பிட்டது அக்கட்டுரையை படித்த பின் ஆசிரியர் பரந்தாமன் சேலத்தை சேர்ந்தவர் என்றும், சொந்த ஊரிலேயே இவ்வலவு நாள் தெரியாமல் இருத்தர்க்கு சற்று வருத்தமாக இருந்து, தங்கள் தளத்திலும் தேடலில் இருவரி செய்தியாகவே அவரை பற்றிய விவரம் உள்ளது, பலதள பங்களிபாளர்களால் நிறையும் நம் விழாவில் இவ்வாரான மறைந்த ஆளுமைகள், மற்றும் அதிக வெளிச்சம் படாத முக்கிய இலக்கிய பங்களிப்பாளர்களின் ஒரு அறிமுக அமர்வை அமைத்தால் பயனுள்ளதாக அமையும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
விழா தொடங்கும் முன்னான குறும்படமும், தொடர்ந்து மகிழ்மதி மற்றும் ஜான்சுந்தர் குழுவினரின் பாடல்கள் ஒரு உணர்ச்சிகரமான மனநிலையை ஏற்படுத்தியது. சீ.முத்துசாமியின் பாசங்கு இல்லாத உணர்ச்சிகரமான உரையும், அவர் ”மேலும்” என்ற சொல்லை உச்சரித்த விதமும் என்றும் நினைவில் சுழல்பவை, விழா முடிந்து சற்றே பதட்டமான குழம்பிய மனநிலையில் படி இறங்கிய பொழுது, உங்கள் படைப்பும், இலக்கிய பங்களிப்பை பற்றி ஜெயமோகன் குறிப்பிட்ட துலாவின் நிகர்நிலை, களிரு தான் எடுக்கும் எடை, தேனீயின் ஏந்தும் தேனிர்க்கு நிகரானதே, என்ற என் கருத்தை ஒரு நண்பனின் தோள் அணைப்பை போல் அவர் ஏற்று உளம் நெகிழ்ந்தது யான் பெற்ற ஆசியாகவே கருதுகிறேன். தம் வேர்களை ஆழமாக ஊன்ற இயாலாவிடினும் தன் உதிரத்தால் நன்நயம் செய்யும் இரப்பர் விதைகளுடன் ஆடும் கலைஞன் சீ.முத்துசாமி அவர்கள்.
பி.கு: விழாநிகழ காரணமான வாசகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள், உறக்கம் துறந்துழைத்த விழா குழு நண்பர்கள் அரங்கசாமி, செந்தில்,செல்வேந்திரன், விஜயசூரியன், மீனாம்பிகை, காளிபிரசாத், சேலம் பிரசாத், விஜயராகவன், மற்றும் பெயர் நினைவில் ஏழ அனைத்து குழு உறுப்பினர்க்கும், தன் நிழர்கலை மூலம் பெருப்பாலான வாசகர்களை பாடகராக்கிய கணேஷ், உடன் பங்களித்த எழுத்தாளர் மற்றும் வாசக நண்பர்களுக்கு நன்றி கூறி நிறுத்தாமல் அடுத்த விழாவில் மீண்டும் சந்திக்க அவலுடன் எதிர்நோக்குகிறேன். (குழும நண்பரகளே அந்த ஊட்டி முகாமில் நம்மல தவிர்க்காம பாத்துக்கங்க)
மாறா பேரன்புடன்
சசிகுமார் .ரா