ஜெ ,
ராகவ் கடிதத்தில் லட்சுமி மணிவண்ணன் அவர்களை பற்றி சொன்னது தவறு , சனி இரவு நாம் 12.30 வரை உங்கள் அறையில் நடந்த விவாதங்களை கேட்டு வெளியே வந்த போது லட்சுமி மணிவண்ணன் அவர்களை பார்த்தேன் , 2 மணி வரை அவருடன் பேசி கொண்டிருந்தேன் , குல தெய்வம் , ஆன்மிகம் , பத்மநாபசாமி , சு.ரா அவர்களுடனான உறவு என நிறைய பேசினார் , அப்போது இரவு இருசக்கர வாகனத்தில் விற்கப்படும் tea சாப்பிட்டோம் , உங்களை எழுப்பலாமா னு கூட யோசித்தேன் :)
ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ராதா
அது நம் பிழை. எந்தெந்த எழுத்தாளரை எப்போது எங்கே வாசகர்கள் சந்திக்கலாம் என முறையாக அறிவித்திருக்கவேண்டும். அடுத்தமுறை செய்வோம்
ஜெ
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழா என்னும் நெகிழ்வும் பரிவுமான தருணம் ஒன்றில் நானும் நேரிடை பார்வையாளானாய் பங்கேற்ற தருணங்கள் பற்றிய மெல்லிய நினைவின் பதிவிது.
விழா பற்றிய முதல் அறிவிப்பு வந்த போதே இந்த முறை செல்கிறோம் என முடிவு செய்துவிட்டேன். எப்படி என்பதை அன்றைய சூழல் முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டேன்.
பொருள் மனம் உடல் என பல்வேறு எதிர் சூழல்கள் வெள்ளி இரவுவரை.
முன் எச்சரிக்கையாய் ஏற்கனவே அலுவலகத்தில் விடுமுறை சொல்லியிருந்தேன் சனிக்கிழமைக்காக.
நடுவில் விழாவுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி இருந்தும் அழைப்பு எதுவும் உறுதி படுத்தப்படாததால் வியாழன் வரை அந்தக் குழப்பம் வேறு. ஒருவேளை ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் நமக்கு அழைப்புஇல்லையோ என்று. ஆனால் வியாழன் அன்று மீனாம்பிகை மேடம் அழைத்து நான் வரும் தகவல்களை உறுதி செய்து கொண்டார்கள். மெல்லிய மகிழ்ச்சி.
எப்போதுமே சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளி இரவே திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்று விடுவேன். பயண நேரம், ரயில் வசதி இப்படி அனைத்துமே தோதாக இல்லாததால் நேரடியாக திண்டுக்கலில் இருந்தே பேருந்தில் கோவை வந்தடைந்தேன்.
காலை ஆறு முப்பதுக்கு கிளம்பி மிகச் சரியாக 12.15 தான் ராஜஸ்தான் சங் அரங்கை அடைந்தேன்.
தூயன், அசோக் குமார் மற்றும் அபிலாஷ் அவர்களின் அமர்வுகளை தவற விட்டிருந்தேன்.
நான் உள்ளே நுழையவும் அபிலாஷ் அவர்கள் தன்னுடைய இருக்கைக்கு திரும்பவும் சரியாக இருந்தது. அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்து கொண்டேன்.
விஷால் ராஜா மற்றும் சுரேஷ் பிரதீப் அவர்களின் அமர்வில் இருந்து முழுமையாய் இணைந்து கொண்டேன் விழாவோடு.
உங்களின் கதைகளில் நேர்மறை உணர்வுகளோ குடும்ப உணர்வுகளோ இல்லையே அதை படிக்கையில் மெல்லிய பயம் வருகிறது என்ற பெண் வாசகரின் குற்றச்சாட்டில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது.
நானும் கூட ஒரு கேள்வி கேட்டேன்.
” இலக்கியம் தோன்றிய நாள் முதல் அடக்குமுறை, ரகசியம் போன்றவற்றின் பதிவாய்த்தான் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை ஆசைப்படுவது போல சமூகத்தில் முழுமையான அறம் தழைத்து விட்டால் அன்பு மலர்ந்து விட்டால் அப்போது இலக்கியத்தின் முகம் அல்லது அதன் இடம் என்னவாக இருக்கும் ? எனக் கேட்டேன்.
