எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

ஒருவேளை , கனவுகளும் நினைவுகளுமே வாழ்வின் மிகச்சுவையான பாகமாக இருக்குமோ? எல்லோரும் தூங்கும் நேரத்தில்,எழுந்து உட்கார்ந்து,ஓசைபடாமல் அழும்போது,ரொம்பவும் மெதுவாய்,நெஞ்சின் கரைகளிலெல்லாம் முட்டி நின்ற வெள்ளங்கள் வடியும்போது தோன்றுவது சுகம் தவிர வேறென்னவாய் இருக்க முடியும்?

 

இருளுள் அலையும் குரல்கள் குறுநாவலில் இருந்து

 

எழுபதுகளில் அசோகமித்திரன் அமெரிக்காவின் அயோவா சிடியில் ஆறுமாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்தாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் அங்கு சந்தித்த அனுபவங்களை அத்தியாயங்களாகப் பிரித்து ஒற்றன் எனும் நாவலாக வெளியிட்டார். (காலச்சுவடு வெளியீடாக இன்றும் ஒற்றன் கிடைக்கிறது) நூலகத்தில் அந்த நாவலை வாசிக்க எடுத்த போது நாவலின் தலைப்பில் ஒரு பிளேடை வரைந்து Plade No 1(blade என்று இல்லை) என அந்நூலை ஏற்கனவே வாசித்தவரோ வாசிக்க முயன்றவரோ கிறுக்கி வைத்திருந்தார். நாவலின் தொடக்க அத்தியாயங்களில் மேலும் சிலப் பக்கங்களில் அவ்வாறாக படம் வரைந்திருந்திருந்தது. முதலில் பொதுச்சொத்தான அரசாங்க நூலகத்தின் ஒரு நூலை சேதப்படுத்தியிருந்த அச்செய்கை கோபத்தை மூட்டினாலும் நாவலை வாசித்து முடித்த போது அந்த சித்திரக்காரரின் மேல் ஒரு பரிதாபமே எழுந்தது. மிகப் பழமையான மனம் கொண்ட ஒருவர் அவர் என்ற எண்ணமே எழுந்தது. ஒரு நவீன எழுத்தாளனிடம் எதிர்பார்க்கக்கூடியவை என்ன என்பது குறித்த தெளிவற்ற ஒருவரை என்னால் காண முடிந்தது.

 

உடன் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. 2011-ஆம் ஆண்டு நான் படித்த கல்லூரி நூலகம் விரிவுபடுத்தப்பட்ட போது காலச்சுவடு வெளியிட்ட “தமிழ் கிளாசிக் நாவல் வரிசை” நூல்கள் பல வாங்கப்பட்டிருந்தன. நான் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையும் என் நண்பன் அசோகமித்திரனின் “அமெரிக்கப் பயண அனுபவ” நூல் ஒன்றையும் எடுத்தோம். இப்போது யோசிக்கும் போது அவன் எடுத்தது ஒற்றனாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் அவன் அதை பயண நூலாகவே வாசித்திருக்கிறான்.

 

அமியின் ஒற்றன்,இன்று போன்ற படைப்புகளை   இலக்கியப் பரிச்சயமற்ற வாசகர்கள் “நாவல்” என ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இப்படைப்புகளில் மொழியை மெல்ல மெல்ல மீட்டி தருணங்களை கட்டமைத்து உச்சத்திற்கு இழுத்து வந்து நிகழ்த்தும் வெடிப்புகள் கிடையாது. ஒரு மரபான மனம் அதையே எதிர்பார்க்கும். இளவயதில் கேட்டும் வாசித்தும் வளர்ந்த கதைகள் அதையே நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கும். ஆனால் இலக்கிய வாசிப்பு அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. வாசகன் அதனிடம் எதிர்பார்ப்பது போலவே படைப்பும் வாசகனிடம் எதிர்பார்க்கிறது.

