விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 8

 

 

கலைச்செல்வி எழுத்தாளர்
கலைச்செல்வி எழுத்தாளர்

வணக்கம்.

முதலில் என்னை பற்றி..

நான் எழுத வேண்டும் என்றெல்லாம் நினைத்து இலக்கியத்துக்குள் வரவில்லை. அது ஒரு சந்தர்ப்பம்.. அது ஒரு மீட்சி..

வழக்கமான வாழ்க்கைச் சுற்றுக்குள் மனம் திருப்திக் கொண்டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதை, அல்லது என் மனம் தேடுவதை, புரியாமலேயே நான் உணர்ந்துக் கொண்டிருந்தேன். மனதில் அத்தனை வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைககளிலிருந்து அடித்துச் செல்வது போன்ற உணர்வு, அத்தனையும் தோற்று நிற்பது போன்ற நிர்கதியான மனநிலை. எதுவுமே முழுமையடையாதது போன்ற பவானையில் உலகம் நகர.. ஒட்டவோ.. விலகவோ இயலாமல் தவிப்பான மனநிலை. எனக்குள் என்னை சமாளிப்பதே அத்தனை பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதபம் அதீதமாக எழ எதற்கெடுத்தாலும் அழுகை வந்து விடும்  வாசிப்புக்கு வாய்ப்பான சூழலில்தான் பிறந்து வளர்ந்திருந்தேன். திருமணம், அலுவலகம், குழந்தைகள் என்ற வாழ்க்கைச் சூழலில் எங்கோ பறந்துப் போன புத்தககங்களை மீள எடுத்தேன். இம்முறை வெறிக் கொண்டது போல படித்தேன். எந்த நேரத்தையும் ஒதுக்க முடியாமல் போக,  துாக்க நேரங்களை எனக்காக்கினேன். இயல்பாகவே ஊர் வம்பு.. டிவி.. சினிமா.. ரிசர்வான போக்கு என்ற என்  மனநிலை வாசிப்புக்கு சாதகமாகிப் போனது. அந்தத் தேடலில்தான் “காடு“ வழியே உங்களை கண்டடைந்தேன். உங்கள் புத்தகங்களை தேடி தேடி படிக்க துாண்டியது அவ்வனுபவம் வழியேதான். பிறகு உங்களின் “தளம்“. இப்படியாக வந்து சேர்ந்ததுதான் விஷ்ணுபுரம் விழா.

 

 

விஸ்வம்
தாமோதர் சந்துரு

விழா குறித்து..

 

பொதுவாக இலக்கிய விழாக்கள் விமர்சனங்கள் இன்றி வெற்று புகழுரைகளால் நகரும். அல்லது விமர்சனம்/ வெளியீட்டிற்கான புத்தகங்களை படிக்காமலும் கூட்டம் நடக்கும். அல்லது முக்கிய ஆளுமைகள் மைக்கை இடைவிடாமல் பிடித்துக் கொண்டு விடுவர். உள்நாட்டு இலக்கியமே இவ்வாறிருக்க, அயல் இலக்கியம்.. அண்டை மாநில இலக்கியம் குறித்தெல்லாம் பேச ஆளேது..?  சித்திரை மாத மதிய நேர கசகசப்பாக நகரும் விழாக்களுக்கு மத்தியில் இலக்கியத்திற்கே இலக்கியத்திற்கான விழா இந்த விஷ்ணுபுர இலக்கிய விழா.

உரையாடல்   இலக்கியத்தை விட்டு தாவும் நேரங்களில் லகானை இழுத்து மீண்டும் மையத்தை நோக்கி கவனத்தை குவிக்க வைத்து விடுகிறீர்கள்.

படைப்புகளின் வழியே படைப்பாளர்களையும், படைப்பாளர்கள் வழியே படைப்புகளையும் ஒருசேர அணுகும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது.

பெரிய.. சிறிய என்றெல்லாம் பேதமில்லை. இலக்கியம் அன்பாக இழைந்து வழிந்தோடுகிறது. ஆங்காங்கே சிறு சிறு குழுமமாக உரையாடும்போது கூட அன்பை பெருக்கெடுத்து இலக்கியத்தை நிறைக்கிறீர்கள். இலக்கியம் என்ன தந்து விட போகிறது..? இதுவற்று வாழ்ந்து விட முடிகிறதே என்ற கேள்விக்கு வெளியை அன்பால் ஒளிர செய்கிறது எனலாம்.

