உடுமலை சங்கர் கொலைவழக்கைத் தொடர்ந்து கவனித்துவந்தேன். ஆணவக்கொலை என்ற சொல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியது அச்சம்பவத்திலிருந்துதான் என நினைக்கிறேன். பொதுவாக நம் அறிவுச் சூழலில் இதுகுறித்து உருவாகிவந்துள்ள கருத்தே என்னுடையதும். இது முடிந்தவரை உக்கிரமாக அரசால் ஒடுக்கப்படவேண்டிய கீழ்மைநிறைந்த குற்றம்.
நான் மரணதண்டனையை ஆதரிப்பவன். மானுடகுலத்தில் மரணதண்டனை ஒருபோதும் இல்லாமலாகாது. போரை ஆதரிப்பவர்கள், ஆயுதப்போராட்டத்தை ஆதரிப்பவர்கள், மறைமுகமாகப் பயங்கரவாதத்தையே ஆதரிப்பவர்கள் [அதிலுள்ள நியாயத்தை நாம புரிஞ்சுக்கவேணும் தோழர்!”] மரணதண்டனையை எதிர்ப்பதெல்லாம் மனிதாபிமான நடிப்பு மட்டுமே.
ஆவேசத்திலும் வெறியிலும் கொலைசெய்பவர்கள் மரணதண்டனை அளிக்கப்படவேண்டியதில்லை. அவர்கள் திருந்த வாய்ப்பளிக்கலாம். ஆனால் அதிலும்கூட, நான் இதுவரை சிறைகளிலும் வெளியிலுமாகச் சந்தித்த எவருமே செய்தகொலைக்காக மனம்வருந்திக் கண்டதில்லை. காவல்துறையிலோ, வழக்கறிஞர்தொழிலிலோ உள்ள நண்பர்கள் கூட மிகமிகக்குறைவாகவே அவ்வாறு மனம்வருந்துபவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களின் ஆளுமையில்கூட பெரிய அளவில் மாற்றங்கள் வருவதில்லை என்றும் சொல்கிறார்கள். இதை நம் ‘போலிமனிதாபிமான அரசியல்வாதிகள்’ அல்ல உளவியலாளர்களும் சமூகவியலாளர்களுமே விவாதிக்கமுடியும்
திட்டமிட்டு ஓர் உயிரை எடுப்பவர்கள் வேறுவகை. நாம் அனைவருக்கும் தெரியும், எல்லாராலும் அதைச் செய்துவிடமுடியாது. அதற்கு ஒரு வகையான உளஅமைப்பு தேவைப்படுகிறது. அது இளமையிலேயே உருவாகிவரக்கூடியது. இந்தக்கொலையைப் பார்த்தாலே தெரியும் இது உளக்கொதிப்பால் செய்யப்பட்ட கொலை அல்ல. இவர்களுக்கு வாடகைக்கொலையாளிகளுடன் தொடர்பு முன்னரே இருந்திருக்கிறது. இதற்காக மட்டுமல்ல வேறு எதற்காகவும் இதேபோன்ற கொலைகளைச் செய்யக்கூடியவர்கள்தான் ஒரு சாதாரணக்குடும்பம் இத்தகைய சூழலில் வாடகைக்கொலையாளிகளை தொடர்புகொள்வதெல்லாம் நம் சூழலில் சாத்தியமே இல்லை என நாம் அறிவோம்இவர்கள். இந்தமனநிலை அனுமதிக்கப்படமாட்டாது என சமூகம் அறைகூவவேண்டும்
இத்தகைய கொலைகளை பொதுச்சமூகம் எவ்வகையிலும் தாங்கிக்கொள்ளாது என்னும் அறிவிப்பே தூக்கு என்பது. உங்களுக்கு இச்சமூகத்தில் இடமில்லை என்னும் கூற்று அது. அது நமக்குநாமே விடுத்துக்கொள்ளும் ஆணையும்கூட. மரணதண்டனை அன்றி எதுவுமே அந்த ஆணித்தரமான ஆணையாக ஆகாது. ஏனென்றால் இங்கே ஆயுள்தண்டனை என்பதே ஒரு வேடிக்கை. 12 ஆண்டு. அதில் அந்த இந்த கழிவுகள்போக பத்தாண்டு. அண்ணா, பெரியார் பிறந்தநாளை ஒட்டி ஏழு எட்டாண்டுகளில் வெளியே வந்துவிடுவார்கள்.