 

ஒரு நவீன இலக்கியப் பிரதி முதல் பக்கத்தில் தொடங்கி கடைசிப் பக்கத்தில் முடியும் நுகர்வுப் பொருள் அல்ல. அதை வாசிக்க ஓரளவு சூழல் குறித்த பிரக்ஞை தேவைப்படுகிறது. மேதாவிலாசம் அவசியம் இல்லையென்றாலும் ஒரு குறைந்தபட்ச அறிவு தேவைப்படுகிறது. எண்பதுகளின் நெருக்கடி நிலையின் பின்னணியில் இன்று நாவலை இணைத்து வாசிக்கும் வாசகன் பெறும் அனுபவம் முற்றிலும் வேறானாதாக புதிதானதாக இருக்கும். அதேபோல உலகின் பல்வேறு மொழி எழுத்தாளர்கள் ஒன்று கூடி அரை வருடம் வாழும் அனுபவத்தை தரக்கூடிய படைப்பாக ஒற்றனை வாசிப்பவர்கள் உலகில் இந்த நூற்றாண்டில் அன்றி இதற்கு முன் வரலாற்றில் இத்தகைய நிகழ்வினை எதிர்பார்க்க முடியுமா என்று கேள்வியை சென்று தொடுவான். சட்டென வாசிப்பில் தனக்கு முன் ஆட்கள் ரொம்பவும் குறைவாக இருப்பதைக் கண்டு கொள்வான். ஒரு சிறந்த படைப்பாளி சிறந்த வாசகனை மட்டுமே உத்தேசிக்கிறான். அவனை மேம்படுத்துவதும் அவனுக்கு தன் அறிதல்களை கடத்தி விடுவதும் மட்டுமே சிறந்த இலக்கிதவாதிகளின் நோக்கமாக இருக்கிறது. வாசகனை மகிழ்விப்பதோ “அறிவாளியாக” மாற்றுவதோ அல்ல மேலும் சிறந்த வாசகனாக மாற்றுவது மட்டுமே ஒரு சிறந்த எழுத்தாளரின் நோக்கம் எனத் தோன்றுகிறது.

 

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு  அவர்கள் எழுத்தாளர் சீ.முத்துசாமியை “எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று சொல்வதை இந்தப் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள முயல்கிறேன். அவருடைய எழுத்திலும் சம்பவங்களின் தொடர்ச்சியை நீட்சியைக் காண முடிவதில்லை. இறக்கும் தறுவாயில் கிடக்கும் மனிதனின் நனவோடையாக தொடங்குகிறது அகதிகள் குறுநாவல். மலேசிய ரப்பர் காடுகளின் அழகையும் அங்கு தொழிலாளர்களாக சிரமப்படும் புலம் பெயர்ந்தவர்களையும் சட்டென கண்முன் நிறுத்திவிடுகிறது.

 

அவலங்களை மட்டுமே சித்தரித்துச் செல்வது ஆசிரியரின் நோக்கமாக இல்லாவிடினும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லா குறுநாவல்களும் அதையே செய்கின்றன. கதை சொல்லியின் வாழ்வு ஒருபுறமும் பாப்பம்மாள்-சாமிக்கண்ணு குடும்பமும் மற்றொரு புறமுமாக அகதிகள் குறுநாவல் இரண்டு சரடுகளாக பிரிந்து பயணிக்கிறது. வேறொரு நிலம் வேறொரு வாழ்க்கை என்ற மனத்தயாரிப்புடன் வாசிக்கத் தொடங்குகினாலும் இந்நிலத்தில் கண்ட அதே தமிழ் வாழ்வில் அல்லது இன்னும் கூடுதலாக எங்கும் காணக்கூடிய அதே வாழ்வில் தான் சென்று விழ நேர்கிறது.

 

வறுமையில் இருத்து தப்பித்துக் கொள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கையே இவரது கதைகளின் பேசுபொருளாக உள்ளது. ரப்பர் மரங்கள் இடுங்கிக் கொள்ள மட்டுமே இடம் கொடுக்கும் குடிசைகள் வனங்கள் என சூழல் சித்தரிப்பின் பிரதிநிதிகளாக மட்டுமே மனிதர்கள் இக்கதைகளில் உலவுகின்றனர். கதை என எடுத்துச் சொல்லக்கூட இக்குறுநாவல்களில் ஏதுமில்லை. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டிருப்பதான ஒரு பிரம்மையை இப்படைப்புகள் தொடக்க வாசிப்பின் போது ஏற்படுத்துகின்றன. ஆனால் அந்நிகழ்வுகளில் இருந்து திரட்டி எடுக்கும் வாழ்வில் சுரண்டலும் நேசமும் வஞ்சமும் அன்பும் பின்னிக் கிடக்கின்றன.