அதற்க்கு ரமேஷ் அவர்கள் “அப்போதும் இலக்கியம் பேசுவதற்கு என்றொரு தளமிருக்கும் என்றார் ”
விஷாலோ அப்படி ஒரு உடோபியன் சமூகம் அமையும் வாய்ப்பில்லை எனச் சொல்லி விட்டார்.
அடுத்து உணவு இடைவேளை. உங்களை அப்போது தான் முதன் முதலாக நேரில் பார்க்கிறேன். “நீங்க அப்படியே எம்ஜியார் மாதிரி தகதகன்னு மின்னுறீங்க ” எனச் சொல்லத்தோணியது. சொல்லவில்லை.
மெலிதாய் நான் ரா.பிரசன்னா மதுரை என அறிமுகப்படுத்திக் கொண்டேன். நீங்களும் மெல்லிய புன்னகையோடு பதில் தந்தீர்கள். அதற்குள் அரங்கசாமி அவர்கள் எதோ சொல்ல நீங்கள் அவருடன் சென்று விட்டீர்கள்.
வெண்முரசு வரிசை புத்தகங்கள் மற்றும் விருது பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் என ஒரு குட்டி அரங்கு புத்தகங்களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது.
அதற்க்கு அருகில் நிற்கும் போது தான் உங்களோடு என் நினைவின் பொக்கிஷங்களுக்காய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
தோள்களை உங்களால் சேர்த்தபடி இதழ்களை விட்டு குதித்து விடும் வாய்ப்புள்ள புன்னகையோடு நான் நிற்கும் இந்த புகைப்படம் இனி என் அலமாரிகளில் மைய இடம் பிடிக்கும்.
பிஜேபி குஜராத்துல ஜெயிக்கணும்ன்னு வேண்டிக்கோங்க என காவிச்சட்டை நண்பர் ஒருவர் உங்களிடம் பகடியாய் சொல்லிச் சென்றதை நான் தான் சற்று அதிர்ச்சியோடு கவனித்தேன். ( ஆனால் வேறு யாரோ வேண்டியிருக்கிறார்கள் போல )
ஒரு நல்ல மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அடுத்து போகன் சங்கர் அவர்களுடனான அமர்வு. கவிதை, கதை, மனநலன், பேய், பிசாசு அமானுஷயம் என அது ஒரு திகில் மற்றும் த்ரில் அமர்வு.
நானும் கூட பின்வரும் கேள்வியினை கேட்டேன்.
“சமீபத்தில் ஒரு நண்பரிடம் ஒரு பத்திரிக்கையின் ;பெயரைச் சொல்லிக் கேட்டேன் என் கவிதைகள் அங்கே பிரசுரம் ஆகவே மாட்டேன் என்கிறதே என. நீங்க கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுங்க எனச் சொல்லி விட்டார். நான யாருக்கு புரியும்படி எழுத வேண்டும். ஆசிரியருக்கா, மக்களுக்கா இல்லை எனக்கா ? ”
அதற்க்கு போகன் சங்கர் தந்த பதில் தான் அட்டகாசம்.
உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (kyc ) என்றார். அரங்கில் அதற்க்கு சிரிப்பலை
அடுத்து வெயில் அவர்களுடனான அமர்வு ஒரு கோர்வையாக தகவல்களுடனான அமர்வாக இருந்தது. கவிதை பற்றி, பணிச்சூழல் பற்றி, கவிதை எழுதுபவர்களை விட கதை எழுதுபவர்களுக்கே முக்கியத்துவம் உண்டு என்பதையும் தான் மார்க்சிஸ்ட் இல்லை என்பதை ஒரு கேள்விக்கு அழுத்தமான பதிலாக தந்தார்.
தன்னுடைய அம்மா பற்றியும் எழுத்தில் மட்டுமே அறமென்னும் நெருப்பினை பற்ற வைக்க முடிந்த கையறு நிலை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
அவரிடமும் நான் மிக முக்கியமென நினைத்த ஒரு கேள்வியொன்றை கேட்டேன்.
