அன்புள்ள ஆசிரியருக்கு
நலம், நலம் என நினைக்கிறேன்.
முந்தைய கடிதத்தில் டிசம்பர் முதல் வாரம் ஊருக்கு வருவதாய் எழுதியபடி ஊரில் இருந்தேன், 10 நாள் விடுமுறையில் தான் வந்தேன், வருவதற்குமுன் தங்கள் ஒற்றைவரி பதில் கடிதத்தில் முதல்வாரம் தான் விஷ்ணுபுரம் விருதுவிழா என வரச்சொல்லி எழுதியிருந்தீர்கள், ஆனால் விழா 16 மற்றும் 17 என்பதை தங்கள் தளத்தில் படித்திருந்ததால் ஏதோ தவறு என்று புரிந்துகொண்டேன். பதில் அப்போதே எழுத நினைத்தேன், ஆனால் முடியவில்லை.
30.12.2017 அன்று புயல் மற்றும் மழை சற்று ஓய்ந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கி சிறு பதட்டத்துடன் கழியக்காவிளை புதிய சாலை வேலை நடப்பதால் இப்போது குண்டும் குழியுமாக இருக்கும் பிரதான சாலையை தவிர்த்து கருங்கல், நெய்யூர் திங்கள்சந்தை வழியாக ஊர் வந்து சேர்ந்தேன், மூன்று நாட்களாய் மின்சாரம் இல்லா பழைய வாழ்க்கை வாழும் பாக்யம் கிடைத்தது.
மின்சாரம் வாழ்க்கையை எவ்வளவு சொகுசாய் ஆக்கிவிட்டிருக்கிறது என்பதை நம் தென்குமரி மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள இயற்கை ஒர் அரிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்திருந்தது.. என் குடும்ப அட்டைக்கு அரசாங்கம் மண்ணெண்ணெய் வழங்குவதை நிறுத்திவிட்ட நிலையில், இந்த இக்கட்டான வேளையில் என் மிகச்சிறு வயதில் படிக்க பயன்படுத்திய சிம்னி விளக்குகளும் இப்போது பரவலாக வழக்கொழிந்து போனதாகவே தெரிகிறது. மெழுகுவர்த்தி தட்டுப்பாடு, எங்கும் கிடைக்கவில்லை. அதனால் கிட்டதட்ட மண்ணெண்ணெய்க்கு முந்தைய கால கட்டத்திற்கு போகும் நிலைதான் அனைத்து இல்லங்களிலும். நவராத்திரி முடிந்து பரணில் ஏறிய அனைத்து குத்துவிளக்குகளும் அறைக்கொன்றாய் சமையலறையில் இருந்த நல்லெண்ணெய் உபயத்துடன் மூன்று நாட்களும் ஒளி தந்து கொண்டிருந்தது ரம்மியமாய் தான் இருந்தது. என் மகளும் (மனைவியும்) மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதி இல்லாமல் வாழ்வது எப்படி என்பதை என்னுடன் சேர்ந்து மூன்று நாட்களில் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் கஷ்டகாலங்களில் உதவுவதற்கு தவறுவதில்லை என மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். மதம், இனம் மற்றும் ஜாதி வேறுபாடிண்டி அனைத்து இளைஞர்களும் அந்தந்த பகுதியில் விழுந்திருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி மின்சார வாரிய ஊழியர்களுக்கு உதவியதால் தான் பல இடங்களுக்கு இரண்டு நாட்களிலும், சில இடங்களுக்கு மூன்று நாட்களிலும் மின்சாரம் வருவது சாத்தியம் ஆனது. நம் கழகக்கண்மணிகளின் அரசியல் விளையாட்டை சென்னைக்கு வெளியே நாமும் அனுபவித்து அறிந்து கொள்ள முடிந்தது. பல சேட்டுகளும் சேட்டாணிகளும் வீடிழந்து பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருந்த பல குடும்பங்களுக்கு உணவும், புதிய போர்வை மற்றும் உடைகளும் வழங்கியதாய் நேரில் சில பயனாளிகள் வழியாக கேட்டேன். நெல்லையிலிருந்து மெழுகுவர்த்தி மற்றும் உடைகளுடன் பலர் குமரிக்கு உதவ விரைந்ததையும் கேள்விப்பட்டேன். மனிதம் இன்னும் நம் மக்களிடம் இருக்கிறது, அரசியல்வாதிகளை தவிர்த்து.
