நிலைப்பதும் கலைப்பதும் ஆனது

dostoevsky-1

முப்பதாண்டுகளுக்கு முன்பு, புத்தகத்துடன் கிளம்பி முற்றிலும் அறியாத ஏதேனும் ஊருக்குச் சென்று அங்கே சிலநாட்கள் தங்கி அந்நூலை வாசித்துமுடிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. மிகச்சிறந்த ஒரு முறை இது. கிளம்பிச்செல்லும் வாய்ப்புள்ள இளம்நண்பர்கள் செய்து பார்க்கலாம். அந்நூலுக்குரிய மனநிலையை உருவாக்கும் சூழலாக இருக்கவேண்டும் நாம் செல்லுமிடம். அதைத்தேர்ந்தெடுப்பது அந்நூலைச்சார்ந்த நம்முடைய புரிதலும் உள்ளுணர்வுமாக இருக்கவேண்டும்.யோசித்துப்பாருங்கள், குஜராத்தின் தொழில்முறைத் திருடர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘சோரட் உனது பெருகும் வெள்ளம்’ [ஜாவேர்சந்த் மேகானி] நாவலை குஜராத்தின் கட்ச் பகுதியின் அரைப்பாலைநிலத்தில் மொட்டைமலைகள் சூழ அமர்ந்து வாசித்தால் எப்படி இருக்கும்.

நம் நூல்வாசிப்பைத் தடுப்பது நாம் அன்றாடம்புழங்கும் சூழல். அதில் நாம் கொள்ளும் சிறிய ஈடுபாடுகள், தொல்லைகள். அதைவிட நம் உள்ளம் அங்கிருக்கையில் ஓர் அன்றாட மனநிலையில் இருக்கிறது. பயணத்திற்கெனக் கிளம்பியதுமே நம்மில் அன்றாட உலகவாழ்வின் சலிப்பு அகன்று உள்ளம் கூர்மைகொண்டுவிடுகிறது. அப்போது ஒருநூல் முழுவிசையுடன் நம்முள் நுழையும். நாம் அன்றாடம் வாழும்சூழலில் எப்பொருளையும் கூர்ந்து நோக்குவதில்லை. எவையும் பயன்பாடு சார்ந்த வழக்கமான அர்த்ததுக்கு அப்பால் அளிப்பதுமில்லை. பயணங்களில் அனைத்தும் குறியீடுகளாக ஆகின்றன. நம் உள்ளம் அவற்றை விதவிதமாக அடுக்கியும் கலைத்தும் அவை குறித்துநிற்கும் வேறுசிலவற்றை அறியத்தொடங்குகிறது.

பயணங்களில் வாசிப்பது எளிதல்ல. முதல்சிலநாள் நம் உள்ளம் அச்சூழலை அறிவதையே விரும்பும். நூலில் உள்ளம் செல்லாது. நம்முள் உறையும் அந்த ஆதிவிலங்கு புதிய இடத்தை ஐம்புலன்களாலும் அறிந்து மெல்ல அமைதியடைந்து இயல்பாகிறது. அதன்பின்னரே அந்நிலம் நம் கனவில் வரத்தொடங்குகிறது. அதன் பின்னர் வாசிக்க ஆரம்பித்தால் அந்நிலக்காட்சிகளை நம் ஆழ்மனம் அந்நூலுடன் சேர்த்துப்பின்னிக் கொள்வதைக் காணலாம். அந்நூல் அளிக்கும் உணர்வுநிலைகள் அந்நிலத்தை விரிவடையச்செய்கின்றன. அந்நூல் சொல்லும் களத்தை நிலக்காட்சிகள் மேலும் கூர்மைகொண்டதாக்குகின்றன. இந்த கலவை நம் உள்ளத்தின் ஆழத்தில் எப்படி நிகழ்கிறதென்றே சொல்லமுடியாது. கனவு எப்படி மெய்யை நம்பமுடியாத விகிதங்களில் கலந்து பொய்யை அல்லது மீமெய்யை உருவாக்குகிறதோ அப்படி.

1986-ல் நான் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும்தண்டனையும் நாவலை கேரளத்தில் மானந்தவாடியில் டிசம்பர் மாதம் மழைகொட்டிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு மிகஎளிய விடுதியில் பதினெட்டுநாட்கள் தங்கி வாசித்தேன். மிக இளமையிலேயே அதன் கதையை நான் கேரளத்தில் புகழ்பெற்ற கதாப்பிரசங்கம் என்னும் கலையில் கதைநிகழ்த்துநர் சாம்பசிவனின் குரலில் கேட்டிருந்தேன். சுருக்கமான ஒருவடிவை வாசித்துமிருந்தேன்.ஆகவே அதற்கான சூழலை அவ்வாறு தேர்ந்தெடுத்தேன்.