 

விஸ்வம்
விஸ்வம்

எனக்கான அனுபவம்

என்னை பார்த்த தருணத்தில் “ஆழம்“ போலவே ்அறம்“ என்றொரு பேச்சு இருக்கிறதே.. இதை யார் உருவாக்கினாங்க.. என்றீர்கள். எனக்கு பதில் சொல்லும் எண்ணமெல்லாம் இயல்பாகவே தோன்றவில்லை. ஏதோ உளறினேன் என்று நினைக்கிறேன். என் மனம் முழுக்க “ஆழம்“ நீங்கள் படித்திருந்தீர்கள் என்பதிலேயே மொய்த்துக்கிடந்தது.

கூட்ட அரங்குகள் கேள்விக்கான அத்தனை வெளிகளையும் திறந்து வைத்திருந்தாலும் ஜீரோ என்ற அளவிலிருந்தே ஒவ்வொரு முறையும் என்னை எடுத்துச் செல்ல தோன்றுகிறது. கேள்விகளையும் உரையாடல்களையும் கவனிக்க தோன்றுகிறது. அதிலும் உங்களின் கேள்விகளின் ஆழம் நிறைய புரிதல்களையும் திறப்புகளையும் உண்டாக்குகிறது. இலக்கியம் அத்தனை இயல்பாக புகட்டப்படுகிறது. யாருக்கு இருக்கும் இந்த அக்கறை..?

 

 

IMG_0076

மிக மட்டமான திரைப்படங்களை எடுத்து விட்டு, அதை தமிழ் மக்களின் ரசனையின் மீது குற்றச்சாட்டுகளாக பதிந்து பணம் பண்ணும் இடமாகதான் நான்  சினிமாவை பார்க்கிறேன். வணிக இதழ்களும் அப்படியான ஒரு வேலையைதான் செய்கிறது. வணிக எழுத்துக்களுக்கான இன்றைய நிலை வணிக இதழ்களுக்கு யாதொரு மாற்றத்தையும் தரவில்லை. அது இங்கு கட்டுடைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் பயிற்றுவிக்கப்படும் “இலக்கியத்துக்கும்“ இங்கு அனுபவங்களாக பெற்றுச் செல்லும் இலக்கியத்துக்கும்தான் எத்தனை இடைவெளி. கலை கலைக்காகவா.. மக்களுக்காகவா.. அலைகழிப்பான கேள்வி இது. மக்களின் மனப்போக்கினை அதன் நீட்டல் குறுக்கல்களை.. ஆழ அகலங்களை அலசும் போது இந்த இரு கேள்விகளுக்குமான பொதுவான விடை கிடைத்து விடுகிறது. மன பரிமாணங்களை ஊடுருவல் செய்வது சமுதாயத்தின் இருண்மையை அலச ஒத்ததே..

 

சுவாமி பிரம்மானந்தா மலேசியா
சுவாமி பிரம்மானந்தா மலேசியா

நிறைகள்

 

திகட்ட திகட்ட இலக்கியம்.அன்பான பரிமாறல்கள், ஆளுமைகளுடன் சந்திப்பு, (அதிலும் சுனில்கிருஷ்ணன் உட்பட இரண்டொருவர் என் கதைகளை  பதாகை தளத்தில் படித்து பாராட்டியது இன்னும் குஷி), உணவு, பரிமாறல், முகமன். எல்லாமே..

 

ஈரோடு விஜயராகவனின் மகன் அஸ்வத், வினாடிவினா போட்டியில் பரிசுபெறுகிறார்
ஈரோடு விஜயராகவனின் மகன் அஸ்வத், வினாடிவினா போட்டியில் பரிசுபெறுகிறார்

குறைகள்

பதினோரு மணிக்கு நானும் லோகமாதேவியும் தனியார் விடுதிக்கு சென்று விட, இங்கோ விடாமல் இலக்கிய உரையாடல்கள் தொடர்ந்திருக்கிறதாம். ஏமாந்து போனது எங்களின் குறை.

அதேபோல காலை நடையை உத்தேசித்து வந்தோம். மக்களெல்லாம் வுடு ஜுட்..

 

ஈரோடு விஜயராகவனின் மகன்  சூரியா வினாடிவினா போட்டியில் பரிசுபெறுகிறார்
ஈரோடு விஜயராகவனின் மகன் சூரியா வினாடிவினா
போட்டியில் பரிசுபெறுகிறார்

ஆதங்கம்

3.40 புகைவண்டிக்கு நான்  கிளம்பிய போதே விழா முடிந்து விடக் கூடாதா என்று காதில் புகை விட்டுக் கொண்டே கிளம்பினேன்.