 

கணவனை இழந்து நிற்கும் லட்சுமியின் மீதான கதை சொல்லியின் காதல் ஒரு இழையாகவும் கால் இழந்து முடங்கிப் போன கணவனைக் காப்பாற்றும் மூன்று பிள்ளைகளின் தாயான பாப்பம்மாளின் வாழ்வு மறுபுறமுமாக விரிகிறது அகதிகள். கதை சொல்லியின் காதலை ஏற்க முடியாத லட்சுமியின் திகைப்பும் குடும்பம் தோல்வி அடைந்ததாக எண்ணி பாப்பம்மாளின் மகன் வீட்டை விட்டு வெளியேறுவதுடன் நாவல் முடிகிறது.

 

சயாம் ரயில் பாதையில் இறந்தவர்கள் சிவப்பு பாஸ்போர்ட்டால் தவிப்பவர்கள் என கருணையற்ற நடைமுறைக்கும் இயல்பான பிரியத்திற்கும் இடையே தள்ளாடுகின்றனர் அனைத்து கதாமாந்தர்களும். ஓடிப் போன மகள் இறந்து போன மகன் என அன்றாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் துயர் அப்பிக் கிடக்கிறது அறிமுகமாகும் ஒவ்வொரு வாழ்விலும். தமிழ் நிலம் திரும்பியும் இவர்களை பிடித்துத் தொடர்கிறது நிம்மதியின்மை. அவர்கள் அகதிகளாக நிற்பது எதன்முன் என்ற கேள்வியை ஆழமாக எழுப்பி விடுகிறது இப்படைப்பு.

 

விளிம்பு ஒரு கட்டிலைக் கொண்டு தகப்பனைப் புரிந்து கொள்ளும் மகனின் கதையைச் சொல்கிறது. ஆனால் அப்படிப்ட்ட நோக்கமேதும் இப்படைப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. நிலம் கொடுத்த உணர்வுகளான சாதியும் கௌரவமும் பின் தொடரும் வாழ்க்கை. அதை தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழல். ஒரு தகாத உறவு. அது குடும்பத்தில் உருவாக்கும் சிக்கல் என நகர்கிறது இப்படைப்பு.

 

இத்தொகுப்பின் சிக்கலான இறுக்கமான படைப்பு இருளுள் அலையும் குரல்கள் தான். மனம் பேதலித்த நிலையில் இருக்கும் தாய் பொறுப்பற்ற தம்பி நோயாளியான தகப்பன் குறைந்த வருமானம் உடைய அண்ணன் என எல்லோரையும் அனுசரித்து வாழும் ஒரு விதவைப் பெண். அவள் வாழ்வு மலரவிருக்கும் நேரத்தில் அவள் அதை மறுத்து எடுக்கும் முடிவு. அப்போது இப்படைப்பின் தலைப்பு தான் மனதில் எழுகிறது. இருளில் அலைவது எது?

 

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இப்படைப்புகள் எதையும் வகுத்து உரைத்துவிட முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. வகுத்துரைப்பதற்கான வாய்ப்புகளும் இப்படைப்புகளில் இல்லை. இவை மனிதர்களின் கதைகளாகவே இருக்கின்றன. அவற்றின் சாரம் என்று சொல்லி விடுவதற்கான புள்ளிகளைக்கூட இப்படைப்புகள் கொண்டிருக்கவில்லை. ஆனால் இவற்றை ஒரே நேர்க்கோட்டில் கட்டி நிறுத்துவதை ஆசிரியனின் பிரக்ஞை என்று சொல்லலாம். அது அழுத்தமாக படைப்புகளில் வெளிப்படுகிறது. ஆனால் எங்குமே அதற்கான நேரடித் தடையங்கள் இல்லை. அவ்வகையில் சீ.முத்துசாமி அவர்களை அசோகமித்திரனின் இயல்பான நீட்சியாக வாசிக்க முடியும். (நீட்சியாக மட்டுமே வழிதோன்றலாக அல்ல)

 