அது ஓட்டுக்கட்டிடம். இரு சாளரங்களை மூடமுடியாது. ஒற்றைமரக்கட்டில். போர்த்திக்கொள்ள சணல்சாக்குகளை சேர்த்துத் தைத்த போர்வை தந்தார்கள். கீழேயே ஒரு டீக்கடை உண்டு. ஆனால் மாலை ஏழுமணிக்கு மூடிவிடுவார்கள். மிகச்சிறிய ஊர் மழையில் புல்லும் பாசியும் அடர்ந்த ஊறிச்சொட்டிக்கொண்டே இருக்கும் தாழ்வான ஓட்டுக்கட்டிடங்கள்தான் மிகுதி. இழுத்துக்கட்டப்பட்ட தார்ப்பாய்களால் ஆன கடைகள். சூழ்ந்திருக்கும் மலைக்கிராமங்களுக்கு அந்த ஊர்தான் பொதுச்சந்தை. தலைச்சுமையாக விளைபொருட்கள் வந்து குவிந்து லாரிகளில் ஏறிச் செல்லும். ஆகவே ஊரில் அத்தனைதெருக்களுமே குப்பைமலைகள் நிறைந்து மழையில் ஊறி மட்கி நாற்றமடித்துக்கொண்டிருந்தன.

உணவகங்களின் மீது எழுந்த நீலப்புகை மழைத்தாரைகளால் தொடப்படாமல் வானில் நின்றிருந்தது. குடைகள் எருமைப்புட்டங்கள் போல மழையில் கருமைமின்னிச் சென்றன. கரிய பாலிதீன் தாள்களை போர்த்தியபடி நடப்பவர்கள் விந்தையான பறவைகளாகத் தெரிந்தனர். காற்று அவர்களை படபடக்க வைத்தது. மழையின் ஓசையைக் கேட்டபடி குளிரில் நடுங்கியபடி ரஸ்லாக்நிகாவ் ஓட்டை பூட்சுடன் பனிவெளியில் நடப்பதை வாசித்தேன்.. புகைமண்டிய மதுக்கடையில் மார்மல்டோவ் இருமி இருமி சிகரெட் பிடிக்கிறார். ஸ்விட்ரிகைலோவ் பெரிய மழைக்கோட்டுடன் தலைகுனிந்து நடந்துசெல்கிறார். வெற்றுக்கால்கள் குளிரில் விரைத்து நீலம்பாரித்திருக்க நின்றுகொண்டிருக்கும் சோனியா எதையோ காத்திருக்கிறாள். மின்னல்,பின்னர் இடியோசை.

நான் அந்நாவலை முடித்தபோது மாலைவேளை.திடீரென வெயில்வந்து நகரமே ஈர ஒளிகொண்டுவிட்டதென உள்ளம் பிரமைகொண்டது. நாட்கணக்காக நீண்ட இருள் அகன்று ஒவ்வொரு துளிநீரும் சுடரெனத் தெரிந்தது. நான் என் குடையை எடுத்துக்கொண்டு சிற்றூரின் இருண்ட தெருக்களில் நடந்தேன். நனையாத கடைத்திண்ணைகளில் பிச்சைக்காரர்கள் பீடிக்கொள்ளிகள் சுடர அமர்ந்திருந்தனர். டீக்கடைகளில் இருந்து இனியபுகை எழுந்தது. கையில் பையுடன் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்த ஒருபெண் பேரழகியெனத் தெரிந்தாள்.

krishna-christ

சற்று அப்பால் நான் மாதாகோயிலைப் பார்த்தேன். அதன்மேல் ஓங்கி நின்றிருந்த நனைந்தசிலுவை என்னை கண்ணீர்மல்கச் செய்தது. கால்கள் நடுங்க மெல்ல நடந்து படிகளில் ஏறி அந்த தேவாலயத்தை அடைந்தேன். உள்ளே அப்போது அப்போது திருப்பலி தொடங்கும் நேரம். நான் சற்று தயங்கிவிட்டு உள்ளே சென்று ஓரமாக அமர்ந்தேன். முன்னரே பாதிரியார் வந்துவிட்டிருந்தார். மின்சாரம் இல்லை. ஆகவே எவரோ இயந்திரத்தை முடுக்கிக்கொண்டிருந்தனர். மூன்று கூர்வளைவுகளாக எதிரே ஆல்தாரைகள். மெழுகுவத்திகளின் ஒளியில் சிலுவையில் கைவிரித்து தொங்கும் மானுடகுமாரனின் சிலை அந்திமுகிலின் ஒரு மாயத்தோற்றம்போலத் தெரிந்தது.