நிறைவு

அன்புடன்

கலைச்செல்வி.

***

 

 

காட்சன்
காட்சன்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் கொண்டாட்டங்களில் இருந்து மீளமுடியவில்லை.  இரண்டுநாள் ஒரு வகையான உச்சநிலையில் இருந்தேன். சமானமான மனம் கொண்டவர்களிடம் பேசிப்பழகுவது எனக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் கோவையில் இருக்கிறேன். ஆனால் என் அலுவலகம் வீடு எங்கேயுமே எனக்கு இலக்கியத்தோழர்கள் இல்லை. பயணம்பண்ணும் வேலை எனக்கு. ஆகவே எந்த விழாக்களுக்கும் செல்லவும் முடியாது. இதனால் நான் வாசித்ததெல்லாம் மனசுக்குள்ளேயே இருக்கும். இந்த விழாவில் பேசித்தள்ளிவிட்டேன். ரொம்ப ஜாஸ்தியாகப்பேசிவிட்டேனா என்று சந்தேகம் வந்தது. ஆனால் வேறுவழியில்லை. நிறைய நண்பர்களைச் சந்தித்தேன்

 

தேவதேவன் அருகே லா.ச.ராவின் மகன் ல.ரா.சப்தரிஷி
தேவதேவன் அருகே லா.ச.ராவின் மகன் ல.ரா.சப்தரிஷி

எனக்கு போகனின் பேச்சு மிகவும் பிடித்திருந்தது. ஆழமான கேள்விகளுக்குக்கூட ஒரு இயல்பான நகைச்சுவையுடன் பதில் சொன்னார். அவருடைய எழுத்து எதையும் வாசித்ததில்லை. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததுமே போகப்புத்தகம், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் ஆகிய இரு நூல்களை வாங்கினேன். வெய்யில் நூல்களை வாங்க விரும்பினேன். அவை கிடைக்கவில்லை. என்னால் தொண்டாமுத்தூரிலிருந்து தினமும் 9 மணிக்கு வரமுடியவில்லை. நிகழ்ச்சிகள் 10 மணிக்குத்தொடங்கியிருக்கலாம் என்பது தாழ்மையான கருத்து

அற்புதமான சந்திப்புக்கள். ஒவ்வொரு நிமிடமும் திரில்லிங்காக இருந்தது. எழுத்தாளரிடம் இப்படியெல்லாம் கேட்கமுடியுமா என்பது ஆச்சரியமானதுதான். ஒருவர் ஜெனிஸ் பரியத்திடம் பெண்வழிக்குடியில் பெண்ணின் உணர்வுகள் ஆணை ஜெயிப்பதுபற்றியதாக இருக்குமா என்று கேட்டது மிக அருமையான கேள்வி. அதேபோல பி.ஏ.கிருஷ்ணனிடம் அவர் அறிவியலை ஏன் ஒரு மதம் மாதிரி நம்புகிறார் என்று கேட்டதும் முக்கியமான கேள்வி. எல்லா கேள்விகளுமே உற்சாகமானவையாக இருந்தன. இலக்கியத்திருவிழாவாகவே இந்த ஆண்டு விஷ்ணுபுரம்விருதுவிழா நடைபெற்றிருக்கிறது. இது வரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும்.

செந்தில்

***

IMG_9890
கவிஞர் தென்பாண்டியன்

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

வாழ்த்துக்கள்!.வழக்கம்போல் “விஷ்ணுபுரம் இலக்கிய விழாவை” நண்பர்களுடன் மிகச்சிறப்பாக நடத்திவிட்டீர்கள் என்பதை அதை நேரில் கலந்து கொண்டு முற்றாக அனுபவித்துவிட்டு கடிதம் எழுதிய வாசகநண்பர்களின் கடிதங்கள் மூலம் அறிய முடிகிறது.குறிப்பாக ‘கிறிஸ்டி’ அவர்களின் கடிதம். விழாவின் உன்னதங்களை அவரின் எழுத்தில் அருமையாக வடித்து நேரில் கலந்துகொள்ள இயலாத எங்களையும் சற்று நேரம் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துவிட்டார்!.அவருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 7
அடுத்த கட்டுரைவிருது