மீனவசகோதரர்கள் பாதிரிகள் தலைமையில் நடத்தும் போராட்டம் தொலைகாட்சி மற்றும் வாட்ஸ்ஆப்பில் கண்டேன். புதியதலைமுறை போன்ற செய்தித்தொலைகாட்சி ஊடகங்கள் இதனையும் வியாபார உத்தியுடன் அணுகுகிறார்களோ எனும் சந்தேகம் அவர்களின் சமீபத்திய நிகழ்ச்சிகளை காணும்போது வலுக்கிறது. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணெய் விடுவது போல் மக்களின் வேதனையை பயன்படுத்தி நாட்டில் மேலும் குழப்பத்தை உருவாக்க முனைவதுபோல் அவர்களின் சமீபத்திய நிகழ்ச்சிகள் ஒரு அச்சத்தை முனைந்து உருவாக்குகின்றன என நினைக்கிறேன், சரியா தவறா எனத்தெரியவில்லை. நடந்து போன இயற்கை சீற்றம் மோசமானது, துயரமானது, வலி மிகுந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 29.11.2017 அன்றே துபாயில் நான் வாட்ஸ்ஆப்பில் புயல் பற்றிய அரசின் எச்சரிக்கையை பார்த்தேன், மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசக்கூடும் எனவும் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் 29.11.2017க்கு முன்னரே கடலுக்கு சென்றவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு முன்னதாகவே அரசாங்கம் அதை அறிந்துகொள்ள முடியுமா என்பது எனக்கு தெரியாது. புயல் கடந்து சென்றபின் மத்திய மாநிலஅரசுகள் மீனவர்களை மீட்பதில் கொஞ்சம் அசட்டையாக இருந்து விட்டார்களோ என்றும் தோன்றுகிறது. பல விமானங்களும் கப்பல்களும் தேடுதல் வேட்டையில் இருந்ததாய் செய்திகள் வந்தன, நாம் இன்னும் இதுபோன்ற பேரிடர் மேலான்மைகளில் முன்னேறவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் இதை அரசியலாக்குவது நியாயமா என்பது புரியவில்லை, அதுவும் தொலைகாட்சிகள் தமிழக கடற்படை உதவவில்லை ஆனால் கேரள கடற்படை நன்கு உதவியது என்பது போன்ற மொக்கை தகவல்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது சரிதானா? கடற்படையில் ஏது கேரள கடற்படை மற்றும் தமிழக கடற்படை?? இன்னும் இதை எழுதினால் இது அரசியல் கட்டுரையாகிவிடும் அபாயமிருக்கிறது. நம் நாட்டையும் மக்களையும் கடவுள் தான் காப்பற்றவேண்டும்.
விடுமுறை நாட்களில் தங்கள் தளத்தை வாசிக்க முடியவில்லை, மடிகணிணியை முடிந்தவரை தவிர்ப்பது வழக்கம். சில நூல்களை வாங்கலாம் என்று ஆர்டர் கொடுத்திருக்கிறேன், இன்னும் வரவில்லை. யுவான் சுவாங்கின் இந்திய பயண கட்டுரைகள் மூன்று பகுதிகளும், ஏ.கே. செட்டியாரின் இந்திய பயண நூலும், டார்வினின் பீகிள் கப்பல் பயண நூலும் ஆர்டர் செய்திருக்கிறேன். ஏ.கே.செட்டியார் நாகர்கோவிலில் இருந்த கன்னியாகுமரி வரை நூறு ஆண்டுகளுக்குமுன் பயணம் சென்றது பற்றி நீங்கள் எழுதியதை படித்ததில் இருந்தே அதை படிக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.
.
இன்றுதான் மீண்டும் உங்கள் தளத்தை வாசித்தேன், லாரல் ஹார்டியும் பொருள்வயப்பேருலகும் வாசித்து நானும் அவர்களின் ஒரு பழைய காணொளியை கண்டேன், ரசிக்க முடிந்தது, நன்றி. சிறையில் இருந்து தப்பி, காரில் பயணித்து கால்சட்டையை மாற்றி அணிந்து கொண்டு படும் அவஸ்த்தைகள் பற்றியது, சிரிக்க முடிந்தது. இணையத்திற்கு நன்றி, நான் முன்பு இதனை நாகர்கோவில் தியேட்டர்களில் பார்த்ததில்லை, ஒருவேளை குலசேகரத்தில் மட்டும் போட்டார்களா? ரசனைக்கும் நேரம் காலம் அவசியம் போலும்.
எழுத நேரம் இல்லை என பொதுவாய் நான் நினைத்துக்கொள்வதுண்டு, இன்லேண்டு லெட்டர்களும், ஏர்மெயில்களும் வழக்கொழிந்து மொபைல் கைபேசி ஆட்சி செய்யும் இந்த இணைய காலத்தில் யார் கடிதம் எழுதுவார்கள் என நானே நினைத்து முடிவெடுத்து ஒதுக்கி வைத்திருந்தேன். அது தவறு என்பது கடித இலக்கியம் பற்றி படித்ததும் புரிந்தது. உங்களுடன் மேலும் சுரா, ராஜமார்த்தாண்டன், இந்திரஜித் மற்றும் பலரின் பழைய கடிதங்களை வாசித்தபோது எப்படி இவ்வளவு எழுதித்தள்ளியிருக்கிறீர்கள் என்ற மலைப்பு வந்தது, கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் இது போதாதென்று எத்தனை கடிதங்கள், அந்த வாசிப்புதான் இன்று என்னை இத்தனை எழுதத் தூண்டியது. உங்கள் பழைய எழுத்து நடை முற்றிலும் மாறியிருப்பதாய் உணர்ந்தேன். கடித இலக்கியம், ம்ம், பார்க்கலாம். எழுத்து எவ்வளவு முக்கியம் என்பதை சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு சுரா வின் கடிதம் அறிவுறுத்துகிறது. உண்மையில் சுரா எனக்கு அறிமுகமானது தங்கள் தளத்தின் வாயிலாகத்தான். அத்தனை கடின நிலைகளிலும் நீங்கள் எல்லோரும் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள் என்பது எனக்கு பெருவியப்பை அளித்தது. நாம் பார்ப்பது ஒன்றும் கடின உழைப்பல்ல என்பதை எனக்கு உணர்த்தியது என்றால் மிகையல்ல.
நல்லதிற்கா, கெட்டதிற்கா என தெரியாது, இனி ஏதேனும் தினமும் எழுதவேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல, தங்கள் தளத்தில் கண்ட கடித இலக்கியம் தான் காரணம். படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம், என் கடமை எழுதுவது.
இதை எழுதும் போதே திடீரென்று ஒரு ஏர்மெயில் கடிதம் என் மனைவிக்கு என்னிடமிருந்து சென்றால் என்ன நினைப்பாள் என யோசித்தேன், சிரிப்பு வந்தது. ஒரு நாள் எழுதிப்பார்க்க வேண்டும்.
தமிழும், எழுத்தும் புவியில் என்றும் தழைக்கவென்றும்,
கதையாகி, கவியாகி தமிழ் நின்று பொலிகவென்றும்
தவமாய் பலர் அதனை நித்தம் நிகழ்த்தவென்றும்,
வளமாய் வாசகர்கள் உலகில் வெகுவாய் பெருகவென்றும்,
புதிதாய் உணர்ந்து இன்று உளமாற வாழ்த்துகின்றேன்.
அன்புடன்,
மணிகண்டன், துபாய்
அன்புள்ள மணிகண்டன்,
கடிதங்கள் ஏதோ ஒருவகையில் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நான் எல்லா கடிதங்களையும் ஒரேபோலத்தான் எழுதுகிறேன். கடிதங்களை எழுதும்போது ஒருமுறையான பதிவைச் செய்கிறோம். அதற்கு ஒரு முன்னிலை இருப்பதனால் அது வடிவமும் ஒழுங்கும் கொள்கிறது. என் பழைய டைரிகளை இன்று எடுத்துப்பார்த்தேன். அரிதாகவே நீண்ட பதிவுகள். ஏனென்றால் அது நான் என்னோடு சொல்வது. பலவிஷயங்கள் எனக்குத்தான் தெரியுமே என்ற பாணியில் குறிக்கப்பட்டவை. 25 ஆண்டுகளுக்குப்பின் அவை பொருளற்றிருக்கின்றன. கடிதங்கள் அப்படி அல்ல. இன்னொருவருக்குச் சொல்வது என்பதனாலேயே விளக்கமான பதிவுகளாக அவை இருக்கும்
ஜெ