சட்டென்று இயந்திரம் ஓடத்தொடங்கியது. குழல்விளக்குகள் அதிர்ந்து பற்றிக்கொள்ள அந்த கூடம் முற்றிலும் பிறிதொன்றாக மாறியது. பாதிரியார் மேடையில் ஏறி பேசத்தொடங்கினார். இருபதுபெண்கள் அங்கிருந்தனர். வழக்கமான திருப்பலி ஆராதனை தொடங்கியது. என்னால் அங்கிருக்கமுடியவில்லை. நான் மிக மெல்ல பின்னகர்ந்து வெளியே வந்துவிட்டேன். அந்தி இருளத் தொடங்கிவிட்டிருந்தது. காற்று வீச மழைத்துளிகள் சரிந்து என்மேல் அறைந்தன. என் குடை விண்ணுக்கு எழத் துடித்தது.

நீர் சுழித்தோடிய தெருவில் ஒளியே இல்லை. வானிலும் கதிர்முற்றாக அணைந்தது. ஆனால் மழைத்தாரைகள் வழியாக ஒளி வானிலிருந்து கசிந்து பரவியிருந்தது. நீர்ப்பரப்புகள் அனைத்தும் ரகசியமான ஓர் ஒளியைக் கொண்டிருந்தன. முற்றிலும் தனிமையில் நான் நடந்துகொண்டிருந்தேன். மானுடர் எவரையும் நான் பார்க்கவில்லை. என்னையும் எவராலும் பார்க்கமுடிந்திருக்காதென்று எண்ணிக்கொண்டேன்

நெடுங்காலம் கழித்து ஒருமுறை மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்னனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்நாளைப்பற்றிச் சொன்னேன். “நல்லவேளை நீ அந்த பாதிரியாரிடம் நீ உணர்ந்த கிறிஸ்துவைப்பற்றிப் பேசவில்லை. அந்த அப்பாவியை பயமுறுத்தியிருப்பாய்” என்றார். “மகாபாரதத்தை படித்துவிட்டு அருகிலிருக்கும் கிருஷ்ணன்கோயிலுக்குச் சென்றாலும் அதே அன்னியத்தன்மைதான் உருவாகும். இலக்கியம் ஆன்மிகத்தை முன்வைப்பதில்லை, அது முன்வைப்பது ஒரு மாற்று ஆன்மிகத்தை”

அது பலமுறை அவராலும் அவருடைய முன்னோடியான கேரளச்சிந்தனையாளர் எம்.கோவிந்தனாலும் ,கோவிந்தனின் இன்னொரு வழித்தோன்றலான சுந்தர ராமசாமியாலும் என்னிடம் சொல்லப்பட்டிருக்கிறது. முதல்முறையாக அதைக் கேட்டபோது அது நானறிந்த அனைத்தையும் முழுமையாக மாற்றுவதாக இருந்தது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரையுமே ‘மாபெரும் அறப்பிரச்சாரகர்கள்’ என்று மேலைவிமர்சகர் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமே கிறிஸ்து பேரறத்தின் மானுடவடிவம். ஆனால் அவர்கள் காட்டிய கிறிஸ்துவை மீண்டும் இலக்கியத்தில்தான் காணமுடியும், தேவாலயங்களில் அல்ல.

இலக்கியம் வாழ்க்கையை நோக்கி வைக்கப்பட்ட ஆடி என்பதனால் வாழ்க்கையின் அனைத்து தளங்களும் அதிலும் அடர்ந்தும் செறிந்தும் வளர்ந்தும் வெளிப்படுகின்றன. அதன் முதல்தளம் என்றுமே காம-குரோத-மோகங்கள் எனும் அடிப்படை உணர்ச்சிகள்தான். அவற்றையே எழுத்தாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதுகிறார்கள். பெருவாரியான வாசகர்கள் அவற்றையே சிரமம் இல்லாமல் தங்களுடன் அடையாளம் கண்டுகொண்டு ரசிக்கிறார்கள். அதுவே இயல்பானது. அன்றாடமே அனைவரும் அறிந்த பொதுமை.

எழுத்தின் அடுத்த தளம் என நீதியுணர்வின் வெளிப்பாட்டைச் சொல்வேன். இலக்கியம் மீண்டும் மீண்டும் மானுடநீதியை, பிரபஞ்சமளாவிய ஒரு நீதியை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. அதன் அறச்சீற்றம், உச்சகட்ட உணர்வெழுச்சிகள் பலவும் நீதியுணர்வு சார்ந்தவையே. நாம் இன்று புவிமீது காணும் நீதியை உருவாக்கி நிலைநாட்டுவதில், மேலும் மேலும் நீதியை நோக்கி சென்றுகொண்டிருப்பதில் இலக்கியமே முதன்மைவிசை.

அதற்கும் அப்பால் சென்று இலக்கியம் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டமைக்கிறது. அடிப்படை மானுட உணர்வுகளையும் அதனுடன் மோதும் நீதியையும் ஊடும்பாவுமாக நெய்து ஒரு மாபெரும் சித்திரத்தை உருவாக்கி எடுக்கின்றன பெரும்படைப்புக்கள். அவையே மானுடசாசனங்களாகக் கொள்ளப்படுகின்றன.

pk

அதற்கும் அப்பால் செல்வது, இலக்கியத்தின் உச்சமெனக் கருதப்படுவது, ஆன்மிகமே. இலக்கியத்தின் ஆன்மிகம் என்பது மதத்தால் முன்வைக்கப்படுவது அல்ல. சடங்குகளாலோ நம்பிக்கைகளாலோ ஆனது அல்ல. தத்துவத்தால் வரையறைசெய்யப்படுவதும் அல்ல. அது எழுத்தாளன் தன் உள்ளுணர்வால் கண்டடைவது. எதையும் நிறுவும் பொறுப்பற்றவனாக, அதிகார விருப்பற்றவனாக , பிறருடன் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொள்பவனாக, வரலாறெங்கும் தன்னை விரித்துக்கொள்பவனாக எழுதும்கணங்களில் மேலெழும் எழுத்தாளன் கண்டடைவது அது. அவன் கிறிஸ்து என்றோ கிருஷ்ணன் என்றோ சொல்லலாம். ஆனால் அது பிறர் சொல்லும் கிறிஸ்துவோ கிருஷ்ணனோ அல்ல. அந்த ஏசுவும் கிருஷ்ணனும் எந்த மதத்தையும் தத்துவத்தையும் சார்ந்தவர்கள் அல்ல.

தூய உள்ளுணர்வால் கண்டடைகிறான் ஆசிரியன். மொழியை அவ்வுள்ளுணர்வின் வெளிப்பாடெனக் கொள்கிறான். அதனூடாக அதை வாசகன் கண்டடைகிறான். அந்த ஆன்மிகமே இலக்கியத்தின் உச்சம். அங்கிருந்துதான் பிற அனைத்துப்பகுதிகளுக்கும் இலக்கியம் ஒளியைப் பெற்றுக்கொள்கிறது.

இலக்கியம் மாற்று ஆன்மிகத்தை, மாற்று வரலாற்றை, மாற்றுப்பண்பாட்டை உருவாக்குகிறது என்று சொல்லலாம். அப்படியென்றால் அதன் மையப்போக்கை எவர் உருவாக்குகிறார்கள்? ஒருவகையில் அதையும் இலக்கியமே உருவாக்குகிறது. தான் உருவாக்கியதை தானே கடந்துசெல்கிறது இலக்கியம். தன் ஒருபகுதியை இன்னொன்றால் நிரப்பிக்கொள்கிறது.

விஷ்ணுபுரம் நாவலில் அந்நாவலாகவே நாவலுக்குள் முன்வைக்கப்படும் காவியம் மகாபத்மபுராணம். அதை மூவர் எழுதுகிறார்கள். வெறும் வரலாற்றுத் தொகுப்பாளரான கோபிலபட்டர். கற்பனாவாதப்பெருக்கும் இலட்சியக் கனவுகளும் கொண்ட சங்கர்ஷணன். தத்துவார்த்தமான விலக்கமும் முழுமைநோக்கும் கொண்ட திரிவிக்ரமர். மூவரும் மூன்று வெவ்வேறு காவியங்களைத்தான் எழுதினர். மூன்றும் காலத்தால் ஒன்றிணைந்து ஒரே காவியமாகின. மூன்றும் ஒரே கவிஞரின் பெயர்களே என ஆகிறது.

இலக்கியம் இம்மூன்று முகங்களையும் ஒரேசமயம் கொண்டது. பேரிலக்கியங்கள் ஒரே படைப்பிலேயே மூன்று முகங்களையும் வெளிப்படுத்துபவை. நிலைகொள்பவை, மீறிச்செல்பவை, அப்பால் நின்று நோக்குபவை.

விகடன் தடம்

முந்தைய கட்டுரைகுறள் அறிதல்- கடிதம்
அடுத்த கட்டுரைகி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை