இருண்ட சுழற்பாதை
அன்புடன் ஆசிரியருக்கு
பன்னிரு படைக்களம் மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். காண்டீபம் மற்றும் வெய்யோனை இறுதியாக மறுவாசிப்பு செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன். உண்மையில் இவ்வருடம் வெவ்வேறு இலக்கிய ஆளுமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெண்முரசு மறுவாசிப்பினை ஒத்திப்போட்டுக் கொண்டிருந்தேன். ஒருவகையில் பலரை அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அதற்கென வெண்முரசு மறுவாசிப்பினை நிறுத்தியிருக்க வேண்டாம் என இப்போது தோன்றுகிறது.
விரைவாக வாசித்துச் செல்லும் போது நுட்பங்களை கைவிடுகிறோமோ என்றொரு சந்தேகம் எழுந்தது. பன்னிரு படைக்களத்தின் ஐம்பது அத்தியாயங்களை அலுவலகம் சென்ற நேரம் போக மூன்று நாட்களில் வாசித்திருக்கிறேன். உடன் நாஞ்சில் நாடன், ஸடாலின் ராஜாங்கம் ,சு.யுவராஜன், போகன் சங்கர் என பிறரையும் வாசிக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது . வாசிப்பில் இருந்த சுணக்கத்தை வெண்முரசு வெகுவாகவே நீக்கியிருக்கிறது. உச்ச விரைவில் வண்டி ஓட்டும் போது ஒரு கூர்மை கைகூடும். வெண்முரசு எனக்கு அளிப்பவற்றில் விரைவில் கைகூடும் கூர்மையும் ஒன்றென உணர்கிறேன். தொடராக வந்தபோது வடிவ ரீதியாக பெரும் அயர்வினைக் கொடுத்தது (பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது கிராதம்) பன்னிரு படைக்களம் தான். ஆனால் உச்சத்தில் நிகழும் தெறிப்பினை அதன் முதல் அத்தியாயத்தில் இருந்து ரக்தபீஜன், சகஸ்ரகவசன், ஜராசந்தன், சிசுபாலன் என அனைவருடனும் இணைத்துப் புரிந்து கொள்ள முயலும் போது பெரும் தரிசனம் ஒன்றை சென்றடைகிறேன். அது குறித்து விரிவாக எழுத வேண்டும்.
இந்தக் கடிதம் இருண்ட சுழற்பாதை பற்றியது. அக்கட்டுரையில் மகாபாரதம் குறித்த வரி வந்ததுமே விஸ்வாமித்திரர் வரப்போகிறார் என மனம் ஊகித்துவிட்டது. கன்யாகுப்ஜத்தில் பீஷ்மரை குந்தி சந்திப்பது மேனகையை கௌசிகனாகிய விஸ்வாமித்திரர் சந்திப்பதைவிட நுண்மையான தருணம். அத்தருணத்தையும் துகிலுறிதலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறது . உங்கள் வரிதான் என நினைக்கிறேன் “முடிவிலி முகத்தில் அறையும் தருணம்”
என் வரியாக ஒன்றைச் சொல்கிறேன்.
ஒற்றை துருவ காந்தங்கள் எவ்வளவு நெருக்கி அழுத்தப்பட்டாலும் ஒட்டுவதில்லை இரண்டில் ஒன்று துருவங்களை மாற்றிக் கொள்வதுவரை.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள சுரேஷ்பிரதீப்
பன்னிருபடைக்களத்தில் ஆரம்பம் முதலே இரட்டைமை என்னும் புதிரின் வெவ்வேறு வண்ணங்கள் வந்துகொண்டே இருக்கும். மொத்தநாவலையும் வாசித்தபின்னர்தான் அந்த ஒட்டுமொத்தத் திட்டம் புரியும். அதுவரை விலகிச்செல்லும் உதிரிக்கதைகளாகவே நாவல்செல்லும். அதை வாசகர்கள் சென்று தொடுவார்கள் என நம்பியே இவை எழுதப்படுகின்றன
ஜெ
அன்பின் நண்பருக்கு,
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாசித்து, மனதில் எப்போதும் அலையடித்தவாறிருந்த ஒரு கதையை மீண்டும் ‘இருண்ட சுழற்பாதை’ பதிவு மூலம் அசை போட வைத்திருக்கிறீர்கள். W. Somerset Maugham எழுதிய ‘The Rain’ கதையானது, வாசிக்கும் எவரிடத்திலும் ஆழ்மனதில் ஈரலிப்பாய் தங்கிவிடக் கூடியது. நம்மைச் சூழ இடையறாது பெய்யும் மழையும் அவ்வாறுதான் இல்லையா?