அசோகமித்திரனின் படைப்புகளை மொத்தமாக வாசிக்கும் ஒருவர் அதில் உணர்ச்சிகரமான தருணங்களையோ என்றென்றும் நினைவில் நிறுத்தக்கூடிய அழுத்தமான அம்சங்களையோ கண்டெடுக்க முடியாது. அதேபோல அசோகமித்திரனின் மொழியில் அவருடைய தொடக்ககால படைப்புகளையும் அந்திம கால படைப்புகளையும் ஒப்பிட்டு பெரும் வேறுபாடுகளை கண்டுபிடித்துவிட முடியாது. அவருடயை படைப்புகளின் சிறப்பே இந்த வலுவான பிரக்ஞை தான். தனித்தெடுத்து மேற்கோள் காட்டக்கூடிய பிரச்சார சொற்களோ மதிப்பீடுகளின் “வாழும் வடிவங்களோ” அசோகமித்திரனின் படைப்புலகில் கிடையாது. சமகாலப் பிரக்ஞை ஒன்று அவர் புனைவுலகில் எப்போதும் விழித்திருக்கும். தண்ணீர் நாவலில் ஜமுனா தற்கொலை செய்து கொள்ளும் உணர்ச்சிகரமான தருணத்தில் அம்முயற்சி தோல்வி அடைந்த பிறகு வாடகை வீட்டில் அவருக்கு ஏற்படும் சிக்கல், அவளைத் தேற்ற முயற்சிக்கும் டீச்சரம்மாவுக்கு வீட்டுக்குத் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டியதில் இருக்கும் அவசரம் , ஒற்றனில் ஒரு மாணவியின் மனம் தொடர்புடைய நுட்பமான விஷயத்தை உரையாடும் போது பேருந்துக்கு நேரமாகிவிடும் கதை சொல்லியின் அவசரம் என உணர்வுப்பூர்வமான தருணங்களை வசதியான சிக்கலற்ற சூழலில் கட்டமைத்துக் கொள்ளாத ஒரு தன்மை சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளிலும் தென்படுகிறது.

 

இந்த மூன்று நாவல்களையும் வாசித்தபோதும் இவற்றில் ஒரு “தீர்மானமான எழுச்சியின்மையை” காண முடிகிறது. காதல், காமம், சாதிப்பற்று, நட்பு என வாழ்வு எல்லாப் பக்கங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதான தோற்ற மயக்கத்தை தொடக்க வாசிப்புக்குத் தந்தாலும் கூட இவ்வாழ்க்கைகளின் முகத்தில் அறையும் அபத்தம்  பிழைப்பு தேடி சிதறியவர்களின் வரலாற்றினை அறிந்து கொள்ளும் உந்துதலை அளிக்கிறது. அதேநேரம் மலேசியக்காடுகளின் பிரம்மாண்டமான பின்னணியில் மட்டுமே மானுட வாழ்க்கை இங்கு வருகிறது. நாய் கோழி ஆடு பன்றி புறா மரங்கள் ஆறு சாக்கடை இவற்றிற்கிடையே ஓடும் மனித வாழ்வை தொட்டுக்காட்டுவதாக அமைகின்றன இப்படைப்புகள். ஆண்களை விட பெண்களே ஒவ்வொரு படைப்பிலும் வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை வாழ்க்கை நம்பிக்கையற்ற போகுந்தோறும் பெண்கள் தான் தங்கள் வலுவால் அவ்வாழ்வினை கரை சேர்க்கின்றனர் என்று தோன்றுகிறது. பாப்பம்மாள்,லட்சுமி, இருளுள் அலையும் குரல்களில் கதை சொல்லி என அத்தனை பெண்களும் கடுமையான எதார்த்தத்தை முன் நின்று எதிர்கொள்கிறவர்களாகவே வருகின்றனர்.

 

வாசிப்புக்கு மெல்லிய சவால் அளிக்கும் வடிவம் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் நிலம் அறிந்திராத தமிழ் வழக்குச் சொற்கள் நாடு திரும்புகிறவர்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல் மலேசியப் பண்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வாமை என மேலும் நுண்ணியத் தளங்களுக்கு இப்படைப்புகள் விரிகின்றன. தமிழ்நாட்டிற்கு வெளியே தமிழில் எழுதுகிறவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியவையாக இப்படைப்புகள் உள்ளன. தமிழ் குறைவாகவே காதில் விழும் சூழலில் இருந்து கொண்டு அதை அவதானித்து தமிழில் எழுதுவது எனும் பெருஞ்செயலை இன்றிருக்கும் அயலகப் படைப்பாளிகள் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை இப்படைப்புகள் அளிக்கின்றன.

 

முடிவாக மனித மனதில் உட்கனன்று கொண்டிருக்கும் நேசத்திற்கான தவிப்பினை மௌனத்தால் எடுத்து வைக்கின்றன இருளுள் அலையும் குரல்கள் நாவலின் இறுதி வரி போல.

 

“கண்கள் கலங்கிச் சிவந்து. கண்கள் கலங்கிச் சிவந்து…..”

 

சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது : முகங்கள்  
அடுத்த கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது.