ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை தமிழாக்கம் செய்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதியான விருது இது. பாலக்காடு வட்டாரவழக்கும் கற்பனாவாதத்தன்மைகொண்ட வர்ணனைகளும் இடைகலந்த கசாக்கின் இதிகாசம் மொழியாக்கத்திற்குச் சவாலான ஆக்கம். அதை சிறப்புறச் செய்த யூமா பாராட்டுக்குரியவர்.
யூமா வாசுகி என்னும் பெயரில் எழுதும் மாரிமுத்து அடிப்படையில் கவிஞர், ஓவியர். அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு முதலிய தொகுதிகளின் ஆசிரியர். நவீனத்தமிழ்க்கவிதையில் ஒலிநயம், கட்டற்ற பித்துநிலை, சொற்கோவைகளின் புதுமை காரணமாக மிகவும் கவனிக்கப்பட்டவை அவருடைய கவிதைகள்.
அவருடைய முதல்நாவல் ‘ரத்த உறவு’ குடும்ப உறவுகளிலுள்ள வன்முறையையும் கனிவையும் சித்தரிப்பது. தமிழில் பெரிதும் பேசப்பட்ட படைப்பு அது. அடுத்த நாவல் மஞ்சள்வெயில். சிறந்த சிறுகதைகளையும் யூமா வாசுகி எழுதியிருக்கிறார்
மிகப்பிற்காலத்தில்தான் யூமா வாசுகி மொழியாக்கங்கள் செய்ய ஆரம்பித்தார். பெரும்பாலும் மலையாளத்திலிருந்து. அவருக்கும் மலையாளத்திற்கும் தொடர்பில்லை. சொந்த ஆர்வத்தால் கற்றுக்கொண்டார். குழந்தைகளுக்கான நூல்களையே பெரும்பாலும் மொழியாக்கம் செய்திருக்கிறார்
யூமா வாசுகிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். விரைவிலேயே கவிதைக்காகவும் புனைவிலக்கியத்திற்காகவும் அவர் விருதுகள் பெறவேண்டும்
யூமா வாசுகி விக்கிப்பக்கம்
யூமா வாசுகி சிறுகதைகள்
யூமா வாசுகி கவிதைகள்
யூமா வாசுகி மொழியாக்கக் கதைகள்
கசாக்கின் இதிகாசம் பற்றி…
பவிழமிளம் கவிளிணையில்…
இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்
கஸாக்- கடலூர் சீனு
கசாக்கின் இதிகாசம்- சொற்கள்
———————————————————————————————————————————————————————————————-
பின்குறிப்பு
இன்குலாப் இலக்கியத்திற்கான சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றிருக்கிறார் .வழக்கம்போல வானம்பாடிகள் வரிசைகட்டி விருதுபெறுவதைப் போலத்தான் இங்குலாபுக்கு அளிக்கப்பட்ட விருது. தீவிரஇடதுசாரிகள் சுவரில் எழுதிப்போடும் கோஷங்களின் தரம்கொண்டவை அவருடைய வரிகள். தேய்வழக்குகளை மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருந்தவர். ஒருவரியேனும் கவிதையென எழுதியவர் அல்ல.
இந்த முற்போக்கு இவரைப்போன்ற கல்லூரி ஆசிரியர்கள் அக்காலத்தில் கொண்ட ஒரு பிரத்யேகவகையான நடிப்பு. கவிதை அக்கவிஞனின் அந்தரங்கநேர்மையின் ஒலி. இங்குலாப் அந்தப்பெயரில் ஒளிந்துகொண்ட வழக்கமான கல்லூரி ஊழியர், அவ்வளவே.இன்குலாப் அவருடைய லாபியால் நோபல் வாங்கியளிக்கப்பட்டாலும் கவிஞரோ இலக்கியவாதியோ ஆவதில்லை. அவரைத்தெரிவுசெய்த நடுவர்களுக்கு இலக்கியமென்பது என்ன என்று தெரியவில்லை என்பதைத்தவிர இவ்விருதால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் காலமெல்லாம் இந்திய அரசெதிர்ப்பாளராக பாவனைசெய்தவருக்கு அளிக்கப்படும் சாகித்ய அக்காதமி ஒருவகையில் அவர் ஒங்கிக்கூச்சலிட்ட அனைத்து புரட்சிகளையுமே காலிசெய்வது என்பதை அவருக்காக உழைத்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது அவர்கள்தான் சரியாகப்புரிந்துகொண்டிருக்கிறார்களோ? அவர் ஏங்கியதே இதைத்தானோ?