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கடற்கரையை ஒட்டிய எனது அறையிலிருந்து கடலையும், அதில் மிதக்கும் படகுகளையும் பார்த்தவாறு, அக் கதையை நான் வாசித்துக் கொண்டிருந்த போது, கதையின் மீதான நெருக்கத்தைக் கடலும், காற்றும் என்னிடம் கொண்டு வந்திருக்கக் கூடும். நீங்களும் அதே சூழலிலிருந்து அக் கதையை வாசித்திருக்கிறீர்கள். அதே அலையும், காற்றும், படகுகளும் இக் கணத்தில் அதே இடங்களில் இப்போது இருக்கச் சாத்தியமில்லை. ஆனால் இக் கணத்திலும் கதை இருக்கிறது நம்மிடத்திலும், வாசிக்கவிழையும் அனைவரிடத்திலும்.
கட்டுக்கோப்பான பாதிரியார், விபச்சாரத் தீவிலிருந்து வந்த ஒரு பெண்; இருவரும் ஒரே விடுதியில் தங்க நேரும்போது இருவருமே எதிர்கொள்ள நேரும் சங்கடங்களையும், அவஸ்தைகளையும் கதை விவரிப்பதோடு, ஒருவரையொருவர் அவ்விடத்திலிருந்து அகற்றிவிட முற்படும் பிரயாசைகளையும் கதை பேசுகிறது. தமிழ் வாசகர்கள் அனைவரையும் இவ்வாறான கதைகள் போய்ச் சேர வேண்டும்.
W. Somerset Maugham எழுதியிள்ள இக் கதையையும், ஏனைய கதைகளையும் தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். இதுவரை எவரும் இவற்றை தமிழில் மொழிபெயர்க்கவில்லையெனில், அறியத் தாருங்கள். நிச்சயம் மொழிபெயர்த்துத் தருகிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
13.12.2017
அன்புள்ள ரிஷான்
சாமர்செட் மாம் தமிழில் இதுவரை ஒரு நூலாக அறிமுகப்படுத்தபடாத படைப்பாளி. நீங்கள் தாராளமாகச் செய்யலாமென நினைக்கிறேன்
சாமர்செட் மாம் நவீனத்துவத்திற்கு முந்தைய, ஆனால் நவீனத்துவத்தைத் தொடங்கிவைத்த ஆசிரியர். மானுட உள்ளத்தின் இருட்டையும் புதிரையும்நோக்கியே செல்பவை அப்படைப்புகள். கேக்ஸ் ஆண்ட் ஏல் எனக்குப்பிடித்த நாவல். அதிலுள்ள அஷெண்டன் என்னும் கதாபாத்திரத்துடன் என்னை அடையாளப்படுத்திக்கொண்டு வாசித்தேன்
பின்னாளில் அது டி.எஸ்.எலியட்டுக்கும் ரசலுக்குமான உறவை அடிப்படையாகக்கொண்டது என ஒரு [ஆதாரமற்ற] கிசுகிசு உருவாகியதையும் அறிந்தேன். ஆனால் அங்கே கதை தலைகீழாக நடந்தது என்றும்
ஜெ