விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11

nav4

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன்

 

வணக்கம். ஊர்த்திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பிய உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். வந்து மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் அந்த உற்சாகம் ஒரு விழுக்காடு கூட குறையவில்லை. நிகழ்ச்சியின் ஒவ்வொரு கணத்தையும் மீண்டும் மீண்டும் அசைபோடுவதன் வழியாக அதைத் தக்கவைத்தபடி இருக்கிறேன். சந்திக்கும் நண்பர்களிடம் விரிவாகச் சொன்னபடியும் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் நண்பர்களிடம் சுருக்கமாகப் பகிர்ந்தபடியும் இருக்கிறேன். உற்சாகக்கணங்களைச் சொற்களாக மாற்றுவதன் வழியாக அதைப் பல மடங்காகப் பெருக்கிக்கொள்ளமுடியும் என்று தோன்றுகிறது.

 

புதிய எழுத்தாளர்களை வெவ்வேறு அமர்வுகளில் சந்திக்க வைத்து, அவர்களுடைய படைப்புகளை உரையாடலின் மையமாக்கிய நிகழ்ச்சிக்கட்டமைப்பை மிகச்சிறந்த திட்டம் என்றே சொல்வேன். அமர்ந்திருந்த வாசகர்களின் மொத்த கவனமும் தம் மீது பதிந்திருக்கும் நிலையில் வினாக்களை எதிர்கொண்ட கணத்திலேயே தக்க விடையை முன்வைப்பது ஒரு பெரிய சவால். அதே தருணத்தில் அதை எதிர்கொள்ளும்தோறும் ஆழ்ந்த தன்னம்பிக்கை பெருகுவதையும் உணரலாம். புதிய படைப்பாளிகள் ஒவ்வொருவருமே தொடக்கத்தில் மெல்ல பின்னகர்ந்து, பிறகு தன்னம்பிக்கையோடு நிமிர்ந்ததை நேருக்குநேர் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. வரும் ஆண்டுகளில் இவர்கள் அனைவருமே மிகச்சிறந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரர்களாக விளங்குவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த அமர்வுகள் இளம்படைப்பாளிக்கு மாபெரும் வாய்ப்பு. நீங்களும் விஷ்ணுபுரம் அமைப்பும் இல்லையென்றால் இது இவர்களுக்கு நிகழாமலேயே போயிருக்கும். ஊழ் உங்கள் வடிவில் அவர்களுக்கு இந்த நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

nav5

மலேசிய எழுத்தாளர்கள் நட்பார்ந்த குழுவாக நெருங்கி அமர்ந்து ஆர்வமுடன் உரையாடியதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. நவீனும் முத்துசாமியும் அங்குள்ள இலக்கியப்போக்கையும் திசைகளையும் சுருக்கமான ஒரு குறுக்குவெட்டுச்சித்திரத்தின் வழியாக  பார்வையாளர்களுக்கு அளித்தனர். அங்குள்ள வரலாறு எப்படி இயங்கி வந்திருக்கிறது, அதில் தம் இடம் என்ன என்பதைப்பற்றிய புரிதலும் இலக்கை நோக்கிய பயணம் சார்ந்த நம்பிக்கையும் அவர்களிடம் இருப்பதை உணரமுடிந்தது. சுவாமிஜி, சண்முகசிவா, நவீன், முத்துசாமி ஆகியோருடன் உரையாடிய  நிமிடங்கள் மகிழ்ச்சிகரமானவை. ஐநூற்றுச் சொச்ச தமிழ்ப்பள்ளிகள், ஐந்தாவது வரைக்கும் மட்டுமே படிக்கமுடியும் சூழல் என்கிற நிலையில் உயரிலக்கியம் நோக்கி வாசகர்களை ஈர்த்து வளர்த்தெடுக்க முடியும் என்னும் நம்பிக்கை வணக்கத்துக்குரியது. படைப்பாளிகளுக்கே உரிய அசைக்கமுடியாத நம்பிக்கை அது. ஆழ்மனத்தில் அன்று முழுக்க அதையே அசைபோட்டபடி இருந்தேன்.  தற்செயலாக  திருக்குறள் கண்ணனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தி, அது சாத்தியப்பாடுள்ள ஒரு நம்பிக்கை என எனக்கு உணர்த்தியது. தகவல் இதுதான். இணையத்தில் தம் திருக்குறள் தளத்தில் எழுதப்படும் ஆங்கில விளக்கக்குறிப்புகளை தொடர்ச்சியாக வாசிக்கும் வாசகர்களில் பெரும்பாலோனோர் மலேசியாவையும் தென்னாப்பிரிக்காவையும் சேர்ந்தவர்களாக இருப்பதை தற்செயலாக ஒருநாள் கண்டறிந்ததாக கண்ணன் சொன்னார். தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைவாக இருப்பினும் திருக்குறளை ஒரு முக்கிய நூலாகக் கருதும் எண்ணம் ஆழ்மனத்தில் இருப்பதால்தான் ஆங்கிலத்தில் அவர்கள் படிக்க வருகிறார்கள் என்றார். இந்த ஆர்வத்தை அவர்கள் தொடர்ச்சியாக தக்கவைத்துகொள்வார்களெனில் அவர்கள் தாமாகவே தமிழை அறிந்துகொள்வார்கள் என்று தோன்றியது. தமிழை அறியும்போதும் தனக்குள் உறையும் தமிழை மெல்ல மெல்ல வளர்த்துக்கொள்ளும்போதும் அவர்கள் இலக்கியத்துக்குள் நிச்சயம் வந்தடைந்துவிடுவார்கள். நவீனுக்குள் செயல்படும் நம்பிக்கையின் விதை எத்தகையது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

25507737_933454080145286_4085902143364331742_n

பி.ஏ.கிருஷ்ணன் தமக்கிருக்கும் அனுபவங்களின் பின்னணியில் அவையையும் பார்வையாளர்களின் வினாக்களையும் மிக எளிதாகக் கையாண்டார். மரபார்ந்த மருத்துவமுறையின் மீது அவர் கொண்டிருக்கும் மனவிலக்கம் தனிப்பட்ட விதத்தில் எனக்கு வருத்தமூட்டியது. ஆனால் அவராகவே இந்தத் திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கவைக்கிற ஏதேனும் ஓர் அனுபவத்துக்கு அவர் ஆட்படும் வரையில் யாரும் ஒன்றும் செய்ய இயலாது. அக்கணத்தில் ஆரோக்கிய நிகேதனம் நாவலில் ஜீவன் மஷாயிடம் தன் மனைவிக்கு நாடி பார்த்துச் சொல்லும்படி கோரும் இளம்மருத்துவரையே நினைத்துக்கொண்டேன். நாக்கு வரையில் புரண்டு வந்த சொற்களை அடக்கிக்கொண்டேன்.

 

உற்சாகம் கொப்பளிக்கும் புன்னகையோடும் குரலோடும் உரையாடிய ஜெனிஸ் பரியத்தும் ஒருங்கிணைத்த ராம்குமாரும் மாறிமாறி இலக்கியத்தையும் சமூக அமைப்பையும் முன்வைத்து மேகாலயத்தைப்பற்றிய ஒரு பெரிய சித்திரத்தை உணர்த்திவிட்டார்கள்.

 

விருதளிக்கும் விழா சமயத்தில் அரங்கம் நிறைந்துவிட்டது. முத்துசாமியைப்பற்றிய ஆவணப்படம் எளிமையான பதிவாக இருந்தாலும் மனநிறைவாக இருந்தது. அவர் எழுத்தில் காணும் தனிமையுணர்வு அந்தப் படத்திலும் நிறைந்திருப்பதை உணர்ந்தேன். உரை நிகழ்த்திய அனைவருமே கச்சிதமாகத் தொடங்கி கச்சிதமாகவும் நிறைவாகவும் முடித்தார்கள்.

 

உங்களையும் கோவை ஞானி, பி.ஏ.கிருஷ்ணன், அசோக்குமார், நிர்மால்யா, கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், வசந்தகுமார், அபிலாஷ், நவீன், சீ.முத்துசாமி, சண்முகவேல், சுவாமிஜி, அரங்கசாமி, காளி, விஜயசூரியன், செல்வேந்திரன், மீனாம்பிகை, நரேன், நாஞ்சில்நாடன், தேவதேவன், விஜயராகவன் என பல நண்பர்களையும் ஒவ்வொருவராகப் பார்த்து, கைகுலுக்கியும் தழுவியும் விடைபெற்றுக்கொண்டு ரயிலடிக்கு வந்து சேர்ந்தேன். நடைமேடையில் வந்து காத்திருந்த கணத்திலிருந்து பயணம் முழுக்க விழாநிகழ்ச்சி என் நெஞ்சில் மீண்டும் அரங்கேறத் தொடங்கியது.

 

வாழ்த்துகளுடன்

பாவண்ணன்

IMG_9776

அன்புள்ள ஜெ

 

2010 ஆம் ஆண்டு விழா குறித்து நேற்று அசை போட்டுக்கொண்டிருந்தேன். ஒப்புநோக்கில் 2017 விழா மிகப்பெரிய பாய்ச்சல். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இதை ஒரு சாதனையாகவே கருத்திக்கொள்ள வேண்டும்.

 

நவீன் பற்றி நீங்கள் இதுவரை எழுதியதையெல்லாம் ‘சரி, ஊக்குவிப்பதற்காகச் சொல்கிறார்’ என்றே எண்ணிவந்தேன். மேடைப் பேச்சில் மனிதர் பின்னிவிட்டார். எப்படியும் என்னைவிட ஐந்தாறு பிராயங்களாவது  கம்மியாக இருப்பார். இவர் பேச்சைக் கேட்டதும் எனக்கும் பெயர் விளங்கும்படி ஏதேனும் செய்தேயாகவேண்டும்  என்ற உத்வேகம் வந்துவிட்டது. உங்கள் வெற்றியின் சூட்சுமமும் இதுதானோ? செயலூக்கம் நிறைந்தவர்களை அருகில் வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து கவனிக்கிறீர்கள்.

 

Janice ஒரு surprise package. நீண்ட நாள்கள் கழித்து இதுபோன்றதோர் உரையை ஆங்கிலத்தில் கேட்டேன். மிகக் குறைவான நேரமே பேசினாலும் செறிவாகப் பேசினார். ஊருக்குச் சென்றதும் முதல் வேலையாக அவருடைய புத்தகங்களை வாங்கி வாசித்துவிட வேண்டும்.

 

ராஜகோபாலனைத் திருவண்ணாமலையில் 2012 மார்ச் மாதம் வம்சி புத்தக வெளியீட்டின்போது முதன்முறையாகப் பார்த்தேன். ரமணர் ஆசிரமத்தில் ஒரு கன்றுக்குட்டியுடன் அவர் எதையோ பேச முயல  அது திமிறியவண்ணம் இருந்தது நினைவில் இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில்அவர் கடந்திருக்கும் தூரம் அசாத்தியமானது.

na1

திரு. சீ. முத்துசாமியினுடையது மிக ஆத்மார்த்தமான பேச்சு. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவருக்கு  விருதை சமர்ப்பிக்க அவர் பல முன்னோடிகளின் சார்பாகப் பெற்றுக்கொண்டார். நான் உணவருந்தும்போது எனக்கெதிரே அமர்ந்திருந்து உணவருந்தினார். மிகவும்  மகிழ்ச்சியோடு  காணப்பட்டார்.

 

நீங்கள் நன்றாகப் பேசினீர்கள் என்று சொல்வது தேய்வழக்காகி விட்டது:-)

 

மாலையில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் வெளியே சென்று காபி / பலகாரம் சாப்பிட்டு வந்தோம். காலையில் டீ வாங்கித் தர இயலாததை இப்படியாக ஈடுகட்டிவிட்டேன்:-)

 

அன்புடன்

 

கோபி ராமாமூர்த்தி

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12