“இலக்கியம் கடவுளை உருவாக்கி இருக்கிறது, அரசுகளை ஆட்டிப்படைத்து இருக்கிறது. ஆனால் அரசவை புலவரை தவிர ஏனையோர் வறுமையில் தான் வாடியிருக்கின்றனர். இப்போதும் கூட ஜெயமோகனும், எஸ்ராவும் சினிமாவுக்கு எழுதுவதன் மூலமே தங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது எனச் சொல்லும் போது சங்ககாலம் துவங்கி இப்போது வரை எந்தத் தலைமுறையிலும் மாறாமல் இருப்பதால் வறுமை என்பது இலக்கியமும் கவிதையும் தோற்ற இடமென பதிவு செய்து கொள்ளலாமா ? ” எனக் கேட்டேன்.
அதற்க்கு வெயில் அவர்கள் ” வேறு வழியில்லை என் புத்தகம் 150 பிரதிகள் தான் விற்கின்றன அதற்காக எழுதுவதை விட்டுவிட மாட்டேன். இது மாறுமென நம்புவோம் என பதில் தந்தார்.
நடுவில் விஷ்ணுபுரம் விருது பெரும் மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமி அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைபற்றிக் கேட்டுக்கொண்டு கேள்வியெல்லாம் நல்லா கேட்கிறீங்க எனச் சொன்னது ஒரு ஆச்சர்ய தருணம்.. ஒரு நல்ல எழுத்தாளரால்
வாழ்த்தப்படுவதை விட வேறு என்ன பேறு எனக்கு கிடைத்து விடும் ?
நடுவில் நாஞ்சில் நாடன் அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.
மாலை மலேசிய எழுத்தாளர்கள் நவீன், ஷண்முக சிவா மற்றும் ஸ்வாமிஜி ஆகியோருடன் புதியவர்கள் இருவர் சேர்ந்து நிகழ்ந்த அமர்வு மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம், சீனாவின் நிலைப்பாடு கல்விச்சூழல் , குற்றவாளிகளுக்கு நிகழும் துன்பம் மற்றும் மீட்பு இப்படி ஒட்டுமொத்தமாக அயல் இலக்கியம் பற்றி ஒரு புரிதல் பெற ஏதுவான உரையாடல்.
இரவு உணவுக்கு பிறகு வினாடி வினா.
நான் இரண்டாம் எண் குழுவில் இருந்தேன். புத்தகப்பரிசு எதுவும் பெறாத போதும் கேட்கப்பட்ட 40 கேள்விகளில் மோகமுள்ளின் முதல் வரிகளும் கலாப்ரியா அவர்கள் கேள்விக்கு மட்டுமே எனக்கு பதில் தெரிந்தது. ஆனால் அதுவும் பக்கத்து குழுக்களுக்கு போய்விட்டது.
எனக்கு ஒரு பதிலும் தெரியவில்லை என்பதை விட மொழிபெயர்ப்பு நேரடி ஆங்கில நூல்கள், திரைப்படங்கள் என பல கேள்விகளுக்கு அட்டகாசமான பதில் தந்த என்னை விட வயதில் சிறிய பையன்களை பெண்களை பார்க்கும் போது பொறாமையோடு இன்னும் நெறய இருக்கிறது கற்றுக் கொள்ள என்பதும் விளங்கியது.இரவு மயிலாடுதுறை நண்பர்களோடு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அடுத்து உங்களின் அறையில் மினி விவாத அரங்கம். கொய்யாப்பழத்தை பரிசாய்க் கொண்டு நீங்கள் நடத்திய வினாடி வினாவில் எனக்கு பதிலும் தெரியவில்லை கொய்யா பழமும் கிடைக்கவில்லை. சோ சேட் .
ஒரு 11 மணிக்கு மேல் தூக்கம் கண்ணை சுழற்றியதால் நான் நைசாக நழுவி அறைக்கு சென்று உறங்கி விட்டேன்.
கொஞ்சம் நீண்ட கடிதமாக இருப்பது போல் தெரிவதால் தனிக்கடிதமாய் இரண்டாம் நாள் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
உங்களுடனும் நாஞ்சில் நாடன் அவர்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி
அன்புடன்
ரா. பிரசன்னா
ஜெ ,
விழாவுக்கு வந்தவரகள் ரயிலேறி ஊர்போய் சேர்ந்திருப்பார்கள் ,கோவை நண்பர்கள் பிரிவாற்றாமை தாங்காமல் “யானை ஒழிந்த கொட்டிலை”
பார்த்துக்கொண்டே இருக்கிறோம் . அடுத்த வருடம் முதல் விழா முடிந்து நாங்களாக துரத்தும்வரை இங்கிருக்க நண்பர்களை வேண்டுகிறோம் :)
விருதின் 8 வது வருடம் ,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 10 வது வருடம் . முதல் விருது விழா புகைப்படங்களில் பழம்பெருச்சாளிகள் எல்லோரும் இளமைபொங்க இருக்கிறோம் .
https://photos.app.goo.gl/5QifmpPEpBceUhnt2
இம்முறை, இதுவரை நீங்கள்கூட பார்த்திராத , நம் இணையதளத்தின் வழியாக உங்களோடு மானசீகமாக தினமும் உரையாடும் உலகெங்கும் உள்ள நண்பர்களின் நிதிப்பங்களிப்பு அதிகம் , நம் நண்பர்களின் சார்பாக “சங்கத்தின் வழக்கப்படி”
அவர்களை நெஞ்சோடு தழுவிக்கொள்கிறேன் .
கொஞ்சம் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது :)
‘அமைப்பு’ அரங்கா …
அன்புள்ள ஜெ
இந்த வருட விஷ்ணுபுர திருவிழா மிகவும் நிறைவாக இருந்தது முந்தைய விழாக்களை காட்டிலும். இது எனக்கு நான்காம் விழா. ஞாயிறு காலை பி.ஏ. கிருஷ்ணன் அமர்வின் பாதியிலேயே வர முடிந்தது வருத்தத்தை அளித்தாலும் ஒரு அரைமணி நேரமாவது அந்நிகழ்வில் பங்கெடுத்தது ஆறுதல் அளித்தது இருப்பினும் முதல் நாள் கொண்டாட்டத்தை முழுமையாக இழந்தது வருத்தமே அளித்தது.. ஜெனிஸ் பரியத்தின் ஆழமான பேச்சு நான் எதிர்பாராதது விழா முழுதுமே மிகவும் graceful ஆக இருந்தார்… கீ. முத்துசாமியின் ஏற்புரை எந்த போலி பாவனைகளும் இல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசினார் வயதின் காரணமாக சற்று நேரம் எடுத்து அவர் பேசினாலும் அது மிகவும் உணர்வுபூர்வமானது… மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் நன்றி ஜெ
சிவக்குமார்
சென்னை
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது என்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. நிகழ்ச்சியின் மூன்று அம்சங்களில் மிகப்பெரிய வெற்றி. மிகமிகச்சிறப்பான வரவேற்பு தங்குமிடம் ஏற்பாடுகள், மிகச்சிறந்த உணவு, நிகழ்ச்சிகளின் கண்டெண்டில் சரியான திட்டமிடலும் செறிவும். உங்கள் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்
இன்றையதினம் கோவையில் மட்டுமே இதைப்போன்ற விழாக்களை நடத்தமுடியும். கோவை போன்ற இரண்டாம்நிலை நகரங்களில்தான் இந்த கல்சுரல்ஸ்பேஸ் உள்ளது. மதுரையில் எண்ணிக்கைபலம் இல்லை. சென்னையில் காஸ்மாபாலிடன் தன்மைதான் இருக்கிறது. கோவையின் அடையாளமாக விழா மாறியது மிகச்சிறப்பான விஷயம்
நிகழ்ச்சிகளை வருங்காலத்தில் இன்னும்கூட விரிவாக்கலாம். விவாத அரங்கு ஒரேசமயம் நாலைந்து நடப்பதுகூட உலக அளவிலே இலக்கியவிழாக்களிலே உள்ளதுதான். அவரவர் ஆர்வத்துக்கு ஏற்பக் கலந்துகொள்ளலாம்
மிகவும் மகிழ்ச்சி
சிவராமன்
அன்புள்ள சிவராமன்
இப்போதே நிகழ்ச்சி மிகச்செறிவாக, பொழுது இடைவெளி இல்லாமல் உள்ளது. மேலைநாடுகளில் பெரிய விழாக்களில் மேலும் செறிவான நிகழ்ச்சிகளை இடைவெளியே இல்லாமல் நடத்துகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இந்தியாவில் இப்போதைக்கு அது சாத்தியமில்லை. இந்த வருகையாளர்கள் மும்மடங்கு கூடினார்கள் என்றால் வேறுவழியில்லை.
ஜெ