சிறைமீண்டபின் அவர்கள் தான் செய்த கொலையைப்பற்றி பெருமிதமாகப் பேசிக்கொள்வார்கள். அந்த மனநிலைகொண்டவர்களால் தியாகிகளாக ஆராதிக்கப்படுவார்கள். தண்டனைபெற்றவர்களால் தனக்கு இன்னமும்கூட அச்சுறுத்தல் உள்ளது என்று கௌசல்யா சொல்வது கவனிக்கப்படவேண்டியது. இங்கே கொடுங்குற்றங்களில்கூட குற்றவாளிகள் அறுதியான தண்டனையை அடைவது அரிது. தண்டனைக்கு எதிராகப்பேசும்போது அரசு எதிர்ப்பாளன், கலகக்காரன் என்னும் அடையாளம் கிடைக்கிறதென்பதனால் அரைகுறை எழுத்தாளர்களின் குரல் எழுந்து அவர்களுக்காகப் பேச ஆரம்பிக்கிறது. அதற்கு இடமளிப்பது இத்தகைய குற்றமனநிலையை சமூகம் பேணிவளர்ப்பதற்கு சமானமானதே.
இதேபோல சென்ற காலங்களில் இங்கே சமூகமனசாட்சியை உலுக்கியவழக்குகள் என்னவாயின என்று பாருங்கள். பொதுநலனுக்காகப்போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி ஊழியை லீலாவதி நடுத்தெருவில் வெட்டிக்கொல்லப்பட்டார். அக்கொலைவழக்கில் 2003ல் ஆயுள்தண்டனைபெற்ற தி.மு.க பிரமுகர்களான முத்துராமலிங்கம், நல்லமருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை போன்றவர்கள் வெறும் ஐந்து வருடங்களில் 2008 ல் ’நல்லெண்ண அடிப்படையில்’ அண்ணா பிறந்தநாளின்போது விடுதலைசெய்யப்பட்டனர். வெளிவந்து மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். உண்மையில் மரணதண்டனை கூடாது என்பவர்கள் இன்றையசூழலில் தண்டனையே தேவையில்லை என்றுதான் சொல்கிறார்கள்
இது ஒரு தனிநபருக்கு எதிரான குற்றம் அல்ல. பொது இடத்தில் நடந்த குற்றம். ஆகவே பொதுச்சமூகத்திற்கு எதிரான அறைகூவல். அந்த அறைகூவலுக்கு சமூகம் எதிர்வினை காட்டியாகவேண்டும் அறிவுஜீவிகள் தங்களுக்கு மனிதநேயப்பிம்பம் கிடைக்கவேண்டும் என்பதற்காக போடும் வெற்றுக்கூச்சல்களை சமூகத்தின் அதிகாரம் செவிகொடுக்கக் கூடாது.. பயங்கரவாதம், ஆணவக்கொலை, வாடகைக்கொலை போன்ற சமூகத்திற்கு எதிரான அறைகூவல்களுக்கு முடிந்தவரை உக்கிரமாகவே சமூகம் எதிர்வினையாற்றவேண்டும். அதற்கு மரணதண்டனையே ஒரே வழி
ஆகவே இந்தத் தண்டனையை ஆதரிக்கிறேன். விடுதலைசெய்யப்பட்டவர்கள் முறையாக விடுதலைசெய்யப்பட்டார்களா என்பதும் உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவேண்டும்
ஆனால் இந்தத் தண்டனையை இதற்கு முந்தைய வழக்குகளை வைத்துப்பார்த்தால் ஐயங்கள் உருவாவதைத் தடுக்கமுடியாது. பொதுமனசாட்சி சீண்டப்படும் நிகழ்வுகளில் கீழ்நீதிமன்றங்களில் கடும்தண்டனை அளிக்கப்பட்டு அம்மனசாட்சி சமாதானம்செய்யப்படுகிறது. உடனே மனிதாபிமானிகள் கிளம்பி தண்டனைக்குறைப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். மேல் நீதிமன்றங்களில் மிகக்குறைந்த தண்டனையோ அல்லது விடுதலையோ அளிக்கப்படுகிறது. அது இவ்வழக்கிலும் நிகழக்கூடாது.
இந்தியாவில் கீழ்நீதிமன்றங்களில் கடும்தண்டனை விதிக்கப்பட்ட ‘அரிதினும் அரிதான’ வழக்குகளில் மேல்முறையீட்டுல் வழக்கு என்ன ஆனது, குற்றவாளிகள் என்ன தண்டனை அனுபவித்தார்கள் என்று எவரேனும் தொடர் ஆய்வு செய்து பார்த்தால் திகைப்புக்கு உள்ளாகநேரிடும். மிகப்பெரும்பாலும் குற்றவாளிகள் ஓரிரு ஆண்டு சிறைத்தண்டனையுடன் விடுதலையாகியிருப்பார்கள். மாட்டிக்கொண்டு சிறையில்கிடப்பவர்கள் பெரும்பாலும் மேலேமேலே செல்லமுடியாத ஏழைகளே.
திரு கௌசல்யா அவருடைய தனிப்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு அதையொட்டிய மனநிலையை மாற்றுவதற்கான சமூகப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மிக அரிய ஒரு முன்னுதாரணம். அவருக்கு என் வணக்கம்